திருக்குற்றாலம் பதிகம் 3 - கலிநிலைத் துறை

குற்றாலநாதரைப் பற்றி புகழ்ந்து திருஞான சம்பந்தர் குறிஞ்சிப் பண்ணில் 11 பதிகங்கள் (கலிநிலைத் துறை) பாடியுள்ளார்.

கலிநிலைத் துறை
(மா மா விளம் மா காய்)

செல்வ மல்கு செண்பகம் வேங்கை சென்றேறிக்
கொல்லை முல்லை மெல்லரும் பீனுங் குற்றாலம்
வில்லி னொல்க மும்மதி லெய்து வினைபோக
நல்கு நம்பா னன்னகர் போலுந் நமரங்காள். 3

பதவுரை:

நம்பான் - நம் இறைவன்

பொருளுரை:

நம்மவர்களே! செல்வம் நிறைந்ததும், கொல்லைப் புறங்களிலே உள்ள முல்லைக் கொடி செண்பகம் வேங்கை ஆகிய மரங்களின் மேலே படர்ந்து மென்மையான அரும்புகள் பூத்துக் குலுங்குவதும் ஆகிய ஊர் குற்றாலம். வில்லின் நாண் அசைய, கணையை விடுத்து மும்மதில்களையும் அழித்து, தன்னை வழிபடும் அன்பர்களின் துன்பங்கள் தீர அருள் புரியும் நம் இறைவன் சிவபெருமான் எழுந்தருளியுள்ள நன்னகராகும் இது எனத் தெரிந்து கொள்வோம்.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (10-Aug-19, 8:17 am)
பார்வை : 64

சிறந்த கட்டுரைகள்

மேலே