வினைகழிய நோற்று விரத்தியொடு நிற்கும் மனமுடை மாட்சியவர் - நிலை, தருமதீபிகை 384

நேரிசை வெண்பா

எடுத்த உடம்பே இறுதியாய் மேலோர்
அடுத்த உடம்பை அடையார் - தொடுத்த
வினைகழிய நோற்று விரத்தியொடு நிற்கும்
மனமுடை மாட்சி யவர். 384

- நிலை, தருமதீபிகை,
- கவிராஜ பண்டிதர் ஜெகவீர பாண்டியனார்

பொருளுரை:

இரு வினைகளும் கழிந்தொழியத் தவம் தழுவி உறுதி பூண்டு நிற்கும் ஞான சீலர் வேறு ஓர் அடுத்த பிறவியை அடையாமல் எடுத்த உடம்பையே இறுதியாக முடித்தருளுவர் என்கிறார் கவிராஜ பண்டிதர். இப்பாடல், உற்ற பிறவியால் உற உரியதை உணர்த்துகின்றது.

மனித உடம்பு பெறுதற்கரியது; பெறலரிய அதனைப் பெற்றுள்ளவன் உடனே விரைந்து பெற வேண்டியது பிறவாமையே; அது பெற்றவன் இறவாத இன்ப நிலையை எய்தி நின்றான்.

பிறப்பு எல்லையில்லாத அல்லல்களை உடையது; என்றும் எவ்வழியும் துன்பங்களே நிறைந்துள்ளமையான் யாண்டும் இன்பங்களையே விழைந்து நிற்கின்ற உயிர் துன்பத் தொடர்பாகிய பிறப்பை நீங்க வேண்டியதாகின்றது.

நல்ல தேகம் எடுத்ததன் பயன் பொல்லாத சோகங்களை ஒழித்துப் புனித நிலையை அதிவேகமாய் அடைவதேயாம்.

மனித தேகமே இனிய பேரின்ப நிலையைத் தரவல்லதாதலின் அது கொண்டு தேகி காண வேண்டியதை இது காட்டி யருளியது. கருதிக் கண்டவன் உறுதி நலனை வேண்டுகின்றான்.

வேண்டுங்கால் வேண்டும் பிறவாமை; மற்றது
வேண்டாமை வேண்ட வரும். 362 அவா அறுத்தல்

உணர்வுடைய மனிதன் தனக்கு உறுதியாக வேண்ட உரியது பிறவாமையே; அப்பிறவி நீக்கம், ஆசை முழுதும் அற்ற பொழுது உண்டாகின்றது என இஃது அறிவுறுத்தி உள்ளது.

நேரிசை வெண்பா

அருளால் அறம்வளரும்; ஆள்வினையால் ஆக்கம்;
பொருளால் பொருள்வளரும்; நாளும் - தெருளா
விழைவின்பத் தால்வளரும் காமமக் காம
விழைவின்மை யால்வளரும் வீடு. 196 அறநெறிச்சாரம்

அறம் பொருள் இன்பம் வீடு என்னும் நான்கு புருடார்த்தங்களையும் குறித்து வந்திருக்கும் இதனைக் கூர்ந்து அறிந்து கொள்ள வேண்டும்.

விழைவு இன்மையில் வீடு உண்மையால் பிறவித் துன்பத்திலிருந்து விடுதலை பெறவுரியவர் உலகப் பற்றுக்கள் முற்றும் ஒருவி நிற்பர் என்பது உணர வந்தது.

அடுத்த சன்மம் யாதும் அடையாமல் எடுத்த சன்மத்தை இனிது பயன்படுத்துதல் கருதி ’எடுத்த உடம்பே இறுதியாய்’ என்றது, மனிதப் பிறப்பு ஞான நலம் உடையது: இதனை உடையவன் மெய்யுணர்வால் தன்னையுணர்ந்து இன்னல் ஒழிந்து இனியது காண உரியவன்; அவ்வுரிமையை அடைந்தவன் உய்தி பெறுகின்றான்; அடையாதவன் அவலப் பிறவிகளில் ஆழ்ந்து கவலை அடைகின்றான்.

அறுசீர் விருத்தம்
(விளம் மா தேமா அரையடிக்கு)
(விளம் வருமிடத்தில் மாங்காய்ச்சீர் வரலாம்)

தன்னைத்தான் அறியான் ஆயின்
..தலைத்தலைத் துன்பம் சாரா;
மின்எனத் தோன்றி வீயும்
..யாக்கைகள் பலவும் மேவும்;
என்னதோர் யாக்கை தன்னை
..எடுப்பினும் எடுத்து நின்ற
அன்னதோர் யாக்கை நீங்கல்
..ஆற்றலன் ஆசை கூரும். 1

அரணியில் அனல்வந் துற்றவ்
..அரணியை அழிப்ப தேய்ப்பக்
கருதிய ஞானம் வந்து
..கலந்துறும் உபாதி நீக்கும்:
புரிதுயில் நீத்தோன் தன்பால்
..பொருந்திடாக் கனவு போல்பின்
உரைசெயு மாயை சேரா(து);
..உண்மையை உணர லாமால். 2 - பாகவதம், 3.8

தன்னை அறியாதிருக்கும் வரையும் பிறவித் துன்பங்கள் பிறியாதிருக்கும்; ஞானத்தால் உணர்ந்த போது ஊன உபாதிகள் யாவும் ஒழிந்து போகும் என்னும் இது ஈண்டு உணர உரியது.

அரணி என்பது நெருப்பு உண்டாகும் ஒரு கழி. தீ தோன்றிய போது அக்கட்டை அழிந்து போகும்; அது போல் ஞானம் உதயமானவுடன் பிறவி ஒழிந்து போகும்.

வைராக்கியத்தை விரத்தி என்றது. ஞான சீலத்தின் தீர நீர்மையாய்ச் சிறந்து நிற்கின்ற இது உயர்ந்த உய்தி நலங்களை விரைந்து அருளுகின்றது.

உலக போகங்களில் உள்ளம் இழிந்து ஓடாமல் உண்மை நிலையில் உறுதி பூண்டு நிற்கும் பெருமிதமுடையவரே பிறவி நீங்கிப் பேரின்பம் பெறுகின்றார்

நெறி கேடராய்ச் சிற்றின்பங்களில் இழிந்தவர் பேரின்ப நிலையை இழந்து விடுகின்றார், அங்ஙனம் இழியாதவர் அழியாத ஆனந்த வாழ்வை அடைகின்றார்.

உனது இயல்பான நிலை மிகவும் உயர்ந்த மகிமை உடையது; அதனை மறந்து இழிதுயர்களில் விழுந்தாய், விழித்து எழு; இழந்து போன பழமையை விரைந்து அடைந்து மகிழுக என்கிறார் கவிராஜ பண்டிதர்.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (10-Aug-19, 10:22 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 33

மேலே