எண்ணம் புனிதமாய்ப் பொலியின் அவனே மனிதருள் தெய்வம் - நியமம், தருமதீபிகை 393

நேரிசை வெண்பா

எண்ணம் இழிவாக ஈன மனிதனெனும்
வண்ணம் மருவி வருகின்றான் – எண்ணம்
புனிதமாய் ஓங்கிப் பொலியின் அவனே
மனிதருள் தெய்வம் மதி. 393

- நியமம், தருமதீபிகை,
- கவிராஜ பண்டிதர் ஜெகவீர பாண்டியனார்

பொருளுரை:

தன் எண்ணங்கள் இழிவாயின் மனிதன் ஈனன் என இழிந்து படுகின்றான்; அது புனிதமாயின் அவன் தெய்வமாய்ச் சிறந்து திகழ்கின்றான்; இதனை உணர்ந்து உய்க என்கிறார் கவிராஜ பண்டிதர்.

பெருமை சிறுமை, புகழ் பழி, இன்பம் துன்பம் என இன்னவாறான நிலைகள் பல வாழ்க்கையில் மருவி வருகின்றன. அவை பெயரளவில் பேசப்படுகின்றனவே அன்றி நிலையானவை அல்ல; தாமாகவே தோன்றி நின்று தோன்றியபடியே அவை விரைந்து மறைந்து போகின்றன.

நன்மை தீமைகள் எல்லாம் மனிதனுடைய சிந்தனைகளாலும் செயல்களாலுமே விளைந்து வெளி வந்துள்ளன.

பெருமை பெறுவதும், சிறுமை உறுவதும் அவனுடைய கருமங்களாலேயே அமைந்துள்ளமையால் எல்லாவற்றிற்கும் பூரணமான காரண கருத்தாவாய் அவன் பொருந்தி நிற்கின்றான்.

தன் நிலைமையை அணு அளவு அறிந்து கொண்டால் மனிதன் அரிய பல அதிசய மகிமைகளை எதிரே காண நேர்கின்றான்,

உயிரின் சீவ நாடி உள்ளத்தில் உள்ளது. அதன் நிலையைப் பொறுத்தே நிலைமைகள் யாவும் மேவி வருகின்றன. கரும பலன்கள் என வழங்கி வரும் மருமங்களைத் தெரியின் மனத்தின் உருவங்கள் தெளிவாம்.

ஈசன் என ஏத்தப் பெறுவதும், நீசன் என நிந்திக்கப்படுவதும் நினைப்பினால் நிகழ்ந்த நிலைகளேயாம்.

எண்ணம் இழிவாக ஈன மனிதனெனும்
வண்ணம் மருவி வருகின்றான்.

மனிதனுடைய உண்மை உயர்வையும், புன்மை நிலையையும் பொதுவாக இது உணர வந்தது.

ஒருவனது புறத் தோற்றங்கள் அவனுடைய அகத்தின் மூல வேரிலிருந்து மூண்டு கிளைத்து நீண்டு வெளி வந்துள்ளன.

சிறிய வித்துகளிலிருந்து பெரிய மரங்கள் பெருகி வளர்ந்து நெடிது படர்ந்து நிற்றல் போல் துணுகிய எண்ணங்களிலிருந்து மனிதனது வாழ்க்கை நிலைகள் யாவும் அடர்ந்து தொடர்ந்திருக்கின்றன. உள்ளமே உலகமாய் உலாவி நிற்கின்றது.

நல்ல நினைவுகளிலிருந்து தோன்றின யாண்டும் புண்ணிய போகங்கள் பொலிந்து இனிய குளிர் பூஞ்சோலைகள் போல் நறுமணங் கமழ்ந்து எங்கும் செழித்துத் தழைத்து என்றும் இன்பக் காட்சிகளாய்ச் சிறந்து திகழ்கின்றன.

தீய நினைவுகளிலிருந்து வந்தன பாவத் துயரங்கள் படர்ந்து கொடிய கள்ளிக் காடுகளாய்க் கோரமும் கொடுமைகளும் அடர்ந்து நிற்கின்றன; நெஞ்சம் நிலை தவறின் நெடிய கேடுகள் கடிது எழுகின்றன.

இழிவான ஒரு பழிநினைவு மனிதனைப் படுபாதகனாக்கி நெடுங்காலம் அடு.துயர்களில் ஆழ்த்தி அடர்கின்றது.

நெஞ்சம் நல்லதாயின் மனிதனைத் தெய்வம் ஆக்கிச் சுவர்க்க இன்பத்தைத் தந்தருளுகின்றது; அது தீயதானால் அவனை ஈனப் பிசாசு ஆக்கி நரக துன்பத்தைக் கொடுத்து விடுகின்றது.

நேரிசை வெண்பா

மான மனிதன் மனம்புனிதம் ஆயினால்
வான அமுதமென வாழ்கின்றான் - ஈனம்
சிறிது படினோ சிறியனென மாறி
வறிதழி கின்றான் வலிந்து.

இதனை இங்கே நினைந்து சிந்திக்க வேண்டும்.

ஒருவனது சீவியம் ஒளி மிகுந்து உயர்தலும், இருளடைந்து இழிதலும் அவன் அகத்திலேயே நிலையாய் அமைந்துள்ளன.

"ஒ மனமே! கடவுளையும் மோட்சத்தையும் தேடித் தேடி யாதும் காணாமல் பல பிறவிகளை அடைந்து பரிதபித்து வந்தேன்; இன்று உன் கருணையைப் பெற்றேன்; இறைவன் என் எதிரே வந்து நிற்கின்றான்; பேரின்பப் பேறு என்னைப் பேணி வந்துள்ளது; என்னே உன் மகிமை' என இனிய மன அமைதியை எய்திய கனிகர் என்னும் முனிவர் ஒருநாள் தன் உள்ளத்தை நோக்கி இங்ஙனம் உரைத்திருக்கிறார்.

மனம் இனிதாய் வசமானால் அளவிடலரிய மகிமைகள் உடனே உளவாம் என்பதை இஃது உணர்த்தியுள்ளது. நெஞ்சமே எங்கும் தஞ்சம் ஆகின்றது.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (9-Aug-19, 8:08 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 42

சிறந்த கட்டுரைகள்

மேலே