காந்தம் ஏகாந்தம்

காந்தம் ஏகாந்தம்

~~~~~~~~~~~~~~~~~~
ஊரான் வீட்டு சொத்தை தின்னு பயப் புள்ள வயித்தை பாரு ; என்று கண்ணுக்கு நெறக்காதவங்களைப் பாத்து வயித்துல அடித்து கொள்ளும் பேர்கள் நடுவில்

தமிழ் செல்வி ஒருத்தனை காதலிச்சா, மேல சொன்ன வரிசையில் அவனும் ஒருத்தன்; ஆனாலும் அவன்மேல் அவள் எப்படி காதல் கொண்டாள் என்றால், அது அறிவுக்கு அகப்பட மாட்டேன் என்கிறது; ஒரேவொரு விஷயத்தில் அது பைத்தியக்காரத்தனம் என்று மட்டும் புலப்படுகிறது; வருவது எதுவுமே மறுபடியும் வந்த வழியே போயாக வேண்டும் என்கிற ஒன்னு மட்டும் நிஜத்துக்கெல்லாம் நிஜம் என்பது மட்டும், ஒருவருக்கும் புரியவே மாட்டேங்குது; அதுகளுக்கு எந்த ஒரு பிராயசித்தமும் கெடையவே கெடையாது.

தமிழ்ச்செல்வி நூத்துக்கு முப்பது, முப்பத்தைந்து சதமே வசதி உள்ளவள் ; அப்பா இல்லை பட்டாளத்தில குண்டடிபட்டு காலமாயிட்டார் அதனால அம்மாவுக்கு வீரமரணமடைந்தோரின் விதவைகள் பென்ஷன் கிடைக்கிறது , ஒரே பொண்ணு செல்லம் கொஞ்சம் ஓவர், நெனைத்சதை அனுபவிக்கும் கெடைக்கலையா தரைமட்டமாக்கிடனும் என்கிற நல்ல பாலிசி கொண்டவள் , கூடப்படிச்சவன் காதலன், கடனாக கொடேன் என்று பணம் ஏகப்பட்டது வாங்கிவிட்டான்; அதை திருப்பி கொடுக்கிற வழிதான் இன்னும் அவனுக்கும் தெரியவில்லை அதை எப்படி வசூலிப்பது என்று இவளுக்கும் தெரியவில்லை

காதலன் வாங்கின பணத்தை திருப்பி கொடுக்கவில்லை என்றாலும் பறவாயில்லை; நம்ம கழுத்தில் மூனு முடுச்சி போடப்போறவன் தானே என்று மிகுந்த நம்பிக்கை கொண்டிருந்தாள்

காதலனாக இவள் அங்கிகரித்துக் கொண்டாளே ஒழிய; இவளே என் காதலி என்று அவன் அங்கிகரிக்க வில்லை என்பதை; இவள் இல்லாத சமயத்தில் வேறு ஒருத்தியோடு கூத்து அடிப்பதை அவளது சினேகிதி ஒருத்தியால் தெரிந்து கொண்டு விட்டாள்

○○ ஏண்டி பைத்தியக்காரியாடி நீ, அவன் வேறு ஒருத்தி கூட கும்மாளம் அடித்துக்கொண்டு இருக்கிறான், இவள் என்னடான்னா....ஏண்டி...உனக்கு என்ன முள கீள கொழம்பிடுச்சா என்ன; அடி போடி, என் சினைகிதி படுபுத்திச் சாலின்னு நான் நெனைச்சி சந்தோஷப் பட்டுகிட்டிருக்கிறேன், இவ என்னடான்னா வேலை வெட்டி இல்லாத ஒரு பொறம்போக்குக்காக அப்படியே மெழுகா உருகுறா; இப்போ சொல்றேன் உன்னை என் சினேகிதின்னு சொல்லிக்க வெக்கப்படுறேன்டி, அவங்கிட்ட எல்லாத்தையும் இழந்துட்டே, இனி இழக்க ஊங்கிட்டே என்ன இருக்கு ஒன்னும் இல்ல, எங்கேடாச்சும் கெட்டுப்போ ஒரு உயிருக்கு உயிரான சிநேகிதி ஒருத்தி இருந்தா இப்போ இல்லேன்னு வச்சிக்கோ○○ என்று கூறி இடத்தை விட்டு நகர்ந்து விட்டாள்

ஒரு நாள், தமிழ் செல்வி அவனிடம் போய், ஏண்டா போக்கத்தவனே, ஏங்கிட்ட பணங்காசை பிடுங்கதானே என்னை காதலிக்கிற மாதிரி நடிச்சி இருக்கே, இந்த சம்பத்துக்கு என்னை நானே நாசம் பண்ணிக்கிட்டேனே அதுக்கு என்னடா பதில் சொல்லப்போறே ○○ என கேட்டாள்

○○ என்ன பதில் சொல்லச்சொல்றே, உனக்கு ஆம்பளை தேவையாக இருந்தது, வேற எவனும் கெடைக்காததாலே என்னைத் தேடி என் வீட்டுக்கே வந்தே ; நானாக உன்னை தேடி உன் வீட்டுக்கு வரவில்லையே , நான் உன் தேவையை பூர்த்தி பண்ணேன் அவ்வளவுதான், ஆம்பளைக்கு தேவைபடும் போது பணங்கொடுத்து தேவையை பூர்த்தி செய்து கொள்வது போல, பொம்பளைக்கு தேவை பட்டது ஆம்பளை எனக்கு பணங்கொடுத்து தேவையை நிறைவு செஞ்சிக்கிட்டே
அவ்வளவுதான் என்னமோ பெருசா பேசுறே○○ என்றான் காதலன்

அந்த வார்த்தையை கேட்ட அவளுக்கு என்ன செய்வதென்று ஒன்னும் புரியவில்லை, வாயடைக்க வேறு பேச்சு வரவில்லை, அமைதியா நின்றிருந்தாள், நெஞ்சை அடைத்தது போல் இருந்தது, கண்களில் கண்ணீர் கரைபுரண்டு ஓடி தாவணி மற்றும் ரவிக்கை நனைந்தது, கையால் ஆகாதவங்க கடைசியில் துணைக்கு கடவுளை கூப்பிட்டுக்கொள்வது போல் ○○ கடவுளே தெரிந்து மனதை பறிகொடுத்தேனோ, இல்லை தெரியாது மனதை மானத்தை பறிகொடுத்தேனோ, இதற்கு நீயே சாட்சி, இதற்கு மேல் இவனிடம் பேசினால், இருக்கும் அரை குறை மானம் மரியாதை கௌரவத்தை இழக்க வேண்டிவரும் , அப்பா இல்லை ஊருக்கு தெரிந்தால், இதுதான் பொம்பளை வளர்ப்பு என்று என்தாயை தரக்குறைவாக பேசுவார்கள், இதோடு
முடிச்சிக்கிறேன்○○ என்று வெளியே சென்றாள் தமிழ்ச்செல்வி

போனாள் ஒரு செய்விணை செய்வோரை சந்தித்து நடந்ததை சொல்லி அவன் விளங்காம போகனும் எங்கு சென்றாலும் அவன் கையேந்தியே காலத்தை கழிக்க வேண்டும் ஆனா அவன் சாவக்கூடாது நான் அவன் கண்ணு எதிரில் எப்படி வாழறேன்றதை அவன் பார்த்து பார்த்து ஏங்க அவன் இருக்கோனும் ○○ என்று கங்கணம் கட்டிவிட்டாள்

வரும் வழியில் தலை சுற்றல் வர ஒரு சாலை மரத்தில் போய் மோதிக்கொண்டாள் இதனை கவணித்த ஒரு இளம் போலீஸ்காரன் அவளை தூக்கி உட்காரவைத்து விட்டு தனது மிதிவண்டியை ஓட்டிக்கொண்டுபோய் ஒரு பாட்டல் தண்ணீர் வாங்கிவந்து முகத்தில் தெளித்து குடிக்கவைத்தான்
கொஞ்சம் சுய நினைவு வந்தது

○○ என்னங்க என்ன ஆச்சி காலையில் வயித்துக்கு ஒன்னும் சாப்பிடவில்லையா அதனால் தான் தலை சுற்றி இருக்கிறது ○○

○○ என்னங்க உங்களுக்கு தொந்தரவாக இல்லை என்றால், இல்லை யாரிடமாவது சொல்லி என்னை என் வீடுவரை கொண்டு போய் விட முடியுமா பிளீஸ் ○○ என்றாள்

○○ அட.. அதுக்கென்னங்க வாங்க பின்னாடி கேரியர்ல உக்காருங்க○○ என்று உட்காரவைத்து மிதிவண்டியை தள்ளிக்கொண்டு போனான்

○○ ஏங்க கொறையாமல் ஒரு கிலோமீட்டர் இருக்குமுங்க எவ்வளவு நாழி இப்படி தள்ளிக்கிட்டு போவீங்க ஏறி உட்கார்ந்து ஓட்டுங்களேன்○○ என்றாள்

○○ இல்லங்க எனக்கு டபுள்ஸ் எல்லாம் ஓட்டி பழக்கம் இல்லீங்க தெரியாமல் ஓட்டி மறுபடியும் விழ வேண்டிவரும் ○○

வீட்டை அடைந்தார்கள் ○○ வாங்க உள்ள வாங்க டீ போடுறேன் இல்லன்னா குடிக்க சில்லுன்னு ஜூஸ் குடிங்க ○○ என்று கொடுத்தாள் குடித்துவிட்டு பறப்பட்டான்

○○ என்னங்க நான் மறுபடி அங்கதான்வரனும் , அங்க சூப்பர் மார்கெட்டில் பொருள் வாங்க வேண்டி இருந்தது மயக்கம்போட்டு விழுந்ததால அதை மறந்து போயிட்டேன், இந்த பையை பொருளோட சீட்டும் கூட பணமும் இருக்கு அதை அந்த கடையில் கொடுத்தா போதும் சாயங்காலம் நான் போய் எடுத்துக்கிறேனுங்க○○ என்றாள்

○○ அதுக்கென்னங்க கொடுங்க○○ என்று வாங்கி கொண்டுபோய் கொடுத்துவிட்டான் சாயங்காலம் ஆனது போலீஸ் அவனது டூட்டியை முடித்துக் கொண்டு வீட்டுக்கு புறப்பட சூப்பர் மார்கெட்டு கடைக்காரர் ○○தம்பி போலீஸ் தம்பி காலையில் கொடுத்துவிட்டு போனீர்களே அவங்க வருவாங்கன்னு எதிர்பார்த்தேன் வானம் கருத்துடுச்சி இதுவரைக்கும் வரல இனிமேல் எங்கே பொம்பளை தனியாக வருவாங்கன்னு தோனல தம்பி வீட்டுக்கு போறீங்க போல இருக்கு ஆட்சேபனை இல்லேன்னா ஒரு ரவுண்டு அவங்க வீட்டுப்பக்கம் போயிட்டு பிறகு உங்க ஊருக்கு போவீங்க○○ என்றார்

கொஞ்சம் யோசித்தான்....○○சரி கொடுங்க○○ என்று வாங்கிக்கொண்டு போனான் தமிழ்ச்செல்வி க்கு ஒரே காய்ச்சல் வயதான அம்மாவுக்கு உட்கார்தால் எழ முடியாது எழுந்தால் உட்காரமுடியாது என்ன செய்வது என்று தெரியாமல் அமர்ந்து இருந்தாள்

போலீஸ் மூட்டைய உள்ளே கொண்டுபோய் வைத்தான்

○○ என்னங்க உடம்புக்கு முடியல அதனால வரமுடியல நான் அப்புறம் கூட போய் எடுத்து க்கொள்வேன் உங்களுக்கு சிரமத்தை கொடுத்துட்டேன் மன்னித்து விடுங்க ○○

○○ பரவாயில்லை கடைக்காரர் சொன்னார் அதனால் தான்; உடம்புக்கு முடயலன்னா டாக்டருகிட்ட போயி இருக்கலாமே ○○

○○ கிட்டத்தில இருந்திருந்தா போயிருப்பேன், டாக்டர் எட்டத்தில் இருக்கிறார் அதனால துணைக்கு யாராவது இருந்திருந்தால் நானே போயி இருப்பேன் ○○

○○சரி வாங்க ○○ இப்படியாக முன்னால் காதலனுக்கு சவாலாக போலீஸ் பையனை மயக்கி தன் வழிக்கு கொண்டுவந்து விட்டாள் இருவரும் கல்யாணம் என்று ஒன்று பண்ணாமலே
சேர்ந்து வாழ துவங்கினார்கள்

பள்ளிக்கூட பிள்ளைகளுக்கு சாப்பாடு செய்து போடும் வேலையை பிடித்து கொடுத்தான்

சில நாட்கள் கழித்து வேலை செய்யும் இடத்தில் இருந்து அரிசி, பருப்பு, எண்ணெய் இவைகளை தெரியாமல் எடுத்து வருவாள் அதை வீட்டில் சமைத்து ஒண்டி கட்டைகள், தனியாக காலத்தை கழிக்கும் வயதான வர்களுக்கு சாப்பாடு செய்து கொடுத்து அதற்கு அவர்களிடம் பணம் வாங்கி உண்டியலில் போட்டுவிடுவாள்

போலீஸ்காரன் வீட்டில் யாரும் அவனை கண்டுக்கொள்ளவில்லை வீட்டுக்கு போவதும் இல்லை

சிலநாள்ஓடியது பெண்குழந்தை பிறந்தது அந்த குழந்தை பிறந்த நாளில் இருந்து அதற்கு சேமிப்பை ஆரம்பித்தாள் ஒரு சிறு பிள்ளைகள் புத்தகம் கொண்டு செல்லும் அலுமினிய பெட்டியினை உண்டியல் துளைப்போட்டு, ஏற்கனவே போட்டுவைத்திருந்த உண்டியல் பணத்தை போட்டு அதற்கு பூட்டுபோட்டு சாவி கையில் இருந்தால் மனசு மாறி திறக்கச்சொல்லும் அதிலிருந்து எடுத்து செலவு செய்யச்சொல்லும் சாவியை என்ன பண்றது என்று யோசித்தாள் ஒன்னும் பிடிபடவில்லை சாவியை தனது பாவாடை நாடாவில் கெட்டியாக கட்டி வைத்துக் கொண்டு வேலைக்கு போக குளித்துவிட்டுவர கிணற்றுக்கு போனாள் குளியல் போட்டுவிட்டு வீட்டுக்கு கிளம்பும் போது ஒரு யோசனை வந்தது சாவியை இந்த கிணற்றில் போட்டுவிட்டால் என்ன யாருக்கும் தெரியாது என்னைத்தவிற என்று போட்டுவிட்டாள் போட்டதின் உள் நோக்கம் தனது கணவனாக இருப்பவன் மேல் சந்தேகப்பட்டு அவனோட நமக்கு ஊரறிய தாலிகட்டாத கணவனாக இருப்பவன் தானே, வாடகை மனைவிகள் அமைவது போல் இவனை வாடகை கணவனாக கொண்டாள் மனம்மாறி நம்மை கைவிட்டுவிட்டால் என்ன செய்வது எல்லாவற்றையு சுருட்டிக்கொண்டு போய்விட்டால் என்ன செய்வது என்பதால் வரும் யோசனையே

பெண்ணுக்கு வயது ஏற ஏற அவளது பிறந்த நாள் பரிசாக ஆண்டுக்கு ஐந்து சவரன் தங்க நகை வாங்கி சேர்த்து வந்தாள் மகள் இருவது வயதை அடைந்து விட்டாள் நகை நூறு சவரன் சேர்ந்து விட்டது

நகைகளை வீட்டுக்கு உள்ளேயே மகளுக்கு பூட்டி வெளியே போகவிடாமல் யாரும் பார்க்காதபடி அழகு பார்த்து பெருமை பட்டுக்கொள்வாள் அப்போது முதல் காதலனை நினைவில் கொள்வாள் என்னை ஏமாற்றியவனுக்கு எதிராகவே இவ்வளவும் செய்வதாக நினைப்பாள்

அவனோ இவள் செய்து வைத்த செய்விணையால் குடித்து குடித்து ஒரு நாய்கூட அவனை மதிக்காத நிலையில் இருப்பதைக்கண்டு மகிழ்ச்சி அடைவாள் இந்த மகிழ்ச்சிக்கு தானா இவ்வளவும் செய்கிறோம் என்று அவளுக்கு அவளே சலித்துக் கொள்வாள்

தங்க நகைகளை பெட்டியிலோ அலமாரி யிலோ வைக்கமாட்டாள் தனது தலையணைக்குள் வைத்து படுப்பது வழக்கம்

நூலைப் போல சேலை தாயைப்போல பிள்ளை என்ற பழமொழிக்கொப்ப தனது மகள் ஒருவனை காதலிக்கிறாள் என்பதை தெரிந்து கொண்டாள் மகளிடம் சொன்னாள் ○○ ஏம்மா இன்னும் எத்தனை நாளைக்கு இப்படி காதல் வண்டியிலேயே பிரயாணம் செய்துக்கொண்டு இருக்கப்போகிறாய் எங்காவது இறங்கி யாகவேண்டும் இல்லையா○○ என்று தாய் மகளைக்கேட்டாள்

○○ இப்போ எனக்கு என்ன வயசு , நீ என்ன சொல்லவர அதைச்சொல்லு○○ என்றாள் கடுப்பாகி

○○ அவன் உன்னை விரும்புகிறானோ இல்லையோ, நீ விரும்புகிற அவனை வந்து பெண்கேட்கச்சொல்லச் சொல்லி சொல்லவரேன்○○ என்றாள்

என்ன போடுறீயா போடியில் கார சாரம் நிறையவே இருக்கு, இப்போ அதுக்கென்னங்க அவசரம் என்னை எப்படியாவது வீட்டை விட்டு தொறத்துறதிலேயே குறியா இருக்கியே, எனக்கில்லாத அவசரம் உனக்கென்ன அவசரம் ○○ என்றாள் ○○சரிசரி அதுக்குள்ள நீலிக்கண்ணீர் விட்டு காட்டாதே சொல்றேன் அவங்கிட்டே ○○

தமிழ் செல்வி ஊரில் ஏற்கெனவே இருந்த பணக்காரர்களை மிஞ்சிவிட்டாள் என்ற ஆனந்தம் அவளுக்குள் தாண்டவமாடியது

இதுவரை மரியாதை கொடுத்து கொண்டு வந்தவர்களை மரியாதை குறைவாக பேச ஆரம்பித்தாள் இவளிடம் வட்டிக்கு பணம் அஞ்சி பைசா பத்து பைசா மேனிக்கு கொடுத்து வாங்குவாள் கொடுக்கும் போது பூனையா இருப்பவள் வாங்கும் போது புலியா மாறிவிடுவாள்

ஒர் நாள் பத்து பைசா வட்டிக்கு பணம் வாங்கியவரின் மகன், கொஞ்சம் துடுக்குதனம் உடையவன், ஆனாலும் படு புத்திச்சாலிதனமும் கூட, வீட்டில் இருந்த வானொலி பெட்டி கெட்டு போய் ஒரு மூலையில் தூக்கி போட்டுவிட்டு புதிதாக டீவியே வாங்கினார்கள், பையன் அந்த வானொலி பெட்டியை பிரித்து பேன் பார்த்து விட்டான் , அதில் ஸ்பீக்கரில் இருந்த காந்தத்தை எடுத்து விளையாட வைத்துக்கொண்டான், எப்போதும் தனது அரைகால் சட்டை பையிலேயே வைத்திருப்பான், ஒருநாள் அவன் சோடி பிள்ளைகளோடு கிணற்றில் குதிப்பது, அடியில் சென்று பந்தயம் கட்டிக்கொண்டு மண் எடுத்துவருவது போன்று விளையாட்டு விளையாடுவது வழக்கம் ஒர் நாள் அவன் பையில் வைத்திருந்த காந்தத்தில் சாவி ஒன்று தொற்றிக்கொண்டது, அந்த சாவியை யாருக்கும் சொல்லாமல் எடுத்து மறைத்து வைத்துக்கொண்டான்

அந்த கிணற்றில் யாரெல்லாம் வந்து குளிப்பது வழக்கமோ அவர்களை அடையாளம் கண்டு அவர்களோடு உறவாடி வீட்டுக்கு உள்ளே போகும் அளவுக்கு பழக்கம் வைப்பான் அவனுக்கு கிடைத்த சாவிக்குறிய பூட்டு இதுவரை பார்த்த யாரிடமும் கிடையாது என்பது தெரிந்து விட்டது இன்னும் பழக்கப்படாதவங்க அந்த பள்ளி பிள்ளைகளுக்கு சோறாக்கி போடுறவங்கதான் அதுக்கிட்ட அப்பா கடன் வேற வாங்கி இருக்கார் , அவர் மகன் என்னைப்பார்த்தால் எரிபுரின்னு எரிந்து விழுவாங்க, எதுக்கும் அவங்க இல்லாத நேரம் பார்த்து இரண்டு சீமை ஓட்டை எடுத்து விட்டு நுழைந்து தான் பார்ப்போமே என்று யோசித்தான், ஒருநாள் நுழைந்தும் விட்டான், சாவிக்கு ஏற்ற பூட்டு மாட்டிக்கிச்சி திறந்தான், வெறும் ரூபாய் நோட்டுகள், அநியாய வட்டிக்கு பணம் கொடுக்கிறவகிட்ட லூட்டு அடிச்சா எந்த சாமியும் கண்ணை குத்திடாது என்று நினைத்து, இருந்த ரூபாய் நோட்டுக்களை கொட்டி மூட்டை கட்டிக்கொண்டு மறுபடி பெட்டியை பூட்டி விட்டு வந்து விட்டான்

கொண்டு போய் அப்பா விடம் உண்மையை சொல்லிவிட்டான் அப்பா ரொம்ப நேரம் யோசித்தார் ○○ உன் வயசுக்கு நீ செஞ்சது தப்பு அவளுக்கும் உன்னைமாதிரி ஆள்தான் தேவை இனிமேல் இப்படி செய்யக்கூடாது ○○

○○ உங்க அம்மா மேல சத்தியமா இனிமேல் இப்படி செய்யமாட்டேம்பா ○○

○○அது ஏன் எங்க அம்மா மேல சத்தியம் பண்ணினே, உங்க அம்மா மேல பண்ணியிருக்க வேண்டியது தானே ○○

○○ அப்பா.. நீங்க எந்த கடவுளையும் நம்புவது இல்லை உங்க அம்மாவைத்தவிர அதனால உங்க அம்மாமேல சத்தியம் பண்ணேன்பா ○○

○○ ஜயோடா பூரா பத்து லட்சத்து பத்தாயிரத்து தொண்ணூற்று அஞ்சி ரூபா பணம்டா இதை எத்தனை வருஷமா ஊரார் வயிற்றில் அடித்து சேர்த்தாளோ ○○

அப்பா பொய் சொல்லாம சொல்லுங்க இப்போ எண்ணினது பணத்தையா இல்லை நான் பொறந்த நாளை மாசத்தை வருஷத்தையா 10.10.95ல என்னோட பொறந்த நாளாச்சே

அட ஆமாம் இல்ல ஏன்னா இது நீ கொண்டுவந்த பணமாச்சே அதனாலேயா இருக்கும்டா

மகன் சொன்னான் அப்பனுக்கு ○○ அது எப்படியோ , அப்பா கடனை எப்பவும் போல கொடுங்க பணம் இருக்கேன்னு எல்லாத்தையும் கொடுத்து அவங்க சந்தேகம் பட்டு வீணா மாட்டிக்காதீங்க,; ஒன்னு பண்ணுங்க ஒரு வங்கியில கணக்கு வையுங்கள் எல்லா பணத்தையும் ஒரேயடியா போடாதீங்க; இன்னொரு விஷயம் கவணமாக கேளுங்க இந்த பணத்தில் இருந்து கடனை கொடுக்காதீங்க அதுல ஏதாவது ஒரு நோட்டை அவங்க நோட்பண்ணி இருக்கலாம் அதே நோட்டை நீங்க கொடுத்தீங்கன்னு வச்சிக்கோங்க கண்டுபிடிச்சிட்டா அப்புறம் கம்பிதான் எண்ணனும் புரிஞ்சதா ○○

என்னடா ரொம்ப அனுபவப்பட்டவன் மாதிரியெல்லாம் சொல்றே, சரிப்பா நீ சொன்னது போலவே செய்யிறேன் போதுமா○○ , போன ஜென்மத்தில என் மகன் வழக்காடுறவனா இருந்திருப்பானோ என நினைத்தான்


போலீஸ் காரனை அவர்கள் வீட்டைவிட்டு துறத்திவிட்டார்கள் இருக்கும் சொத்து பத்தில் சல்லி காசு கொடுக்கவில்லை

அந்த கோபத்தில் மனைவியிடம் வந்து விட்டான், அவளும் அவனை மரியாதை குறைவாக நடத்தினாள்

ஒரு நாள் டிகிரி பைனல் இயர் கடைசி பரிட்சை எழுதிவிட்டு வீடு திரும்பும் போது ரோட்டை கடக்க , ஒரு மோட்டார் சைக்கிளில் வருபவன் அடித்துவிட்டு பயந்து வண்டியை எடுத்துக் கொண்டு ஓடிவிட்டான் தமிழ்ச்செல்வியின் மகள் பிணமாகி கிடந்தாள்

இது தெரியாமல் தமிழ் செல்வி கிணற்றுக்குள் ஒரு காந்த துண்டை கையில் வைத்து கொண்டு மூழ்கி தாம் போட்ட சாவியைத் தேடிக்கொண்டிருக்கிறாள் சாவி கிடைத்தபாடில்லை, அவள் அத்தாட்சியான சாவி பொட்ட இடத்தில் சாவி இல்லை, நீர் அலையில் போட்ட இடத்தில் இருந்து நழுவிட்டிருக்கும் என்று எண்ணி கிணறு பூறா தேடிவிட்டு, வைக்கத் தெரியாதவர்கள் வைக்கோல் போரில் வைத்துவிட்டு தேடுவார்களாமே அதுபோல் தேடிவிட்டு அசந்து போய் படிக்கட்டில் உட்கார்ந்து இருந்தாள்

மகள் உயிர் விட்ட சேதி கிணற்றுக்கு சென்றது அந்த சேதி கேட்டு அங்கேயே தலை சுற்றி கிணற்றில் விழுந்து விட்டாள் அங்கேயிருந்து வீட்டுக்கு தூக்கிக்கொண்டு வந்தார்கள் வீடோ ஒரே அழுகுரல் தமிழ் செல்வி சற்று நிதானத்திற்கு வந்தாள் அப்போது இறந்து கிடக்கும் மகளுக்கு மேலாக உள்ளே ஓடி அலுமினிய உண்டியலை தூக்கினாள் பாரம் இழந்து இருந்தது பூட்டிய பூட்டு பூட்டிபடியே இருந்தது பூட்டை உடைத்தாள் உள்ளே ஒரு மண்ணும் இல்லை காலியாக இருந்தது ○○ இருவது வருஷமா சேத்த பணமாச்சே, போச்சே ○○ என்று சொல்லிக்கொண்டு மீண்டும் மயங்கி வீழ்ந்துவிட்டாள்

விழிக்கும் போது பைத்தியக்காரி போல் விழித்து, பின் தலையணையை ஓடி பிரித்து பார்த்தாள் நகை ஒன்றும் குறையாமல் இருந்தது, அவை அத்தனையையும் அவள் எடுத்து ஒன்று விடாமல் அவள் தேகத்தில் பூட்டிக்கொண்டு அதன் பிறகே இறந்து கிடக்கும் மகளிடம் வந்தாள் அழவில்லை ஒன்னும் இல்லை, யாரோ வீட்டு எழவு நாம ஏன் அழுவானே என்று இருந்து இருக்கிறாள், அமைதியாக அமர்ந்து எல்லோரும் போல் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தாள்

அங்கே இருந்தவர்கள் அவள் அருகில் சென்று அடியே இங்கே என்ன நடந்து இருக்கிறது, நீ என்ன வேஷம் போட்டுக்கொண்டு வந்து உட்கார்திருக்கிறாய் என்றார்கள், அழுடி அழுடி என்று வற்புறுத்தினார்கள் கொஞ்சத்தில் அசையவில்லை பிரம்மை பிடித்தவளாக தோன்றினாள் அந்த பணம் எங்கே போனது யார் எடுத்து இருப்பார்கள் என்ற சிந்தனையே அவளுக்கு, மகள் இறந்து கிடப்பது ஒரு பொருட்டாகவே கருதவில்லை

○○ நான் தோத்து போய்விட்டேன், ○○ என்ற முனகல் மட்டும் அவள் வாயில் கொப்பளித்துக் கொண்டு இருந்தது

இந்த நகைநட்டை, பணங்காசு எல்லாம் இன்னொருவர் வயிறு எரிந்து கொடுத்த வட்டிப்பணம், அந்த அவர்களின் வயிற்றெரிச்சல் என்னை தரைமட்டமாக்கிவிட்டது என்று தன்மகளை அடக்கம் செய்துவிட்டு தனியாக இருந்தாள்

ஒர் நாள் அவளது வாடகை கணவன் அவள் எப்போதாவது மது அருந்துவாள் என்பதை அறிந்து இருந்தான் அதைவைத்து ஒரு பொட்டளம் பிரியாணியும் ஒரு முழு மது பாட்டிலும் வங்கிவந்து தமிழ்ச்செல்விக்கு கொடுத்தான்

அவன் இப்போதும் ஊருசனம் அயர்ந்து தூங்கும் போதுதான் வருவான் ஒரு அரைமணி நேரம் மட்டுமே அவளோடு இருப்பான் பின் புறப்பட்டு எப்படி வரும்போது யாருக்கும் தெரியாமல் வந்தானோ அதேபோல் யாருக்கும் தெரியாமல் போய் விடுவது வழக்கம்

அன்று பிரியாணியும் மதுவும் கொடுத்து அவளது கழுத்தை நெறித்து வீட்டில் தூலத்தில் தொங்க விட்டு இருந்த நகைகளை ஒன்று விடாமல் எடுத்து கொண்டு போய் பாதுகாப்பான இடத்தில் பதுக்கிவிட்டு மீண்டும் வருகிறான் நல்ல காற்று மழையில் நனைந்து கொண்டே வருகிறான்

எதிர்வீட்டுக்காரியின் பிள்ளைகள் வெளியூரில் படிக்கிறார்கள் லீவில் வந்து இருந்தார்கள் லீவு முடிந்து அவர்களை அனுப்பிவைக்க கையில் பணம் இல்லாமல் தமிழ் செல்வியிடம் கடன் கேட்க வந்தாள் பெயரைச்சொல்லி அழைத்தாள் குரல் கொடுக்கவில்லை சன்னல் வழியாக பார்க்க தூக்கில் தொங்கிக்கொண்டிருப்பதை பார்த்துவிட்டு அலறியடித்து கூச்சல் போட்ட வண்ணம் ஓடினாள் அந்த சப்தம்கேட்ட அக்கத்து பக்கத்து வீட்டுகாரர்கள் கூட்டம் கூடிவிட்டார்கள் அப்போது போலீஸ்காரன் உள்ளே நுழைந்தான் அங்கே இருந்தவர்கள் அவனைக்கட்டி அழுதார்கள் அவனும் ஒன்றும் தெரியாதவனைப்போல் நடந்து கொணாடான் யாரும் அவன் மேல் சந்தேகம் படவில்லை நகை நட்டை எங்கே வைத்தாளோ யாருகிட்டே வைக்கச்சொல்லி கொடுத்தாளோ யாருக்கும் தெரியவில்லை போலீஸ் வந்தது மழைகாலமாயிருந்த படியால் எந்த தடயமும் கண்டெடுக்கப்பட்டது முடியவில்லை

போஸ் மாட்டமுக்கு அனுப்பப்பட்டது தூக்கு போட்டுக்கொண்டதால் கயற்றின் இறுக்கம் என்று முடிவானது

அந்தரங்கரான அதாவது அவள் இதயத்தில் இடம் பிடித்தவனான கடன் கார காதலன் வந்தான் கையில் பூவளையம் அவள் பூத உடலில் சாத்தி விட்டு , கண்ணீர் வடித்தான் அதற்கு அர்த்தம் என்ன ○○ நானும் சந்தோஷமாக இல்லையடி உன்னையே மணந்து இருக்கலாம் இக்கரைக்கு அக்கரை பச்சையாக தெரிந்ததால் உன்னை விட்டு அவளை மணந்தேன் அங்கே போய் பார்த்தது புல்லே இல்லாத பாலைவனத்தை எனக்கு எதிராக நீ வாழ்ந்து காட்டிவிட்டாய் உனக்கு எதிராக வாழ்ந்து காட்ட முடியாமல் தோற்றுப்போனேனடி கடைசியில் ஏகாந்தம் ஆனேனடி உன் ஆன்மா சாந்தி பெற பிராத்தி கொள்கிறேன்○○ என்று நகர்ந்து போனான்

போலீஸ்காரன் அதே வீட்டில் குடியிருக்கிறான் எடுத்த நகைகளை கொஞ்சம் கொஞ்சமாக யாரும் சந்தேகப்படாத வகையில் காசாக்கிவிட்டான் அவள் அவன் மேல் சந்தேகப்பட்டு இருந்தது சரிதான்
பின் அடக்கம் செய்துவிட்டு அந்த முடியாத கிழவிக்கு பாதுகாப்பாக இருந்தான் சிலநாளே இருந்தாள் போய் சேரவேண்டிய இடத்திற்கு போய் சேர்ந்து விட்டாள்

இருந்த வீட்டுக்கு அவனே பாத்தியக்காரனாகினான் அவனை உனக்கு பங்கு பாகம் இல்லை என்று விரட்டியவர்கள் கொடுத்தே இருந்தாலும் இவ்வளவுக்கு குறைவாகவே இருந்திருக்கும், வட்டிக்கு பணம் வாங்கியவர்கள் உள்ளுக்குள்ளே சந்தோஷம் அடைந்தார்கள் தமிழ்ச்செல்வி முச்சு எப்போது நின்றதோ அப்போதையில் இருந்து வாங்கிய பணத்தை திருப்பிக்கட்டுவதை நிறுத்திக் கொண்டார்கள்.

கணவனை இழந்த ஒருத்தி தாய்வீட்டோடு வந்து கிடந்தாள் அவளை போலீஸ்கரன் தலையில் கட்டி வாழ்க்கை ஆரம்பமானது
••••••••••••••
ஆபிரகாம் வேளாங்கண்ணி கண்டம்பாக்கத்தான்

எழுதியவர் : ஆபிரகாம் வேளாங்கண்ணி (25-Jul-19, 3:04 pm)
பார்வை : 101

மேலே