பாவத் தொழிலே பண்ணுபவர் என்றோ இன்பம் அடைவது இனி - நியமம், தருமதீபிகை 395

நேரிசை வெண்பா

எண்ணுகின்றார் இன்பமுற எண்ணி அதற்குரித்தாம்
புண்ணியம்ஒன் றேனும் புரிகிலார் - பண்ணுவதோ
துன்பமுறு பாவத் தொழிலே இவர்என்றோ
இன்பம் அடைவ(து) இனி. 395

- நியமம், தருமதீபிகை,
- கவிராஜ பண்டிதர் ஜெகவீர பாண்டியனார்

பொருளுரை:

எல்லாரும் இன்பம் அடைய வேண்டும் என்றே எண்ணுகின்றார், ஆனால் அதற்கு உரிய புண்ணியங்களைச் செய்யாமல் பாவங்களையே செய்து பாழாகின்றார்; அதனால் இவர் என்றினி இன்பமடைவார் என்று கேட்கிறார் கவிராஜ பண்டிதர். இப்பாடல் கருதியதை எய்தும் உறுதி காட்டுகின்றது.

சீவர்களுடைய ஆசைகளும் செயல் இயல்களும் விபரீதமானவை. மாறுபாடுகள் மண்டி மயல் மிகுந்துள்ளன.

தங்களுடைய வாழ்வில் உயர்ந்த போக நலங்களை அனுபவிக்கவே யாவரும் யாண்டும் ஆவலுறுகின்றனர். அங்ஙனம் உற்றும் எங்கும் பிழைபாடுகளே பெற்றுப் பேதுற்று உழலுகின்றனர்.

இன்பத்தை எல்லாரும் அவாவி நிற்கின்றனர்.
துன்பத்தை என்றும் அஞ்சி வெறுக்கின்றனர்.

இந்த விழைவும் வெறுப்பும் அந்த நிலைகளின் நிலைமைகளையும் உயிர்களின் இயல்புகளையும் ஒருங்கே உணர்த்தியுள்ளன.

நுகர்ச்சியில் மகிழ்ச்சியான அனுகூல சம்பந்தங்கள் இன்பம் என வந்தன. மாறுபாடான பிரதிகூல நிலைகள் துன்பம் என நேர்ந்தன. சுக துக்கங்கள் நிலையற்ற நிலையின.

இனிய உறவுகள் எனத் தனி உரிமை எய்தியுள்ள மனைவி மக்களும் அனுகூலமின்றி மாறுபடின் அவரும் இன்னாத நிலையினராய் வெறுக்கப்படுகினறனர். வெறுப்பின் குறிக்கோள்கள் குறிப்புடன் கூர்ந்து நோக்கி ஓர்ந்து உணரத் தக்கன.

மனிதனுடைய விருப்பும் வெறுப்பும் அவன் அடைகின்ற சுகதுக்கங்களின் வகைதொகைகளைத் தோய்ந்து நிற்கின்றன.

எவ்வளவு சிறந்த பொருளாயினும் தனக்கு இடையூறு புரியின் அதனை எந்த மனிதனும் விரும்பான்; வெறுத்தே தள்ளுவான்.

பொன்னான் இயன்ற தெனினும் புனைவிலங்கை
உன்னான் இனிய(து) என. - அரும்பொருளமுதம்

மனிதன் எவ்வழியும் இன்பமே கண்ணாய்க் கருதியுள்ளமையை இது காட்டியுள்ளது. சீவ சுபாவங்கள் இவ்வாறிருந்தும் கருதியதற்கு மாறுபாடான பாவ காரியங்களிலே ஆவலுற்று வருகின்றன.

இன்பம் புண்ணியத்தால் வருகின்றது
துன்பம் பாவத்தால் உறுகின்றது.

எவ்வுயிர்க்கும் இதமாய் யாண்டும் நல்ல வினைகளைச் செய்தல் புண்ணியம் ஆகின்றது. தன்னையுடையானுக்கு என்றும் அது இன்ப நலங்களை விளைத்தருளுகின்றது.

புண்ணியம் புரிந்தோர் புகுவது துறக்கம்
என்னுமீ(து) அருமறைப் பொருளே.'
புண்ணியம் பயக்கின்றுழி அரியதெப் பொருளே! - இராமாயணம்

சுவர்க்க போகங்கள் முதலிய யாவும் புண்ணியத்தால் மேவும்; அதனையுடையவன் அடையாத பாக்கியங்கள் யாதும் இல்லை; அதிசயமான இன்ப நலங்களும் அரிய மகிமைகளும் அவன்பால் எளிதே வந்து சேருகின்றன என்பதை இவற்றால் அறிந்து கொள்கின்றோம். தரும விளைவுகள் அருமை நிலைகளாகின்றன.

'திருந்திய நல்லறச் செம்பொற் கற்பகம்
பொருந்திய பொருளொடு போகம் பூத்தலால்
வருந்தியும் அறத்திறம் மறத்தல் ஓம்புமின். - சிந்தாமணி

கலி விருத்தம்
(விளம் விளம் மா விளம்)

புண்ணியம் உலர்ந்தபின் பொருளி லார்களைக்
கண்ணிலர் துறந்திடும் கணிகை மார்கள்போல்
எண் ணிலள் இகந்திடும் யாவர் தம்மையும்
நண்ணிய நண்பிலள் நங்கை வண்ணமே. - சூளாமணி

இவை இங்கே சிந்திக்கத் தக்கன. புண்ணியத்தின் அளவே திருமகளின் அருளும், பொருளும் போகங்களும் உயிர்களுக்கு அமையும் என்றதனால் இதன் மகிமை புலனாம்.

இன்பங்களுக்கு மூலகாரணம் புண்ணியம்; அதனைச் செய்தவன் புண்ணியவானாய்ப் போக போக்கியங்களை எய்தி மகிழ்கின்றான்; செய்யாதவன் பாவியாய் வெய்ய துயரங்களில் உழலுகின்றான். கரும பலன்களை உயிர்கள் மருமமாய் மருவி வருகின்றன.

’எண்ணுவது இன்பம்; பண்ணுவது பாவம்’ என்றது மனிதனது பரிதாப நிலைமை அறிய வந்தது. பாலைப் பருக விரும்புகின்றான்; பசுவைக் கொலை புரிகின்றான்.

துன்பங்கள் விளைகின்ற பாவ வித்துக்களை விதைத்துக் கொண்டு இன்பங்களை அடைய விரும்புதல் இழி மடமையாம்.

நீ இன்ப நலங்களை விரும்புகின்றாய்; அவை புண்ணியத்தில் உள்ளன; அதனை விழைந்து செய்; யாவும் எளிதே விளைந்து வரும் என்கிறார் கவிராஜ பண்டிதர்.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (11-Aug-19, 6:30 pm)
பார்வை : 111

மேலே