காம வெகுளி கடிந்து உண்மை உருவுணரின் உய்தி உறும் - நிலை, தருமதீபிகை 385

நேரிசை வெண்பா

காம வெகுளி கடிந்து கருதரிய
ஏம நிலையை எதிரறிந்து - நாம
உருவங்கள் ஆகி ஒளிர்கின்ற உண்மை
உருவுணரின் உய்தி உறும். 385

- நிலை, தருமதீபிகை,
- கவிராஜ பண்டிதர் ஜெகவீர பாண்டியனார்

பொருளுரை:

ஆசையும் கோபமும் ஒழிந்து எளிதில் அறிய முடியாத பரம இன்ப நிலையை எதிருணர்ந்து, பெயர் உருவங்களாய் உலகில் விரிந்து தோன்றும் உண்மை நிலையைத் தெளியின் உய்தி வெளியாம் என்கிறார் கவிராஜ பண்டிதர். இப்பாடல் உய்தி உறும் வகையை உணர்த்துகின்றது.

ஆன்மா இயல்பாகவே மேன்மை ஆனது; அது தேகங்களை மருவிய பொழுது போகங்களை விழைந்து பலவகையான மோகங்களை அடைந்து சார்ந்த தன் வண்ணமாய்த் தாழ்ந்தும் உயர்த்தும் சலித்து உழலுகின்றது. சலிப்புகள் வினை வலிப்புகளாய் விரிந்துள்ளன.

சூரியனை மேகம் மறைப்பது போல ஆன்ம சோதியை மோக மயக்கங்கள் மறைத்து மூண்டு படர்ந்து நீண்டு நிற்கின்றன. காற்று வீச்சால் மேகங்கள் கலைகின்றன; ஞான வாடையால் மோகங்கள் ஒழிகின்றன.

மாய மயக்கான தீய இயல்புகள் மனிதனைத் தீயனாக்கித் தாழ்த்தி விடுகின்றன. துன்பத் தொடர்புகள் எல்லாம் எண்ணத்தின் தீமைகளால் விளைந்துள்ளன.

காமமும் வெகுளியும் தீமையென்னும் பேய்க்கு இரண்டு கால்களாய் இணைந்திருக்கின்றன. ஒன்றை ஒன்று மருவி என்றும் சோடியாய் இசைந்திருத்தலால் யாண்டும் சேர்த்துச் சொல்லப் படுகின்றன. இணைப்பு பாசப் பிணைப்பாய்ப் பதிந்தது.

தனது ஆசைக்குப் பங்கம் வந்த இடத்தில் மனிதனிடமிருந்து கோபம் எழுகின்றது. ஆசை அழியின் கோபமும் ஒழிகின்றது. இந்த இரண்டும் ஒருங்கே ஒழிந்த பொழுதுதான் உயிர் புனிதமாய் இனிய ஒளி பெறுகின்றது.

காமம் வெகுளி மயக்கம் இவைமூன்றன்
நாமம் கெடக்கெடும் நோய். 360 மெய்யுணர்தல்

மனிதன் அடைகின்ற துயரங்கள் எல்லாவற்றிற்கும் மூல காரணங்கள் மூன்று; அவற்றை அறவே ஒழித்தாலன்றிப் பிறவி நோய் ஒழியாதென இஃது உணர்த்தியுள்ளது.

மண், பெண், பொன் என்னும் மூன்றிலும் ஊன்றி எழும் நசையே காமம் என வந்தது. உள்ளத்தை உருக்குலைத்து உணர்வைப் பழுதுபடுத்தி உயிரை அவமாக்கித் துயரக் கடலில் ஆழ்த்தும் கொடிய தீமையாதலால் காமம் முதலில் நின்றது.

நிதியான நிறைநீருக்(கு) உடைகுளம்:
மிக்கான குலநெறிக்(கு) ஓர்தினம்;
மதியான மதிவிழுங்கும் கோளரவு:
பவத்தூறு வளர்க்கும் கானம்;
கொதியான நரகிழுக்கும் கொடும்பாச
உயிருருக்கிக் குடிக்கும் கூளி,
கதியான வழிஅடைக்கும் கற்பெரும்
கபாடமன்றோ கடிய காமம். - திருக்குற்றாலத் தலபுராணம் 12-37

கலி விருத்தம்
(விளம் விளம் மா கூவிளம்)
(மாச் சீரின் இறுதியில் குறிலோ, குறில்+ஒற்றோ தான் வரும். நெடில், நெடில்+ஒற்று வராது)

காமமே பிறவிவித்(து) ஆகும்; கண்ணிலாக்
காமமே சிவனடிக் கலப்பு நீக்கிடும்;
காமமே அவத்தையில் கலக்கச் செய்திடும்;
காமமே நரகெலாம் காணி ஆக்குமே. - காசி ரகசியம்

கலி விருத்தம்
(விளம் விளம் மா கூவிளம்)

2305 ஈட்டுறு பிறவியும் வினைகள் யாவையும்
காட்டிய(து) இனையதோர் காமம் ஆதலின்
வாட்டமில் புந்தியால் மற்றந் நோயினை
வீட்டினர் அல்லரோ வீடு சேர்ந்துளார். 12 மாயை நீங்கு படலம், அசுர காண்டம், கந்த புராணம்

கலிவிருத்தம்
(மா கூவிளம் கூவிளம் கூவிளம்)
முதற்சீர் குறிலீற்று மாவாக இருக்கும்.
விருத்தம் நேரசையில் தொடங்கினால் அடிக்கு 11 எழுத்து;
2, 3 சீர்களில் மாச்சீர் வரின் அடுத்த சீர் நிரையில் தொடங்கும்.
முதலிரண்டு சீர்களுக்கிடையில் 'மாவைத் தொடர்ந்து நேர்' என்ற நேரொன்று ஆசிரியத்தளை அமையும்; மற்ற இடங்களில் வெண்டளை அமையும்)

1516 தூம கேது புவிக்கெனத் தோன்றிய
வாம மேகலை மங்கைய ரால்வரும்
காமம் இல்லை எனில்கடும் கேடெனும்
நாமம் இல்லை; நரகமும் இல்லையே. 21 மந்தரை சூழ்ச்சிப் படலம், அயோத்தியா காண்டம், இராமாயணம்

காமத்தின் தீமை குறித்து நூல்கள் பல இங்ஙனம் கூறியுள்ளன. அதன் பிடியிலிருந்து விலகினவரே முடிவிலின்பம் அடைகின்றனர்.

தன் உயிர்க்குச் சேமத்தை விரும்பினவர் காம வெகுளிகள் கடிந்து சேம நெறிகளுடன் படியேறி மேலே செல்லுகின்றனர். அல்லல் ஒழிய வேண்டுமாயின் பொல்லாதன களைய வேண்டும்.

உலகக் காட்சிகளின் நிலைகளை நினைந்து ‘நாம உருவங்கள் ஆகி ஒளிர்கின்ற’ என்றது.

வெளியே தோன்றுகின்ற வடிவங்களுக்குப் பெயர்கள் அமைந்திருக்கின்றன. தமக்கு ஏற்ற பெயர்களைக் கொண்டு உலாவுகின்றன. காணாதன. பல யாதும் பூணாமல் மறைந்திருக்கின்றன.

வெளியே தெரிகின்ற நாமங்களிலும் உருவங்களிலும் மயங்கி நில்லாமல் உள்ளே உறைகின்ற சீவ ஒளிகளை ஓர்ந்து காண்பவர் தேர்ந்த ஞானிகளாய்ச் சிறந்து திகழ்கின்றார்.

மாசற காட்சியவர், தீர்க்க தரிசிகள், தத்துவ ஞானிகள் என்பன எல்லாம் உண்மையை உணர்ந்த உத்தம நிலைகளில் உதித்து வந்தன. மாயத் தோற்றங்களில் மயங்கி நில்லாமல் தூய ஏற்றங்களில் தொடர்ந்து செல்பவர் பிறவித் துயரங்களைக் கடந்தவராகின்றார்.

‘உண்மை உரு உணரின் உய்தியுறும்’ என்றது மெய்யுணர்வால் எய்தும் மேன்மை தெரிய வந்தது.

தோல் பாவைகளை ஆட்டுகின்ற கூத்தன் போல உடல்கள் தோறும் ஆன்மா மருவியிருந்து வெளியே உருவங்களாய் ஒளிர்கின்றது. இந்த ஆன்மா பரமான்மாவின் ஒளியாதலால் விழி எதிர்ப்பட்ட பொருள்களை எல்லாம் பரம்பொருளாகவே பார்த்து வருவது உயர்ந்த தெளிவாய் உய்தி அருளுகின்றது.

எல்லாரையும் எவற்றையும் கடவுள் வடிவமாய்க் காணும் காட்சியே கதி மோட்சம் தருதலால் அக் காட்சியாளர் நித்திய முத்தராய் நிலவி நிற்கின்றார்.

தெய்வக் காட்சி எய்திய பொழுது பொய் மயக்கங்கள் பொன்றி ஒழிகின்றன. மருள் நீங்கி மாசறு காட்சியராகிய போது இருள் நீங்கி இன்பம் நுகர்கின்றனர். அவர் பேசும் மொழிகள் எல்லாம் தேசு மிகுந்து வெளி வருகின்றன.

கலிவிருத்தம்
(மா கூவிளம் கூவிளம் கூவிளம்)
முதற்சீர் குறிலீற்று மாவாக இருக்கும்.
விருத்தம் நேரசையில் தொடங்கினால் அடிக்கு 11 எழுத்து;
நிரையில் தொடங்கினால் 12. எழுத்தெண்ணிக்கை தானே வரும்!

ஈச னீசனென் றென்று மரற்றுவன்
ஈசன் தானென் மனத்திற் பிரிவிலன்
ஈசன் தன்னையு மென்மனத் துக்கொண்டு
ஈசன் தன்னையும் யான்மறக் கிற்பனே. 3

தேனைப் பாலினைத் திங்களை ஞாயிற்றை
வான வெண்மதி சூடிய மைந்தனை
வேனி லானை மெலிவுசெய் தீயழல்
ஞான மூர்த்தியை நான்மறக் கிற்பனே. 5

கன்ன லைக்கரும் பூறிய தேறலை
மின்ன னைமின் னனைய உருவனைப்
பொன்ன னைமணிக் குன்று பிறங்கிய
என்ன னையினி யான்மறக் கிற்பனே. 6

புதிய பூவினை புண்ணிய நாதனை
நிதியை நீதியை நித்திலக் குன்றினைக்
கதியைக் கண்டங் கறுத்த கடவுளை
மதியை மைந்தனை நான்மறக் கிற்பனே. 9 - 93 பொது, ஐந்தாம் திருமுறை, திருநாவுக்கரசர் தேவாரம்

எல்லாம் தெய்வ மயமாய்க் கண்டபொழுது அப்பர் இவ்வாறு ஆனந்த பரவசராய் ஞான நலம் கனிந்து பாடியிருக்கிறார்.

தீய புலைகளை ஒழித்து விடு; தூய நிலைகளைப் பழகி எழு; எங்கும் இறை ஒளியே பரவியுளது; இவ்வுண்மையை உறுதியாய் உணர்ந்து தெளிந்து யாண்டும் தெய்வ பாவனை செய்து உய்க என்கிறார் கவிராஜ பண்டிதர்.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (11-Aug-19, 6:13 pm)
பார்வை : 80

மேலே