இன்பமே வேண்டி இருக்கும் மன்பதை உய்தி உணர்க உடன் - நியமம், தருமதீபிகை 394

நேரிசை வெண்பா

இன்பமே வேண்டி இருக்கும் இயல்புடைய
மன்பதை நல்வினையை மாறாமல் - அன்பமைந்து
செய்தபோ(து) அன்றியது சேரலரி(து) ஆதலினால்
உய்தி உணர்க உடன். 394
- நியமம், தருமதீபிகை,
- கவிராஜ பண்டிதர் ஜெகவீர பாண்டியனார்

பொருளுரை:

இன்ப நலங்களையே யாண்டும் விரும்பும் இயல்பினையுடைய மக்கள் அவற்றிற்கு உரிய காரணங்களைக் கருதிச் செய்ய வேண்டும்; அங்ஙனம் செய்யாத பொழுது யாதும் எய்தாது; இந்த உண்மையை உணர்ந்து உறுதி நலனை விழைந்து கொள்க என்கிறார் கவிராஜ பண்டிதர். இப்பாடல் அனுபவ நிலைகளை நினைவுறுத்துகின்றது.

எந்த விதையை விதைக்கின்றோமோ அந்த வித்துக்களின் இயல்பின்படி மரங்கள் முளைத்து வருகின்றன. அவற்றின் பலன்களும் அவ்வாறே பெருகியிருக்கின்றன.

மனிதன் எத்தகைய நினைவுகளை நினைக்கின்றானோ அத்தகையனவாகவே மொழிகளும் செயல்களும் வெளி வருகின்றன.

நல்ல சுகமே நாளும் தமக்கு வேண்டும் என்று எல்லாரும் இயல்பாகவே கருதுகின்றனர். அங்ஙனம் கருதுகின்றவர் அவ் வரவுக்குரிய மூல வித்துக்களையே விதைக்க வேண்டும்; அவை பருவ காலத்தில் இனிய விளைவுகளை எளிதே உதவியருளும்.

மாறானவைகளை விதைத்தால் அவை வேறான விபரீத பலன்களையே விளைத்து விடும்; அவ் வினை விளைவுகளை அனுபவிக்காமல் யாரும் தப்ப முடியாது. செய்தது செய்தவனைச் சேர்கின்றது.

வித்திய விளைவுகளின்படி விளைவுப் பொருள்களை உழவன் பெறுகின்றான், செய்த வினைகளின்படி பயனைச் செய்தவன் எய்துகின்றான். செய்த கருமங்களே புண்ணிய பாவங்களாய்த் தம் போகங்களை ஊட்டுகின்றன.

பிற வுயிர்களுக்கு இதமான நல்ல செயல்களை நல்வினை என்றது. நல்லதிலிருந்து நன்மைகள் உண்டாகின்றன. கெட்டதிலிருந்து தீமைகள் விளைகின்றன.

நல்லதைச் செய்கின்றவன் அதி மதுரமான மாமரங்களைப் பயிரிடுகின்றான், கெட்டது புரிபவன் எட்டி மரங்களை நட்டவனாகின்றான் முன்னவன் இனிய கனிகளை எய்தி இன்பமுடன் வாழ்கின்றான். பின்னவன் இன்னாத காய்களைப் பெற்றுத் துன்பமுற்று வீழ்கின்றான். அனுபவங்கள் யாவும் வினைகளின் விளைவுகளே.

துன்பத்தால் துடித்து அழுவதும், இன்பத்தால் இனிது மகிழ்வதும் தன்னுடைய செயல்களாலேயே நேர்கின்றன ஆதலால் நிலைமைகளைக் கூர்மையாக ஓர்ந்து மனிதன் புனிதமான கருமங்களை எவ்வழியும் செவ்வையாகப் போற்றி வர வேண்டும்.

தருமம், புண்ணியம் என்னும் இந்தக் கண்ணிய மொழிகளால் நூலோரும் மேலோரும் யாண்டும் புகழ்ந்து பேசி வருவன எல்லாம் மனிதனுடைய நல்ல செயல்களையேயாம்.

இனிய பாலைப் பெற விரும்புகின்றவன் பசுவைப் பேணுகின்றான். அதனை உரிமையுடன் பு:ரந்து வரும் அளவு பாலை அது சுரந்து வருகின்றது. புண்ணியமும் அவ்வாறே தன்னைப் பேணி வருகின்றவனுக்கு எண்ணிய இன்ப நலங்களை இனிது சுரந்தருளுகின்றது.

"தன்னைப் பேணுகின்றவனைத் தருமம் காக்கின்றது” என்னும் இது இங்கே எண்ணத் தக்கது.

தனது கருமம் தருமமாக மருவிவரின் அது இருமை நலங்களையும் எளிது பயந்து இன்ப ஒளி வீசுகின்றது.

கலி விருத்தம்
(விளம் விளம் மா கூவிளம்)

செய்வினை இனியதேல் தேவ போகமும்
கையக மாகிய காட்சி யாகுமே;
உய்வினை உரிமையாய் உதவும் அன்னதை
மெய்வினை யாகவே மேவ வேண்டுமால்.

என்னும் உண்மையை ஈண்டு உணர வேண்டும்.

‘செய்த போதன்றி அது சேரல் அரிது’ என்றது உள்ளம் கனிந்து நல்ல செயல்களைச் செய்யாவழி எவ்வகையானும் சுக போகங்களை அடைய முடியாது என்பது அறிய வந்தது. இனிய கருமங்களே இருமையும் தருகின்றன.

பொறி புலன்களைப் புனித நெறிகளில் செலுத்தி மனித சமுதாயத்துக்கு இத நலங்களைச் செய்து வருபவன் தானாகவே உயர் மகிமைகளை அடைகின்றான். இன்பமும் மேன்மையும் உன் கைவசம் உள்ளன;

அன்பு நலம் உடையனாய் யாண்டும் நல்ல எண்ணங்களையே எண்ணி, இனிய மொழிகளையே பேசிப் புனிதமான செயல்களையே புரிந்து வருக; இறைவன் அருளும் பரம பாக்கியங்களும் விரைந்து பெருகி நிலையான இன்ப நலங்களைத் தலைமையாக உனக்கு உதவியருளும். இனிய வினையால் மனிதன் புனிதன் ஆகின்றான். உரியதைச் செய்து உய்தி காணுக என்கின்றார் கவிராஜ பண்டிதர்.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (10-Aug-19, 10:36 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 60

மேலே