தலைவன் தனையுணர்ந்தால் முன்னை உயர்வு முன்தோன்றும் - நினைவு, தருமதீபிகை 380

நேரிசை வெண்பா

தன்னை நினைந்து தலைவன் தனையுணர்ந்தால்
முன்னை உயர்வெல்லாம் முன்தோன்றும் - பின்னையிப்
பொல்லாப் பிறப்பில் புகுந்த துயரங்கள்
எல்லாம் ஒழியும் எளிது. 380

- நினைவு, தருமதீபிகை,
- கவிராஜ பண்டிதர் ஜெகவீர பாண்டியனார்

பொருளுரை:

தன்னுடைய உண்மை தெளிந்து தலைவனை உணர்ந்தால் முன்னைய உயர்வு எல்லாம் முன்னே தோன்றி பிறவித் துன்பங்கள் யாவும் உடனே ஒழிந்து போகும் என்கிறார் கவிராஜ பண்டிதர்.

ஆன்மாவை தன்னை என்றது; பரமான்வை தலைவனை என்றது. உலகம், உயிர், பரம் என்னும் மூன்று பொருள்கள் உள்ளன. மலை, கடல், நிலம் முதலாக விரிந்து பரந்துள்ள உலகத்தைக் கண் எதிரே காண்கின்றோம். அகில உலகங்களையும் அனந்த சீவ கோடிகளையும் கதிர் ஒளிகளையும் விதி முறையே இயக்கி வருகிற ஒரு உயர்பொருள் அதிசய ஆற்றலும் அளவில் இன்பமும் உடையதாய் யாண்டும் நித்தியமாய் எங்கும் நிறைத்திருக்கிறது என்று கருதிக் கொள்கின்றோம்.

இந்த உலக மாயை நீங்கிய பொழுது உயிர் அந்த ஆதி மூலப் பொருளைத் தோய்த்து கொள்ளுகிறது என வேதங்கள் ஓதி வருகின்றன. சீவனுக்கும் ஈசுவரனுக்கும் உள்ள உறவுரிமையைச் சிறிது உணரினும் மற்ற பந்த பாசங்கள் யாவும் ஒழிந்து அந்தமிலின்பத்தை மேவி மகிழும். தன் மெய்யான கோலத்தை உணர முடியாதபடி மூல மாயை மறைத்திருக்கிறது.

தனது உண்மை இயல்பினை அறிந்தால் புன்மைமயல் ஒழிந்து பழைய புனித நிலை தெளிந்து, தேகமும் அது சம்பந்தமான உலக உறவினங்களும் அயல் என வெளியாகின்றன.

மறந்து மயங்கியிருந்த உண்மை தெளிந்த பொழுது ஆன்மா உவந்து வியந்து உறுதி நிலையை மருவி மகிழ்ந்து கொள்கின்றது.

இலக்கணம் நுாற்பா
  
குறிய ஈற்றுமாக் கூவிளம் முவ்விளம்
காயொடுங் குறிகொள்ளே
      - விருத்தப் பாவியல் [4]   

அறுசீர் விருத்தம்
(மா விளம் விளம் விளம் விளம் மாங்காய்)

மாடுஞ் சுற்றமும் மற்றுள போகமும் மங்கையர் தம்மோடுங்
கூடி அங்குள குணங்களால் ஏறுண்டு குலாவியே திரிவேனை
வீடு தந்தென்றன் வெந்தொழில் வீட்டிட மென்மலர்க் கழல்காட்டி
ஆடு வித்தென தகம்புகுந் தாண்டதோர் அற்புதம் அறியேனே.! 5 அற்புதப் பத்து, திருவாசகம், மாணிக்கவாசகர்

கட்டளைக் கலித்துறை

மையாடு கண்ணியும் மைந்தரும் வாழ்வும் மனையும்செந்தீ
ஐயாநின் மாயை உருவெளித் தோற்றம் அகிலத்துள்ளே
மெய்யாய் இருந்தது நாட்செல நாட்செல வெட்டவெறும்
பொய்யாய்ப் பழங்கதை யாய்க்கன வாய்மெல்லப் போனதுவே. - பட்டினத்தார்

கலி விருத்தம்
(காய் காய் மா தேமா)

தந்தைதாய் மகவுமனை வாழ்க்கை யாக்கை
சகமனைத்தும் மெளனியருள் தழைத்த போதே
இந்திரசா லம்கனவு கானல் நீராய்
இருந்ததுவே இவ்இயற்கை என்னே! என்னே! - தாயுமானவர்

தன்னை நினைந்து தலைவனை அறிந்து உண்மை தெளிந்த பொழுது தோன்றிய அனுபவங்கள் இவ்வுரைகளில் வந்துள்ளன. தெய்வக் காட்சி கைவந்துள்ளவருடைய உள்ளங்களும் உரைகளும் செயல்களும் உலகிற்கு ஒளி புரிந்து உறுதி நலங்களை அருள்கின்றன. உரிமையுடன் கருதி உணர்ந்த வழியே அனுபவ மொழிகள் இனிமை சுரந்து திகழ்கின்றன.

‘முன்னை உயர்வு எல்லாம் முன் தோன்றும்’ என்றது தன்னை நினையாத பொழுது தோன்றாமல் மறைந்து நின்ற அதிசய ஆனந்தங்கள் யாவும் உண்மையை உணர்ந்தவுடன் உதயமாகி வருதலை இதயம் காண வந்தது.

தோல் எலும்பால் ஆன தேகமே நான்; மனைவி மக்களே இனம்; உலகப் பொருள்களே சதம் என இவ்வளவில் வெளி நோக்காகவே யாவரும் களி மிகுந்துள்ளனர். இம் மையல் நோக்கம் மாறி உள்நோக்கி உருகி உணரின் உண்மை தெளிவாகின்றது. அத்தெளிவு பேரின்ப ஒளியாய்ப் பெருகி எழுகின்றது.

தேக நியதி களைந்து ஆன்ம தரிசனம் செய்யின் மோக இருள் கழிந்து ஏக ஒளி வெளியாம். அவ் ஒளியில் ஆவி அமுத நிலையமாய் மேவி. மிளிர்கின்றது.

நேரிசை ஆசிரியப்பா

மேவிய புன்மயிர்த் தொகையோ; அம்மயிர்
பாவிய தோலின் பரப்போ; தோலிடைப்
புகவிட்டுப் பொதிந்த புண்ணோ; புண்ணிடை
ஊறும் உதிரப் புனலோ; கூறுசெய்(து)
இடையிடை நிற்கும் எலும்போ; எலும்பிடை 5

முடைகெழு மூளை விழுதோ; வழுவழுத்(து)
உள்ளிடை ஒழுகும் வழும்போ; மெள்ளநின்(று)
ஊரும் புழுவின் ஒழுங்கோ; நீரிடை
வைத்த மலத்தின் குவையோ; வைத்துக்
கட்டிய நரம்பின் கயிறோ; உடம்பிற்குள் 10

பிரியா(து) ஒறுக்கும் பிணியோ; தெரியா(து);
இன்ன (தி)யானென் றறியேன் என்னை
ஏதினுந் தேடினன் யாதினுங் காணேன் முன்னம்
வரைத்தனி வில்லால் புரத்தைஅழலூட்டிக்
கண்படை யாகக் காமனை ஒருநாள் 15

நுண்பொடி யாக நோக்கியண் டத்து
வீயா அமரர் வீயவந் தெழுந்த
தீவாய் நஞ்சைத் திருவமு தாக்கி
இருவர் தேடி வெருவர நிமிர்ந்து
பாலனுக் காகக் காலனைக் காய்ந்து 20

சந்தன சரள சண்பக வகுள
நந்தன வனத்திடை ஞாயிறு வழங்காது
நவமணி முகிழ்த்த புதுவெயில் எறிப்ப
எண்ணருங் கோடி இருடிகணங் கட்குப்
புண்ணியம் புரக்கும் பொன்னி சூழ்ந்த 25

திருவிடை மருத பொருவிடைப் பாக
மங்கை பங்க கங்கைநா யகநின்
தெய்வத் திருவருள் கைவந்து கிடைத்தலின்
மாயப் படலங் கீறித் தூய
ஞான நாட்டம் பெற்றபின் யானும் 30

நின்பெருந் தன்மையுங் கண்டேன்; காண்டலும்
என்னையுங் கண்டேன்; பிறரையுங் கண்டேன்;
நின்னிலை அனைத்தையும் கண்டேன்; என்னே
நின்னைக் காணா மாந்தர்
35 தம்மையுங் காணாத் தன்மை யோரே 13, 28 திருவிடைமருதூர் மும்மணிக் கோவை, பதினொன்றாம் திருமுறை

இந்த அருமைப் பாசுரம் உரிமையுடன் கருதி உணரவுரியது. தத்துவக் காட்சியை வித்தக வினோதமாய்ப் பட்டினத்தடிகள் இதில் விளக்கியுள்ளார். சொல்லியிருக்கும் முறை சுவை சுரந்துள்ளது.

உலக நோக்கமாய் உழந்து வந்த நான் ஒரு நாள் என்னை யார்? என்று அறிய விரும்பினேன்.. எல்லாரிடமும் எங்கும் தனி முனைப்பாய்ப் பேசி வருகிற நான் என்பது எது? இந்த உடலிலுள்ள கை கால் செவி தோல் மயிர் நரம்பு எலும்பு முதலிய யாவும் நான் என்னும் சொல்லுக்கு உரிமை இல்லாமல் ஒழிந்து போயின. ஒன்றிலும் காணாமையால் நான் மறுகி நின்று என்னை நெடிது தேடினேன்; முடிவில் இறைவன் அருளால் ஞானநாட்டம் பெற்ற பின் என்னைக் கண்டேன்; அவனையும் கண்டேன்; உலக நிலைமைகள் எல்லாவற்றையும் ஒருங்கே கண்டேன். இந்தக் காட்சியைக் கண்டு மகிழாமல் சீவ கோடிகள் அந்தோ! கண்குருடு பட்டிருக்கின்றனவே! என இரங்கி மொழிந்திருக்கும் அருமையை உள்ளம் கூர்ந்து ஓர்ந்து சிந்திக்க வேண்டும்.

ஆன்மா தூயது; என்றும் நிலையானது; யாண்டும் தலைமையது; அது நீயாய் உள்ளாய்; உன் நிலைமையை உணர்ந்து உய்க என்கிறார் கவிராஜ பண்டிதர்.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (6-Aug-19, 9:55 am)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 75

மேலே