முன்னம் இழந்த முதலை அடையாமல் என்ன அடையினுமென் - நிலை, தருமதீபிகை 383

நேரிசை வெண்பா

முன்னம் இழந்த முதலை அடையாமல்
என்ன அடையினுமென் ஈனமே - அன்னதுநேர்
உற்றான் உடம்பெடுத்(து) ஓயா(து) உழந்தபயன்
பெற்றான் பிறவான் பிற. 383

- நிலை, தருமதீபிகை,
- கவிராஜ பண்டிதர் ஜெகவீர பாண்டியனார்

பொருளுரை:

முன்பு இழந்து போன உயர்ந்த முதலை அடையாமல் வேறு எதை அடைந்தாலும் அவமேயாம்; இழந்த முதலை அடைந்தவன் பிறந்த பயனைப் பெற்ற சிறந்த பாக்கியவான் ஆகின்றான்; அடையாதவன் கடையாய் இழிந்து கழிந்து படுகின்றான் என்கிறார் கவிராஜ பண்டிதர். இது அடைய வேண்டியதை அடைக என்கின்றது.

உயிரினங்கள் எல்லாம் உயர்வையும் உய்தியையுமே நாடி உழலுகின்றன. பகுத்து அறியும் உணர்வு இல்லாமையால் மிருகம் பறவை முதலிய பிராணிகள் யாவும் உயர்ந்த குறிக்கோள் இன்றி உண்பதும் உறங்குவதுமாய்க் காலத்தைக் கழித்து அழிந்து போகின்றன. கருதியுணர்வன உறுதி நலங்களைக் காண்கின்றன.

மனிதன் மன உணர்ச்சியும், மதி நலனும் உடையவனாதலால் வாழ்க்கைத் திட்டங்களை வகுத்துக் கொண்டு உயர்ந்து கொள்கின்றான். தனது உயர்வுக்குப் பல வகையான வசதிகளை நாடி முயல்கின்றான். பொருளைத் தேடிப் போக போக்கியங்களை அமைத்துக் கொள்கின்றான், ஐம்புல இன்பங்களையும் ஆற நுகர்கின்றான்; அதிபதி என யாரும் புகழப் பேரும் சீரும் பெற்றுப் பெருகி வாழ்கின்றான். வாழ்வு வீழ்வுறாமல் சூழ்வு புரிகின்றான்.

செல்வ நலங்களை எவ்வளவு அடைந்து வாழ்ந்தாலும் யாதொரு ஆறுதலும் இல்லாமல் மேலும் மேலும் ஆவலுடையனாய் அவலக் கவலைகளில் ஆழ்கின்றான். ஆகவே உலக போகங்கள் எல்லாம் உயிர்க்கு உண்மையான உறுதி நலங்கள் அல்ல; புன்மைகளை வளர்த்துப் புலை நிலைகளில் ஆழ்த்திப் புறமே போய்த் தொலைவன என்னும் தெளிவை அடைந்து, அழியாத நிலையை அடைய விழி திறந்து வழியை நாடுகின்றான். அந்த ஞான நாட்டம் வளர்ந்து வரவே ஊன ஓட்டங்கள் ஒழிந்து போகின்றன. உண்மை நிலை ஒளி மிகுந்து திகழ்கின்றது.

பரம பதத்தை ‘முன்னம் இழந்த முதல்’ என்றது. ஆதி மூலமான பரம்பொருளை இழந்து விட்டுப் பாழான பிறவிக் காட்டில் புகுந்து பரிதாபமாய் அலைந்து திரிகின்றோம். இடையே வந்து சேர்ந்த பந்த பாசங்களில் மயங்கியுள்ளமையால் முந்தைய நிலைமையையும் தலைமையையும் முழுதும் மறந்து போயினோம். அடியோடு மறந்து போன அந்தப் பழங்கிழமையை உணர்ந்து மீள அதனை அடைந்து கொண்டவனே சிறந்த பாக்கியவான் ஆகின்றான். அடையாதவன் கடையாய் இழிந்து போகின்றான். அப்போக்கு பொல்லாத நிலைகளில் எல்லையின்றிப் போதலால் அல்லலே கண்டு அவலமாய் அழிகின்றான்.

பரிபூரண சுதந்திரமான அந்தப் பேரின்ப நிலையை அடையாமல் வேறு எவ்வளவு சீரும் சிறப்புகளையும் அடைந்தாலும் முடிவில் சிறுமையே காண்பானாதலால் அக்காட்சி கருதியுணர வந்தது. அழிவதை அவாவி உழல்வது இழிவாய் முடிகின்றது.

செல்வம், அதிகாரம் முதலிய உலக மதிப்புகள் எல்லாம் உய்தி புரியாமல் ஒருங்கே ஒழிந்து போதல் கருதி என்ன அடையினும் ஈனமே! என்றது. வினை வசமாய் வந்து கூடியன அது முடியவே அடியோடு மறைந்து போவதால், அவற்றைச் சதம் என்று நம்பியிருந்தது மதி கேடாய் முடிகின்றது.


கட்டளைக் கலித்துறை

மாடுண்டு; கன்றுண்டு; மக்களுண்(டு) என்று மகிழ்வதெல்லாம்
கேடுண்(டு) எனும்படி கேட்டுவிட் டோம்இனிக் கேள்மனமே!
ஓடுண்டு; கந்தையுண்(டு) உள்ளே யெழுத்தைந்தும் ஓதவுண்டு
தோடுண்ட கண்டன் அடியார் நமக்குத் துணையுமுண்டே! - பட்டினத்தார்

உயிர்க்குறுதி நலனை நாட நேர்ந்த போது உலகத்தின் செல்வ நிலைகள் இவ்வாறு அயலாய் ஓட நேர்கின்றன. இயல் தெளியவே மயல் ஒழிகின்றது. உண்மையை உணராத வரையும் புன்மையில் புலையாடி வெம்மையாய் உழல்கின்றான்.

தனது அரிய பெரிய பதவியை வறிதே இழந்து மனிதன் பரிதாபமாய் இழிந்து வந்திருக்கிறான். இழந்த உரிமையை அடைந்து கொள்வதே உயர்ந்த ஊதியமாய் உறைந்துள்ளது.

’பயன் பெற்றான் பிறவான்’ என்றது இழந்த நிலையை அடைந்து கொண்டவனது இயல்பும் உயர்வும் உணர வந்தது. அழியாத ஆனந்த நிலையில் இருந்த நீ வழி தவறி வந்து விட்டாய்; பழி துயரங்கள் உன்னைப் பற்றிக் கொண்டன; கொடிய இந்த இழி மயல்களிலிருந்து விழி திறந்து நோக்கி வழிகண்டு உய்யவேண்டும். ஏக பரம்பொருளோடு பாகம் கொண்டிருந்த நீ படி மாறிய படியால் சோகம் கொண்டாய்; அத்தொல்லை மூலம் தெளிந்து உனது எல்லையை எய்துக என்கிறார் கவிராஜ பண்டிதர்.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (9-Aug-19, 7:58 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 30

சிறந்த கட்டுரைகள்

மேலே