வெளிச்சமில்லா வானங்கள்

"அப்பா இறந்துட்டார்டா" ஊரிலிருந்து பெரியப்பா தகவல் சொல்லி இருந்தார். அன்று காலையிலிருந்தே மனது படபடப்பாக இருந்தது. ஏதோ நிகழப் போவது போலத் தோன்றிக் கொண்டே இருந்தது. அது இதுதானா? என் கண்ணில் கண்ணீர் வடிந்தது. அப்பாவின் மடியில் படுத்து 'ஓ'வென கதறி அழ வேண்டும் போல இருந்தது. அப்பா இருந்திருந்தால் வாஞ்சையுடன் அவர் என் தலையை வருடியிருப்பார்.

அப்பாவின் அன்பு அப்படித் தானிருக்கும். அப்பா ஏனோ அதிகம் பேசுவதில்லை. "உங்க அம்மா செத்துப் போனதிலிருந்து அப்படித் தான்டா இருக்கான் உங்கப்பன்" என ஒரு முறை பாட்டி சொன்னது. திருமணப் புகைப்படத்தில் மட்டும் பார்த்திருந்த என் அம்மாவின் முகம் ஏனோ நினைவில் வந்து போனது. நான் கைக் குழந்தையாய் இருந்த போதே பெயர் தெரியாத நோய் வந்து இறந்து போயிருந்தாள் அம்மா.

நினைவு தெரிந்த நாளிலிருந்து எனக்கு எல்லாமுமாய் இருந்திருக்கிறார் அப்பா! அம்மா இறந்திருந்தாலும் ஏனோ அப்பா இரண்டாவது திருமணம் செய்து கொள்ளவில்லை. பாட்டி கூட எத்தனையோ முறை வற்புறுத்திருப்பதைப் பார்த்திருக்கிறேன். அப்பா ஏனோ அமைதியாய் இருந்தார். அந்த பேச்சு எழும் பொழுதெல்லாம் வெளியே சென்று விடுவதையே வாடிக்கையாக வைத்திருந்தார். ஒரு நாள் கட்டாயப்படுத்திக் கேட்ட பொழுது தான்,

"ஆத்தா... அந்த மகராசி தங்கம் போல ஒரு பையனை பெத்து தந்துட்டு தான் போய்ச் சேர்ந்தா. நான் கல்யாணம் கட்டி, வேறொருத்திய கூட்டியாந்து அவளுக்கு ஒரு குழந்தை பொறந்துருச்சுன்னு வை, நாளைக்கே இந்த பயல விட்டு தனக்குப் பொறந்ததத் தான் கவனிப்பா. எம்பையன் நான் இல்லாதப்போ என்ன கொடும அனுபவிப்பானோ? யாரு கண்டா... அதுக்கு நான் ரெண்டாம் கல்யாணம் செய்யாமலே இருந்துக்குறேன் ஆத்தா" என்றார் அப்பா.
பலர் எவ்வளவு எடுத்துச் சொல்லியும் முடியாதென அப்பா மறுத்து விட்டார்.

அப்பா ஒரு துப்புரவுத் தொழிலாளி. அதிகாலை எழுந்து பணிக்குச் சென்று விடுவார். மதியம் போல வீடு வந்து மறுபடியும் பணிக்குச் செல்வார். மாலையில் திரும்புவார். அவர் கைகளில் எப்போதும் சாக்கடை வாடையே அடிக்கும். அவர் எவ்வளவு குளித்தாலும் அந்த வாடை போகாது. எனக்கு அருவருப்பாக இருக்கும். ஒரு நாள் வாய் விட்டே சொல்லியிருக்கிறேன்.

"அய்ய... ஒரே சாக்கட வாட"

அதிலிருந்து அப்பா என்னைக் கொஞ்சுவதில்லை. எது கொடுப்பதாக இருந்தாலும் பாட்டி மூலமாகவே தருவார். ஐந்தாம் வகுப்பு வரை உள்ளூர் பள்ளியிலே படித்தேன். ஆறாம் வகுப்பிலிருந்து வேறு பள்ளியில் சேர்த்து விட்டார் அப்பா. அது வசதியானவர்கள் வீட்டுக் குழந்தைகள் மட்டும் படிக்கும் பள்ளி. பள்ளி முதல் நாளில் ஆசிரியர் அறிமுகம் என்ற பெயரில் மாணவர்கள் பெயரையும், தந்தை பெயரையும் விசாரித்து வர, ஒவ்வொருவராக பதிலளித்து வருகையில்,

"எம் பேரு வினோத், எங்க அப்பா பேரு கார்த்திக், அப்பா டாக்டரா இருக்காரு..."

"என் பேரு சதீஷ், எங்க அப்பா இன்ஜினியரா இருக்காரு, மிஸ்"

"என் பேரு முருகன், அப்பா பேரு பாண்டி" என நான் கூறி உட்காரப் போனவனை,

"உங்க அப்பா என்ன பண்ணுறாரு?"

"எங்கப்பா வந்து"

"ம்... சொல்லு..."

"குப்பை அள்ளுற வேலை பாக்குறாரு மிஸ்" வகுப்பறை மொத்தமும் கொல்லெனச் சிரித்தது. எனக்கு அவமானமாகப் போய் விட்டது. அன்று இரவு சாப்பிடாமலே படுத்துக் கொண்டேன். பாட்டி மூலம் விஷயத்தை தெரிந்து கொண்ட அப்பா எங்கோ வெறித்து பார்த்தபடி இருந்தார்.
இரவில் திடீரென விழிப்பு வர, அப்பா என் தலையை வருடிக் கொண்டிருந்தார். எனக்கு என்னென்னவோ உணர்வுகள். ஆறுதலாக இருந்தது. நான் கண்களை இறுக்க மூடி நிம்மதியாய் படுத்துக் கொண்டேன்.

வருடங்கள் கடந்து போயின. அப்பாவுக்கும் எனக்குமான இடைவெளிகள் ஏனோ அதிகரித்தன. நான் வகுப்பில் நன்கு படித்தேன். நான் நன்கு படிக்க என்னென்ன உதவிகள் தேவையோ அதையெல்லாம் மறக்காமல் செய்து கொண்டிருந்தார் அப்பா. நான் வகுப்பு மாற மாற எனக்கான கல்விக் கட்டணமும் அதிகரித்துக் கொண்டிருந்தது. அப்பா பகுதி நேரமாக வேலைக்குச் செல்ல துவங்கி இருந்தார். என்ன வேலை என்பதெல்லாம் எனக்குத் தெரியாது. எனக்கு கல்விக் கட்டணத்திற்குப் பணமெல்லாம் எப்படியாயினும் வந்து கொண்டிருந்தது.

ஒருநாள் உடன் படிக்கும் அசோக் தான் என் அப்பாவின் பகுதி நேர வேலை என்னவென்று சொன்னான்.

"டேய் முருகா, உங்க அப்பா எங்க வீட்டு கக்கூஸ கழுவிட்டு எங்க அப்பாக்கிட்ட காசு வாங்கிட்டு போனாருடா" எனக்கு அதிர்ச்சியாய் இருந்தது. கூடவே அருவறுப்பாகவும். நான் அப்பாவைச் சுத்தமாக வெறுக்கத் துவங்கியிருந்தேன். ஒரு துப்புரவுத்தொழிலாளியின் மகனாய் இருந்தும், நான் படிக்கும் படிப்பும் பழகிய நட்பு வட்டமும் ஏனோ அப்பாவை வெறுக்க வைத்திருந்தன. அப்பாவின் நினைவுகள் நாற்றமெடுப்பது போல, அப்பாவின் பணம் மட்டும் ஏனோ மணத்தது. இப்போது யோசிக்கும் போது வலித்தது.

கல்லூரிக் காலம் முழுக்க நான் அப்பாவுடன் இருக்க விரும்பாமல், கல்லூரி விடுதியில் தங்கிப் படித்தேன். பணம் வேண்டும் போதெல்லாம் அப்பாவுக்குக் கடிதம் எழுதுவேன். எப்படியாயினும் அப்பா பணம் அனுப்பி விடுவார். கல்லூரி பட்டமளிப்பு விழாவுக்குக் கூட நான் அப்பாவை அழைக்கவில்லை. ஏனெனில், என் அப்பா அலுவலக உதவியாளர் வேலை செய்வதாக நண்பர்களிடம் பொய் சொல்லியிருந்தேன். அப்பாவின் கெச்சலான தோற்றமும், அவர் பார்க்கும் வேலையும் அவரை ஏனோ தவிர்க்க வைத்தன. பட்டம் வாங்கி பாட்டி மூலமாக அப்பாவிடம் காட்டினேன். வாங்கிப் பார்த்த அப்பா, வழக்கம் போல ஏதும் பேசவில்லை.

கேம்பஸ் இன்டர்வியூவில் தேர்வாகி இருந்ததால், வேலையில் இணையச் சொல்லிக் கடிதம் வந்தது. சென்னையில் வேலை, நல்ல ஊதியம், வழியனுப்ப ஆச்சரியமாய் அப்பாவும் ரயிலடிக்கு வந்திருந்தார். என்றும் தாமதமாக வரும் ரயில் அன்று சரியான நேரத்திற்கு வந்தது. அப்பா ஏற்கனவே பாட்டி மூலம் பணம் தந்திருந்தார். அதிகம் பேசாத அப்பா அன்றும் ஏதும் பேசவில்லை. அவர் கண்கள் மட்டும் ஏனோ கலங்கியிருந்தன.

"போயிட்டு வர்றேன்ப்பா"
அப்பாவின் தலை சரியென அசைந்தது. எனக்கு ஏனோ கண்கள் கலங்கின. வழியெங்கும் அப்பாவின் நினைவுகள். சென்னை தாம்பரத்தில் வேலை. அலுவலகத்தைக் கண்டுபிடித்து பணியில் சேர்ந்து அலுவலக நண்பர்களுடன் விடுதியில் தங்கி என எனது சென்னை வாழ்க்கை ஓடியது.

பாட்டி இறந்ததும் ஒரு தடவை தான் ஊருக்குச் சென்று வந்தேன். அப்பொழுது சென்னையில் அடுக்குமாடியில் வீடெடுத்து தங்கி இருந்தேன். அப்பாவை எவ்வளவு அழைத்தும், சென்னையில் என்னோடு வந்து தங்க மறுத்து விட்டார். அப்பா பணியில் இருந்து ஒய்வு பெற்றிருந்தார். பெயரளவு ஓய்வூதியம் வந்தது. அது போக நானும் கொஞ்சம் பணம் அனுப்பிக் கொண்டிருந்தேன். இப்படிப் போய்க் கொண்டிருந்த நேரத்தில் தான் அப்பாவின் திடீர் மரணம்.

ரயில் பயணமெங்கும் அப்பாவே நிறைந்திருந்தார். தாய்களைக் கொண்டாடுகின்றோம். ஆனால், தாயுமானவர்களை மறந்து விடுகிறோம். அப்பாவின் பணம் இனித்த அளவு அப்பா இனித்திருப்பாரா தெரியாது. அம்மாக்களிடம் காட்டிய அதே அன்பை அதே வாஞ்சையை அப்பாக்களிடம் காட்டியிருப்போமா தெரியாது. அம்மா என்றால் அன்பு என்றும், அப்பா என்றால் கடமை என்று நமது வரைமுறைக்குள் வசதியாய் திணித்து விடுகிறோம். அப்பாக்களை ஏனோ நடமாடும் "ATM" இயந்திரமாக ஆக்கி விடுகிறோம்.

வாழ்க்கையின் ஏமாற்றங்களைச் சகிக்க முடியாது தாழ்வுமனபான்மையில் சிக்கி, அனுதினமும் நொந்து போய் தன்னை அழித்து, தன் குடும்பத்தை தூக்கி நிறுத்த சோதனை முயற்சியாக தன்னையே பலிக் கொடுத்து விடும் அப்பாக்களை
ஏன் கொண்டாடுவதில்லை.?

அப்பாவை நினைக்க நினைக்க துக்கம் பொங்கியது. அப்பாவின் வேலைக்காகவே அத்தனையோ முறை நான் அவரை வெறுத்திருக்கிறேன். ஆனால் நான் இன்று நல்ல வேலையில் இருக்கக் காரணமே என் அப்பா தான், தன்னை வருத்தி அவர் கொடுத்த கல்வி தான் என எண்ணும்போது எனக்குக் கண்ணீர் பொங்கியது.

அப்பாவிடம் நான் எத்தனையோ தடவை வெறுப்பைக் கொட்டியிருக்கிறேன். அப்பா எப்போதும் அந்த வாஞ்சையுடன் தான் இருந்திருக்கிறார். இன்று நான் நாகரீகத்துடன் இருக்க, அப்பா பார்த்த அந்த நாகரிகமற்ற, அந்த வேலை தான் காரணமாக இருந்திருக்கிறது. ஆனால் நான் அந்த வேலைக்காகவே அப்பாவை வெறுத்திருக்கிறேன்.

அப்பா ஒரு தந்தைக்கான கடமையைச் சரியாகச் செய்திருக்கிறார். ஆனால், நான் அவருக்கு எதுவுமே செய்யவில்லை எனும் துக்கம் என் மனதில் பெரு வெள்ளமாய் ஊற்றெடுத்தது.

ஊர் வந்தது. வீட்டில் அப்பாவுடன் வேலை செய்தவர்கள், அப்பாவுக்குத் தெரிந்தவர்கள், உறவினர்கள் என அனைவரும் கூடி இருந்தனர். அப்பா புத்தாடை அணிந்து நான் பார்த்ததே இல்லை. முதல் முறையாக அப்பா புத்தாடை அணிந்திருந்தார். குடிசை வாசலில் அப்பாவைக் கிடத்தியிருந்தார்கள்.
ஒரு ஓரமாக அமர்ந்திருந்த பெரியப்பா என்னைக் கண்டு எழுந்து வந்தார்.

"பெரியப்பா, அப்பாவோட காரியத்துக்குப் பணம்..." என நான் பர்சை எடுக்க,

"ஏதும் வேணாம்ப்பா... உங்க அப்பாவே தன்னோட கடைசி காரியத்துக்கு என்கிட்ட பணம் கொடுத்து வச்சிருந்தாரு."
எனக்குக் கண்ணீர் வந்தது.

'இதற்குக் கூட எனக்குக் கடமையைச் செய்ய வாய்ப்பில்லையா அப்பா?'
அப்பாவின் அருகினில் சென்றேன். தன் கடமையைச் சரிவர செய்து முடித்த நிறைவு அவரது முகத்தில் நிறைந்து இருந்தது. என்றும் நான் காணாத புன்சிரிப்போடு இருந்தார் அப்பா.
அப்பாவின் கைகளை எடுத்து என் தலையில் வைத்துக் கொண்டேன்.
எப்போதும் போல அப்பாவின் கைளில் அதே வாஞ்சை இருந்தது.

எழுதியவர் : அருள்.ஜெ (23-Jul-19, 5:03 pm)
சேர்த்தது : அருள் ஜெ
பார்வை : 100

மேலே