அரியணை ஏற்ற வேண்டும்

சுவரெல்லாம் சித்திரங்கள்
வரைந்தவனை பாராட்ட ஆளில்லை
சுவர் கேட்டு போனதென்று
திட்டி தீர்க்கும் சமூகம்

தாள் எல்லாம் கவிதைகள்
தாள லயத்தோடு எழுதியவனை மதிக்க ஆளில்லை
தாள் எல்லாம் கிறுக்கிறான் கிறுக்கன் என்ற
தரமற்ற அவச்சொல் பேசும் கூட்டம்

ஆனால்
பிக்காஸோவையும்
ஷெல்லியையும்
ஆஹா ஓஹோ வென்று புகழ்வதும்
அவர்கள் வரைந்ததை எழுதியதை
அற்புதம் என்று மகுடம் சூட்டும் உலகம்

இங்கே மஹாகவி கம்பனை தெரியாது
இந்திய தேசத்தை விடுதலைக்கு இட்டுச்சென்ற
இந்திய கவி பாரதியை தெரியாது
எங்கோ பிறந்து எங்கோ வளர்ந்த
எவேறெவரையோ புகழும் சமூகம்

என்றுதான் நம்மை மதிக்கப்போகிறோம்
என்றுதான் நம்மவரின் திறனை வளர்க்கப்போகிறோம்
என்ற ஏக்கத்தோடு ஐம்பது ஆண்டுகளாய் நானும்
என் கூட்டமும் ஏக்கத்தோடு பார்க்கின்றோம்

அந்த நாள் வரும் வரை என்
அந்திமத்தை கொணராதே காலா
இந்த தேசம் விடிவதை நான் காண வேண்டும்
திறனாளி இந்த தேசத்தின்
எந்த மூலையில் எந்த வடிவத்தில் இருப்பினும்
என் தேசம் அவனை தேடிப்போய்
அரியணை ஏற்றவேண்டும்

எழுதியவர் : ச ரவிச்சந்திரன் (3-Aug-19, 7:30 pm)
சேர்த்தது : ச இரவிச்சந்திரன்
பார்வை : 218

மேலே