தலைமையாய் உள்ள நிலையில் ஒடுங்கின் உயிரின்ப வெள்ளம் - நிலை, தருமதீபிகை 382

நேரிசை வெண்பா

புலனறிவு மாறிமெய்ப் போதம் அழுந்தி
நிலையான அந்நிலையும் நீங்கித் - தலைமையாய்
உள்ள நிலையில் ஒடுங்கின் உயிரின்ப
வெள்ளம் விரிந்து விடும். 382

- நிலை, தருமதீபிகை,
- கவிராஜ பண்டிதர் ஜெகவீர பாண்டியனார்

பொருளுரை:

ஐம்புலன்களையும் அடக்கி மெய்யுணர்வு தோய்ந்து அதனையும் கடந்து மேலான உண்மையில் ஆன்மா மருவின் ஆனந்த வெள்ளம் பெருகி விரியும் என்கிறார் கவிராஜ பண்டிதர். இது உயிரின் புனித உரிமையைக் கருதி உணர்க என்கின்றது;

மனிதன் வெளி நோக்காய் விழைந்து உழல்கின்றான்; உள் நோக்கி எதையும் உணர்ந்து கொள்வது இல்லை. அயலே ஓடி உழல்வதில் விழிப்பாய் ஆசை கொள்கின்றான்; தன் இயலை நாடி உணர்வதில் குருடாய் மோசம் போகின்றான்.

புற நாட்டம் புலையாட்டமாய்ப் பொங்கி நின்று எல்லாத் துயரங்களுக்கும் காரணம் ஆகின்றது; அக நாட்டம் நல்ல ஞான சீலமாய் நலம் பல தருகின்றது. ஊன நோக்கம் ஒழிந்து ஞான நோக்கம் எய்திய பொழுது மனிதன் புனிதனாய் மகிமை பெறுகின்றான். உயர் நலங்கள் யாவும் தன்னிடமே மேவி யுள்ளன.

வெளியான இந்திரிய உணர்ச்சிகளைப் புலன் அறிவு என்றது. மெய், வாய், கண், மூக்கு, செவி என்னும் இந்த ஐந்து பொறிகளின் வாயிலாகப் பரிசம், சுவை, உருவம், கந்தம், ஒசைகளை அறிந்து வருகிறோம். பொருளுணர்ச்சிகள் புலன்கள் என வந்தன.

பொறி புலன்கள் மனத்தை வெளியீர்த்து வெறியாக்கி விடுதலால் உண்மையான உயிர் அறிவுக்குப் புன்மைப் பகைகளாய் அவை புறம் பேச நேர்ந்தன.

புலன் அறிவு மாறிய போதுதான் போதம் மீறி எழுமாதலால் அவற்றின் மாற்றம் ஞானத்தின் ஏற்றம் ஆயது.

உலக இச்சைகளில் ஊக்கிக் கலகங்களை விளைத்துப் பிறவித் துயரங்களை வளர்த்து வருதலால் தத்துவ தரிசனிகள் எல்லாரும் புலன்களைப் பொல்லாத சத்துருக்களாக எள்ளி வெறுத்துள்ளனர்.

எழுசீர் விருத்தம்
(விளம் மா விளம் மா / விளம் விளம் மா)
(விளம் வருமிடத்தில் மாங்காய்ச் சீர் வரலாம்)

மாறிநின்(று) என்னை மயக்கிடும் வஞ்சப்
..புலனைந்தின் வழியடைத்(து) அமுதே
ஊறிநின்(று) என்னுள் எழுபரஞ் சோதி
..உள்ளவா காணவந்(து) அருளாய்
தேறலின் தெளிவே சிவபெரு மானே!
..திருப்பெருந் துறையுறை சிவனே!
ஈறிலாப் பதங்கள் யாவையுங் கடந்த
..இன்பமே! என்னுடைய அன்பே!

- 22 திருவாசகம் - கோயில் திருப்பதிகம், எட்டாம் திருமுறை, மாணிக்கவாசகர்

பகையாய் மாறி நின்று புலன்கள் வெளியே பழிகளைச் செய்து வருகின்றன; அவ்வழிகள் ஒழிந்த பொழுது உள்ளே இறைவன் அமுதமாய்த் தேனின் தெளிவாய் எல்லையில்லாத ஆனந்த நிலையமாய் அதிசய சோதியாய் ஒளி வீசி உலாவியருள்கின்றான் என மாணிக்கவாசகர் தமது ஆன்ம அனுபவ நிலையை இங்ஙனம் உலகம் அறிய அருளியுள்ளார்.

அறுசீர் விருத்தம்
(விளம் மா தேமா அரையடிக்கு)

புலன்களைப் போக நீக்கிப்
..புந்தியை யொருங்க வைத்து
இலங்களைப் போக நின்று
..விரண்டையும் நீக்கி யொன்றாய்
மலங்களை மாற்ற வல்லார்
..மனத்தினுட் போக மாகிச்
சினங்களைக் களைவர் போலுந்
..திருப்பயற் றூர னாரே. 9 - 032 திருப்பயற்றூர், நான்காம் திருமுறை, திருநாவுக்கரசர்

எண்சீர் விருத்தம்
(மா விளம் விளம் மா அரையடிக்கு)

ஐவ கைஅரை யர்அவர் ஆகி
..ஆட்சி கொண்டொரு கால்அவர் நீங்கார்
அவ்வ கைஅவர் வேண்டுவ தானால்
..அவர வர்வழி யொழுகிநான் வந்து
செய்வ கையறி யேன்சிவ லோகா
..தீவ ணாசிவ னேஎரி யாடீ
எவ்வ கைஎனக் குய்வகை யருளாய்
இடைம ருவுதுறை யெந்தைபி ரானே. 8

- 60 திருவிடைமருதூர், ஏழாம் திருமுறை, சுந்தரர் தேவாரம்

நேரிசை வெண்பா

புலன்ஐந்தும் தானே பொரமயங்கிச் சிந்தை
அலமந்(து) உழலும் அடிமை - நலமிகுந்த
சித்தான மோன சிவனேநின் சேவடிக்கே
பித்தானால் உண்டோ பிறப்பு. - தாயுமானவர்

புலன் வசப்பட்டால் உயிர் புலையாய் அலமருகின்றது; அவ்வழி ஒழியின் அறிவு தெளிவடைந்து இறையருள் எய்திப் பிறவி தீர்ந்து ஆன்மா பேரின்பம் அடைகின்றது என இவை அறிவுறுத்தியுள்ளன. உயிர் உருக்கங்கள் உணரவுரியன.

பத்தியால் சித்தம் சுத்தி ஆகின்றது; அதனால் தத்துவ ஞானம் விளைகின்றது; அந்த உத்தம நிலையில் உதித்த உணர்வுரைகள் புத்தமுதங்களாய்ப் புதிய தெளிவுகளை நல்கி அரிய இன்பங்களை அருளி இனிய ஆறுதல்கள் புரிந்து வருகின்றன.

பரமாயிருந்த உயர் மேன்மையை தலைமையாய் உள்ள நிலை என்றது. உனது உண்மை நிலையை உணர்ந்து கொள்; துன்பத் தொடர்பு தொலைந்து இன்ப வெள்ளம் பெருகும் என்கிறார் கவிராஜ பண்டிதர்.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (8-Aug-19, 5:02 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 45

சிறந்த கட்டுரைகள்

மேலே