தன்னை அறிந்து நிற்கும் பெருநிலையே பெற்ற பிறப்பு ஊதியம் ஆகும் - நிலை, தருமதீபிகை 381

நேரிசை வெண்பா

தன்னை அறிந்து தனையிழந்து தானான
முன்னை நிலையில் முழுதாழ்ந்து - பின்னையொரு
பேதமின்றி நிற்கும் பெருநிலையே பெற்றபிறப்(பு)
ஊதியம் ஆகும் உணர். 381

- நிலை, தருமதீபிகை,
- கவிராஜ பண்டிதர் ஜெகவீர பாண்டியனார்

பொருளுரை:

தனது உண்மை நிலையை உணர்ந்து புன்மை ஒழிந்து முன்னைய நன்மையில் முழுதும் ஆழ்ந்து பேதம் இழந்து நிற்கும் நிலையே பிறப்பின் ஊதியம் என்கிறார் கவிராஜ பண்டிதர். இப்பாடல், பிறந்தவன் பெற வேண்டியதை உணர்த்துகின்றது.

தன்னை அறிதலாவது மறந்து மயங்கியுள்ளதைத் தெரிந்து கொள்ளுதல். வெளி மயக்கமான களி மயக்கங்கள் யாவும் நீங்கி உண்மையான ஒளி முயங்குவதே தெளிவமைந்ததாம்.

தனை இழந்து நான் என்னும் அகங்காரத் திமிர்கள் ஒழிந்து; தேகத் தொடர்புகளை மோகமாய்ப் பற்றியுழல்வதே சீவ சுபாவமாயுற்று வருதலால் அந்தத் தொற்று நோய் தொலைந்தாலன்றி உத்தம நிலையை அடைந்து கொள்ள முடியாது.

பிறந்த சாதி, புகுந்த மதம், இருந்த ஊர், இசைந்த நாடு, சேர்ந்த செல்வம், நேர்ந்த அதிகாரம் முதலியன யாவும் போலித் தோற்றங்களாதலால் இவற்றை இறுகப் பிடித்துக் கொண்டு யாண்டும் செருக்கி இறுமாந்து திரிவது ஈனமாய் முடிகின்றது.

தன்னை ஓர்ந்து அறிந்தவன் புன்மை நிலைகளைப் போற்றிப் புலையாட மாட்டான்; புலையாட்டம் எல்லாம் தனது உண்மை நிலையை உணராத அவநிலையிலேயே களி மீறிய வெறிகளாய்க் கலித்து நிற்கின்றன. நிலைமை தெளியவே தலைமை திகழ்கின்றது.

ஊன நிலையில் ஓங்கி எழுந்தன ஞான நிலையில் மாய்த்து போகின்றன. உன்னை அறி; ஊனங்களை ஒழி; ஞானம் கனிந்து தெளி, மதி நலம் வாய்ந்த மான மனிதனாய் வந்தவன் கதி நலம் இழந்து ஈனமாய் இழிந்து போகலாகாது. இழியின், அழி துயரங்களாம்; உயரின் அழியாத ஆனந்தங்கள் ஆம்.

’முன்னை நிலையில் முழுது ஆழ்ந்து’ என்றது பண்டு பதிந்திருந்த பரம நிலையில் பரிபூரணமாய்த் தோய்ந்து என ஆதி மூல நிலையை ஓர்ந்து கொள்ள வந்தது.

பிறவிகளை மருவுமுன் உயிர் உயர்நிலையில் ஒளி மிகுந்திருந்தது. பரம தேசுடன் ஈசன் என இலங்கி நின்ற அது பாச பந்தங்களில் படிந்து பழமையை இழந்தது. இழந்து போன அக்கிழமையை நெடுங்காலமாய் மறந்து வந்தமையால் நீசப் பிறவிகள் வளர்ந்து வரலாயின.

தன்னை மறந்து போகவே இன்னல் நிலைகளில் பிறந்து இழிந்துபட நேர்ந்தது. பின்னர் உண்மை தெளியவே உய்தி நிலை தோய்ந்தது. உரிமையை அடைவது பெருமை ஆயது.

தன் சொந்த வீட்டை விட்டு வெளியேறினவன் அயலே சென்று அலமந்து திரிகிறான்; மயல் மிகுந்தமையால் மதியிழந்து உழல்கின்றான்; பின்பு ஏதேனும் ஒர் ஏதுவால் இயல் தெளிந்த போது மறுபடி வந்து அந்த வீட்டை அடைகின்றான் அது போல் ஆதியில் பரமபத நிலையில் மருவி இருந்த ஆன்மா அதனை நீங்கிப் பிறவிகளில் புகுந்து பல உலகங்களிலும் அலைந்து நிலை குலைந்து திரிகின்றது; மையல் மதியால் எய்தியதே சதம் என்று இறுமாந்து உழல்கின்றது; காலக் கழிவில் மூலம் தெளிந்து முடிவில் தனது சொந்தமான அந்தப்பதவியை வந்து அடைகின்றது. இந்த அடைவைத்தான் மோட்சம், முத்தி, வீடு, பேரின்பம் என ஆர்வ மீதூர்ந்து பேசி வருகின்றோம்.

முத்தி நிலையைக் குறித்த மேலோர்கள் வியந்து பேசுவதையும், நூல்கள் புகழ்ந்து கூறுவதையும் நுனித்து நோக்கின் அதன் தனியான உண்மை இனிதாக எளிது தெளிவாம்.

புதிதாக எதையும் அடையவில்லை; பழமையையே கிழமை தெரிந்து சீவன் சேர்ந்து கொள்கின்றது. பிறவிகளில் பெருந்துயரங்களை அனுபவித்து வருந்தியது பேரின்ப வீட்டுள் புகுந்ததும் பெயராமல் இருந்து உயர் மகிமையுடன் மகிழ்கின்றது.

அறிவுடைய மனிதப் பிறப்பை அரிதாகப் பெற்றுள்ளமைக்குப் பெரிதாக உற்ற பயன் உரிமையைப் பெற்றுக் கொள்ளுவதேயாம். ஆகவே பிறப்பின் ஊதியம் இன்னது என இது உணர்த்தி நின்றது. இழந்ததை எய்துவது இன்பமாகின்றது.

காணப்படுகின்ற உலக நிலைகளை மட்டும் கண்டு மயங்கிக் கழிந்து போகாதே; காண்கின்ற உனது உண்மை நிலையை உணர்ந்து நோக்கி உறுதி நலனை ஓர்ந்து உய்தி பெறுக என்கிறார் கவிராஜ பண்டிதர்.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (7-Aug-19, 6:08 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 66

மேலே