இந்திய விடுதலைப் போராட்டத்தில் மதுரையின் பங்களிப்பு நூல் ஆசிரியர் MA சர்தார் MA,அலைபேசி எண் 9842850149 பழம்பெரும் தியாகி ஜனாப் ஹாஜி H முஹம்மத் மௌலானா சாகிப்பின் பேரன் நூல் மதிப்புரை கவிஞர் இராஇரவி

இந்திய விடுதலைப் போராட்டத்தில் மதுரையின் பங்களிப்பு!

நூல் ஆசிரியர் : M.A. சர்தார் M.A.,அலைபேசி எண் 9842850149
(பழம்பெரும் தியாகி
ஜனாப். ஹாஜி H. முஹம்மத் மௌலானா சாகிப்பின் பேரன்!

நூல் மதிப்புரை கவிஞர் இரா.இரவி.

2, இராமன் தெரு, மௌலானா மன்ஜில், திருநகர், மதுரை-6. விலை : ரூ.250

******

நூல் ஆசிரியர் M.A. சர்தார் M.A. அவர்களின் கடின உழைப்பால் வந்துள்ள இந்நூல் மாமதுரையின் புகழுக்கு மேலும் புகழ் சேர்ப்பதாக வந்துள்ளது. விடுதலைப் போராட்ட வீரரின் பேரன் என்பதால் விடுதலைப் போராட்டம் பற்றிய நூல்கலை தேடிப்பிடித்து வாங்கி வாசித்து ஆய்ந்து ஆராய்ந்து வடித்துள்ள ஆராய்ச்சி நூல். மிக அரிய புகைப்படங்கள் உள்ளன. பாராட்டுக்கள்.

இந்நூலிற்கு பலர் வாழ்த்துரை நல்கி உள்ளனர். டாக்டர் மா.பா. குருசாமி எழுத்தாளர், கவிஞர் ந. பாண்டுரெங்கள் இருவரும் அணிந்துரை நல்கி உள்ளனர். மதுரை நகரவை முன்னாள் தலைவர்களை புகைப்படங்களுடன் பட்டியலிட்டு உள்ளார். இந்த நூல் வெளியீட்டு விழாவை கரிமேடு காமராசர் ஜான் மோசஸ் அவர்கள் விக்டோரியா எட்மன்றத்தில் ஏற்பாடு செய்து இருந்தார். விக்டோரியா எட்மன்றம் பற்றிய குறிப்புகளும் இந்த நூலில் இடம்பெற்றுள்ளன.

“இங்கிலாந்து பேரரசி விக்டோரியா 1901ஆம் ஆண்டு காலமானார். பின் ஏழாம் எட்வர்டு மன்னர் பதவியேற்றார். அதன் நினைவாக இவ்விருவர் பெயரில் ஒரு மன்றத்தை மதுரை மிதவாத காங்கிரஸ் தலைவர் G. சீனிவாச ராவ் மற்றும் காங்கிரஸ் மிதவாதிகள் விக்டோரியா எட்வர்டு மன்றத்தை 1905ல் தோற்றுவித்தனர். இம்மன்றத்தின் செயலாளராக G. சீனிவாசராவ் பணியாற்றினார். தற்போது டாக்டர் இஸ்மாயில் அவர்கள் செயலராக உள்ளார். அன்று தொடங்கிய மன்றம் இன்று வரை சீரும் சிறப்புமாக இயங்கி வருகின்றது. இப்படி பல அரிய தகவல்களின் சுரங்கமாக நூல் உள்ளது.

மதுரையில் விவேக பானு என்ற அச்சகம் லாலா லஜபதி ராயின் சரித்திரமும் கட்டுரைகளும் என்ற நூலை 1907ல் மதுரை நகரில் வெளியிட்டது.

இந்திய தேசிய காங்கிரசின் மாநில மாநாடு மதுரை விக்டோரியா எட்வர்டு மன்றத்தில் 1916 மே மாதத்தில் குத்தி கேசவப்பிள்ளை தலைமையில் நடைபெற்றது. அதில் கலந்துகொண்டு அன்னிபெசன்ட் அம்மையார் இந்தியாவிற்கு சுயாட்சி வேண்டுமென்று தீர்மானம் நிறைவேற்றினார்.

மதுரை பிரம்மஞான சபை புகைப்படம் உள்ளது. இன்றுவரை இலவச நூலகமாக இயங்கி வருகின்றது. நான் பலமுறை அங்கு சென்று வாசித்து இருக்கிறேன். பழைமை மாறாத மதுரையாகவும் என்றும் உயிர்ப்புடன் உள்ள மதுரையாகவும் திகழ்ந்து வருகின்றது. தியாகி பாரிஸ்டர் ஜார்ஜ் ஜோசப்பின் வீடு மதுரைக் கல்லூரி படம் உள்ளது. மதுரை மேலமாசிவீதியில் காந்தியடிகள் அரையாடை அணிந்த இல்லம் இன்றும் உள்ளது. அந்தப் புகைப்படமும் நூலில் உள்ளது.

நான் பிறந்த ஊரான மதுரையின் மீது எனக்கு அளப்பரிய பற்று உண்டு. இந்த நூல் படித்த்து முடித்ததும் மதுரை பற்றிய மதிப்பு இன்னும் உயர்ந்து விட்டது. சங்கம் வைத்து தமிழ் வளர்த்த மதுரை தான் விடுதலை வேட்கையையும் வளர்த்து உள்ளது என்பதை உணர்த்திடும் நூல்.

பஞ்சாப் படுகொலை குறித்து மதுரகவி பாஸ்கரதாஸ் எழுதிய உணர்ச்சி மிக்கப் பாடல் இதை நாடக மேதை எஸ்.எஸ். விஸ்வநாத தாஸ் நாடகங்களில் பாட மக்களின் தேசிய உணர்வை கொண்டாடினார்.

‘கொடுமை கொடுமை கொடுமையே’
கவிதை வரிகள் முழுவதும் நூலில் உள்ளது.

ஹாஜி முகம்மது மௌலானா சாகிப் முன்னிலையில் 10.11.1920ல் மதுரை 2வது வார்டிலும் 11.11.1920 பந்தடி 3வது தெருவிலும், 13.11.1920ல் அரண்மனை அருகில் உள்ள நவபத்கானா கோர்ட் தெருவிலும் மறியல் போராட்டம் நடந்தன. இப்படி தேதிகளுடன் மிக நுட்பமான புள்ளி விபரங்களுடன் மதுரையில் நடந்த விடுதலைப் போராட்டங்களை நன்கு பதிவு செய்துள்ளார்.

காந்தியடிகள் பற்றி மகாகவி பாரதி பாடிய வைர வரிகள் "வாழ்க எம்மான்" கவிதை நூலில் உள்ளது. கள்ளுக்கடை மறியல் போராட்டத்தில் கலந்து கொண்டு தண்டனை பெற்றவர்களின் புகைப்படம் உள்ளது. பாரதியாரின் தேசபக்திப் பாடல்களும் உள்ளன. வெள்ளைக்காரன் காலத்தில் தான் கள்ளுக்கடை மறியல் நடந்தது என்றால் விடுதலை பெற்ற மக்களாட்சியிலோ அரசே மதுக்கடை நடத்தி வருகின்றது. இதற்கு எதிராகவும் சமூக ஆர்வலர்கள் போராடி சிறை செல்கின்றனர். விடுதலை அடைந்த பின்னும் மதுக்கடையை மூடவில்லை என்பது சோகம்.

பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியார் நடத்திய வைக்கம் போராட்டம் பற்றியும் நூலில் எழுதி உள்ளார். மதுர பாஸ்கர தாஸ் எழுதிய பாடல் வரிகளும் உள்ளன. 1927 ஆயுத தடைச் சட்டம், வாளேந்தும் போராட்டம், சைமன் கமிசன், சட்டமறுப்பு இயக்கம், 1930-1934 வேதாரண்ய உப்புச் சத்தியாக்கிரகம் இப்படி விடுதலைப் போராட்டத்தின் பலவேறு நிலைகளையும் நூல் முழுவதும் விளக்கி உள்ளார். மதுர கவி பாஸ்கர தாஸ், விசுவநாத தாஸ் ஆகியோரின் அரிய புகைப்படமும் உள்ளன.

முகமதியர் பலர் விடுதலைக்காக மதுரையில் போராடி உள்ளனர்.சிறை சென்று உள்ளனர். அவர்களின் புகைப்படங்கள் நூலில் உள்ளன. அரிய படங்கள் உள்ளன. ஆவணமாக நூல் உள்ளது. எல்லா மதத்தவரும் போராடி கிடைத்த்து இந்த விடுதலை என்பதை உணர்த்தும் விதமாக வந்துள்ளது இந்நூல்.

"ஏறினால் ரயில் இறங்கினால் ஜெயில்" என்று சொன்ன தியாகி மாயாண்டி பாரதியின் புகைப்படமும் நூலில் உள்ளது. சௌராஷ்ட்ர இனத்தைச் சேர்ந்த மக்களும் விடுதலைப் போராட்டத்தில் பெரும்பங்கு வகித்துள்ள தகவலும் அறிய முடிந்த்து.

1946ல் தமுக்கம் மைதானத்தில் முகமது மௌளானாசாகிப் ஏற்பாடு செய்த காங்கிரஸ் மாநாடு புகைப்படம் உள்ளது. மதுரையில் பிறந்ததற்காக மதுரையில் பிறந்த அனைவரும் மார்தட்டிக் கொள்ளும் வகையில் நூல் வந்துள்ளது. பாராட்டுக்கள், வாழ்த்துக்கள். எனது அம்மாவின் அப்பா தாத்தா அ.வ.செல்லையா அவர்களும் அவரது அண்ணன் அணுகுண்டு அய்யாவு அவர்களும் விடுதலைப் போராட்ட வீர்ர்கள். எனவே கூடுதல் விருப்பத்துடன் இந்த நூலைப் படித்து முடித்தேன். ஆவணம் இந்த நூல். மதுரையின் மாண்பு கூறும் நூல்.

குறிப்பு : அடுத்த பதிப்பு உறுதியாக வரும். அதில் எழுத்தை சற்று பெரிய எழுத்தாக பதியுங்கள். கையெழுத்தில் உள்ள பக்கங்களை தட்டச்சு செய்து எழுத்தாகப் பதிந்திடுங்கள்.

எழுதியவர் : கவிஞர் இரா.இரவி (10-Aug-19, 3:47 pm)
சேர்த்தது : கவிஞர் இரா இரவி
பார்வை : 302

மேலே