குழந்தைமேதைகள் –------------------------------------------------ஆளுமை,------------ வாசகர் கடிதங்கள்

ஜெ ,

நண்பர் ஒருவரின் குறிப்பிலிருந்து..

ஒரே சமயத்தில் மகிழ்ச்சியும், ஒருவித பயமும் தோன்றுகிறது.

உங்கள் ‘வயதடைதல்’ கட்டுரை ஞாபகம் வந்தது.

உங்கள் பார்வைக்கு..

முரளி
===================================================================
அன்புள்ள முரளி,

இந்த வகையான குழந்தைமை மீது ஓர் ஐயம் எனக்கு எப்போதுமே உண்டு. சாதாரணமாகவே மனிதக்குழந்தையின் நினைவாற்றலும் கற்கும்திறனும் அபாரமானவை. ஒரு மொழியை நாம் கற்க ஐந்துவருடமாகலாம். ஒருவயதுக்குழந்தை ஆறுமாதத்தில் கற்கிறது. காசர்கோட்டில் இருந்தபோது பல இரண்டுவயதுக்குழந்தைகள் நான்கு மொழிகளை குழப்பமில்லாமல் பேசுவதை கேட்டிருக்கிறேன் – கன்னடம் மலையாளம் துளு கொங்கணி. பள்ளி சென்றதும் ஆங்கிலமும் கற்கவேண்டும் அவை.

மொத்த ரிக்வேதத்தையும் சொல்லும் குழந்தைகள், நூற்றுக்கணக்கான ராகங்களைச் சொல்லும் குழந்தைகள் என நாம் கேள்விப்பட்டுக்கொண்டே இருக்கிறோம். நெல்லையில் ஒரு தெருப்பையன் நூற்றுக்கணக்கான வாகனங்களை தூரத்தில் பார்த்ததுமே அவற்றின் பதிவுஎண்ணைச் சொல்லிவிடுவான். அந்தச்சாலையில் அந்த வண்டிகள் ஏற்கனவே ஒரே ஒருமுறை அவன் பார்வைக்கு முன்பாகச்சென்றிருந்தால் போதும்.

சிலகுழந்தைகள் மேலதிகமான நினைவாற்றலை, கற்கும் ஆற்றலைக் கொண்டிருக்கின்றன. பலசமயம் பெற்றோர்கள் அந்த ஆற்றலை ஒழுங்குபடுத்தி ஒரே திசையில் பீறிட்டுச் செல்ல வைக்கிறார்கள். கீழே விழுந்த நீர்த்துளி போல வாய்ப்புக் கிடைக்குமிடமெல்லாம் பரவுவது மானுடப்பிரக்ஞையின் இயல்பு. அவ்வாறு நிகழாமல் ஒருசில துறைகளுக்குள் அந்த அறிவுப்பெருக்கை கட்டுப்படுத்தி கடுமையான பயிற்சிகளையும் அளித்தால் அத்தகைய குழந்தைகள் பிரமிப்பூட்டும் திறன்களை வெளிப்படுத்துகின்றன.

அந்தத் திறன்கள் ஊடகங்களால் பெரிதாகச் சொல்லப்படுகின்றன. ஆகவே நிறைய பெற்றோர் இதில் ஈடுபடுகிறார்கள். இப்போதெல்லாம் எந்த விழாவுக்குச் சென்றாலும் இதேபோல ‘அதி ஆற்றல்’ உடைய ஒரு குழந்தை பெற்றோரால் மேடையேற்றப்படுகிறது. திருக்குறள் சொல்லுகிறது. கதாகாலட்சேபம் செய்கிறது.சினிமாவில் இத்தகைய திறனுக்கு வாய்ப்பும் பணமும் அதிகம். பேபி ஷாலினி பேபி ஷாம்லி என இரு குழந்தைகள் மூலம் அவர்களின் அப்பா பாபு அடைந்த வெற்றி அனைவருக்கும் முன்னுதாரணமாக இருக்கிறது.

ஆனால் இன்றைய உலகில் இந்த நினைவாற்றலுக்கு என்ன மதிப்பு? இந்தக் குழந்தைமேதைகள் வளரவளர என்னவாகிறார்கள்? எந்தத்துறையிலும் உண்மையான படைப்பாற்றலுக்கே மதிப்பு. ‘திறமைக்கு’ அல்ல.

படைப்பாற்றல் மூன்று அம்சங்களின் கலவை. ஒன்று திறமை மற்றும் பயிற்சி. இரண்டு, உள்ளார்ந்த நுண்ணுணர்வும் உள்ளுணர்வும். மூன்று வாழ்க்கை அனுபவங்கள்.

எல்லா அறிவுத்துறைகளிலும் இயல்பான திறமையும் அத்திறமையை வளர்த்துக்கொள்ளும் அபாரமான பயிற்சியும் தேவையாகிறது. ஆனால் அது ஒரு தொடக்க அம்சம் மட்டுமே. குழந்தைமேதைகள் இந்த ஒரு அம்சத்தை மட்டுமே இளமையில் இருந்தே பெறுகின்றன. நாம் வியப்பதும் பிரமிப்பதும் அந்தத் திறமையைக் கண்டுமட்டுமே.

நாம் அறியும் குழந்தைமேதைகளில் நூற்றில் ஒன்றுக்கே உண்மையான நுண்ணுணர்வும் உள்ளுணர்வும் உள்ளது. அந்தக்குழந்தை தன் திறமையையும் தனக்களிக்கப்பட்ட பயிற்சியையும் அதனுடன் இணைத்துக்கொள்ளும்போது தொடர்ந்து மேதமையை வெளிக்காட்டுகிறது. உலகளாவிய சிறந்த உதாரணமாக மொஸார்ட் சுட்டிக்காட்டப்படுகிறார்.

அப்போதுகூட இந்தவகையான மேதைகள் இசை போன்ற தூயகலைகளில் கணிதம் போன்ற தூய அறிவுத்துறைகளில் மட்டுமே பெரிதாக ஒளிர முடிகிறது. இசையை இசையின் பரப்புக்குள் வைத்து ஒலிக்குறியீடுகளாகவும் விதிகளாகவும் மட்டுமே அணுகி முழுமையாகக் கற்றுக்கொள்ளமுடியும். கணிதத்தை கணிதத்தின் எல்லைக்குள்ளேயே கற்றுக்கொள்ளமுடியும்.

அறிவியல், இலக்கியம், தத்துவம் போன்ற தளங்களில் குழந்தைமேதைகள் பெரும்பாலும் செல்லுபடியாவதில்லை. ஏனென்றால் மூன்றாவது அம்சம், வாழ்க்கை அனுபவம், அங்கே பெரும்பங்கு வகிக்கிறது. பலவகையான அனுபவங்கள் வழியாகச் செல்லும்போது கிடைக்கும் உணர்ச்சிநிலைகள், எண்ணங்கள், படிமங்கள் அந்த அறிஞனை அல்லது கலைஞனை வடிவமைக்கின்றன. பெரும்பாலான குழந்தைமேதைகளுக்கு இந்த அனுபவ உலகம் திறப்பதே இல்லை.

நாம் இளமையில் அறியும் குழந்தைமேதைகள் மெல்லமெல்ல வெறும் திறமையாளர்களாக நம் முன் கூசி நிற்பதையே காண்கிறோம். நான் பள்ளியில் படிக்கையில் சகுந்தலாதேவி என்ற கணிதமேதையைப்பற்றி பிரமிப்பூட்டும் செய்திகள் வந்தன. அன்று உலகையே உலுக்கிய குழந்தை. பின்னர் அவர் எண் சோதிடக்காரராக அறியப்படலானார்.

அதேபோல எத்தனைபேர்! பாலமுரளி கிருஷ்ணா ஒரு குழந்தைமேதையாக அறியப்பட்டவர். மாண்டலின் ஶ்ரீனிவாஸ் பிரமிப்புடன் பார்க்கப்பட்டவர். பின்னாளில் அவர்கள் தேங்கிப்போனார்கள். அவர்களிடம் என்ன பிரச்சினை என்று இசையறிந்த நண்பர்களிடம் கேட்டிருக்கிறேன். ‘ஈரமில்லாத தொழில்நுட்பம், அதுதான் அவர்களின் கலை நம் ஆன்மாவை தீண்டாமல் போகக் காரணம்’ என்றார்கள். கலையை உருவாக்கும் படைப்பூக்கம் அவர்களிடம் இல்லை. அதன் திறன் மட்டுமே கூர்மை கொண்டிருக்கிறது.

இந்த உலகை இன்று காணும்படி அமைத்த மேதைகள் ஐன்ஸ்டீனோ தல்ஸ்தோயோ மார்க்ஸோ ஃப்ராய்டோ டார்வினோ காந்தியோ குழந்தைமேதைகள் அல்ல. வேண்டுமென்றால் இப்படிச் சொல்லலாம். அவர்கள் மேதையான பிறகும் குழந்தைகளாக இருந்தார்கள். நம் குழந்தைமேதைகள் மேதையாக இருப்பதனால் குழந்தைகளாக இருப்பதே இல்லை. குழந்தைகளாக இருக்காதவர்கள் எதையும் சேமித்துக்கொள்வதில்லை.

இந்த அதிதிறமைகளை அடையும்பொருட்டு அக்குழந்தைகள் எவற்றை எல்லாம் இழக்கின்றனவோ அவற்றால்தான் உண்மையான மேதைகள் உருவாக்கப்படுகிறார்கள்.

ஜெ


Tweet
Save
Share
=====================================================================
குழந்தைமேதைகள் – கடிதங்கள்
---------------------------------------------------
ஜெ,

குழந்தை மேதைகள் கட்டுரை படித்தேன். நிச்சயமாக குழந்தைகளின் அபாரமான நினைவாற்றல் பாராட்டத்தக்கதுதான். எனினும், அது மட்டுமே புத்திசாலித்தனமா என்பதில் எனக்கும் நெடுநாட்களாக ஐயம் உண்டு. பின்வரும் உங்களது வரி அதை சட்டென்று தீர்த்தது.

“ஆனால் இன்றைய உலகில் இந்த நினைவாற்றலுக்கு என்ன மதிப்பு? இந்தக் குழந்தைமேதைகள் வளரவளர என்னவாகிறார்கள்? எந்தத்துறையிலும் உண்மையான படைப்பாற்றலுக்கே மதிப்பு. ‘திறமைக்கு’ அல்ல.”

நம்மிடத்திலேயே 1330 குறள்களையும் ஒப்புவிப்பது, குறள் சொன்னால் அது எத்தனையாவது குறள், எந்த அதிகாரம், அதன் பொருள் என்று துல்லியமாக சொல்வது, குறளின் எண்ணை சொன்னால் அந்தக் குறளை சொல்வது, தேதி சொன்னால் அதன் கிழமை மற்றும் அது வருடத்தில் எத்தனையாவது நாள் போன்றவற்றை சொல்வது போன்ற திறமைகள் கொண்டிருந்த குழந்தைகள் பற்றி படித்தும் கேள்விப்பட்டும் இருக்கிறேன்.

சென்றவாரம் இங்கே அமெரிக்காவில் நடந்த தேசிய புவியியல் வினாடி வினா போட்டியில் (Geography bee) 14 வயது இந்திய அமெரிக்க சிறுவன் வென்றதை இணையத்தில் படித்தேன். நிறைய அமெரிக்கர்கள் இந்தியக் குழந்தைகளின் திறமையை மெச்சியும் இந்தியப் பெற்றோர் அவர்களது வளர்ச்சியில் செலுத்தும் கவனத்தையும் (நிச்சயம் இது பெரும் உண்மை) ஏன் அதுபோல நம் குழந்தைகள் இல்லை என்றும் விசனப்பட்டு பின்னூட்டமிட்டு இருந்தனர். அதற்கு பதில் சொல்லும் விதமாக கிட்டத்தட்ட நீங்கள் சொல்லிய தொனியிலேயே பதில் சொல்லியிருந்தேன். “நினைவாற்றல் மட்டுமே புத்திசாலித்தனமல்ல, இந்தியப் பெற்றோர் தங்கள் குழந்தைகளது கல்விமேல் கொள்ளும் அபரிமிதமான அக்கறைக்கு வரலாற்று ரீதியான காரணம் இருப்பதோடு, தாங்கள் அமெரிக்க தேசத்துக்கு வந்ததற்கு தங்களது கல்வியே காரணம் என்ற புரிதல் அவர்களுக்கு உள்ளது” என்று சொல்லியிருந்தேன். மேலும் முக்கியமாக நான் சொல்லியிருந்தது இது :

“என்னதான் இது போன்ற போட்டிகளில் நாங்கள் வெற்றி பெற்றாலும் எங்களில் மிகப் பெரும்பான்மையினரால் சம்பந்தப்பட்ட துறையில் ஒரு படைப்பாளியாகவோ முத்திரை பதிக்கும் அளவுக்கு பெரும் ஆளுமையாகவோ உருவாதல் மிகக்கடினம். காரணம் நாங்கள் இட்ட வேலையை திறம்பட செய்து முடிக்கும் “doers” மட்டுமே, “creators”-களோ, “planners”-களோ “leaders”-களோ அல்ல”

அதேபோல ஓரிருநாட்கள் முன் நடந்த தேசிய எழுத்துக்கோர்வை (Spelling bee) போட்டியில் ஒரு இந்திய அமெரிக்கச் சிறுமி வென்றதைப் பார்த்தபோதும் இதுவே தோன்றியது.

அன்புடன்,
பொன்.முத்துக்குமார்

அன்புள்ள முத்துக்குமார்,

உண்மைதான். நம்முடைய பெற்றோருக்கு குழந்தைகளின் படைப்பாற்றலை புரிந்துகொள்ளும் ஆற்றல் இல்லை. ஏன் நம் ஆசிரியர்களில் அனேகமாக எவருக்குமே இருந்ததில்லை. ஆகவே நினைவாற்றலையே அறிவுத்திறன் எனச் சொல்வார்கள்.

இன்றுகூட ஒரு மேடையில் திருக்குறளை தொடர்ச்சியாக ஒப்பிப்பவர் அறிஞராகக் கருதப்படுவார். திருக்குறள் பற்றி ஒரு முக்கியமான அவதானிப்பை நிகழ்த்தியவர் கண்டுகொள்ளப்படமாட்டார் இல்லையா?

ஜெ


//…நாம் இளமையில் அறியும் குழந்தைமேதைகள் மெல்லமெல்ல வெறும் திறமையாளர்களாக நம் முன் கூசி நிற்பதையே காண்கிறோம். நான் பள்ளியில் படிக்கையில் சகுந்தலாதேவி என்ற கணிதமேதையைப்பற்றி பிரமிப்பூட்டும் செய்திகள் வந்தன. அன்று உலகையே உலுக்கிய குழந்தை. பின்னர் அவர் எண் சோதிடக்காரராக வாழ்ந்து ..”//சகுந்தலா தேவி இருக்கிறார்…..

சதீஷ்

எழுதியவர் : ஜெ மின்னஞ்சல்கள் (7-Aug-19, 5:16 am)
பார்வை : 71

மேலே