இனியும் தொடரலாமா இந்த அவலம்

பாதாள சாக்கடை, கழிவுநீர்த் தொட்டிகளைச் சுத்தம் செய்யும்போது மரணமடையும் துப்புரவுத் தொழிலாளர்களின் எண்ணிக்கையில், தமிழகம் முதலிடம் பிடித்திருக்கும் தகவல் அதிர்ச்சியையும் ஆழ்ந்த கவலையையும் ஏற்படுத்தியிருக்கிறது.

இது தொடர்பாக நாடாளுமன்றத்தில் சமூகநீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை அமைச்சர் ராம்தாஸ் ஆத்வலே அளித்துள்ள விளக்கத்தின்படி, 1993 முதல் இதுவரை 620 மரணங்கள் நிகழ்ந்திருக்கின்றன. கடந்த மூன்று ஆண்டுகளில் மட்டும் 88 பேர் உயிரிழந்திருக்கிறார்கள். இந்தப் பட்டியலில் 144 உயிரிழப்புகளுடன் தமிழகம் முதலிடத்தில் இருக்கிறது! குஜராத், கர்நாடகம் ஹரியாணா உள்ளிட்ட மேலும் 15 மாநிலங்கள் இந்தப் பட்டியலில் இடம்பெற்றிருக்கின்றன.

நாடு முழுவதும் 53,398 தொழிலாளர்கள் மனிதக் கழிவுகளை அகற்றும் வேலையைச் செய்வதாகவும் அமைச்சர் தெரிவித்திருக்கிறார். இதுபோன்ற சம்பவங்களில், தொழிலாளர்களைப் பணியில் அமர்த்துபவர்கள் தண்டிக்கப்பட்டதாக எந்த மாநிலத்திலிருந்தும் தகவல்கள் கிடைக்கப்பெறவில்லை என்றும் குறிப்பிட்டிருக்கிறார்.

தமிழகத்தைப் பொறுத்தவரை, இது தொடர்பான விமர்சனங்களை முற்றிலும் மறுக்கும் போக்கே தொடர்கிறது. “மனிதக் கழிவுகளை அகற்ற இயந்திரங்கள் வாங்கப்பட்டுள்ளன. வெறும் புள்ளிவிவரத்தை வைத்துப் பேசுவது தவறானது” என்று கூறியிருக்கும் அமைச்சர் ஜெயக்குமார், “துப்புரவுத் தொழிலாளர் இறப்புச் சம்பவங்களே நடக்கவில்லை” என்றும் தெரிவித்திருக்கிறார். இப்படியான தற்காப்பு வாதங்கள் இவ்விஷயத்தில் எந்தத் தீர்வையும் ஏற்படுத்த உதவாது.

மரணம் என்பது அந்த ஒருவருடன் முடிந்துவிடும் விஷயமல்ல. சம்பந்தப்பட்டவரின் குடும்பத்தின் எதிர்காலம் சார்ந்த விஷயம். அதோடு, ஒரு சமூகத்தின் ஒட்டுமொத்த அணுகுமுறையில் உள்ள அலட்சியத்தையும் தோலுரிப்பவை இத்தகைய பரிதாப மரணங்கள். இவ்விஷயத்தில் இனிமேலாவது வெளிப்படைத்தன்மையும், தீவிரமான அக்கறையும் காட்டப்பட வேண்டும்.

இதற்கெல்லாம் தீர்வாக, மனிதக் கழிவுகளை மனிதனே அகற்றும் அவலத்துக்கு முற்றுப்புள்ளி வைக்க தமிழக அரசு உடனே முன்வர வேண்டும்!

எழுதியவர் : காமதேனு (21-Jul-19, 7:07 am)
பார்வை : 62

மேலே