ஆன்ம நிலையம் ஆகிய உள்ளத்தில் மேன்மையுடன் வாழ்க – நேர்மை, தருமதீபிகை 346

நேரிசை வெண்பா

உள்ளம் இழிந்து படினோ உணர்வொளி
பள்ளம் படிந்து பயனழியும் - உள்ளந்தான்
ஆன்ம நிலையம் அதுகீழ்மை ஆயினோ
மேன்மை அழியும் விரைந்து. 346

– நேர்மை, தருமதீபிகை
- கவிராஜ பண்டிதர் ஜெகவீர பாண்டியனார்

பொருளுரை:

மனிதனுடைய உள்ளம் இழிந்துபடின் உணர்வு ஒளி குன்றி உயர் பயன் ஒழியும்; உள்ளமானது உயிரின் நிலையமாதலால் அது ஈனமுறின் எல்லா மேன்மைகளும் விரைந்து அழிந்து போகும்; அங்ஙனம் போகாதபடி புனிதமாய்ப் பொருந்தி வாழுக என்கிறார் கவிராஜ பண்டிதர்; இப்பாடல், ஆன்ம நிலையின் அமைதி கூறுகின்றது.

உள்ளமும் உணர்வும் உயிரினது கண்ணும் ஒளியுமாய்க் கலந்திருக்கின்றன; அந்த விழுமிய விழியை எவ்வழியும் யாண்டும் செவ்வையாகப் பேணி வரும் அளவே பெருமையும் இன்பமும் பெருகி அருமையும் அமைதியும் மருவி வருகின்றன. இருமை நலனும் ஒருமையாய் உதவ வுரிய இதயத்தை அருமையாகப் பேணி வரவில்லையென்றால் எவனும் என்.றும் சிறுமையே காண நேர்வான்.

நல்ல நெய் தோய்ந்த திரியில் விளக்கு விளங்குதல் போல் நல்ல எண்ணம் தோய்ந்த உளத்தில் உணர்வு ஒளி மிகுந்து விளங்கும். உணர்ச்சி ஓங்கி வளர்தற்கு இனிய ஆதாரமாகிய உள்ளம் கள்ளம் கபடுகள் படிந்து ஈனமாய் இளிவுறுமாயின் அங்கே நல்ல ஞான ஒளி தோன்றாது.

உள்ளம் இழியின் உணர்வு ஒளி அழியும் என்றது நிலமும் விளைவும் போல் காரண காரியங்களின் நிலைகளைப் பூரணமாய்த் தெளிந்து கொள்ள வந்தது.

பழுது பட்ட விழி பார்வை மழுங்கிப் பாழாம்; அவ்வாறே ஊனமுற்ற உளம் உணர்வு குன்றி ஈனம் அடையும். உள்ளத்தில் நீதியும் ஒழுங்கும் நேர்மையும் இல்லையாயின் அங்கே அறிவு யாதொரு நன்மையும் செய்து கொள்ளாது.

Without morality, intellect is impossible for him.

நீதியில்லாத மனிதனுக்கு அறிவால் யாதும் பயன் இல்லை' என்பது இங்கு எண்ணத் தக்கது.

சன்மார்க்க நிலையில் நின்று தன் நெஞ்சைச் செம்மையாக ஒருவன் பேணி வருவானாயின் அம் மனிதனிடம் அதிசய அறிவும் அற்புத ஆற்றல்களும் உளவாகின்றன.

சித்த சுத்தியால் ஆன்ம சக்தி அதிகப் படுகிறது ; ஆகவே இதய பரிபாகமுடையவன் உலகம் வியந்து போற்றும் நிலையினை அடைகின்றான். தான் அசையாமல் இருந்து கொண்டே எல்லாவற்றையும் அவன் அசைத்து வருகின்றான். உத்தம சீலம் அற்புத ஆற்றல்களுக்கு மூல காரணமாய்ச் சாலவும் அமைந்து தனி மகிமை பெற்றுள்ளது.

தன்விரலை ஆட்டாமல் சத்தியவான் எத்திசையும்
முன்வரவே ஆட்டும் முதல்.

என்றபடி விறல் வென்றிகள் விளைந்து வருகின்றன.

மனம் புனிதம் அடைந்த பொழுது மனிதன் தனியான ஒரு தெய்வீக நிலையில் திகழ்கின்றான். புறத்தே தோன்றுகின்ற உயர்ச்சிகள் எல்லாம் அகத்தே ஆழ்ந்த மூல வேரில் ஊன்றி நிற்கின்றன.

அதன் பான்மை கருதி, உள்ளம் ஆன்ம நிலையம் என்றது. உள்ளத்தின் அளவே உயிர் ஒளி வீசி உயர்கின்றது.

உள்ளம் கீழ்மையாயின் மனிதன் கீழ்மகனாய் இழிகின்றான்; மேலான எண்ணங்களை எண்ணி அது மேன்மை மேவின் அதனை யுடையவன் மேன் மகன் ஆகின்றான்.

உயர்வும் தாழ்வும் உள்ளத்தால் உளவாகின்றன. இந்த உள்ளத்தைச் செம்மையுடன் பேணிச் சீர் பல பெறுக என்கிறார் கவிராஜ பண்டிதர்.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (22-Jul-19, 3:25 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 37

சிறந்த கட்டுரைகள்

மேலே