இந்தியப்பயணம் --- பூரி-------------------கொனார்க், புவனேஸ்வர்--------------- – வாரணாசி

நாளந்தாவிலிருந்து கிளம்பி பிகாரைத்தாண்டி ஜார்கண்ட் மாநிலத்துக்குள் நுழைந்தோம். ஜார்கண்ட் மாநிலம் பிகாரை விட மேலும் பின் தங்கியது என்று சொல்லலாம். போக்குவரத்து வசதி அனேகமாக கிடையாது, டிராக்டர் தவிர. கந்தலுடையுடன் புழுதிக்குள் நடமாடும் மெலிந்து வற்றிய மக்கள். ஒரு மாறுதல் இங்கே மீண்டும் சாலைகளில் அலையும் கொழுத்த மாடுகளைக் கண்டோம்.

டீ குடிக்க இறங்கியபோது கடையில் ஜார்கன்ட் வழியாக இரவில் பயணம்செய்வது சரியல்ல என்றார்கள். உதிரி கொள்ளைக் கூட்டத்தவர்கள் தாராளமாகச் செயல்படும் இடம் அது. இடது தீவிரவாதிகளும் ஒருவகை கொள்ளையர்கள்தான். ஆகவே ஜார்கண்டை கூடுமானவரை தவிர்த்து மேற்குவங்கத்துக்குள் சென்று இரவு தங்கிவிட்டு அப்படியே ஒரிஸாசெல்லலாம் என்று முடிவுசெய்தோம்.

கொல்கொத்தா சாலையில் விரைந்து தேவ்கர் வழியாக மேற்குவங்கத்தில் உள்ள பங்குரா என்ற ஊருக்கு இரவு ஒன்பது மணிக்கு வந்துசேர்ந்தோம். மேற்கு வங்கத்தை நெருங்கியபோதே ஜார்கண்டின் இயல்பு மாறுபட ஆரம்பித்தது. முதல்விஷயம் அழகாக கட்டபப்ட்ட பழைய வீடுகள் சாலையோரம் தென்பட்டன. தேர்ச்சியாக வளையோடு போட்டு இரு முகப்புகளும் சாளரங்களும் கொண்டவை. சாலையோரக் கடைகளும் பலவகையில் மேம்பட்டிருந்தன. சாலையோரங்களில் ஏராளமான மக்கள் கூடியிருந்தார்கள். பெரும்பாலானவர்கள் நடுத்தரவற்கத்தைச் சேர்ந்தவர்கள்.

மேற்குவங்கத்துக்குள் நுழைந்தோம். அதன் கேரளச் சாயல் ஆச்சரியம்கொள்ள வைத்தது. மக்களுடைய உடல்மொழி பேச்சுமுறை பெண்களின் அலங்காரங்கள் என நிறைய விஷயங்கள் கேரளத்தை நினைவில் எழுப்பின. அப்படியெல்லாம் ஒன்றும் தெரியவில்லை, அது உங்கள் பிரமை என்றார் வசந்தகுமார். இருக்கலாம். நான் இருபது வருடங்களுக்கு முன்பு வங்காளம் சென்றிருக்கிறேன். அன்று கொல்கொத்தா தவிர பிற வங்கநிலம் பிகாரைவிட பின்தங்கியதாக இருக்கும். இப்போது சற்று மாறுதல் தெரிகிறது, பீகார் அளவுக்கு முன்னேற்றம்.

கடந்த பலவருடங்களாக மேற்குவங்கத்தில் உள்கட்டமைப்புக்கான எந்தப்பணியும் நிகழவில்லை என்பதை சாலைகள் மூலம் அறியலாம். உள்கட்டமைப்பு கைவிடப்பட்டமையால் உள்ளூர் வணிகம் என்பது அனேகமாக இல்லை. ஆகவே விவசாயிகளும் சிறுவிற்பனையாளர்களும் பஞ்சைப்பராரிகளாக தெரிகிறார்கள். காசியில் ஒரு சைக்கிள் ரிக்ஷாவில் கிலோமீட்டருக்கு ஒருரூபாய் கொடுத்தால் போதும். மேற்குவங்கத்தில் அரைப்பட்டினி தொழிலாளருக்கு எட்டணாகொடுத்தாலே திருப்தி. எந்நேரமும் வாயில் மாவாவுடன் பிரமை பிடித்த்தவர்கள் போல சோம்பி இருக்கிறார்கள். ஓட்டலில் சர்வர்கள் கூட மிகமிக சோம்பலாகவே பரிமாறுகிறார்கள்.

ஒரு விடுதியில் அறைபோட்டோம். இரண்டு பெரிய இரட்டை அறைகளும் ஒரு சிறிய ஒற்றை அறையுமாக மொத்த வாடகை நாநூறு ரூபாய். அந்த தொகை அங்கே மிகபெரியது. எங்கும் எவரிடமும் பணமென்பதே இல்லை. நான் பெங்களூர் சாலையில் மஞ்சள்வாழைப்பழத்தைப் பார்த்தபின்னர் இந்த நகரத்தில்தான் மீண்டும் மஞ்சள் வாழைப்பழத்தைப் பார்க்கிறேன். பிற ஊர்கள் எங்கும் பச்சை நாடாப்பழம் மட்டுமே கிடைக்கும். பச்சைநாடா வாழை அதிகமான மகரந்தத் திறன் கொண்டது. பிற வாழைகளை அது சீக்கிரமே பச்சைவாழையாக ஆக்கிவிடும். ஆகவே கன்யாகுமரி மாவட்டத்தில் அதை பயிர்செய்ய தடை உண்டு. வடக்கே பிற வாழைகளை பச்சை வாழை அழித்துவிட்டது என்றுதான் தோன்றுகிறது. ஒரு சீப்பு வாழைப்பழம் வாங்கினேன், பழம் ஒன்றுக்கு இருபது பைசா. கன்யாகுமரிமாவட்டம் வாழைப்பழத்தின் மையம், இங்கே மலிந்து மலிந்துபோனாலும் ஐம்பதுபைசாவுக்கு குறையாது.

18 ஆம்தேதி காலை எழுந்து தெற்குநோக்கி செல்ல ஆரம்பித்தோம். மித்னாபூர் வந்து அங்கிருந்து ஒரிஸாவுக்குச் செல்வது திட்டம். சாலையெங்கும் வங்கத்தின் ‘தேசிய’ பெருமிதங்களான விவேகானந்தர் மற்றும் சுபாஷ் சந்திர போஸ் சிலைகள் நின்றிருந்தன. மார்க்ஸ் சிலைகளோ செங்கொடியோ கண்ணில் படவில்லை. கொல்கொத்தா நெடுஞ்சாலை மூன்றுக்கு ஒன்று விகிதத்தில் போடப்பட்டிருந்தது. பெரும்பகுதியில் வேலை அப்படியே கைவிடப்பட்டிருந்தது. உள்ளூர் தாவாக்கள் முடிந்திருக்காது. மேற்குவங்கத்தில் பொதுப்போக்குவரத்து வசதிகள் பிகாரைவிட மோசமானவை. பேருந்துக்கு மேல் இருபத்தைந்து பேர் பயணம்செய்வதைக் கண்டோம்– கைக்குழந்தைகளுடன் பெண்கள் முக்காடு போட்டு அமர்ந்திருக்கிறார்கள்.

ஒருவழியாக ஒரிஸாவுக்குள் நுழைந்தோம். ஒரிஸா ஒப்புநோக்க மேற்கு வங்கத்தைவிட மேலான நிலையில்தான் இருந்தது. வயல்கள் பச்சைசெழித்திருக்க நடுவே சிறிய ஓட்டுவீடுகள் கொண்ட கிராமங்கள். சாலை மற்றும் கடைகளில் நடுத்தரவற்கம் உருவாகியிருப்பதன் அடையாளங்கள். போக்குவரத்து கூட பரவாயில்லை என்பதை பேருந்துகள் மூலம் அறிந்துகொண்டோம். இதையெல்லாம் ஒப்புநோக்கில்தான் சொல்கிறேன். மதுரை நெல்லை நடுவே ஐந்து நிமிடத்துக்கு ஒருமுறை ஓடும் பளபளப்பான வசதியான பேருந்துகளை நவீன் பட்நாயக்கே பார்த்திருப்பாரா என்பது ஐயமே.

பொதுவான நோக்கில் எனக்குப் பட்டது இது. உள்கட்டமைப்பு போக்குவரத்து பொதுக்குடிநீர் வீட்டுவசதி மற்றும் நடுத்தரவற்கத்தின் விகிதாசாரம் ஆகியவற்றில் தமிழ்நாட்டுக்கு 60 மதிப்பெண் கொடுக்கலாமென்றால் ஆந்திரத்துக்கு நாற்பது, மத்தியப்பிரதேசத்துக்கு இருபது , உத்தரபிரதேசத்துக்கு இருபத்தைந்து , பிகாருக்கு பதினைந்து, ஒரிஸாவுக்கு நாற்பது கொடுக்கலாம். மேற்குவங்கத்துக்கு ஐந்து அல்லது பத்து மதிப்பெண் வழங்குவதைப்பற்றி யோசிக்கலாம்.

ஒரிஸாவுக்கு நாங்கள் சென்றபோது பெருமழை கொட்டி வெள்ளம் பாதி வடிந்திருந்தது. நாங்கள் எங்குமே மழையில் செல்ல நேரவில்லை, சில தூறல்கள் மட்டுமே. ஆனால் சாலையின் இருபக்கமும் வெள்ளம் கடல்போல சூழ்ந்து ஒளி அலையடித்துக் கிடந்தது. சின்னஞ்சிறு நதிகளில்கூட தண்ணீர் சிவப்பாக சுழித்துச் கொந்தளித்துச் செல்ல வயல்வெளிகள் கடல்களாக விரிந்தன. சலையை முறித்து பல ஆறுகள் ஓடின. அவை பூரிமாவட்டத்தின் மைய ஆறுகளின் துணைநதிகள் .எல்லாவற்றிலும் வெள்ளம்.

மித்னாபூரில் இருந்து பலேஸ்வர் வழியாக கட்டாக்கை அடைந்தோம். கட்டாக் நகரமே மழையால் சூறையாடப்பட்டிருந்தது. விளம்பரத்தட்டிகள் அனைத்தும் கிழிந்து சட்டங்கள் மட்டுமாக நின்றன. கட்டாக்கில் ஒரு டீ குடித்தோம். வட இந்திய நகரங்களின் வறுமை பாழ்பட்டதன்மை இல்லாமல் கட்டாக் புதிய கட்டிடங்களும் வளர்ச்சிப்போக்குமாக பரபரப்பாக இருந்தது.

கட்டாக்கை கடந்து சென்றோம். பிரம்மானி, பைட்ரானி மற்றும் இந்தியாவின் மிகப்பெரிய நதிகளில் ஒன்றான மகாநதி ஆகியவை வந்தன. பாலங்கள் பல கிலோமீட்டர் நீளத்துக்கு சென்று கொண்டே இருந்தன. இறங்கி கீழே பெருகிச்செல்லும் நீரைப் பார்த்தோம். ஆதி மூர்க்கம் கொண்ட நதி அச்சமூட்டும் கவற்சி கொண்டிருந்தது. அதைச்சுற்றிய பெரும் வயல்வெளி செந்நிறமாக நீர் நிறைந்து அந்தி வானத்தை பிரதிபலித்துக் கொண்டு வானம்போலவே நான்குபக்கமும் நிரப்பி கிடந்ந்து.

பூரிக்கு ஏழுமணிக்கு வந்துசேர்ந்தோம்.நேராக கடற்கரைக்கே சென்றுவிட்டோம். பூரி கடற்கரை இந்தியாவின் அழகான கடற்கரைகளில் ஒன்று. மிகச்சுத்தமாகப் பேணப்படுகிறது. கடற்கரையை ஒட்டி ஒரு நீளமான சாலை. சாலைக்கு இப்பால் நீளமாக ஏராளமான விடுதிகள். வசதியான நட்சத்திர விடுதிகள் முதல் எளிமையான விடுதிகள் வரை பலநூறு கட்டிடங்கள் உள்ளன. பல ஓட்டல்களில் 50 சதவீதம் கட்டணக்குறைப்பு போட்டிருந்தார்கள். கடுமையாக காற்று வீசி கடல்மணலை அள்ளி சாலையில் கொட்டிக் கொண்டிருந்தது. புயல் காரணமாக சுற்றுலாப்பயணிகளே இல்லை.

பூரியிலும் வழக்கம்போல அலைந்து திரிந்து மலிவான விடுதியை பிடித்துக் கொண்டோம். ஆறு படுக்கை கொண்ட அறை நாநூறு ரூபாய்க்கு. புயல் இல்லையேல் மும்மடங்கு ஆகுமாம். ஓட்டலில் நாங்கள் அல்லாமல் யாருமில்லை. இரவு சாலையோர உணவகத்தில் சாப்பிட்டுவிட்டு பூரி கடற்கரையில் கரையோரமாக நடந்து சென்றோம்.

காலையில் எழுந்ததுமே குளித்துவிட்டு பூரி கடற்கரைக்குத்தான் சென்றோம். நுரைவிளிம்புகளுடன் அலைகள் பக்கவாட்டில் விரைய இளநீலச்சாம்பல் நிறமாக கடல் விரிந்து கிடந்தது. கடுமையான காற்று. மேகம் மூடியிருந்ததனால் சூரிய உதயம் கண்ணுக்குபடவேயில்லை. வானின் ஊமையொளி மட்டும் மெல்லமெல்ல கடலுக்குள் பரவி நீரை ஒளிகொள்ளச் செய்தது.

பின்னர் புரி கோயிலுக்குச் சென்றோம். இடுங்கலான சாலைவழியாக நடந்தே சென்று கோயிலை அடைந்தோம். அதிக கூட்டம் இல்லை. உள்ளே சென்று கோயிலைப் பார்த்தோம். புரிகோயில் சிற்பங்கள் அதிகம் இல்லாதது. ஆனால் செங்குத்தாக 600 அடிக்கு மேல் உயரமாக மேலெழுந்த நாகர பாணி கோபுரம் மிகப்பழைமையான ஒன்று. வெகுநேரம் பார்த்துக் கொண்டிருகச்செய்வது அதன் கம்பீரம். கோயிலைச்சுற்றி சிறிய கோபுரங்களுடன் துணைக்கோயில்கள். பின்பக்கம் படியேறிச்சென்றால் கோபுரத்தில் இருந்த நரசிம்ம மூர்த்தியின் பெரிய சிலைக்கு ஒரு சன்னிதிகட்டியிருப்பதைக் காணலாம்.

பூரி ஆலயத்தை கலிங்க மன்னர் ராஜா அனஸ்க பீமதேவர் 1166 ஆம் ஆண்டு கட்டினார். இதை ஒட்டியுள்ள போக சபா என்ற கோயில் பிற்பாடு கட்டப்பட்டது பதினேழாம் நூற்றாண்டில் மராட்டியர் இக்கோயிலை மேலும் புதுப்பித்து இப்போதுள்ள பல சன்னிதிகளைக் கட்டியிருக்கிறார்கள். போககோயிலின் சுவர்களில் காமலீலைகள் கொண்ட சிற்பங்கள் சில உள்ளன. பூரி வங்காளிகளுக்கும் ஒரியர்களுக்கும் மராட்டியர்களுக்கும் மிக முக்கியமான கோயில். ஆகவே எப்போதும் கலகலவென்றிருக்கிறது. புஷோத்தம§க்ஷத்ரம் என்ற பெயரின் சுருக்கமே புரி என்றானது.

கோயிலைச் சுற்று சுற்றி வந்து பார்த்துக் கொண்டிருந்தோம். பக்தர்கள் கூடியமர்ந்து பஜனைபாடிக்கொண்டிருந்தார்கள். சிற்பங்கள் இல்லாத பெரிய கூடம்போன்ற அர்த்த மண்டபம். உள்ளெ பெரிய கருவறை. அந்த கருவறைக்குள் மூன்று சிற்பங்களாக ஜெகன்னாதரும் பல பத்ரரும் சுபத்ரா தேவியும் உள்ளனர். மூன்று சிற்பங்களையும் இரு பெரிய கண்கள் வரையப்பட்ட பெரிய சாமரம்போன்ற தலையணியால் மறைத்திருந்தார்கள். அந்த சாமரத்தோற்றமே பொதுவாக பூரி ஜெகன்னாதர் என்று அறியப்படுகிறது. மூலவிக்ரகம் அதிகம் கண்ணுக்குப் படுவதில்லை.

கபீர் இங்கேவந்து வழிபட்டிருக்கிறார். கபீர் சௌக் என்றபேருள்ள ஒரு மடம் இன்றும் இயங்குகிறது. சைதன்ய மகாப்பிரபு பலகாலம் இங்கே இருந்திருக்கிறார். ஆதி சங்கரர் இங்கேவந்தபின் இங்குள்ள சங்கரமடத்தை உருவாக்கினார். இந்தியாவில் சங்கரர் உருவாக்கியதாகச் சொல்லபப்டும் நான்குமடங்கள் துவாரகை, பத்ரிநாத், சிருங்கேரி, புரி ஆகியவை.

பூரி கோயிலிலும் நான் பொதுவாக வட இந்தியக் கோயில்களில் கண்டு சங்கடப்படும் ஓர் அம்சத்தைக் கவனித்தேன். பிராமணப்பூசாரிகள் கண்ட இடத்தில் அமர்ந்திருக்கிறார்கள். நம்மை நடமாட விடுவதேயில்லை. உள்ளே நுழையும் வழியில் ஒருவர் அமர்ந்திருபபர். கையில் ஒரு குச்சி. அதை நம் தலையில் அவர் வைத்து விட்டாரென்றால் அவருக்கு பணம் தரவேண்டும். அவர் கேட்கும் தொகை, இல்லாவிட்டால் சாபம் வசை. உள்ளே கருவறைக்குள் நிற்கும் பூசாரி முதற்கொண்டு அத்தனைபேருமே பணம்பணம் என்று கூவுகிறார்கள். மீன்சந்தை போல இங்கே வா இங்கே வா என்று கூச்சலிடுகிறார்கள். குறைவாக பணம் போட்டவர்களை சன்னிதியில் வைத்தே வைகிறார்கள். ஏழை எளிய மக்கள் பதறியடிப்பதைக் காண பரிதாபமாக இருந்தது.

இந்தநிலைதான் காசி ஆலயத்திலும். இதையே பண்டரிபுரத்திலும் உடுப்பியிலும் கண்டேன். சிதம்பரத்தில்கூட இந்த நிலைதான். இந்த ஆலயங்கள் இந்தபூசாரிகளின் சொத்து அல்ல. இந்நாட்டை ஆண்ட மன்னர்கள் உருவாக்கியவை. இந்நாட்டு மக்களின் சொத்து அவை. பூசாரிகள் அவற்றின் ஊழியர்கள். ஆனால் அவர்கள் இன்று ஒரு கும்பலாகத் திரண்டு கோயிகளை பிடிக்குள் வைத்துக்கொண்டு பணம்பறிக்கும் கருவிகளாக அவற்றை பயன்படுத்துகிறார்கள். இந்துமதம் இந்தக் கும்பல்களின் பிடியில் இருந்து மீண்டாக வேண்டியது இன்று மிகமிக அவசியமாக உள்ளது. இந்துமத மறுமலர்ச்சி, இந்துத்துவம் பற்றி பேசுபவர்கள் அவசியம் செய்தாக வேண்டிய முதல்பணியே இந்தக் கிரிமினல்களிடம் இருந்து பேராலயங்களை சட்டப்படி மீட்பதுதான்.

புரியிலிருந்து அரைமணி நேரத்தில் கிளம்பிவிட்டோம். எனக்கு மனம் கசந்து வழிந்தது. விடுதியை காலிசெய்துவிட்டு கொனாரக் கிளம்பினோம்.
====================================================================================
இந்தியப்பயணம்
கொனார்க், புவனேஸ்வர்
---------------------------------------

பூரியிலிருந்து கொனார்க் கிளம்பினோம். கடலோரமாகவே சாலை சென்றது. பெருமழைவெள்ளம் கடலுக்குச் செல்லாமல் ஈச்சைமரக்காடுகள் சவுக்குத்தோப்புகள் நடுவே பளபளவென தேங்கிக்கிடந்தது. இந்தக்கரை முழுக்க ஏராளமான ரிசார்ட்டுகள் இருந்தன. சவுக்குக்காடுகளுக்குள் குடிசைகள். கான்கிரீட் குடில்கள். வெளிநாட்டினரை நம்பி உருவாக்கப்பட்டவை. புயலில் அவையெல்லாம் சிதைந்து கிடந்தன. பல இடங்களில் ஜனநடமாட்டமே இல்லை.

கொனார்க் சென்றுசேர்ந்தபோது வெயில் ஒளியுடன் இருந்தது. மேகமிருந்ததனால் வெப்பம் இல்லை. கொனார்க் கோயிலை வாசலில் நின்று நோக்கும் ஒருவருக்கு ஏமாற்றம் ஏற்படும். கோயிலுக்கு முன்னால் உள்ள பெரிய மண்டபத்தின்மீதுள்ள கோபுரம் மட்டுமே கண்ணுக்குப்படும். அதை வைத்து ஓர் உயரமில்லாத சிறிய கோயில் என்று நாம் எண்ணிவிடுவோம். ஆனால் உள்ளே நடந்துசெல்லச் செல்ல கோயில் பிரம்மாண்டமாக நம் கண்முன் எழுந்துவரும். கோயிலின் அடித்தளமும் மேலே உள்ள கருவறைக்கட்டுமானமும் மட்டுமே இப்ப்போது இடியாமல் உள்ளது. கொனார்க் கோயிலைச் சுற்றிவரும்போதுதான் அது எத்தனைபெரிய ஆலயம் என்ற பிரமிப்பு ஏற்படும்.

கொனார்க் கோயில் சூரியனுக்காக கட்டபப்ட்ட கோயில். சூரியனுக்கு இந்தியாவில் எஞ்சியிருக்கும் பெரிய கோயில் இது ஒன்றுதான். இந்து ஞானமரபில் உள்ள ஆறு மதங்களில் சௌரம் ஒன்று. அது சூரியனை முக்கியமான கடவுளாகக் கொண்டது. இந்திய நிலப்பரப்பில் இருந்த மிகத்தொன்மையான வழிபாட்டுமரபுகளில் ஒன்று அது. சூரியவழிபாடு பண்டைய எகிப்து மெசபடோமியா ரோம் எங்கும் மிக வலுவாக இருந்த ஒன்று. சூரியவழிபாட்டை ஆரம்பகால ஐரோப்பிய வரலாற்றாசிரியர்கள் மதக்காழ்ப்பின் கண்ணோட்டத்தில் அணுகி புரிந்துகொள்ள முடியாமல் தவித்து சிறுமைப்படுத்தி எழுதியிருக்கிறார்கள். பிற்கால ஐரோப்பிய அறிஞர்கள்- குறிப்பாக எமர்சன் அதை சரியான விரிந்த பொருளில் அணுகியிருக்கிறார்கள்.

ஐரோப்பிய வரலாற்றாசிரியர்கள் சொல்லி நம் பாடநூல்களில் நாம் கற்பது போல சூரிய வழிபாடு என்பது [அல்லது அதேபோல இயற்கைசக்திகளை வழிபடுவதென்பது] இயற்கையை அப்படியே வழிபடும் ஒரு பழங்குடி நம்பிக்கை அல்ல. சூரியன் மேல் கொண்ட வியப்போ அச்சமோ அல்லது அதன் பயனோ அவ்வழிபாட்டுக்கு அடிப்படையாக அமையவில்லை. அதாவது இயற்கைசக்திகளைப் புரிந்துகொள்ள முடியாமல் அதை வழிபட்ட பேதைகள் அல்ல அம்மக்கள். இன்றும் நம்மில் சிலர் எட்டாம் வகுப்பு பாடத்திலிருந்து மீள முடியாமல் அதையே சொல்லிக் கொண்டிருப்பதைக் காணலாம்.

உதாரணமாக ரிக்வேதத்தைச் சொல்லவேண்டும். ரிக்வேதத்தில் சௌர மதத்தின் தொடக்கநிலை மிக விரிவாகவே உள்ளது. சூரியன் அதில் வெறும் ஓர் இயற்கைசக்தியாகச் சொல்லப்படவில்லை. விண்ணகத்தில் நிறைந்துள்ள கோடானுகோடி ஆதித்தியர்களில் நம் கண்ணுக்குப் படும் ஒன்றாக மீண்டும் மீண்டும் ரிக்வேதம் சூரியனை சொல்கிறது. அந்த கோடானுகோடி ஆதித்யர்களுக்கு ஒளிதரும் ஆதித்யன் ஒன்று உண்டு. அந்த ஆதித்யனைப்போல மீண்டும் கோடானுகோடி ஆதித்யர்கள் உண்டு…இவ்வாறுசெல்கிறது ரிக்வேதத்தின் முடிவின்மைபற்றிய உருவகம். அதாவது பிரபஞ்சமெங்கும் நிறைந்து நிற்கும் அலகிலா ஆற்றலின் ஒரு சிறு துளியாக ஒரு பிரதிநிதியாக மட்டுமே சூரியன் வழிபடப்பெற்றான். ரிக்வேத சூத்திரங்களில் பரம்பொருள் என்று அது சொல்லும் ஞானத்துக்கு அப்பாற்பட்ட, பிரபஞ்சமேயாக மாறிய ஒன்றின் வடிவமாகவே சூரியன் சொல்லப்படுகிறான்.

கொனார்க்கின் சூரியர் கோயில் ஒரு மாபெரும் ரதமாக உருவாக்கபப்ட்டுள்ளது. அதன் முகப்பில் ஏழு பெரும் கல்குதிரைகள் கால்தூக்கி நின்று அதை இழுக்கின்றன. மொத்தம் 24 மாபெரும் சக்கரங்கள் அக்கோயிலுக்கு இருப்பதுபோலச் செதுக்கப்பட்டுள்ளன. மிகநுணுக்கமான சிற்பவேலைப்பாடுகள் கொண்ட கொனார்க் சித்திரச் சக்கரங்கள் மிகப்புகழ்பெற்றவை, ஒரியாவின் அதிகாரபூர்வ இலச்சினைகள் இவையே. இந்தச்சக்கரங்கள் ஒவ்வொன்றும் அக்காலத்தில் நிழல்கடிகாரங்களாக இயங்கியிருக்கின்றன. இதன் ஆரங்களின் நிழல் சரியான நேரத்தைக் காட்டக்கூடியது.
கோயிலுக்கு முன்பக்கம் நாதமந்திர் என்ற மண்டபம் உள்ளது. பிரமிக்கச் செய்யுமளவுக்கு நுண்மையான சிற்பங்கள் அடர்ந்த வெளி இது. கஜுராகோ போலவே மக்காச்சோளக் கதிர் வடிவிலான உயரமான கோபுரம் மைய ஆலயத்தில் இருந்திருக்கலாம். முன்மண்டபத்தில் உயரம் குறைவான பிரமிடுவடிவ கோபுரம் உள்ளது.

கொனார்க் மைய ஆலயத்தின் அடித்தானம் இரண்டாள் உயரம் கொண்டது. கஜுராஹோ போல இதிலும் நுண்ணிய சிற்பங்கள் செறிந்துள்ளன. அவற்றில் கணிசமான அளவு சிற்பங்கள் பாலியல் லீலைகள் சார்ந்தவை. சௌரமதம் சூரியனை மாபெரும் சிருஷ்டிதேவனாகவே அணுகுகிறது. ஒளி என்பது பிரபஞ்சசக்தியின் விந்து. அது மண்ணில் படைப்புலகை உருவாக்குகிறது. இந்தக் காரணத்தால் சூரியன் வீரியம், ஆக்க சக்தி, அழகு ஆகியவற்றின் மூர்த்தியாக எண்ணப்படுகிறார். ஆகவேதான் இக்கோயிலெங்கும் பாலியல் சிற்பங்கள் பரவியிருக்கின்றன.

கோணம் அர்க்கம் என்ற இரு சொற்களின் கூட்டுதான் கொனார்க். அர்க்கன் என்றால் சூரியன். இங்கே தென்கிழக்குமூலையில் சூரியன் உதிக்கும் திசையிலிருந்து எழுவதுபோல இகோயில் அமைக்கப்பட்டிருப்பதனால் இந்தப்பெயர். பலகாலமாகவே கொனார்க் சௌர மதத்தின் மையமாக விளங்கிவந்திருக்கிறது. புராணங்களில் இந்த தலத்துக்கு முந்திரவனம் என்று பெயர். கோணாதித்யாபுரம் என்றும் பெயருண்டு. கலிங்கநாட்டின் முக்கியமான தலமாக இது இருந்தது. ஐதீகப்பிரகாரம் கிருஷ்ணபரமாத்மாவின் மகனாகிய சாம்பரால் இது கட்டப்பட்டது.

இந்த ஆலயம் 1238 முதல் 1264 வரை கலிங்கத்தை ஆண்ட மன்னர் நரசிம்மதேவரால் கட்டப்பட்டது என்று வரலாறு. கங்க வம்சத்தைச்சேர்ந்த மன்னர் நரசிம்மதேவர் டெல்லி சுல்தானின் படைகளை வென்றதன் நினைவாகக் கட்டபப்ட்டது என்று சில கல்வெட்டு ஆதாரங்கள் உள்ளன. பதினேழாம் நூற்றாண்டில் மொகலாயப்பேரரசர் ஜகாங்கீரின் தளபதி கொனார்க்கைக் கைப்பற்றி வென்று இக்கோயிலை இடித்து தள்ளினார். அதன்பின்னர் பிரிட்டிஷ் ஆட்சிக்காலம் வரை இடிபாடுகளாக பாழடைந்து கிடந்தது இது.

கொனார்க் கோயிலை 1903ல் அன்றைய வங்காள கவர்னர் ஆக்ரமிப்பாளர்கள் உள்ளே செல்லவிடாமல் தடுத்து முத்திரையிட்டார். அதன் உள்ளே எவரும்போகவிடாமல் சுவர்கட்டி பாதுகாத்தபின் அதைப்பேணும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டன. கிட்டத்தட்ட 100 வருடங்களாக கொனார்க்கை மறுபடியும் கட்டுவதற்கான பணிகள் நடந்து வருகின்றன. உடைந்த கல்துண்டுகளை பொறுக்கி அடையாளம் கண்டு அடுக்குவது, எஞ்சிய பகுதிகளில் கற்களைக் கொடுத்து கட்டமைப்பை பேணுவது ஆகியவையே அப்பணிகள். ஆனால் சுதந்திரத்துக்குப் பின் இப்பணிகள் வெகுகாலம் கைவிடப்பட்டு இப்போது யுனெஸ்கோ உதவி கிடைத்தபின்னர் மெல்லமெல்ல சூடு பிடித்துள்ளன என்றுதான் சொல்ல வேண்டும். இதைப்பேணுவதில் ஆங்கில ஆட்சியாளர்களிடம் இருந்த அக்கறை இந்திய ஆட்சியாளர்களிடம் இல்லை என்பதே உண்மை.

கொனார்க்கின் முக்கியமான வரலாற்று நுட்பங்களில் ஒன்று இங்கே சிங்கத்துக்கு அளிக்கப்பட்டுள்ள முக்கியத்துவம். ஆந்திரம் முதல் வந்த வழியெங்கும் யானையின் அழகும் வலிமையும்தான் காணக்கிடைத்தது. பெரிய யானைச்சிற்பங்கள் யானைகளாலேயே ஆன தோரணங்கள் யானையின் நுட்பமான உடல்மொழி…. ஆனால் கொனார்க்கின் காவல்தெய்வம் சிம்மம். இங்கே கோயில் முகப்பில் சிம்மங்கள் யானைகளை கால்கீழே போட்டு மிதித்து நசுக்குவதுபோன்ற சிற்பங்கள் உள்ளன. ஒரிசாவில் இருந்துதான் இலங்கைக்கு சிங்களர் சென்று குடியேறினார்கள். சிங்கப்பூருக்குச் சென்றவர்களும் ஒரியர்களே. எங்கும் அவர்கள் இந்தச் சிங்கத்தைக் கொண்டுசென்றார்கள்.அந்த முத்திரைகளுக்கும் இச்சிங்கங்களுக்கும் இடையேயான உறவு ஆச்சரியமூட்டுவது.

சூரியரதத்தின் நான்கு வாயில்களிலும் உள்ள நான்கு கருங்கல் சூரியசிலைகள் கம்பீரமானவை. அவற்றின் கைகளும் மூக்கும் உடைந்துள்ளன. சர் அலக்ஸாண்டர் கன்னிங்ஹாம் தலைமையில் இங்கே அகழ்வாய்வுசெய்தவர்களால் இவ்வளாகத்தில் கண்டெடுக்கப்பட்டு முறைபப்டி மீண்டும் நிறுவப்பட்ட சிலைகள் அவை. இடிந்த கோபுரத்துக்குக் கீழே உடைந்து நின்றாலும் சூரியனின் எதையும் பார்க்காமல் திசைகளை ஏறிடும் நோக்கில் உள்ள கம்பீரம் மனதைக் கவர்கிறது.

கொனார்க்கில் உள்ள பெரும்பாலான பாலியல்சிலைகள் உப்புக்காற்றால் அரிக்கப்பட்டுள்ளன. கஜுராஹோ பாணிசிற்பங்கள்தான் இவையும். பெருத்த மார்புகளும் சிற்றிடையும் கொண்ட நடனமாதர். கோயிலெங்கும் ஒரு பெரும் களியாட்டம் நிகழ்வதுபோல சிற்பங்கள். கையில் மிருதங்கத்துடன் நடனமாடும் பெண்கள் இங்குள்ள தனிச்சிறப்பு என்கிறார்கள். நூற்றுக்கணக்கான இசைக்கருவிகள். நடனநிலைகள். தோரண ஊர்வலங்கள். ராமப்பாகோயில் மண்டபமும் சரி, கஜுராஹோவும் சரி, கொனார்க்கும் சரி , முன்பு இந்தியாவில் பிரபஞ்சம் என்பது ஓர் இறைவிளையாட்டு என்றும் மானுடவாழ்க்கை அவ்விளையாட்டின் பகுதியான ஒரு விளையாட்டு என்றும் சொல்லும் லீலைக்கோட்பாடு நம் நாட்டில் எப்படி வேரூன்றியிருந்தது என்பதையே காட்டுகிறது. நமது பெரும் திருவிழாக்கள் அம்மனநிலையின் வெளிபாடுகளே

இன்றும் இந்தநாடு அந்தக் கொண்டாட்ட களியாட்ட மனநிலையை விட்டு விலகவில்லை. நாங்கள் ஈரோடுவிட்டு கிளம்பும்போதே வினாயகர் சதுர்த்தி முடிந்துவிட்டது. ஆனால் தாரமங்கலம், லெபாட்ஷி முதல் கஜுராஹோவரை எங்கும் வினாயகர்பூஜை நடந்துகொண்டிருந்தது. ஒரு இடம்கூட மிச்சமில்லை. மிகமிகச் சிறிய கிராமங்களில் கூட பெரிய வினாயகரை பூஜைசெய்திருந்தார்கள். ஒவ்வொரு இடத்திலும் கொண்டாட்டத்தின் விதத்தில் சிறிய மாற்றங்கள் இருந்தன. பொது இடம் ஒன்றில் பந்தல் அமைத்து வினாயகரை நிறுவி உள்ளூர் இளைஞர்களே பூஜைசெய்து சுண்டல் பாயசம் போன்றவற்றை பிரசாதமாக வினியோகம் செய்கிறார்கள். ஒலிபெருக்கிகளில் பக்திப்பாடல்கள் ஓயாது ஒலிக்கின்றன. வினாயகரை விஸர்ஜம்செய்ய கொண்டு செல்லும்போது வாத்தியங்கள் முழங்க இளைஞர்களின் நடனம். லாரிகளில் சிலைகள் செல்லும்போது கணபதி பாபா மோரியா என்ற களியாட்டக்கூச்சல்.

ஆந்திரத்தில் ஹோலி போல வண்ணப்பொடிகளை ஒருவர் மீது ஒருவர் வீசிக் கொண்டாடினார்கள். பையன்கள் சாயம்பூசிய முகத்துடன் தெருக்களில் அலைந்தார்கள். ஸ்ரீசைலத்தில் அதை போட்டோ எடுக்கப்போன வசந்தகுமார் சாயத்துடந்தான் திரும்பிவருவார் என்று எண்ணினேன், மயிரிழையில் தப்பினார். நாங்கள் சென்ற ஊர்களில் வினாயகர்பூஜை நடக்காத எந்த இடமும் இல்லை என்பதே ஆச்சரியமளித்தது. எல்லாபூஜைகளுமே பெரிய வினாயகர் சிலைகளும் பெரிய பந்தலுமாக ஆர்ப்பாட்டமாகவே இருந்தன.வசந்தகுமார் இந்த பூஜைக்கு ஏதாவது அமைப்பு நிதியுதவிசெய்திருக்கலாம், ஒரு பூஜைக்கு 5000 வரை செலவாகுமே என்றார். செந்தில் அதை மறுத்தார்.

சரி கேட்டுவிடலாமென பானகிரியில் இருந்த இளைஞர்களிடம் கேட்டோம். வீட்டுக்கு குறைந்தது 10 ரூபாய் என்று ‘வரி’ போட்டு வசூலித்ததாகவும் பலர் பெரிய தொகைகள் கொடுத்ததாகவும் சொன்னர்கள். நாங்கள் பேசிய இளைஞர் குழுவிலேயே இருவர் ஐந்நூறு ரூபாய் கொடுத்திருந்தார்கள். பூஜைக்கான செலவு 20000 ரூபாய்க்கு மேல். 2000 ரூபாய்கொடுத்தவர்களும் இருந்தார்கள். அந்தக் கொண்டட்டம் கிராமத்தின் ஒரு மகிழ்ச்சிகரமான காலகட்டம் என்பதனால் ஊரே அதை வரவேற்கிறது.

வங்கத்துக்குள் நுழைந்தபோது அதேபோல கொண்டாட்டத்துடன் சிலைகள் ஊர்வலமாகச் சென்றன. மேளதாளம் நடனம் களியாட்டம் . ஆனால் வினாயகர் அல்ல. துர்க்கை என்று எனக்குப் பட்டது. ஆனால் துர்க்காபூஜைக்கு இன்னும் நாளிருக்கிறதே. இந்த சாமிக்கு மீசை இருந்தது. என்ன தெய்வமென்றே புரியவில்லை. அதேபோல தெருவெங்கும் பந்தல்கள். பூஜைகள். துர்க்கைபூஜைக்கான ஏதோ முன்னோடி பூஜை என்று தெரிந்தது. கேட்குமளவுக்கு வங்கமொழி தெரியாது.

கொனார்க்கிலிருந்து மதியம் கிளம்பி புவனேஸ்வர் வந்தோம். செந்தில் சிவா இருவருக்குமே வீடுதிரும்பும் எண்ணம் வந்துவிட்டது. ஆகவே கோயில்நகரமான புவனேஸ்வரத்தை கிட்டத்தட்ட பார்க்காமல்தாண்டித்தான் வந்தோம். வழியில் ஒரு இடத்தில் முக்தேஸ்வர், சித்தேஸ்வர் என்ற இரு கோயில்களும் அதற்கு அப்பால் லிங்கராஜ் கோயிலும் தெரிந்தன. கஜுராகோ பாணி கோபுரங்கள் கொண்ட 12 ஆம் நூற்றாண்டுக் கோயில்கள் அவை. மழைநீர் தேங்கிக்கிடந்த பள்ளங்களுக்குள் இருந்தன கோயில்கள். கோயில் பிராகாரம் கருவறை எங்கும் தண்ணீர். பூஜை இல்லாத தொல்பொருள்துறைக் கோயில்கள் இவை. அதிகம் சிதைவுபடாமல் உள்ளன. அழகிய சிற்பங்கள் கோயிலின் சுற்றுச்சுவர்களில் இருந்தன. சிறிய கச்சிதமான அக்கோயில்களின் கட்டிட அமைப்பு மிக அழகானது.

லிங்கராஜ் கோயிலுக்கு அப்பால் செல்லும் சாலையில் ஒரு வரைபடத்தை சுவரில் கண்டோம். அச்சாலை ஒரு பெரிய ஏரியைச் சென்றடையும் என்றும் அவ்வேரிக்குள்ளும் அதைச்சுற்றியும் நிறைய கோயில்கள் இருப்பதாகவும் அப்பகுதியே ஒரு கோயில்வளாகமென்றும் தெரிந்தது.ஆனால் குழுவினருக்கு மேலும் பயணம்செய்யும் தெம்பு இல்லை. வேறுவழியில்லாமல் திரும்பி காரில் ஏறினோம்.
================================
இந்தியப் பயணம் – வாரணாசி
-----------------------------------------------
வாரணாசி என்ற குரல் காதில்விழாமல் நம்மில் பெரும்பாலானவர்களின் தினம் தொடங்குவதில்லை. எம்.எஸ்.சுப்புலட்சுமியின் குரலில் ‘வாரணசீ குலபதே மம சுப்ரபாதம்’ என்று கேட்டபடித்தான் காலைகள் விடிகின்றன. வாரணாசி ஆங்கிலத்தில் பனாரஸ். இன்னொரு பெயர் காசி. காலபைரவக்ஷேத்ரம் என்பதில் இருந்து வந்தது காசி என்ற சொல். வருணா மற்றும் அஸி என்ற இரு துணையாறுகளுக்கு நடுவே கங்கை பிறைவழிவில் செல்லும் 108 படித்துறைகளுக்கு மட்டும் வரணாசி என்று பெயர். பாலி மொழியில் பருணாசி என்று சொல்லப்பட்டு ஆங்கிலத்தில் பனாரஸ் ஆகியது.

இந்துக்கள் சமணர்கள் பௌத்தர்கள் சீக்கியர்கள் ஆகிய அனைவருக்குமே முக்கியமான தலம் காசி.மகாபாரதம் முதல் மீண்டும் மீண்டும் புகழப்படும் தலம். கங்கையின் கரையில் இருக்கும் நூற்றியெட்டு படிக்கட்டுகளும் காசி விஸ்வநாதரின் ஆலயமும்தான் காசியின் சிறப்புகள். நூற்றாண்டுளாக காசி முக்திக்குரிய தலமாக நம் மூதாதையரால் எண்ணப்படுகிறது. காசிக்குச் சென்று கங்கையில் நீராடினால் பாவங்கள் முற்றாக அகலும் என்ற நம்பிக்கை இந்துமதத்தின் எல்லா பிரிவுக்குள்ளும் இந்தியாவின் எல்லா பகுதிகளிலும் தீவிரமாகவே இருக்கிறது.

இந்து மரபில் காசியில் இறந்தால் மோட்சம் என்று நம்பப்படுகிறது. ஆகவே முதுமையில் காசிக்கு வருவதென்பது ஒரு முக்கியமான சடங்காக நெடுங்காலம் முதலே இருந்துள்ளது. காசியில் கங்கையில் இறந்தவர்களின் எச்சங்களைக் கரைப்பதும் கங்கை நீரில் இறந்தவர்களுக்கு நீத்தார்கடன்களைக் கழிப்பதும் தென்னாட்டில் பற்பலநூற்றாண்டுகளாக இருந்துவரும் வழக்கம். காசியிலிருந்து கங்கைநீரை கொண்டுவந்து பாதுகாத்து வைத்திருந்து இறப்பவர்களின் நாவில் இறுதியாக விடுவதுண்டு. தமிழ்நாட்டில் காசி விஸ்வநாதரின் சன்னிதி பெரும்பாலும் எல்லா சிவாலயங்களிலும் இருக்கிறது. ஆண்களுக்கு காசி என்ற பெயர் மிகமிக அதிகமாக உள்ளது.

காசிக்கு நான் முதலில் வந்தது 1981 ல். தனியாக வந்தேன். துறவி என்று சொல்லக்கூடாது, பரதேசி என்று சொல்ல வேண்டும். கிட்டத்தட்ட ஒருமாதம் கண்ட இடத்தில் தூங்கி இலவச உணவுகளை உண்டு இங்கே வாழ்ந்தேன். அதன் பின் 1984ல் ஒருமுறை வந்து எட்டுநாட்கள் இருந்தேன். அதன் பின்னர் 1986ல் ஆண்ட்ரியாவுடன் வந்து சண்டைபோட்டு விலகிச் சென்று மீண்டும் கண்டுபிடித்துக்கொண்டு மீண்டும் சண்டை போட்டு ஹரித்வாருக்குக் கிளம்பிச் சென்றோம்.அதன் பின்னர் 2006ல் ‘நான்கடவுள்’ படப்பிடிப்புக்காக வந்து நாற்பத்தைந்து நாட்கள் தங்கியிருதேன். காசியின் சந்து பொந்துக்கள் எல்லாமே எனக்குத்தெரியும். காசியின் வாழ்க்கை தெரியும்.

பனாரஸ் என்று இன்று நாம் சொல்லும் ஊர் கங்கைகரைக்கு அப்பால் விரிந்து கிடக்கும் மாநகரம். பட்டுநெசவும் பாத்திரங்கள் உற்பத்தியும் பெருகிய தொழில்நகரம். அதற்கும் கங்கைகரையோரம் இருக்கும் பழைய காசிக்கும் தொடர்பில்லை. பனாரஸ் வாசிகள் பழைய காசிக்கு வருவதில்லை. இங்கே உள்ளவர்கள் பெரும்பாலும் வேறுபகுதியைச் சார்ந்தவர்கள். அன்றாடம் வந்து குவியும் பயணிகள். அவர்களுக்குச் சடங்குகள் செய்துவைக்கும் புரோகிதர்கள். சிறுவணிகர்கள். பெரும்பாலும் எல்லா இந்திய சாதியினருக்கும் காசியில் தனியான மடங்கள் உண்டு. அவர்கள் அங்கே வரும்போது தங்குவதற்காக. தமிழகத்தின் முக்கியமான சைவ மடங்களுக்கு காசியில் கிளைகள் உண்டு. முன்பெல்லாம் இளைய தம்புரான் காசியில்தான் இருப்பார். பெயருடன் காசிவாசி என்று போட்டுக்கொள்வார்கள். குமரகுருபரர் நெடுங்காலம் காசியில் வாழ்ந்தவர். குமரகுருபரர் மடம் என்றே தனியாக இருக்கிறது. எல்லா மாநிலத்தவர்களுக்கும் அவர்களுக்குரிய பிராமணர்கள் உண்டு. தமிழ் அய்யர்களின் ஒரு சமூகமே காசியில் இருக்கிறது.

காசி அழகற்ற நகரம். அதன் நெரிசலுக்கு ஈடு இணையே கிடையாது. காரணம் இன்றைய வண்டிகள் ஏதும் பழக்கத்துக்கு வராத மிகபப்ழங்காலத்தில் அதன் பெரும்பகுதி உருவாக்கப்பட்டுவிட்டது. மிக மிக குறுகலான சந்துகளான் ஆனது காசி. சந்துகள் எல்லாம் எப்படியோ கங்கையின் படிக்கட்டு ஒன்றை நோக்கி சென்று இறங்கும். தெருக்கள் கடப்பைக்கல் பாவபப்ட்டவை. பெரும்பாலான சந்துகளில் மனிதர்கள் மட்டுமே நடக்க முடியும். சற்றுப் பெரிய சந்துகளில் சைக்கிள் ரிக்ஷாக்கள் நகரும். சைக்கள் ரிக்ஷாக்கள்தான் இப்பகுதியின் அதிகமாக உள்ள வாகனங்கள்.

ஆனால் காசியளவுக்கு சுவாரஸியமான இன்னொரு நகரம் இந்தியாவில் இல்லை. பலவகையான மக்கள் வந்து குழுமியபடியே இருக்கிறார்கள். தெருக்களில் எப்போதும் ஆர்வமூட்டும் ஒரு விசித்திர முகம் தென்படும். சின்னச்சின்ன சந்துகளில் வாழ்க்கை நுரைத்துக் கொந்தளிக்கிறது. மக்கள்மீது பாசம் கொண்ட ஒருவன் காசியை எப்படியோ விரும்ப ஆரம்பித்துவிடுவான்.

காசி மரணத்தின் நகரமும் கூட. இங்கே மரணம்தான் முக்கியமான தொழில் முக்கியமான பேசு பொருள். பொழுதுபோக்கும் மரணம்தான். காசிஎன்றாலே பிரபலமான மணிகர்ணிகா கட், அரிச்சந்திர கட் என்ற இரு பெரும் சுடலைப்படிக்கட்டுகள்தான் நினைவுக்கு வரும். காசியில் ஒருபோதும் சிதை அணையக்கூடாது என்று ஒரு வரம் உள்ளதான். காசிவாசி காலபைரவ மூர்த்திக்கு சிதைதான் பலி. அந்த வரம் இன்றுவரை இல்லாமலாகவில்லை. எப்போதும் சுடலைப்படிகளில் பிணங்கள் எரிந்து கொண்டிருக்கும். பிணங்கள் எரிய பிணங்கள் மஞ்சள் சரிகை மூடி காத்து கிடக்கும். பிணங்களை சைக்கிளில் வைத்து கட்டியபடி சந்துகளில் ஓட்டிவருவார்கள். ஆட்டோ ரிக்ஷாக்களின் மேலே ஏற்றி வருவார்கள். சாற்றி வைத்து விட்டு அமர்ந்து டீ குடிப்பார்கள். காசியில் மரணம் அதன் பொருளை இழந்துவிட்டிருக்கிறது.

காசி அன்னியர்களின் நகரம். இந்தியாவெங்கும் இருந்து சாமியார்களும் பைராகிகளும் காசிக்குதான் வந்துகொண்டிருக்கிறார்கள். விதவிதமான சாமியார்களை இங்கே காணாலாம். அஹோரிகள் என்று சொல்லப்படும் கரிய உடை தாந்த்ரீகர்கள், நாகா பாபாக்கள் என்று சொல்லபப்டும் நிர்வாணச் சாமியார்கள் அவர்களில் உக்கிரமானவர்கள். இதைத்தவிர உலகம் முழுக்கவிருந்து ஹிப்பிகள் நாடோடிகள் ஓரினச்சேர்க்கையாளர்கள் போதை அடிமைகள் காசிக்கு வந்தபடியே இருக்கிறார்கள். அவர்கள் அனைவருக்கும் காசியில் இடமிருக்கிறது.

காசி போதையின் நகரம். போதை என்றால் கஞ்சா அல்லது சரஸ் அல்லது ஃபாங். கஞ்சாகுடிக்கும் சிலும்பிகளை தெருவில் போட்டு விற்கிறார்கள். எங்கே கைநீட்டினாலும் கஞ்சா கிடைக்கும். மேலும் தீவிரமான போதைப்பொருட்களும் சாதாரணமாகக் கிடைக்கும் என்று சொன்னார்கள். காலையின் கடுங்குளிரில் நடகக்ச்சென்றால் படித்துறை ஓரமாக சாமியார்கள் கஞ்சாவுடன் அமர்ந்திருப்பதைக் காணலாம். காசி வைராக்யத்தின் துறவின் நகரம். காசி பைத்தியத்தின் நகரம். காசி சுடலைச் சாம்பல் பூசிய பித்தனின் வாசஸ்தலம்.

காசியில் கலைகளும் இலக்கியமும் தத்துவமும் செழித்திருந்தன. இன்றும் காசி இவற்றின் தலைநகர்தான். கபீர் ரவிதாஸ், முன்ஷி பிரேம்சந்த் போன்ற பல கவிஞர்கள் எழுத்தாளர்கள் இங்கே வாழ்ந்தார்கள். உஸ்தாத் பிஸ்மில்லா கான், ரவிசங்கர் போன்ற இசைமேதைகளின் நகரம் இது. காசியின் தத்துவ சதஸுகள் புகழ்பெற்றவை. காசிவித்யாபீடம் இன்று காசி பல்கலைகழகமாக பெருகிவளர்ந்துள்ளது. பாரதி தன் தத்துவக் கல்வியை காசியிலேயே பெற்றார்.

காசியின் மொழி இந்தியாக இருந்தாலும் இங்குள்ள பூர்வீக மொழி போஜ்புரிதான். போஜ்புரி சம்ஸ்கிருதத்தின் அபப்பிரம்ஸமொழி என்பார்கள். அவிமுக்தகா, ஆனந்தகானனம், மகாமசானம், சுரந்தானனன், பிரம்ம வர்த்தம், ரய்மகம் போன்ற பல பெயர்கள் காசிக்கு புராணங்களில் உண்டு. ரிக் வேதத்திலேயே சிவருத்ரனின் இருப்பிடமாக காசி குறிப்பிடப்பட்டிருக்கிறது.

வரணாசிமேல் படையெடுத்த முதன் அன்னிய ஆட்சியாளர் முகமது கஜினி [1033] பின்னர் முகமது கோரி. [1193] இவர்களால் இந்நகரம் முழுமையாக அழிக்கப்பட்டிருக்கிறது. சிலவருடங்களுக்குள் மீண்டும் கட்டி எழுப்பப்பட்டது. அக்பர் காலத்தில் இந்நகரத்தை புதுப்பிக்க நிதியுதவியும் ஊக்கமும் அளிக்கப்பட்டது. முகலாய கட்டிடக்கலை பாணியிலான படித்துறைகளும் அரண்மனைகளும் அமைந்தன. ஆனால் ஔரங்கஜீப் இந்நகரை அழித்து இதன் பெயரையும் முகம்மதாபாத் என்று மாற்றினார்.

பின்னர் மராட்டியர்கள் காசியைக் கைப்பற்றினார்கள். இன்றுள்ள காசி மராட்டியர் காலத்தில் இடிபாடுகளில் இருந்து மீண்டும் கட்டி எழுப்பப்பட்டது. மராட்டிய வம்சத்தவரான மன்னர் காசியின் சிற்றரசரானார். இவர்கள் காசியின் மறுகரையில் ராம்நகர் என்ற ஊரை நிறுவி காசியை ஆண்டனர். பிரிட்டிஷ் ஆட்சிக்காலத்தில் குறுநில மன்னர்களாக இருந்து சுதந்திரம் கிடைப்பதுவரை நீடித்தனர்.

காலை பத்து மணிக்கு காசிப் படித்துறைகளுக்குச் சென்றோம். ராஜேந்திரபிர்சாத் கட்டில் இறங்கி அஸ்ஸி நோக்கிந் அடந்தோம். உயர்ந்த கோட்டை முகப்புகள் போன்று ராஜஸ்தானி, முகலாய பாணிகளில் சிவந்த கற்களால் உப்பரிகைகள் மற்றும் பெரும் தூண்களுடன் கட்டப்பட்ட படித்துறைகள் காசிக்கு தொன்மையின் கம்பீரத்தை அளிக்கின்றன. விஜயநகர் கட் வேறு வகையில் கம்பீரமானது. காசியின் ஏராளமான கட்டிடங்கள் கைவிடப்பட்டு இடிந்த நிலையில் கிடந்து உள்ளூர் வாசிகளால் கைப்பற்றப்பட்டு இன்று விடுதிகளாக உள்ளன.

வெயில் கொளுத்தியது. வசந்தகுமாரும் கல்பற்றா நாராயணனும் அவர்களால் நடக்கமுடியவில்லை என்று சொல்லி அறைக்குக் கிளம்பிவிட்டார்கள். செந்திலும் சிவாவும் ராணாகட்டில் இறங்கி குளித்தார்கள். 15 நாள் முன் கங்கையில் பெருவெள்ளம் வந்திருக்கிறது. மேலே உள்ள விடுதிகள் வரை வெள்ளம். அதனால் மலைமலையாக சேறு படித்துறைகளை மூடியிருந்தது

நாங்கள் அரிச்சந்திரா கட்டை அடைந்தோம். அங்கே நான்கு பிணங்கள் இருந்தன. இரண்டு பிணங்கள் எரிந்து கொண்டிருந்தன. காசியில் சிதை உடலின் முக்கால் பங்குக்கு மட்டுமே அடுக்கப்படும். தலையும் கால்களும் வெளியே கிடக்கும். உடல் எரிந்து வயிறு பிளந்து நீர் பொருள் வெளியேறியதும் உடலை அப்படியே அமுக்கி எரிந்து உருகிக்கொண்டிருக்கும் கால்களை குச்சியால் மடித்து உள்ளே தள்ளுவார்கள்.

எரிந்த கால் மடிக்கப்பட்டபோது சிவா ”அய்யோ” என்று கூவிவிட்டார். தலை ஒரு துணியால் மூடப்பட்டிருந்தது. வெப்பத்தில் அது மெல்ல உருகி மண்டை ஓட்டு வடிவை காட்டியது. காசியில் பிணங்கள் அரைகுறையாக நீரில் விடப்படும் என்பது பொய். எரிந்த சாம்பலின் சிறு பகுதி மட்டும் உறவினருக்கு வழங்கப்பட்ட பின் மிச்சம் படகுகளில் ஏற்றி மறுகரையில் உள்ள மயானத்துக்கு செல்லும். அதற்கான படகுகள் கங்கையில் அசைந்து நின்றன.

காசியில் சிதைக்கு பயங்கரம் இல்லை. கூட்டம் கூட்டமாக நின்று சிதையை வேடிக்கை பார்த்தார்கள். சாதாரணமாக சிரித்துப் பேசிக்கொண்டு வேர்க்கடலை தின்றார்கள். நாங்கள் ஒரு தண்ணீர் புட்டி வாங்கச் சென்றோம். குளிர்பானம் குடித்துக் கொண்டிருந்தபோது ஒரு பிணம் ஆடோரிக்ஷாவின் மீது கட்டப்பட்டு வந்தது.

அஸ்ஸி கட்டுக்கு வந்தபோது மழை பிடித்துக் கொண்டது. சற்றுநேரம் ஒதுங்கி நின்றோம். ஒரு மாபெரும் எருமை வந்து கிருஷ்ணனிடம் ம்ரே? என்று கேட்டது. அது வழக்கமாக ஒதுங்கி நிற்கும் இடமாக இருக்கலாம். அங்கிருந்து ஆட்டோ ரிக்ஷாவில் ஏறி புதிய பாலம் வழியாக கங்கையை கடந்து ராம்நகர் சென்றோம். காசி மகாராஜா குதிரை ஓடுவதற்காக போட்ட செங்கல் சாலையில் கடக்டவென ரிக்ஷா சென்றது.

ராம்நகர் அரண்மனை கங்கை கரையில் ஒரு பெரிய கோட்டைபோல எழுந்து நிற்கிறது. கோட்டைக்குள் ஒரு பெரிய அருங்காட்சியகம் உள்ளது. மகாராஜாவின் பழைய கார்கள் சாரட் வண்டிகள் பல்லக்குகள் அம்பாரிகள் மற்றும் துப்பாக்கிகள் உள்ளன. இப்பொருட்களின் பரிணாமத்தை அறிய உதவும் மிகசிறந்த சேகரிப்பு இது. சாரட் போலவே இருக்கும் பழைய ஃபோர்டு கார்கள், ஸ்டூடிபேகர் கார்கள். சாரட் வண்டிகள் மெல்ல மெல்ல அதிர்வுசமனிகள் சேர்க்கப்பட்டு பிரம்மாண்டமாக மாறி வந்திருப்பதைக் காணலாம். பழைய கார்கள் அனைத்துமே அரச கம்பீரத்துடன் தான் உள்ளன. அவை அவசியப்பொருட்கள் என்பதற்குமேலாக ஆடம்பரப்பொருட்களாகவே இருந்திருக்கிறன. வெள்ளியில் தந்தத்தில் பித்தளையில் மூங்கில்ல் மரத்தில் செய்யப்பட்ட விதவிதமான பல்லக்குகள்…

மகாராஜா துப்பாக்கிசுடுவதில் நிபுணர். நாணயங்களை மேலே எறிந்து சுடுவாராம். சுட்ட நாணயங்கள் வைக்கப்பட்டிருக்கின்றன. நூற்றுக்கணக்கான துப்பாக்கிகள் 1800 கள் முதல் ஸ்மித் ஆன் வெஸ்சன், கோல்ட் வகை வரை. அதேபோல உலகம் முழுக்க உள்ள பலவகையான வாட்கள். ஜப்பானிய கொரிய சீப டச்சு வாட்கள். கலைப்பொருள் என்றாகும்போது கொலைக்கருவிகள் கூட அழகானவையாக ஆகிவிடுகின்றன.

மதியம் மூன்று மணிக்கு அறைக்கு திரும்பி உடனே படுத்து தூங்கிவிட்டோம்.நான் சாப்பிடவேயில்லை. அத்தனை களைப்பு. ஐந்து மணிக்குத்தான் எழுந்தேன். உடனே கிளம்பி விஸ்வநாதர் கோயிலுக்குச் சென்றோம். கோயில் மராட்டியர் காலத்தில் கட்டப்பட்டது. சிவப்புச்சாயமிடப்பட்ட சிறிய கோயில் அப்பகுதி இடிபாடுகளாகக் கிடந்து தன்னிச்சையாக உருவாகி வந்ததாகையால் மிகமிக நெரிசலானது. கோயிலுக்கு இருவர் மட்டுமே இடிக்காமல் செல்லக்கூடிய சந்து வழியாகவே செல்லவேண்டும். கடுமையான போலீஸ் சோதனை. செல் ஃபோன்கள் அனுமதி இல்லை

அதிக கூட்டம் இல்லை என்றாலும் நெரிசல் இருந்தது. காசியில் நாமே லிங்கத்துக்கு நேராக பூஜை செய்யலாம் என்பதை அனைவரும் அறிவார்கள். ஆனால் எந்தவிதமான ஒழுங்கும் முறையும் இல்லாத இடம் இது. நெடுங்காலம் இடிபாடுகளாகக் கிடந்த பின் மீட்கப்பட்டு தன்போக்கில் உருவாகிவந்தது. இந்த இடத்தை கைப்பற்றி வைத்திருந்த படகோட்டும் குகா சாதியினருக்கு இப்பகுதி மீது மேலாதிக்கம் உள்ளது. பாரம்பரியமான சடங்குகள் முறைகள் எல்லாம் மறைந்துவிட்டன. நாடெங்கும் இருந்து வந்த பல்வேறு இன மக்கள் அவர்களுக்கு தோன்றிய வகையில் வழிபடுகிறார்கள். தொட்டு வணங்குவது தழுவ முற்படுவது மேலேயே விழுந்துவிடுவது எல்லாம் உண்டு.

காசி விஸ்வநாதர் கோயிலை ஒட்டி ஔரங்கஜீப் பழைய கோயிலை இடித்துக் கட்டிய பழைய மசூதியின் கும்பம் உள்ளது. அதற்கு கடுமையான போலீஸ் காவல் போடப்பட்டிருக்கிறது. அருகே விசாலாட்சி அன்னபூரணி ஆலயங்களைக் கண்டுவிட்டு தஸாஸ்வமேத கட்டுக்கு சென்றோம்.

ஏழரை மணிக்கு அங்கே கங்கா ஆர்த்தி சடங்கு உண்டு. கங்கையை தெய்வமாக உருவகித்து அப்படித்துறையை கருவறையாக ஆக்கி செய்யபபடும் விரிவான பூஜைதான் அது. சங்கு ஊதி மலரும் தூபமும் காட்டி விளக்கால் ஆரத்தி எடுப்பார்கள். ஐந்து இளம் பூசாரிகள் ஒரு நடனம் போல நிதானமாக ஒத்திசைவுடன் செய்யும் இந்த பூஜை ஒரு அழகிய கலைநிகழ்ச்சி போலவும் இருக்கும். ஏராளமான பேர் கூடுவார்கள். கங்கையின் பழைமையும் அதன் மாட்சியும் நம் நினைவில் இருந்தால் இது ஒரு உணர்ச்சிகரமான நிகழ்ச்சியே.

எட்டரை மணிக்கு கூட்டம் கலைந்தபின் நாங்கள் ஒரு படகு அமர்த்திக் கொண்டு கங்கையில் உலவினோம். பௌர்ணமிக்கு ஒருநால் முந்திய நிலவு வானில். நல்ல காற்று. கரையில் ஒளியுடன் சூழ்ந்த ஓங்கிய படித்துறை கட்டிடங்கள். ”நல்லாத்தான் இருக்கு ஜெயன்”என்று வசந்தகுமார் அவரது உச்சகட்ட பரவசத்தை பதிவுசெய்தார்.

மணிகர்ணிகா கட்டில் பிணங்கள் எரியும் செவ்வெளிச்சம் . அங்கிருந்து எதிர் ஓட்டத்தில் சென்று அரிச்சந்திரா கட்டத்தை பார்த்தோம். அங்கும் சிதைகள் செவ்விதழ்களாக நெளிந்தன. மீண்டும் கரைக்கு வந்து சாப்பிட்டுவிட்டு அறைக்குச் சென்றோம். நல்ல தூக்கம்.

காலையில் நான் சிவா செந்தில் மூவரால் மட்டுமே எழ முடிந்தது. மற்றவர்களுக்கு களைப்பு. நாங்கள் கங்கைக்குச் சென்று ஒரு படகு அமர்த்தி மறுகரைக்குச் சென்று அங்கே தெளிவாக ஓடிய கங்கை நீரில் நீந்திக் குளித்தோம். இந்தப்பயணம் காவேரிக்கரையில் தொடங்கி கங்கையில் உச்சம் கொண்டிருக்கிறது. நடுவே கிருஷ்ணா, கோதாவரி, நர்மதை போன்ற நதிகள். தீர்த்தாடனம் என்று பழையவர்கள் இதைத்தான் சொல்கிறார்கள். நம் மண்ணுக்கு ஆத்மா போல ஓடும் இப்பெருநதிகள் அன்றி கண்முன் தெரியும் தெய்வங்கள் பிறிதில்லை என்று உணர்ந்திருந்தார்கள் முன்னோர்.

எழுதியவர் : ஜெ மின்னஞ்சல்கள் (7-Aug-19, 5:47 am)
பார்வை : 139

மேலே