பல்லாரும் உன்னுயிரென் றெண்ணி ஒழுக - நேயம், தருமதீபிகை 369

நேரிசை வெண்பா

எல்லாரும் எவ்வுயிரும் ஈசன் வடிவமெனச்
சொல்லாரும் வேதம் சுழித்துளதால் - பல்லாரும்
உன்னுயிரென் றெண்ணி ஒழுக உயர்கதிபின்
நின்னுடல் ஆகும் நிலைத்து. 369

- நேயம், தருமதீபிகை,
- கவிராஜ பண்டிதர் ஜெகவீர பாண்டியனார்

பொருளுரை:

தேவர் முதல் யாவரும் எவ்வுயிர்களும் யாவும் ஈசன் வடிவமென வேதம் சொல்வியுள்ளதாதலால் எல்லாரையும் உன் உயிராக எண்ணி ஒழுகுக: அங்ஙனம் ஒழுகின் உயர்ந்த பேரின்பம் உன்னிடம் நிறைந்து நிலைத்து நிற்கும் என்கிறார் கவிராஜ பண்டிதர்.

உரியவர்களிடத்து மாத்திரம் பிரியமுடன் ஒழுகுவது ஓரளவு பண்பே ஆயினும், அது உயர்ந்த அன்பு ஆகாது; உலகிலுள்ள எல்லா உயிர்களையும் தன் உயிர்போல் எண்ணி ஒழுகிய பொழுதுதான் தலை சிறந்த புண்ணிய சீலனாய் மனிதன் நிலவி நிற்கின்றான்.

சாதி, மதம், தேசம் முதலியன யாதும் பாராது எவரையும் எவ்வுயிரையும் உன் உயிர் என நினைந்து பேணுக என்றது உண்மையான உறவுரிமையை நுண்மையாக உணர்ந்து கொள்ள வந்தது. உயிரினங்கள் யாவும் இனிய உறவினங்களே.

தாய், தந்தை, தமர், தாரம் என வந்துள்ளன தேக சம்பந்தமான உறவுகள். பிறந்து ஒரு பிறப்பில் சூழ்ந்து தோன்றிய தோற்றங்கள்; விரைந்து மறைந்து போகின்ற இந்தச் சூழல்களில் மிகுந்த அபிமானமும் அன்பும் பாராட்டி வருகின்றோம்.

கடலலைகள் போல் உடலளவில் தோன்றி மறைகின்றமையால் இந்த உறவினங்கள் சந்தையில் கூட்டம் என வந்தன. இடையே சிறிது தொடர்புடைய இவற்றினும் என்றும் யாண்டும் நிலையான தொடர்புகளாய் உயிரினங்கள் உரிமை தோய்ந்திருக்கின்றன. பழம் கிழமைகளை உளம் தெளிய வேண்டும்.

உடலின் தொடர்பான உறவுகளை மடடும் உரிமையாய் நோக்கிக் குறுகி நிற்பது ஊனமாகும்; உயிரின் உறவான எவ்வுயிரையும் தனது இனமாக எண்ணி எழுவது ஞான சீலமாம்.

குறுகிய ஊன நோக்கம் ஒழிந்து பெருகிய ஞான நோக்கம் எழுந்த பொழுது மனிதன் பெரியவனாய்ப் பேரின்ப நிலையைக் காண்கின்றான். யாவும் எவ்வுயிரும் தான் ஆக உணர்ந்து தண்ணளி புரிந்து ஒழுகுவோன் புண்ணிய நிலையில் பொலிந்து மகாத்துமா ஆகின்றான். தன்னை அறிந்த பொழுது தலைவனையும் உணர்ந்து கொள்கின்றான்.

எல்லாரும் எவ்வுயிரும் ஈசன் வடிவம். என்றது கடவுளின் உண்மை நிலையை உணர்ந்து கொள்ள வந்தது. இறைவன் எங்கும் நிறைந்திருக்கிறான்; அவன் இல்லாத இடம் இல்லை. அகண்ட பரிபூரணன், அநாதி மலமுத்தன் என வேதங்களில் விளங்கி வரும் பெயர்கள் அவனது நிலைமை தலைமைகளை விளக்கி நிற்கின்றன

அகர முதல எழுத்தெல்லாம்; ஆதி
பகவன் முதற்றே உலகு 1 கடவுள் வாழ்த்து

இறைவன் அகரம் போல் உளன் என வள்ளுவர் இங்ஙனம் அருளியுள்ளார். அகரம் மருவிய பொழுதுதான் எந்த எழுத்தும் உருவாய் ஒலிக்கும்; மருவாவழி ஏதும் ஒலியாது; அவன் அசைய அகிலமும் அசையும்; அவன் அசையவில்லையானால் அணுவும் அசையாது என்னும் உண்மையை ஓரளவு உணர்த்தி உள்ளமையால் அகரம் ஈண்டு ஆதி பகவனுக்கு உவமையாயது.

எண்சீர் விருத்தம்
(காய் காய் மா தேமா அரையடிக்கு)

அகரவுயிர் எழுத்தனைத்தும் ஆகி வேறாய்
அமர்ந்ததென அகிலாண்டம் அனைத்தும் ஆகிப்,
பகர்வனஎல் லாமாகி அல்ல தாகிப்
பரமாகிச் சொல்லரிய பான்மை ஆகித்,
துகளறுசங் கற்பவிகற் பங்க ளெல்லாந்
தோயாத அறிவாகிச் சுத்த மாகி
நிகரில்பசு பதியான பொருளை நாடி
நெட்டுயிர்த்துப் பேரன்பால் நினைதல் செய்வாம். - பொருள் வணக்கம்

ஒன்றாகிப் பலவாகிப் பலவாக் கண்ட
ஒளியாகி வெளியாகி உருவு மாகி
நன்றாகித் தீதாகி மற்று மாகி
நாசமுட னுற்பத்தி நண்ணா தாகி
இன்றாகி நாளையுமாய் மேலு மான
எந்தையே எம்மானே என்றென் றேங்கிக்
கன்றாகிக் கதறினர்க்குச் சேதா வாகிக்
கடிதினில்வந் தருள்கூருங் கருணை விண்ணே. – ஆகார புவனம் - சிதம்பர ரகசியம், தாயுமானவர்

ஈசன் யாவுமாய்ப் பரந்து விரிந்து எங்கும் நிறைந்துள்ளான்; அன்பால் நினைந்து உருகினவர்பால் அவன் விரைந்து வந்தருளுகின்றான் என அனுபவ நிலையில் சுரந்து வந்துள்ள இந்த அருமைப் பாடல்கள் ஈண்டு உரிமையுடன் கருதி ஊன்றி உணரவுரியன.

யாண்டும் எல்லா உயிர்களிலும் எந்தப் பொருளினிடத்தும் பாலில் நெய் போல் இறைவன் பரவியிருக்கிறான் என்னும் உண்மையைச் சிந்தனை செய்துவரின் அவ்வரவால் அரிய பல நலங்கள் உளவாம். தெய்வக் காட்சி உய்வைத் தருகின்றது.

இந்த ஞானப் பார்வை ஈனநிலைகளையெல்லாம் அடியோடு நீக்கி உயர்ந்த பேரின்ப நிலையைக் கொண்டு வந்து காட்டுகின்றது. காண உரியதைக் கண்டு மகிழக் கண் விழிக்க வேண்டும்.

பார்த்த பொருளில் எல்லாம் பரமன் உள்ளான் என்று ஒருவன் கருதி உணர்வானாயின் யாண்டும் யாதொரு தீங்கும் நிகழாது; எங்கும் தெய்வ சிந்தனையே மருவி உருகி வருதலால் அவன் தயா மூர்த்தியாய் உயர்ந்து திவ்விய மகிமை பெறுகின்றான்.

நேரிசை வெண்பா

பார்த்தபொருள் எல்லாம் பரமனெனப் பாராமல்
கூர்த்த பழிநிலையில் கூர்ந்திழிந்தேன் - பார்த்தயிடம்
எங்கும் அவனிருப்பை இன்றுகண்டேன் கண்டேனே
பொங்கியபே ரின்பம் புகுந்து.

என்றமையால் விரிந்த போதக் காட்சியை இழந்த வழி உண்டாகும் இழவும், அடைந்த பொழுது உண்டாகும் ஆக்கப் பேறும் அறியலாகும். உண்மை தெரிய உய்தி வருகின்றது.

கண்ட பொருள்களை எல்லாம் கடவுள் மயமாக ஒருவன் காணுவானாயின் அந்த ஞானக்காட்சி அதிசயமான ஆனந்த நிலையை அருளி விடும். அந்நிலையைப் பெற்றவன் பின்பு பிறவித் துன்பத்தைக் காணான்; பேரின்பத்தையே கண்டு நித்திய முத்தனாய் நிலவி நிற்கின்றான்.

எவ்வழியும் தெய்வம் உளது என உணரவே வெவ்வழி விலகி விடுகின்றது; செவ்விய ஆன்ம நேயங்கள் செழித்து வளர்ந்து திவ்விய மகிமைகள் உளவாகின்றன.

’பல்லாரும் உன்னுயிர் என்று எண்ணி ஒழுக’ என்றது உயர்த்த உயிர் வாழ்க்கையின் சிறந்த நிலைமை தெரிய வந்தது. ஆன்ம நேயம் ஆனந்த போகம் ஆகின்றது.

தன்னுடைய உயிரை ஒருவன் எவ்வாறு பேணி வருகிறானோ அவ்வாறே எல்லா உயிர்களையும் பிரியமாகக் கருதிவரின் அவன் அரிய பேறுகளை அடைகின்றான்.

இவன் சிறிது அன்பு செய்ய உலகமெல்லாம் இவன் மேல் பெரிதும் அன்பு செய்கின்றன. வித்திலிருந்து விளைவு தோன்றுதல் போல் ஒருவன் செயல் இயலின்படியே பயன்கள் விளைகின்றன. விதைத்தது விளைவாய் விரிந்து வருகின்றது.

Love, and you shall be loved. - Emerson

’அன்பு செய்; உலகம் உன்பால் அன்பாய்க் குவியும்’ என எமர்சன் இவ்வாறு கூறியுள்ளார். இன்னாமையை ஒழித்து இனிமையை வளர்த்து வருவதை உயர்ந்தவர் எவரும் உவந்து போற்றி வருகின்றனர்.

’Love your enemies’ – Bible.

’பகைவரையும் நேசியுங்கள்' என ஏசுநாதர் அருளியிருக்கிறார்.

பகைமை, கொடுமை, பழி, பாவம் யாவும் அன்பால் ஒழிந்து போகின்றன. உறவு, உரிமை, புகழ், புண்ணியம் எல்லாம் அதனால் விளைந்து வருகின்றன. இனிய வரவுகள் இன்பம் தருகின்றன.

மனித சமுதாயத்தை இனியதாக்கி யாண்டும் புனிதப்படுத்தி வருதலால் அன்பு மேன்மையான ஒரு ஆன்ம அமுதமாய் அமைந்திருக்கின்றது. அது மருவிய அளவே மகிமை விளைகின்றது.

’உயர் கதி நின் உடல் ஆகும் என்றது‘ அன்புடைமையால் அடையும் ஆதாய நிலை அறிய வந்தது. ஒருவன் உள்ளத்தில் அன்பு வளர உயர்ந்த பேரின்ப வெள்ளம் அவனைச் சூழ்ந்து பெருகுகின்றது. கதி மோட்சம் தானாகவே அவனுக்குத் தனி உரிமையாய் மருவுகின்றது.

எல்லாம் இறைவன் உருவங்கள் எனக் கருதுக; எங்கும் அன்பு செய்க; பொங்கிய பேரின்பம் உன் முன்பு வந்து புகும் என்கிறார் கவிராஜ பண்டிதர்.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (4-Aug-19, 9:51 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 82

சிறந்த கட்டுரைகள்

மேலே