பிக்பாஸ் சேரன் அயோக்கியன் சொன்னது மீரா

சேரன் இரவில் அழுதிருக்கக் கூடும் என்றும் அவமானங்களால் ஒரு நல்ல கலைஞன் அடிபட்டுக் கொண்டிருத்தல் வலியைக் கொடுக்கிறது என்றும் நேற்றுத்தான் எழுதியிருந்தேன். தனபாலன் அண்ணா கூட அதற்கு யாரும் இருக்கும் இடத்தில் இருந்தால் எல்லாம் சௌக்கியமேன்னு கருத்தும் இட்டிருந்தார்... அது உண்மைதான். அதைவிட பெரிய அவமானமும் எல்லாரின் முன்னால் உடைந்த அழுதலும் அடுத்த நாளே நிகழ்ந்திருக்கிறது.



மீரா தன்னை எப்படியாகிலும் முன் நிறுத்த எடுக்கும் ஆயுதங்களெல்லாம் அவருக்கு எதிராகவே திரும்புவதால் ஒவ்வொரு முறையும் அதன் வீச்சை அதிகமாக்கிக் கொண்டே இருக்கிறாரே ஒழிய, அதை விட்டு எல்லாருடனும் சேர்ந்து நிகழ்வுகளைக் கலகலப்பாகக் கொண்டு போவோம் என்றெல்லாம் சிந்திப்பதே இல்லை... யாருக்கு ஓட்டு அதிகமிருந்தாலும் பிக்பாஸ் மீராவை வெளியேற்றுதல் நலம்... அல்லது சேரனின் ஆசைப்படி அவரை வெளியில் கொண்டு வந்து விடலாம்... இதைவிட இன்னும் கேவலமான பிரச்சினையைக் கூட மீரா கிளப்பக் கூடும்.



இரண்டு நாட்களாக மோசமாகப் போய்க் கொண்டிருக்கும் நிகழ்ச்சியைத் தூக்கி நிறுத்தும் பொருட்டாக சரவணன் ஒரு கதையை கவின், சாண்டியிடம் சொல்கிறார். அதாவது உங்க நாட்டாமையும் எங்க நாட்டாமையும் கணவன் மனைவிதான்... எங்க நாட்டாமைக்கு தான் தலமையாக இருக்கணும்ன்னு ஆசை... ஆனா உங்க நாட்டாமை விட்டுக் கொடுக்கலை... அதுல பிரச்சினையாகி தன்னோட பெண் குழந்தையோட அவ பொறந்த ஊருக்கே வந்து நாட்டாமை ஆயிருச்சு... அதோட குழந்தைதான் லாஸ்லியா... ரெண்டு பேரையும் பேசி சேர்த்து வைக்கணும்டான்னு சொல்றாரு.



இதைச் சேரன் மற்றும் மதுவிடம் சொன்னதும் அவர்களும் நடிக்க ஒத்துக் கொள்கிறார்கள். நாடகம் அரங்கேறுகிறது... எல்லாருமே மிகச் சிறப்பாக நடிக்க, லாஸ்லியா சொம்பத் திருட, முந்தாநாள் நடந்தது மாதிரி திருடி... அதைக் கொடுடின்னு எல்லாரும் விரட்ட... நாட்டாமை அதுவும் சொம்பு தொலைத்த நாட்டாமை என்பதால் சேரனும் போய் இழுத்து வர, மது இது நம்ம புள்ளைங்கன்னு சொன்னதும் மன்னிச்சு விட்டுடுறாரு... நாட்டாமை பாசத்துக்கு கட்டுப்பட்டுட்டாருன்னு கவின் கேலி பண்றான். இந்தக் கேப்புல ரேஷ்மா வெத்தலைப் பொட்டி மற்றும் சொம்ப எடுத்து மறைச்சு வச்சிருது. அதைத் தேடிக்கிட்டு சேரன் அலைய, மணிக்கொருதரம் சொம்பத் தொலைக்கிறதே நாட்டமைக்கு வேலையாப் போச்சுன்னு கவின் கவுண்டர் கொடுக்க எல்லாரும் ரசிக்கிறாங்க.



அப்பத்தான் மீரா ஒரு பிரச்சினையைத் தூக்கிட்டு தலைவிக்கிட்ட போகுது... உடனே தலைவி டாஸ்க்கை விட்டுட்டு மீராவோட கதையைக் கேளுங்கன்னு ஏத்திவிட்டுட்டு பேசாம உக்காந்துருச்சு... லாஸ்லியாவை பிடிச்சப்ப எல்லா ஆண்களும் ஒதுங்கி நிற்க, சேரன் மட்டும் உள்ள வந்து என்னைப் பிடிச்சி இழுத்தாரு... அதுவும் இங்கன்னு வயித்தைக் காட்டுச்சு... அப்புறம் அவரோட செயல் விளையாட்டாய் இல்லை... தொடக்கூடாத இடத்தில் தொட்டார்ன்னு சொல்லுச்சு... சேரன் மறுத்தார்... சரவணன் அந்த இடத்தில் சரியாய்ப் பேசினார்... இது விளையாட்டு... இதுல போயி அங்க தொட்டார் இங்க தொட்டார்ன்னு பேசுறதெல்லாம் தப்பு... இதை நீ அவர்கிட்ட தனியாப் பேசியிருக்கணும்... எல்லார் முன்னாடியும் சொல்லக்கூடாதுன்னு சொன்னார். ஆனா இதுதான் எனக்கு தெரியும்... அவர் தப்பானவர்ன்னு எப்பவும் போல அடுத்தவங்களைப் பேச விடாமல் கத்த ஆரம்பிக்க, நான் அங்கு வந்தது டாஸ்கின் அடிப்படையில்தான்... உன்னைத் தள்ளியது உண்மை... என்னோட வேகம் என்னன்னு தெரியும்... அதுக்கு என்னை மன்னிச்சுக்க... ஆனா தப்பாத் தொட்டேன்னு சொல்லாதேன்னு சொல்ல, மதுவும் சரியாகப் பேச, மீரா எப்பவும் போல் கன்னியமில்லாத பேச்சைத் தொடர்ந்தது.




நீ அன்னைக்கு ரெமோ டான்ஸ் ஆடுனியே அப்ப எங்க தொட்டு ஆடுனாங்கன்னு லாஸ்லியா கேட்டதுக்கு அவங்க என்னோட பிரண்ட்ஸ் அப்படின்னு சொன்னுச்சு... பிரண்ட்டுன்னா ஒண்ணு மத்தவங்கன்னா ஒண்ணான்னு கேட்க, அப்படித்தான்னு மீரா ஆணி அடிச்சிச்சு. அதோட விடாம நான் இருக்கிற துறையில தொட்டுப் பேச மாட்டாங்க தெரியுமான்னு சொல்லுச்சு பாருங்க... பார்த்தவங்களுக்கெல்லாம் மயக்கமே வந்திருக்கும்... ஆமா அம்மணி இருக்கிறது மாடலிங் துறை... ரொம்ப மரியாதையான துறைதான்... அப்புறம் எல்லாரும் பேசியும்... வீராயி விதண்டவாதம்தான் பேசுவாள்... வீணாவுல எதுக்குப் பேசிக்கிட்டுன்னு எல்லாரும் முடிவுக்கு வந்தப்போ சேரன் எழுந்து எல்லாரும் மன்னிச்சுக்கங்க... இனி நான் இல்லை... யார்க்கிட்டயும் பேசலைன்னு சொல்லிட்டு உள்ள போயிட்டார். பின்னாலயே போன லாஸ்லியாவும் ரேஷ்மாவும் சேரனைச் சமாதானப்படுத்த, நீங்க எதுக்கு எல்லார்க்கிட்டயும் மன்னிப்புக் கேட்கணும்... அப்படின்னு லாஸ் கேட்டுக்கிட்டு நின்னுச்சு... லாஸ் உடைந்து அழத்தயாராய் இருக்க, அந்த இடத்தில் சேரன் உடைந்தார்.



என்னோட பொண்ணுங்களுக்கு அப்பனைத் தெரியும்... ஆனா அவங்களுக்கு கல்யாணம் பண்ணனுமே... அப்பன் தப்புன்னு சொல்லிட்டா... என்னை விட்டுடுங்கம்மா... போதும்... நான் போறேன்னு உடைந்து அழுதார். அவரின் கேவல் கேட்டு எல்லாரும் ஓடி வந்து பேசி, அவ சொன்னா... நாங்க எல்லாரும் இருக்கோமே... நாங்க சொல்றோமே... நீங்க நல்லவருன்னு... கமல் சார் வரட்டும்ன்னு சொன்னாங்க... அப்ப நேரன் சரி எனக்கு நீங்க எல்லாம் ஒரு உறுதி தரணும்... இந்த வாரம் நானிருக்கேன்... ஆனா அடுத்த வாரம் ஒண்ணு நானிருக்கணும் அல்லது அவ இருக்கணும்ன்னு சொன்னார். எல்லாரும் ஏற்றுக் கொள்ள, அழுதவர் கொஞ்சமே ஆறுதலானார்.



சரவணன் தான் எப்பவும் மீராவுடன் இருப்பேன் என்றாலும் இந்த இடத்தில் அவளுக்காக பேசலை... சேரனுக்காகத்தான் பேசினேன்... ஏன்னா ஒரு ஆணோட மனநிலை இப்படியான் ஒரு பழி சுமத்தப்படும் போது எப்படியிருக்கும்ன்னு எனக்குத் தெரியும்... அதான் என்றவரின் பேச்சில் சேரன் தப்பானவர் இல்லை என்பது தெளிவாகத் தெரிந்தது. மீரா பிடிச்ச முயலுக்கு அம்பது காலுன்னு அழிச்சாட்டியம் பண்ண, நீ தர்ஷன் கூட கட்டிப்பிடிச்சி ஆடலை... அவன் இந்த டாஸ்க்ல உனக்கு மகந்தானேன்னு சேரன் கேட்டதும் அவன் என் நண்பன்னு சொன்னுச்சு... கவின் வந்து பேசிப்பாத்து உனக்கு நல்லது சொல்றவங்க நாலு பேரு இருக்கோம்ன்னா அதையாவது காது கொடுத்து கேளுன்னு சொன்னான்.... சாண்டி அவர் பங்குக்குப் பேச, முகன் போட்ரேய் பண்ணுறாங்கன்னு சொல்ல நீ இப்பச் சொன்னது தப்பில்லை ஆனா சொன்ன விதம் தப்பு அது அவரை எப்படிப் போட்ரேய் பண்ணியிருக்கும்ன்னு யோசின்னு சொன்னதுக்கும் மீரா தப்பை ஒத்துக்கலை... எல்லாரும் சரியாப் பேசுறானுங்க... நாம போட்ட நாடகத்தை எவனும் நம்ப மாட்டேங்கிறானேன்னு எந்திரிச்சுப் போயிருச்சு... முகன் கோபமாக அவனைத் தேற்றினார்கள். அபி டாஸ்க்லதானே மனைவி, உண்மையில் அப்படியே நடந்து கொண்டது.



அதன் பின் ஆறுதலான எல்லாருமாய் மீண்டும் டாஸ்க்குக்குள் போனார்கள்... பாம்புப்பட்டித் திருவிழா... கீரிப்பட்டிக்கு அழைப்பு.., சரவணன் சிறப்புப் பேச்சாளார்.... முகன் தொகுப்பாளர்... சாண்டி, கவினுடன் அந்த அணியின் பெண்களின் ஆடல் பாடல்... அப்புறம் லாஸ்லியாவின் டான்ஸ்... சூப்பர்... தினமும் கேமரா வழி ரசித்த பிக்பாஸ் தனி மேடையே அமைத்துக் கொடுக்க... லாஸ் கலக்கல்... அந்தச் சிரிப்புக்கே எல்லாரும் காலி அப்படின்னு பார்த்துக்கிட்டு இருந்தா அடுத்து ஆடிய ஷெரினின் கண் போட்ட தூண்டிலில் அம்புட்டுப் பயலும் காலி... அப்புறம் மது, மீரான்னு எல்லாரும் ஆட்டம்... ரொம்பச் ஜாலியா நிகழ்ச்சியை முடிவுக்குக் கொண்டு வந்தாங்க.




மீரா போன்றவர்களுக்கு இந்த பிக்பாஸ் இல்லம் மட்டுமே வாழ்க்கையில்லை... இதையும் தாண்டிய வாழ்க்கை வெளியில் விரிந்து கிடக்கிறது... இப்படியான மனநிலை உள்ள ஒரு பெண் எப்படி வாழ்க்கையை நகர்த்துவார்... இவரை மணமுடிப்பவனுடன் சந்தோஷமான வாழ்க்கை அமையும் என்று என்ன நிச்சயம்..? தனக்கும் ஒருவருக்கும் பிடிக்கவில்லை எனும் போது ஒதுங்கியிருத்தல் நலம். அதை விடுத்து அபாண்ட பழி சுமத்தல் என்பது எவ்வளவு கீழ்த்தரமானது.



நான் ஒரு இயக்குநர்ன்னு இதுவரை இங்கு காட்டிக்கலை... என்னோட படத்துல மார்பு தொப்புள் தெரியிற மாதிரி ஒரு காட்சி வச்சிருப்பேனா... என்னோட குணம் உங்களுக்குத் தெரியாது... கோபம் வந்தா சாப்பிட மாட்டேன்... இங்க வந்து எல்லாரோட சேர்ந்து எல்லாத்துலயும் இணைஞ்சி போறேன்னா நான் யார்ன்னு என்னைத் தெரிஞ்சிக்கணுங்கிறதுக்காகத்தான் என்று சேரன் சொன்னதில் உண்மை இருந்தது... நடிப்பு துளியும் இல்லை.



சேரன் அழும் போது எனக்கும் அழுகை வந்தது... ஒரு தகப்பனாய் அவரின் வேதனை... நான் என்ன நிலமையில் இங்கு வந்தேன் தெரியுமா என்ற அவரின் வாழ்க்கை அவலம்... அதுவும் மகள்களாய் நினைக்கும் பெண்களின் முன் இத்தகைய அவமானம்... என எல்லாமாய் அவரை உடைந்து அழ வைத்ததுடன் மனதளவில் மிகவும் பாதிப்படையச் செய்து விட்டது. இந்த வாரம் கமல் குறும்படம் போட்டு சேரன் மீது தவறா இல்லையான்னு நிரூபித்தலும் இருவரில் ஒருவரை வெளியேற்றுதலும் செய்தால் நலம். செய்வாரா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்கணும்.



அதுக்கு முன் இன்றைய நிகழ்வில் மீராதான் சிறப்பாக விளையாண்டார் என்று சொல்வது போலும் அதற்குச் சேரனும் மதுவும் எதிர்ப்பது போலும் காட்டப்பட்டிருக்கிறது. சேரன் சண்டை போட்டார்... மது தன்னை அவமதிப்பதை எதிர்த்தார்... ரேஷ்மா நல்லாத்தான் நடித்தார்... இதில் மீராவின் நடிப்பு எப்போது நல்லாயிருந்ததுன்னுதான் புரியலை... இந்தப் பயலுக மீராவுக்கிட்ட நல்லா பேர் வாங்கலைன்னாச் சேரனைச் சொன்னது போல் தங்களையும் சொல்லிடுமோன்னு அஞ்சுறானுங்க போல.



பிக்பாஸ் தொடரும்.

-'பரிவை' சே.குமார்.

எழுதியவர் : சே.குமார் (28-Jul-19, 10:20 am)
சேர்த்தது : சே.குமார்
பார்வை : 54

சிறந்த கட்டுரைகள்

மேலே