பூலோக சொர்க்கம் அமெரிக்கா

சென்னையிலிருந்து வெளியாகும் மாத இதழ் கோகுலம் கதிர். அதில் ஜூலை 2019 இதழில் வெளியாகியுள்ள கட்டுரை

உலக உலா

உலக உலாவில் இடம் பெறும் முதல் நாடு அமெரிக்கா!

பூலோக சொர்க்கம் அமெரிக்கா!

ச.நாகராஜன்

உலகப் புகழ் பெற்ற அமெரிக்கக் கவிஞரான வால்ட் விட்மன் “அமெரிக்கா பாடுவதை நான் கேட்கிறேன்; பல்வேறு ஆனந்தக் களிப்புப் பாடல்களை நான் கேட்கிறேன்” ( I hear America singing, the varied carols I hear) என்று ஆனந்தக் களிப்புடன் பாடினார். பல்வேறு தொழில்புரிவோரின் ஆனந்த இசையை அவர் தன் கவிதையில் பட்டியலிட்டார்!

இன்னொரு கவிஞரோ, “வாழ்வின் எல்லாப் பிரச்சினைகளுக்கும் விடை அமெரிக்கா தான்; அதுவே சுதந்திரத்தின் இல்லம், தனி ஒருவனின் உள்ளார்ந்த திறமைகளை வெளிப்படுத்தி திருப்தி அடையும் இடம், உலகம் அமெரிக்காவைப் போற்றுகிறது, அழகின் ஒப்பற்ற வடிவம், பெருமிதத்தின் எடுத்துக்காட்டு -அமெரிக்கா தான்” என்று புகழ்கிறார்.

(America is the answer, To all of life’s problems
America, the home of freedom
And self actualization.
The world revers America,
Paragon of beauty,
Epitome of pride; -Samuel Nze)

உலகம் போற்றும் முதலிடத்தைப் பெற்றுள்ள அமெரிக்காவின் சிறப்புக்கள் பல.

முதலில் கருத்துச் சுதந்திரம் அங்கு 100 விழுக்காடு முழுமையாக உள்ளது. தன் கருத்தை – மனதில் பட்டதை – தைரியமாகச் சொல்லலாம்.

ஒவ்வொருவரின் தனித் திறமையும் அங்கு மதிக்கப்படுகிறது; அதை பரிபூரணமாக வெளிப்படுத்தும் வாய்ப்பும் அங்கு கிடைக்கிறது. அறிவின் சிகரமாகக் கோலோச்சும் அமெரிக்காவில் லைப்ரரி ஆஃப் காங்கிரஸில் 838 மைல் நீளம் புத்தக அலமாரிகள் உள்ளன. இவற்றில் உள்ள நூல்களின் தொகுப்புகள் சுமார் 16.80 கோடி என்ற எண்ணிக்கையில் உள்ளது.

சந்திரனில் முதலில் காலடி எடுத்து வைத்தவர் ஒரு அமெரிக்கர் என்ற பெருமையில் ஆரம்பித்து எந்த ஒரு உலக மாற்றத்திற்கும் காரணம் அமெரிக்கக் கண்டுபிடிப்பு தான் என அடித்துச் சொல்லும் அளவு அமெரிக்கக் கண்டுபிடிப்புகள் உள்ளன.

உலகின் பல்வேறு மாறுதல்களுக்குக் காரணமான டிரான்ஸிஸ்டர், மின்சார பல்பு, ஆகாய விமானம், மொபைல் செல், இண்டர்நெட் என்று ஒரு நீண்ட பட்டியலை உருவாக்கியது அமெரிக்காவே.

இப்போது சான்பிரான்ஸிஸ்கோவில் கூகிள் இயக்கும் டிரைவர் இல்லாத காரின் சோதனை ஓட்டத்தைப் பார்த்து வியக்கும் போதே அருகில் டெஸ்லா (TESLA) தயாரிக்கும் படிம எரிபொருளான பெட்ரோல், டீஸல் இல்லாத எலக்ட்ரிக் கார்களை ஏராளமாகப் பார்க்க முடிகிறது. 2020 இல ஊபர் பறக்கும் டாக்ஸிகளை இங்கு இயக்க இருக்கிறது! ஆக, அடுத்த உலக மாற்றம் தயார்!

நாஸா என்ற அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனம் செவ்வாயை நோக்கித் தன் பார்வையைப் பதித்திருப்பதோடு பன்னாட்டு விண்வெளி நிலையத்திலிருந்து விண்வெளியில் ஒரு சாலையை உருவாக்கி வேற்று கிரகங்களுக்குப் போக வழியை உருவாக்கும் வழிகாட்டியாக ஆகும் அளவு விண்ணளவு உயர்ந்து விட்டது.

ஒரு அமெரிக்கர் உலகின் எந்தப் பகுதிக்குச் சென்றாலும் வரவேற்பு தான்! 116 நாடுகளுக்கு விஸா இல்லாமல் ஒரு அமெரிக்கரால் செல்ல முடியும்; இன்னும் ஒரு 44 நாடுகளில் அங்கு சென்றவுடன் விஸாவைப் பெற்றுக் கொள்ளலாம்! எந்தவித கெடுபிடியும் கிடையாது!

இரும்புத்திரை நாடான ரஷியாவுடன் ஒரு குளிர் யுத்தத்தைத் தொடர்ந்து நடத்தி வந்த அமெரிக்கா சோவியத் பிளவுபட்டவுடன் போட்டி போட ஆளின்றித் தலை நிமிர்ந்து நிற்கிறது.

இத்தனைக்கும் ரஷியாவிற்கும் அமெரிக்காவிற்கும் எல்லை அளவில் உள்ள இடைவெளி 3.8 கிலோமீட்டர் தான்.

ஆம், பெரிங் ஸ்ட்ரெய்ட் (Bering Strait) என்னும் தீவுப் பகுதியில் ரஷ்யாவிற்கும் தீவுகள் உண்டு; அமெரிக்காவிற்கும் தீவுகள் உண்டு. ரஷியத் தீவுக்கும் அமெரிக்க தீவிற்கும் இடையே உள்ள குறைந்த தூரம் 3.8 கிலோ மீட்டர்!

உலகின் பெரிய பொருளாதாரத்தைக் கொண்ட நாடு அமெரிக்கா என்றாலும் அமெரிக்கர்கள் க்ரெடிட் வழியிலியே வாழ்க்கையைக் கழிக்கின்றனர். கடன் இல்லாமல் ஒரு பத்து டாலர் நோட்டைச் (சுமார் 700 ரூபாய் தான்) சொந்தமாகக் கொண்ட ஒரு அமெரிக்கர் பெரும் பணக்காரர் என்று வேடிக்கையாகச் சொல்லப்படுவதிலிருந்தே அவர்களின் வாழ்க்கை ஒரு ‘கடன்கார வாழ்க்கை’ என்று தெரிந்து கொள்ளலாம்; என்றாலும் அபரிமிதமான செல்வ வளத்தோடு இருக்கும் ஒருவன் அனுபவிக்கும் வாழ்க்கையை ஒவ்வொரு அமெரிக்கரும் அனுபவிக்க முடியும் என்பதும் தெரிய வரும்!

உலகின் பொழுதுபோக்குத் தலங்களை எடுத்துக் கொண்டாலும் முன்னணியில் இருப்பது அமெரிக்காவே.

‘சின் சிடி’ -பாவ நகரம் – (Sin city) என்று அழைக்கப்படும் லாஸ் வேகாஸ் நகரானது இரவில் மட்டும் ஆட்டம் போடும் நகரம்! சூதாடிகளின் சொர்க்கமும் இது தான்!

மாலை ஐந்து மணிக்கு இங்கு உலவ ஆரம்பித்து மறு நாள் காலை ஐந்து மணிக்கு உலாவை முடிக்கும் போது சொர்க்கம் என்றால் என்ன என்பதை நேரடியாகப் பார்த்து, உணர்ந்து, அனுபவித்து மகிழ முடியும். ஐம்புலன்களுக்கும் விருந்து தரம் நகரம் இது. இங்குள்ள ஹோட்டல் அறைகளில் ஒருவன் தங்க ஆரம்பித்து அனைத்து ஹோட்டல்களிலும் தங்கி முடிக்க வேண்டுமென்றால் நானூறு ஆண்டுகளுக்கு மேல் ஆகும்.

ஆக, இணையில்லா இன்ப புரி இந்தப் ‘பாவ நகரம்’ தான்.

அருகில் இருப்பது ஹாலிவுட். அமெரிக்காவின் பல பகுதிகளில் ஷூட்டிங்கை முடித்து திரைப்படம் வெளியிடப்பட்டாலும் அதை ஹாலிவுட் படம் என்றே சொல்ல ஆரம்பித்து விட்டனர். யுனிவர்ஸல் ஸ்டுடியோவில் சுற்றுலா செல்ல ஒரு நாளக்கு பல்லாயிரக்கணக்கானோர் வருகை புரிகின்றனர்.

எப்படி ‘ட்ரிக் ஷாட்கள்’ எடுக்கப்படுகின்றன என்பதை ஒரு காட்சியாக அங்கு பார்க்கும் போது விழுந்து விழுந்து சிரிப்போம்; ‘அட’ இதையா தியேட்டரில் பிரமிப்புடன் பார்த்தோம்’ என்று தோன்றும்.

ஒரு அடி ஆழமுள்ள சிறிய குட்டையில் கதாநாயகன் நீந்துவதை ஆழ்கடலில் அவன் உயிருக்குப் போராடும் அளவு போராட்டம் நடத்தி நீந்துவதாக திரைப்படத்தில் பார்க்கிறோம் என்பதை இன்னொரு கண்காட்சி காண்பிக்கிறது; வியப்பின் எல்லைக்கே சென்று விடுவோம்; இப்படிப் பல காட்சிகள்! கம்ப்யூட்டர் கிராபிக்ஸைப் பற்றிச் சொல்லவே வேண்டாம்!!

இசைக்கு முக்கியத்துவம் கொடுக்கும் அமெரிக்கா எல்விஸ் ப்ரீஸ்லி போன்ற பிரம்மாண்டமான இசைக் கலைஞர்களை உருவாக்கி இருக்கிறது. அமெரிக்காவின் இசைத் துறை பிரம்மாண்டமான ஒன்று. 2018இல் உலகளாவிய விதத்தில் 5150 கோடியாக இருந்த போது அமெரிக்க இசைத்துறையின் பங்கு 1960 டாலர் என்ற அளவு இருந்தது.

38 லட்சம் சதுரமைல் பரப்பளவுள்ள அமெரிக்காவில் 50 மாகாணங்கள் உள்ளன. இதன் தேசியக் கொடியில் உள்ள 50 நட்சத்திரங்கள் இந்த 50 மாகாணங்களையே குறிக்கிறது.

65.8 லட்சம் நீளமுள்ள சாலைகளைக் கொண்டதால் உலகில் அதிக அளவு சாலை வசதியைக் கொண்ட முதல் நாடாக இது திகழ்கிறது.

எந்த ஒரு நேரத்திலும் அமெரிக்க வானில் 5000 விமானங்கள் பறந்து கொண்டே இருக்கின்றன! அமெரிக்கன் ஏர்லைன்ஸ் சொந்தமாக 965 விமானங்களை இயக்குகிறது.

அமெரிக்காவில் மொழிச் சண்டையே கிடையாது. ஏனெனில் அதிகாரபூர்வமான அரசு மொழி என்று ஒன்று அங்கு இல்லை. மக்கள் ஆங்கிலம் மற்றும் ஸ்பானிஷ் மொழிகளைப் பேசுகின்றனர், அவ்வளவு தான்!

ஒஸாமா பின் லேடன் இரட்டை கோபுரத்தை 2001 செப்டம்பர் 11ஆம் தேதி தாக்கி அழித்தான். தேசபக்தியுள்ள அமெரிக்கர்கள் அந்த இடத்தில் ஒரு பெரும் நினைவுச் சின்னத்தை எழுப்பியுள்ளனர். அங்கு நாளும் அஞ்சலி செலுத்த வருவோர் ஏராளம். பின் லேடனை எப்படிப் பிடித்து நாட்டின் கௌரவத்தை நிலை நாட்டினர் என்பதை 2012இல் வெளியான ஜீரோ டார்க் தர்ட்டி (Zero Dark Thirty) என்ற படம் அற்புதமாகச் சித்தரிக்கிறது.

மொத்தத்தில் அமெரிக்கன் என்பதில் வரும் கடைசி நான்கு எழுத்துக்கள் அமெரிக்கர்களின் தேசியப் பண்பைச் சுருக்கமாகச் சொல்லி விடுகிறது! ஆம் AMERICAN என்பதில் வரும் கடைசி நான்கு எழுத்துக்கள் I CAN.

***


Share this:
TwitterFacebookLinkedInEmail

1 Comment

R.Nanjappa (@Nanjundasarma) / July 2, 2019
அமெரிக்கர்களே இந்த அளவுக்கு பெருமை கொண்டாடுவார்களா என்பது சந்தேகமே- அந்த அளவுக்கு இக்கட்டுரை அமெரிக்காவைக் கொண்டாடுகிறது!
அமெரிக்கா ஒரு பெரிய நாடு- ஆனால் ஒரு முழுமையான நாகரீகமல்ல! ( USA is a nation, not a civilization). இரு உலகப் போர்களில் பங்குகொண்டு, பழைய ஐரோப்பிய நாடுகள் பாழ்பட்டபோது அமெரிக்கா தலை தூக்கியது. அதன் பின்னர் அமெரிக்கா தன் ராணுவ பலத்தினாலேயே வாழ்கிறது. அமெரிக்கா-ரஷ்யா இடையேயான பனிப்போர் காலத்தில் மட்டுமன்றி அதன் பிறகும் உலகில் எங்கு சண்டை நடந்தாலும் அதில் அமெரிக்கப் பங்கோ, ஆயுதமோ இல்லாமல் இருக்காது! America survives by military power, sustained by the military-industrial complex. ராடர், கம்ப்யூடர் போன்ற பலவும் முதலில் ராணுவத் தொடர்புடன் தான் உருவாக்கப்பட்டன.
இன்று அமெரிக்கர்களின் பொருளாதாரம் சைனாவிடம் சிக்கிக்கொண்டிருக்கிறது.
ஐக்கிய அமெரிக்கா அங்கிருந்த பூர்வகுடிகளை ஏமாற்றிச் சுரண்டிக் கொன்றுகுவித்து உருவாகியது. அதேபோல் கருப்பர்களை அடிமைகளாக்கி அவர்கள் உழைப்பின் மீது உயர்ந்தது-ஆனால் அவர்களுக்கு உரிய பங்கை இன்னமும் தரவில்லை!
அமெரிக்க உயர்கல்வித்துறையும் அதைச் சார்ந்த பல்முனை ஆராய்ச்சி முயற்சிகளும் ராணுவத்தினராலும் அவர்களுடைய தொடர்புள்ள கம்பெனிகளாலும் ஆக்ரமிக்கப்பட்டுள்ளன. அமெரிக்க பல்கலைக்கழகங்களில் ஊழல்கள் நிறைந்துள்ளன. ஹார்வார்டை “ஃப்ராட்வார்ட்” Fraudvard என்று சொல்லுமளவிற்கு அங்கே முறைகேடுகள்! சந்தி சிரிக்கிறது!
பொதுவாகவே அமெரிக்கக் கல்வித்துறை ஆரம்ப, நடு நிலைகளிலும் பின் தங்கியே இருக்கிறது. “Why Johnny Cannot Add,”, ” Why Johnny Cannot Read” , “Why Johnny Still Cannot Read” என்ற தலைப்பில் வெளிவந்த புத்தகங்கள் அமெரிக்கப் பள்ளிகளின் தாழ்ந்த தரத்தை விளக்கின. இன்று லட்சக்கணக்கில் மக்கள் தங்கள் குழந்தைகளுக்கு தாங்களே-பள்ளி சாராமலேயே கல்வி கற்பிக்கின்றனர். [ Home Schooling Movement]
World Trade Center Towers தீவிரவாதிகளின் விமானத்தாக்குதலால் தூளாயின என்பதை எந்த விஞ்ஞானியோ, பொறியியல் வல்லுனரோ ஏற்றுக்கொள்வதில்லை. ஒரு சாதாரண commercial விமானம் மோதி இத்தகைய காங்கிரீட்-எஃகினால் உருவாகிய கட்டிடம் இப்படி தூள்தூளாக நொறுங்கும் என்பது விஞ்ஞானபூர்வமாக நிரூபிக்கப்பட்ட விஷயமல்ல. இது அமெரிக்க அரசினரே செய்த சதி.[ அதே தினம் எந்த விமானமும் தாக்காத ஒரு கட்டிடமும் அதே முறையில் விழுந்து நொறுங்கியது என்பதை மூடி மறைக்கிறார்கள்.]

இன்று அமெரிக்கப் பொருளாதாரம் மிகவும் சீர்கெட்ட நிலையில் இருக்கிறது. வேலையில்லாத் திண்டாட்டம் தலைவிரித்தாடுகிறது; தொழில்கள் சீனாவிற்குப் போய்விட்டன. வறுமைக்கோட்டிற்குக் கீழே பலர் வாடுகின்றனர். இவற்றிற்கெல்லாம் அமெரிக்காவிடம் விடை இல்லை.

இன்று அமெரிக்காவின் நிலை இந்தியர்களுக்கு– குறிப்பாக ஹிந்துக்களுக்குக் கவலை தரும் நிலையில் இருக்கிறது. அமெரிக்காவில் மத சுதந்திரம் இருந்தாலும் அது ஹிந்துக்களுக்கு எதிராகப் பயன்படுத்தப் படுகிறது. அமெரிக்கப் பல்கலைக் கழகங்களில் ஹிந்து மதத்தைப் பற்றிய தவறான கருத்துக்கள் பரப்பப்படுகின்றன. க்ருஷ்ணர் காமுகன், காளி கொலைவெறிபிடித்தவள், சிவன் பெண்கள் பின்னால் ஓடுபவன் என்றெல்லாம் ஹிந்துக் கடவுள்கள் வருணிக்கப்படுகின்றனர். பிற எல்லா மதங்களும் (இஸ்லாம் உட்பட) மரியாதையாகச் சித்தரிக்கப்படுகின்றன; அந்தந்த மதத்தைச் சார்ந்தவர்களே ( நம்பிக்கையுடன் அனுஷ்டானமும் உள்ளவர்கள்) அவற்றைக் கற்பிக்கின்றனர். ஆனால் ஹிந்துமதம் மட்டும்மற்றவர்களால் அல்லது நம்பிக்கையும் அனுஷ்டானமும் இல்லாத இடதுசாரிகளால் போதிக்கப்படுகிறது. ஸம்ஸ்க்ருதத்தைக் கற்பிக்கும் அதே சமயம் அது தவறான வழிகளில் போகிறது. Comparative religion என்ற சாக்கில் ஹிந்துமதத்தையும் அதன் தலைவர்களையும் தவறாகச் சித்தரிக்கிறார்கள். ஸ்ரீ ராமக்ருஷ்ணர் சிறுவர்களை பால் உறவுக்கு அணுகினார் [pedophile] என்றெல்லாம் புத்தகத்தில் எழுதி அதை பாடமாகவும் வைத்திருக்கிறார்கள்.

இதையெல்லாம் கவனித்தால் அமெரிக்கா ஒரு நாகரிகமான நாடா என்பதே சந்தேகம் தான்.
“உள்ளே விகாரம் வெளியே அபாரம் உலகெல்லாம் வீண் டம்பாசாரம்” என்று தஞ்சை ராமையதாஸ் என்றோ எழுதியது நினைவுக்கு வருகிறது!

எழுதியவர் : ச.நாகராஜன் (21-Jul-19, 2:46 pm)
பார்வை : 36

சிறந்த கட்டுரைகள்

மேலே