உன்மனத்தைத் தேசு மிகவேநீ செய்துவரின் ஈசன் குடிபுகுந்து நிற்பன் - தூய்மை, தருமதீபிகை 357

நேரிசை வெண்பா

மாசு மறுக்கள் மருவாமல் உன்மனத்தைத்
தேசு மிகவேநீ செய்துவரின் - ஈசன்
குடிபுகுந்து நிற்பன் குவலயம்பின் உன்முன்
அடிபணிந்து நிற்கும் அமைந்து. 357

- தூய்மை, தருமதீபிகை,
- கவிராஜ பண்டிதர் ஜெகவீர பாண்டியனார்

பொருளுரை:

மாசு படியாமல் உன் மனத்தைப் பேணிவரின் தேசு மிகுந்து வரும், ஈசனும் உன்னிடம் வாசமாய்க் குடி புகுந்தருளுவான்; உலகம் முழுவதும் உன்னை அடி பணிந்து வணங்கும் என்கிறார் கவிராஜ பண்டிதர்.

கெட்ட எண்ணங்களை இங்கே மாசு என்றது. கரவு, கவடு, மறதி, மடிகளை மறு என்றது.

உலகம் உயிர் கலைகள் முதலிய எல்லா நிலைகளையும் உள்ளம் எண்ணி அறிய வல்லது; எதனையும் நிதானித்து நிறுத்து நிறை காண்பது; அளவு படியும், துலாக்கோலும் போல் பொருள்களை உளவு கண்டு உணர்த்துவது; இத்தகைய மனத்தை இனிது பேணி வரவேண்டும். மனம் புனிதமாய் அமையின், மனித வாழ்க்கை யாண்டும் இன்பமாம். அது சிறிது பழுது படின், வாழ்வு முழுதும் கெடும். தாழ்வுகள் யாவும் புகும்.

யாதொரு மாசும் படியாமல் தன் உள்ளத்தை எவன் பாதுகாத்து வருகின்றானோ, அவன் பரம பாக்கியவானாய்த் தேசு மிகுந்து திகழ்கின்றான். நெஞ்சத் தூய்மை நிறை தவமாகின்றது.

பேராசை, பொறாமை, நய வஞ்சகம் முதலியவற்றால் மனம் மாசாய் நீசமடைகின்றது. அந்த நீசங்களை அறவே ஒழித்து அன்பு, அமைதி, கருணை, தெய்வ சிந்தனைகளைச் செய்து வரின் மனம் செவ்விய தேசுடன் திவ்விய மகிமையுறுகின்றது.

நீச நிலைகளை நினைந்த பொழுது, மனிதன் இதயம் நீசமாய் நாசம் அடைகின்றது; புனித உணர்வு புகின், அது ஈசன் ஆலயமாய் இனிய சோதி வீசி இன்பம் மிகுகின்றது.

கலி விருத்தம்
(விளம் விளம் மா கூவிளம்)
(மாச் சீரின் இறுதியில் குறிலோ, குறில்+ஒற்றோ தான் வரும். நெடில், நெடில்+ஒற்று வராது)
(விளம் வருமிடத்தில் மாங்காய்ச்சீர் வரலாம்)

ஈசனை இருத்துறும் இதயத்(து) ஓர்பொருள்
ஆசையை இருத்துதல் அந்த ணாளர்தாம்
வாசமுற் றிடுமொரு மனையில் புன்செயல்
நீசரை இருத்துதல் நிகர்க்கும் என்பரால். - பிரபுலிங்க லீலை

நெஞ்சம் தூய்மையாயின் அதில் ஈசன் இருந்தருள்கின்றான்; தீமையுறின் அது நீசம் அடைகின்றது. எனவே மனத்தை மனிதன் எவ்வாறு பேணி வரவேண்டும் என்பது இனிது காணலாகும்.

தூய்மை என்பது தெய்வத் தன்மையாதலால் அது கடவுள் நிலையம் ஆகின்றது. பேரின்ப நிலையமான முத்தியையும் தூய்மை என்றே மேலோர் குறித்திருக்கின்றனர்.

தூஉய்மை என்ப(து) அவாவின்மை மற்றது
வாஅய்மை வேண்ட வரும். 364 அவா அறுத்தல்

இதில் தூய்மை உணர்த்தி நிற்கும் பொருளை உணர்க. அகத்தின் தூய்மை அரிய பல மகத்துவங்களை யுடையது.

அறுசீர் விருத்தம்
(விளம் மா தேமா அரையடிக்கு)

நெறிப்படும் அகத்தின் தூய்மை
..நிகரிலாத் தூய்மை ஆகும்;
புறத்தினில் தூய்மை துாய்மை
..அன்று;(உ)ளம் பொருந்த உன்னித்
திறப்படச் சேவை செய்தல்
சேவையாம்; தியானி யாது
முறைப்படச் சேவை செய்தல்
சேவையன் றாமால் முன்னில். - வாயு சங்கிதை

அமல மூர்த்தியான கடவுள் அருளைக் கருதிவரின் மனிதனது மனம் புனிதம் ஆகின்றது; ஆகவே போக நலங்களும் யோக சித்திகளும் ஒருங்கே அவனுக்கு உளவாகின்றன. இம்மையிலே எல்லா மகிமைகளையும் அவன் பெற்று மகிழ்கின்றான்.

அறுசீர் விருத்தம்
(விளம் மா தேமா அரையடிக்கு)

3062
உம்மைநான் அடுத்த நீரால்
..உலகியல் வேத நீதி
செம்மையால் இரண்டும் நன்றாய்த்
..தெளிந்தது; தெளிந்த நீரால்
மெய்ம்மையாம் சித்த சுத்தி
..விளைந்தது; விளைந்த நீரால்
பொய்ம்மைவா னவரின் நீந்திப்
..போந்தது சிவன்பால் பத்தி. 71

3063
வந்தயிப் பத்தி யாலே
..மாயையின் விருத்தி ஆன
பந்தமாம் பவஞ்ச வாழ்க்கை
..விளைவினுள் பட்ட துன்பம்
வெந்தது; கருணை ஆகி
..மெய்உணர்(வு) இன்பம் தன்னைத்
தந்தது; பாதம் சூட்டித்
..தன்மயம் ஆக்கிற்(று) அன்றே. 72 மண் சுமந்த படலம், திருவாலவாய்க் காண்டம், திருவிளையாடற் புராணம்

பாண்டிய மன்னனை நோக்கி வாதவூரடிகள் இவ்வாறு கூறியிருக்கிறார். நல்லோர் சகவாசத்தால் எனக்கு நல்லுணர்வு வந்தது; உள்ளம் தெளிந்தது; அந்தச் சித்த சுத்தியால் கடவுளைக் கண்டேன்; பிறவி தீர்ந்து பேரின்பம் கொண்டேன்' என இதில் உரைத்துள்ள அனுபவமான உறுதி நலங்களை ஊன்றி உணர்ந்து இருதய நிலைமையைக் கருதிக் கொள்ளவேண்டும்.

ஈசன் குடிபுகுந்து நிற்பன்’ என்றது மாசு நீங்கிய மனத்தில் ஈசன் உவந்திருக்கும் இயல்புணர வந்தது. இறைவன் எங்கும் நிறைந்திருந்தாலும் புனிதமான இடத்தை இனிது உவந்து கொள்கின்றான். தூய ஆன்மாவைத் தானாகவே வந்து தழுவி மகிழ்கின்றான்.

எழுசீர் விருத்தம்
(விளம் மா விளம் மா / விளம் விளம் மா)

தந்ததுன் தன்னைக் கொண்டதென் தன்னைச்
சங்கரா ஆர்கொலோ சதுரர்?
அந்தமொன் றில்லா ஆனந்தம் பெற்றேன்.
யாதுநீ பெற்றதொன்(று) என்பால்?
சிந்தையே கோயில் கொண்டயெம் பெருமான்
திருபபெருந் துறையுறை சிவனே!
எந்தையே ஈசா! உடலிடம் கொண்டாய்
யானிதற்(கு) இலன்ஓர்கைம் மாறே. 10 கோயில் திருப்பதிகம், திருவாசகம், எட்டாம் திருமுறை

இறைவனோடு உறவாய் மாணிக்க வாசகர் இவ்வாறு உரையாடியுள்ளார். சிவபெருமான் இவரிடம் வந்து ஒரு பண்டமாற்றுச் செய்து கொண்டதாகப் பாடியிருக்கும் இப் பாசுரம் அரிய பொருள் நலங்களையுடையது. தத்துவ நோக்குடன் உய்த்துணர்த்து உவந்து கொள்ள உரியது.

தனது சீலத் தன்மையை எடுத்துக் கொண்டு சிவானந்தத்தைத் தனக்கு ஈசன் கொடுத்த்ருளினான் எனக் கழிபேருவகையராய்க் கசிந்துருகியுள்ளார்.

சிந்தையே கோயில் கொண்ட எம்பெருமான் என்றதனால் இவரது சித்த சுத்தியும், பத்தி நிலையும் தெய்வத் தேசும் உணரலாகும். மனம் தூய்மையாயின் மனிதன் கடவுள் ஆகின்றான் என்கிறார் கவிராஜ பண்டிதர்.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (23-Jul-19, 5:26 pm)
பார்வை : 69

சிறந்த கட்டுரைகள்

மேலே