உன் உண்மை நிலையை உணரின் உயரின்பம் எய்தும் இனிது - நினைவு, தருமதீபிகை 379

நேரிசை வெண்பா

உன்னிலையை ஊன்றி உணரா(து) உளமடிந்து
புன்னிலையில் வீழ்ந்து புரள்கின்றாய் - உன்னுடைய
உண்மை நிலையை உணரின் உயரின்பம்
எண்மையாய், எய்தும் இனிது. 379

- நினைவு, தருமதீபிகை,
- கவிராஜ பண்டிதர் ஜெகவீர பாண்டியனார்

பொருளுரை:

உன் அந்தரங்கமான ஆன்ம நிலையை அறியாமல் மறந்து வெறியனாய் இழிவில் விழுந்து புரள்கின்றாய்; உண்மை இயல்பை உணரின் உயர்ந்த பேரின்பம் விரைந்து விளையும் என்கிறார் கவிராஜ பண்டிதர். உணரவுரியதை இப்பாடல் உணர்த்துகின்றது.

மனிதன் அறிவு நலம் உடையவன். சகல கலைகளையும் அகில நிலைகளையும் அறிய வல்லவன். கண்களால் கண்டும், காதுகளால் கேட்டும், மூக்கால் முகர்ந்தும், நாக்கால் நுகர்ந்தும் பொருள்களை ஓர்ந்து அறிகின்றான். இங்ஙனம் எல்லாவற்றையும் நாளும் நன்கு அறிந்து வருகின்றவன் தன்னை மாத்திரம் யாதும் எண்ணி அறிவதில்லை. இது அதிசய வினோதமான மதி மயக்கமாயுள்ளது. தன்னை ஆயாமல் உள்ள இதனை ’மாயா வல்லபம்’ என்பர்.

உண்மையை உணர ஒட்டாதபடி மயக்கி நிற்பது மாயை என வந்தது. தனது உண்மை நிலையை உணர்ந்தபோது அவன் தத்துவ ஞானியாய் முத்தியை அடைகின்றான். உணர்ந்தவன் ஞானி என்றமையால், உணராதவன் அஞ்ஞானி என நின்றான். மெய்யுணர்வு உய்தி புரிதலால் அதனையுடையவர் தெய்வீக நிலையை எய்துகின்றனர்.

ஐயுணர்வு எய்தியக் கண்ணும் பயமின்றே
மெய்யுணர்(வு) இல்லா தவர்க்கு. 354 மெய்யுணர்தல்

உண்மை உணர்வே உய்தி தரும்; அதனையுடையவனே பாக்கியவான் என இது உணர்த்தியுள்ளது. யாவும் அறியவல்ல அரிய மனிதப் பிறவியை அடைந்தும் தான் யார்? ஏன் இங்கு வந்தோம்? என்ன செய்ய உரியோம்? இப் பிறவி எப்படி வந்தது? இது தப்பினால் எங்கே போவோம்? உடல் ஒழியுமுன் அடைய வேண்டியது எது? அடையாதொழியின் யாது அடையும்? என யாதொரு சிந்தனையும் இல்லாதிருப்பது விந்தையாக உள்ளது.

உலகமே கண்ணாய்ப் பொய்யறிவில் ஓடிப் புலையாடி நிற்றலால் மெய்யறிவு. மேவாது போயது. அது போகவே உய்தியும் ஒழிந்தது.

மெய்யைத்தான் சிறிதுணர்ந்து நீவிதித்த மன்னுயிர்கள்
உய்யத்தான் ஆகாதோ? உனக்கென்ன குறைஉண்டோ? 59 விராதன், இராமாயணம்

இராமபிரானை நோக்கி விராதன் இவ்வாறு விநய வினோதமாய் வினவியிருக்கிறான். சீவ கோடிகளை உலக மாயையில் ஆட்டி மாயன் என்னும் பேர்க்கு நேயமாய் நிற்கின்றாய்! நீ சிறிது அருள் புரியின் அவை யாவும் கண் விழித்து உண்மை கண்டு உயர் கதி அடையுமே; அவ்வாறு அடைந்தால் உனக்கு என்ன குறைந்தா போகும்? என்றும் எங்கும் நிறைவுடைய உனக்கு யாதொரு குறைவும் நேராது; கொஞ்சம் பெரிய மனது வைத்துச் சீவர்களுக்கு உய்தி புரிந்தருள் என்னும் பொருள் பொதிந்து இது வந்துள்ளது. உயிர்களின் உறுதி நிலை கருதியுணர உரியது.

மெய்யை உணராமல் வைய மாந்தர் வெய்யநிலையில் வீழ்ந்து உழல்கின்றனர் எனக் கம்பர் கருதி இரங்கியுள்ளமை ஈண்டு அறிய நேர்ந்தது. கவியின் இதயம் கனிவு மிக உடையது.

தெய்வம் எல்லார்க்கும் பொது; அது எங்கும் கருணை சுரந்துள்ளது; இனிய நினைவுடன் எவ்வுயிர்க்கும் இரங்கியருளும் மனிதனுக்கு அந்தப் பேரருள் தனி உரிமை ஆகின்றது. ஆகவே தனது நல்ல எண்ணமே முத்தி நிலைக்கு மூல வித்தாயுள்ளமையை உய்த்துணர்ந்து கொள்ளலாம்.

எண்ணம் இனியதாக இதயம் புனிதமாகின்றது; அதனால் உணர்வு தெளிகின்றது; அது தெளியவே உண்மை நிலை எளிதே வெளிப்படுகின்றது.

உண்மை நிலையை உணரின் இன்பம் எண்மையாம் என்றது தனது ஆன்ம சொரூபத்தை அறியின் ஆனந்த வெள்ளம் பொங்கி எழும் அமைதி கருதி வந்தது.

தன்னை அறிதலாவது கருவி கரணங்களான தேக முதலியவற்றினும் வேறாயுள்ள ஆன்மாவை உணர்ந்து கொள்ளுதல். அவ்வுண்மை உணர்வால் பிறவி நீங்கிப் பேரின்பம் ஓங்குகின்றது.

அறுசீர் விருத்தம்
(விளம் மா தேமா அரையடிக்கு)

தன்னையும் தனக்கா தாரத் தலைவனை யும்கண் டானேல்
பின்னையத் தலைவன் தானாய்ப் பிரமமாய்ப் பிறப்புத் தீர்வன்;
உன்னைநீ அறிந்தா யாகில் உனக்கொரு கேடும் இல்லை;
என்னைநீ கேட்கை யாலே ஈதுப தேசித் தேனே. - கைவல்லியம்

தனது உண்மை நிலையை உணர்ந்த போது உண்டாகும் உய்தி நிலையை இது உணர்த்தியுள்ளது. பொருள்களை ஊன்றி நோக்கி ஓர்ந்து சிந்திக்க வேண்டும். தத்துவ தரிசனம் சித்த சுத்தியாளருக்கே இனிது கைகூடுகின்றது. அந்தப் புனித இதயத்தை இனிது பாதுகாத்து வருபவன் பாக்கியவான் ஆகின்றான். எதையும் சொல்லுவது எளிது; எய்துவது அரிது.

நல்ல எண்ணங்களால் கருமங்கள் நல்லனவாகின்றன. அந்த நல்வினைகளால் எல்லா நன்மைகளும் இனிது விளைகின்றன. புண்ணிய பரிபாகத்தினாலேதான் மனிதன் புனித நிலையை அடைகின்றான்.

நல்வினையின் விளைவால் பல பிறவிகளின் முடிவில் மனிதர்க்கு மோட்சத்தில் இச்சை உண்டாகின்றது' என பைங்கல உபநிஷதம் கூறியுள்ளது.

ஒரு மனிதனுக்கு மறுமை நோக்கம் வருவது எவ்வளவு அருமை என்பது இதனால் அறியலாகும். புனித இயல்புகளைப் பழகிவரின் புண்ணியம் பழுத்து வரும். அதனால் உயர்நலங்கள் யாவும் ஒருங்கே உளவாம்;

இவ் வுண்மையை ஓர்ந்து தெளிக என்றும், துயரம் நீங்கி உயர்கதி அடைய வேண்டின் உள்ளம் உயர வேண்டும்; அதனை நல்ல எண்ணத்தால் பேணி நலம்பல காணுக என்றும் கூறுகிறார் கவிராஜ பண்டிதர்.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (4-Aug-19, 10:25 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 104

மேலே