திருக்குற்றாலம் பதிகம் 2 - கலிநிலைத் துறை

குற்றாலநாதரைப் பற்றி புகழ்ந்து திருஞான சம்பந்தர் குறிஞ்சிப் பண்ணில் 11 பதிகங்கள் (கலிநிலைத் துறை) பாடியுள்ளார்.

கலிநிலைத் துறை
(மா மா விளம் மா காய்)
(விளம் வருமிடத்தில் மாங்காய்ச்சீர் வரலாம்)

பொடிகள் பூசித் தொண்டர்பின் செல்லப் புகழ்விம்மக்
கொடிக ளோடுந் நாள்விழ மல்கு குற்றாலம்
கடிகொள் கொன்றை கூவிள மாலை காதல்செய்
அடிகண் மேய நன்னகர் போலும் அடியீர்காள். 2

பதவுரை:

பொடி – விபூதி
விம்ம – பெருக, சிறக்க
மல்கு – நடைபெறும்
கடி கொள் – மணம் கமழும்

பொருளுரை:

அடியவர்களே! கொடிகளை ஏந்தியவர்களாய் அன்பர்கள் முன்னால் செல்ல, திருநீறு பூசிய தொண்டர்கள் பின்னே வர, பெரும் புகழ் சிறக்க, நாள்தோறும் விழாக்கள் நிகழும் நகர் குற்றாலமாகும்.

இவ்வூர் மணம் கமழும் கொன்றை, வில்வமாலை ஆகியவற்றை விரும்பும் அடிகளாகிய சிவபெருமான் எழுந்தருளிய நன்னகராகும் எனத் தெரிந்து கொள்வோம்.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (9-Aug-19, 11:15 am)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 44

மேலே