கள்ளம் கலவாத பேரன்பைக் கண்டவர்கள் எய்துவார் வீடு - நேயம், தருமதீபிகை 370

நேரிசை வெண்பா

உள்ளம் உருகி உடையான் தனைநினைந்து
வெள்ளம் எனநீர் விழிபெருக்கிக் - கள்ளம்
கலவாத பேரன்பைக் கண்டவர்கள் அன்றே
விலகாமல் எய்துவார் வீடு.370

- நேயம், தருமதீபிகை,
- கவிராஜ பண்டிதர் ஜெகவீர பாண்டியனார்

பொருளுரை:

உடையவனை நினைந்து தம்முடைய உள்ளம் கரைந்து கண்ணீர் சொரிந்து உண்மையான உயர்ந்த அன்பைப் பூண்டவர்களே பேரின்ப விட்டை உறுதியாகப் பெறுவர் என்கிறார். இப்பாடல், அன்புக்கு உரிய உறுதி நிலையை உணர்த்துகின்றது.

மனைவி, மக்கள் பாலும், சனசமுதாயத்தின் மேலும், பிற பிராணிகளிடமும் பாசமும் நேசமும் தயையும் புரிந்து ஒழுகும் வகைகளை இதுவரை அறிந்து வந்தோம்; இதில் இறைவனை நாடி உருகும் உரிமையை அறிய வந்திருக்கிறோம்.

உற்ற பிறவியில் உடல் உரிமையான பொருள்களில் பிரியம் வைத்து இனியராய் மனம் கனிந்து ஒழுகுவது உயர் நீர்மையே ஆயினும் என்றும் தனி உறவாய் யாண்டும் உயிர்க்கு உயிராயுள்ள இறைவனை நினைந்து உள்ளம் கரைந்து உணர்வு கசிந்து உரிமையுடன் வழிபாடு செய்து வருவதே விழுமிய நிலைமையாம்.

சீவான்மாவுக்கும் பரமான்மாவுக்கும் உள்ள உறவுரிமையை ஓர்ந்து உணரின் அதனைப் பிரிந்து நிற்கும் பரிதாப நிலையைத் தெளிவாகத் தெரிந்து உள்ளம் கரைந்து உருகும்; விழி நீர் வெள்ளம் பொழிந்து பெருகும். உயர் நீர்மை சுரந்து மருவும்.

தனது மனைவி, தன் பிள்ளை என்னும் உரிமையினாலேதான் ஒருவன் உள்ளத்தில் பிரியம் உண்டாகின்றது. உரிமை உணர்ச்சி அன்புக்கு மூல வித்தாயுள்ளது. தேக சம்பந்திகளாய் வந்துள்ளவர்களிடம் மனிதன் மோகம் மிகுத்து நிற்கின்றான்; என்றும் ஆன்மநாயகனாய் அமைந்துள்ள ஆண்டவனை மறந்து விடுகின்றான்

உயிர்க்குயிரான உரிமைப் பொருளை உண்மையாகத் தெரிந்த பொழுது உலக சம்பந்தமான எல்லாப் பொருள்களையும் இகழ்ந்து தள்ளிவிட்டு அதனையே உயிர் உள்ளி உருகுகின்றது: அதனால் பேரின்ப வெள்ளம் பெருகி எழுகின்றது.

உடையான் என்றது கடவுளுக்கு ஒரு பெயர். எல்லா உயிர்களும் யாவும் தனக்குத் தனி உரிமையான உடைமைகளாக என்றும் உடையவன் என்பதை இந்நாமம் உணர்த்தி நிற்கின்றது.

உயிர்க்கு இனிய இந்த அருமைத் துணையைக் கருதி வருவது உறுதி நலனாய் உய்தி தருகின்றது; கருதாது ஒழிவது பரிதாபமாயிழிந்து படு துயரமாகின்றது.

எண்சீர் விருத்தம்
(காய் காய் மா தேமா அரையடிக்கு)

அருந்துணையை அடியார்தம் அல்லல் தீர்க்கும்
அருமருந்தை அகல்ஞாலத்(து) அகத்துள் தோன்றி
வருந்துணையும் சுற்றமும் பற்றும் விட்டு,
வான்புலன்கள் அகத்தடக்கி மடவா ரோடும்
பொருந்தணைமேல் வரும்பயனைப் போக மாற்றிப்
பொதுநீக்கித் தனைநினைய வல்லோர்க்(கு) என்றும்
பெருந்துணையைப் பெரும்பற்றப் புலியூ ரானைப்
பேசாத நாளெல்லாம் பிறவா நாளே. 5 – 001 கோயில், திருநாவுக்கரசர் தேவாரம், ஆறாம் திருமுறை

இந்தப் பாசுரம் பரிவு மீதூர்ந்து வந்துள்ளது. பொருள் நிலைகளைக் கண் ஊன்றிக் கருதி உணர வேண்டும்.

அருந்துணை, அருமருந்து, பெருந்துணை என இதில் இறைவனைக் குறித்திருப்பது கூர்ந்து சிந்திக்கத் தக்கது. இந்த ஆன்மநாயகனை மறந்த நாள் மனிதனாய்ப் பிறந்த நாள் ஆகாது என்றமையால் பிறப்பின் பயனும் குறிப்பும் ஓர்ந்து உணர்ந்து கொள்ளலாம்.

‘வெள்ளம் என நீர் விழி பெருக்கி’ என்றது பரமனது உரிமையை அறிந்த பொழுது உயிர் உருகி நிற்கும் உண்மை நிலை உணர வந்தது.

ஆனந்த போகமாய் அரசு புரிந்திருக்கும் தனது அருமைத் தந்தையைப் பிரிந்து போய் நெடுந்தூரம் கடந்து வருந்தி அலைந்து நீண்ட காலம் துயருழந்து நொந்த மைந்தன் தெய்வாதீனமாய் மீண்டு வந்து தன் தந்தையைத் தனியே காண நேரின் அவன் உள்ளம் எவ்வாறு உருகி மகிழுமோ அவ்வாறே பரமனைப் பிரிந்து போய்ப் பிறவித் துயரங்களில் வீழ்ந்து உழந்து தாழ்ந்து தவித்த சீவன் மறுபடியும் அரிதாக அத்தாதையைத் தலைக்கூட நேர்ந்த பொழுது அப்பனே! அத்தா! ஐயனே! எனப் பரவசமாய் அழுது, கரைந்து ஆனந்த நிலையை அடையும்.

எழுசீர் விருத்தம்
(விளம் மா விளம் மா / விளம் விளம் மா)

புன்புலால் யாக்கை புரைபுரை கனியப்
பொன்னெடுங் கோயிலாப் புகுந்தென்
என்பெலாம் உருக்கி எளியையாய் ஆண்ட
ஈசனே! மாசிலா மணியே!
துன்பமே பிறப்பே இறப்பொடு மயக்காம்
தொடக்கெலாம் அறுத்தநற் சோதீ
இன்பமே உன்னைச் சிக்கெனப் பிடித்தேன்
எங்கெழுந் தருளுவ(து) இனியே. 10 – 37 பிடித்த பத்து, எட்டாம் திருமுறை, திருவாசகம், மாணிக்கவாசகர்

எண்சீர் விருத்தம்
(காய் 3 தேமா அரையடிக்கு)

இறந்திறந்தே இளைத்தயெலாம் போதுமிந்த உடம்பே;
இயற்கையுடம் பாகவருள் இன்னமுதம் அளித்தென்
புறந்தழுவி அகம்புணர்ந்தே கலந்துகொண்(டு)எந் நாளும்
பூரணமாம் சிவபோகம் பொங்கியிட விழைந்தேன்
பிறந்திறந்து பொய்க்கதியைப் பெறநினைந்(து)ஏ மாந்த
பேதையர்போல் எனைநினையேல் பெரியதிருக் கதவம்
திறந்தருளி அணைந்திடுவாய் சிற்சபைவாழ் அரசே
சித்தசிகா மணியேஎன் திருநடநா யகனே. - அருட்பா

பரமன் பிரிவை நினைந்து மறுகி அன்பால் உருகி முன்னைய நிலையை மீண்டும் அடைந்து கொள்ள விழைந்து அன்னையை நாடி ஒடும் பிள்ளைகள் போல மெய்யுணர்வுடைய மேலோர் இன்னவாறு இறைவனை நோக்கி விரைந்து செல்கின்றனர்.

சிறந்த மனிதப் பிறவியைப் பெற்ற பயன் மீண்டும் வேறொரு பிறவியை அடையாமல் ஆண்டவனை அடைந்து கொள்வதேயாம். அந்த ஆனந்த பூரணனை நினைந்து கனிந்தபோது ஆன்மா அவன் மயமாய் அமைந்து திகழ்கின்றது

’அன்பைக் கண்டவர்கள் வீடு எய்துவார்’ என்றமையால் அன்புக்கும், முத்திப் பேற்றிற்கும் உள்ள உறவுரிமையை உய்த்துணர்ந்து கொள்ளலாம்.

மனிதன் அன்பால் உருகி அழுத பொழுது தெய்வம் கருணைத் தாயாய்க் கனிந்து வந்து அவனை உவந்து அணைத்து எடுத்துக் கொள்ளுகின்றது. அதனால், துன்பங்கள் யாவும் தொலைந்து போகின்றன; இன்ப நலங்கள் பெருகி எழுகின்றன.

3768
அன்பன் ஆகும் தனதாளடைந் தார்க்கெலாம்
செம்பொன் ஆகத்(து)அ வுணனுடல் கீண்டவன்
நன்பொன் ஏய்ந்த மதிள்சூழ்திருக் கண்ணபுரத்(து)
அன்பன் நாளும்தன் மெய்யர்க்கு மெய்யனே. 6 திருக்கண்ணபுரம் சேருமாறு பிறருக்கு உபதேசம் செய்தல், நான்காம் திருவாய் மொழி

கடவுளை அன்பன் என்று நம்மாழ்வார் இங்ஙனம் குறித்திருக்கிறார், இன்ப மூர்த்தியாகிய இறைவன் தன்பால் அன்பால் உருகிய உயிர்களுக்கு அன்பு சுரந்து பேரின்ப நலனை அருளுகின்றார்.

கட்டளைக் கலித்துறை

புத்தியை வாங்கிநின் பாதாம் புயத்தில் புகட்டியன்பாய்
முத்தியை வாங்க அறிகின்றி லேனமுது சூர்நடுங்கச்
சத்தியை வாங்கத் தரமோ குவடு தவிடுபடக்
குத்திய காங்கேய னேவினை யேற்கென் குறித்தனையே. - கந்தர் அலங்காரம்

சித்தம் அன்பாய் அமையின் முத்தியின்பம் உண்டாம் என அருணகிரிநாதர் இவ்வாறு அருளியிருக்கிறார்,

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (6-Aug-19, 8:55 am)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 35

மேலே