ஊழி முதல்வன் ஒருவன் புதல்வர்நாம் - நிலை, தருமதீபிகை 387

நேரிசை வெண்பா

ஊழி முதல்வன் ஒருவன் புதல்வர்நாம்
வாழி அவனேர் வரவல்லோம் - ஆழி
அனையம் அடலில் அயர்ந்து மடிந்துள்
இனையல் எவனோ இழிந்து. 387

- நிலை, தருமதீபிகை,
- கவிராஜ பண்டிதர் ஜெகவீர பாண்டியனார்

பொருளுரை:

என்றும் நிலையாய் நின்று நிலவுகின்ற பரம்பொருளின் பிள்ளைகள் நாம்; அவனைப் போலவே யாண்டும் உயர்ந்து விளங்க உரியோம்; அளவிடலரிய வலிமை நிலைகளை உடையோம்; இந்த உண்மையை மறந்து தளர்ந்து வருந்தி அயர்தல் தவறு என்கிறார் கவிராஜ பண்டிதர்.

கடவுளை ஊழி முதல்வன் என்றது. காணப்படுகின்ற உலக சராசரங்கள் எல்லாம் ஒரு காலத்தில் அழிந்து போகும். அந்த அழிவு காலம் ஊழி எனப்படும்.

யாவும் முடிந்து மறையினும் தான் முடிவின்றி முதன்மையாய் நிற்கும் தலைவனாதலால் இறைவன் ஊழி முதல்வன் என நின்றான். என்றும் நிலையான அம் முதல்வன் புதல்வராய் யாண்டும் நின்று வருகின்றோம்; நிலைமை தெளியின் தலைமை வெளியாம்.

ஆழி – கடல், அடல் – வலிமை, இனையல் - வருந்தல்.

சருவ வல்லமையுள்ள கடவுளுடைய சந்ததிகள் நாம்: சிந்தை தெளிந்து தீமை புகாதிருந்தால் அத்தந்தையைப் போலவே மைந்தர்களாகிய நாமும் அதிசய ஆற்றல்களும், அற்புத நிலைமைகளும், அந்தமில் இன்பங்களும் அமைந்து என்றும் நிலையாய் நின்று நிலவுகின்றோம்; உரிமையை மறந்தது ஊனம் பிறந்தது.

உள்ளம் பழுதாய் இழிவுறின் தந்தையாகிய அவ் ஈசனது தொடர்பை இழந்து நீசர்களாய் இழிந்து நாசம் அடைய நேர்கின்றோம். உயர்கதியில் ஒளி பெறுதலும், இழிதுயரில் அழிவுறுதலும் நமது செயல் இயல்களால் நிகழ்கின்றன; மற்றெவராலும் அல்ல; இயல் தெளியாமையால் மயல் ஒழியாமலுள்ளது.

மன நிலைமை சிறிது மாசுபடினும் ஈசனுடைய உரிமையை இழந்து சீவர்கள் வெகு தூரம் விலகி விடுகின்றனர். அங்ஙனம் விலகி ஒழிந்தவர் அளவில்லாத இழிவுகளையும் கொடிய துயரங்களையும் அடைந்து நெடிது வருந்துகின்றனர்; விலகாமல் நின்றவர் தெய்வ ஒளிகளாய்த் திகழ்ந்து திவ்விய மகிமைகளையும் செவ்விய ஆனந்தங்களையும் அனுபவிக்கின்றனர்.

பெரிய பொருளிலிருந்து வந்திருக்கின்றோம் என்னும் உரிமையை மறந்து போனதினாலேதான் சிறுமையும் சீரழிவும் சேர நேர்ந்தன. உண்மையை உணர்ந்த போதுதான் உய்தி உண்டாகின்றது. தன்னை அறியவே தானாகவே மேன்மை மிளிர்கின்றது.

ஒரு சிங்கக் குட்டி, சிறிதாயிருக்கும் பொழுதில் தாயை விட்டுத் தவறிப் போய் அருகே மலைச் சாரலில் மேய்ந்து கொண்டிருந்த ஆட்டுக் கூட்டத்தில் சேர்ந்து விட்டது. அந்தச் சேர்க்கை வாசனையால் தனது இயற்கை வீறு மறந்து போயது. ஆட்டுக் குட்டிகளைப் போலவே புல்லைத் தின்று வளர்ந்து வந்தது. ஒரு நாள் அங்கே இரண்டு புலிகள் புகுந்தன; அவற்றைக் கண்டதும் பயந்து அந்தச் செம்மறி ஆடுகள் எல்லாம் சிதறி ஓடின. இந்தச் சிங்கக் குருளையும் சேர்ந்து ஓடியது: ஓட்டத்தில் அனைத்தினும் முந்தி அதி வேகமாய்க் கடிது பாய்ந்து போயது.

எதிரே ஒரு சிங்கம் கண்டது; இதன் போக்கை நோக்கி, ’ஏன் இப்படிப் பதறி ஒடுகின்றாய்?’’ என்று கேட்டது. ஐயோ! புலி கொல்ல வருகிறதே?" என்று சொல்லி விட்டு மேலும் ஓடத் துடித்தது: அதனைத் தடுத்து நிறுத்தி, ’சிங்கம் ஆகிய நீ ஏன் இங்ஙனம் பங்கமாய்ப் பயந்து ஓட நேர்ந்தாய்? என்று வியந்து கேட்டது. நான் சிங்கக் குட்டியா? எனத் தன்னை அது தெரிந்து கொண்டதும் சீறித் திரும்பியது. புலியைக் கண்டு ஓடி வந்ததை நினைந்து நினைந்து நாணியது. பின்பு மிருகேந்திரனாய் ஆண்மை புரிந்து மேன்மையுடன் வாழ்ந்தது.

இந்தச் சிங்கக் குட்டியின் கதை மனிதர்களுக்கு நன்கு பொருந்தியிருத்தலால் இங்கு எடுத்துக் காட்டப்பட்டது.

தன்னை மறந்து போனமையால் மனிதன் இழிந்து இன்னல் உழந்துள்ளான்; உண்மையை உணர்ந்து கொண்டால் புன்மை ஒழிந்து தன்மை யுயர்ந்து நன்மை அடைந்து கொள்கின்றான்.

தேவ குமாரனான சீவன் பாவ உலகில் புகுந்து மனித இனத்துள் நுழைந்து, 'அவன் மகன்; இவன் மகன்' என்று வீணே குலப் பெருமைகளைப் பேசிக்கொண்டு எதைக் கண்டாலும் பயந்து மையல் நோக்கோடு மருண்டு இழிந்து மறுகி உழலுகின்றான்.

உண்மை இயல் தெளிந்து புன்மை மயல் ஒழிந்து நன்மையுற வேண்டும். அரிய உயர் நலனை இழந்து சிறிய துயர் நிலையில் அழுந்தியிருப்பது அவமாதலால் ஆவதை விரைவில் மேவுக.

நேரிசை வெண்பா

சிங்கக் குருளை திசைதவறி ஆட்டினத்துள்
பங்கம் அடைந்து பரிந்ததுபோல் - இங்குனது
பான்மை இழந்து பழிதுயருள் பட்டுள்ளாய்!
மேன்மை தெளிக விரைந்து.

தனது நிலைமையை மறந்து தலைமையை இழந்து தாழ்ந்துள்ளவன் அதனை உணர்ந்து கொள்ளவே உயர்ந்து திகழ்கின்றான்.

"ஐம்புல வேடரின் அயர்ந்தனை வளர்ந்தெனத்
தம்முதல் குருவுமாய்த் தவத்தினின் உணர்த்த விட்டு
அன்னியம் இன்மையின் அரன்கழல் செலுமே. 8 சிவஞான போதம்

ஒரு சக்கரவர்த்தித் திருமகன் இளமையில் தப்பிப் போய் வேடர் சேரியில் புகுந்து வளர்த்தான்; தனது உயர் தகைமை முழுவதும் மறந்து இழி நிலையில் உழந்து வந்தான்; பருவம் அடைந்த பொழுது ஒரு பெரியவர் அவனைக் கண்டு, ’அந்தோ! நீ பெரிய அரச குமாரன்: சிறிய வேடனாய் இழிந்து திரிகின்றாயே!” என்று பரிந்து உணர்த்தினார்.

அங்ஙனம் தன்னை உணரவே பின்னர் அவன் மன்னவனாய் மாட்சி அடைந்தான்; அதுபோல் புலன் வசப்பட்டுப் புன்மை அடைந்துள்ள சீவன் தனது உண்மை நிலை தெரியவே சிவ குமாரனாய்ச் சிறந்து திகழும் என இச் சூத்திரம் குறித்துள்ளது. குறிப்புகள் கூர்ந்து நோக்கி ஓர்ந்து சிந்திக்கத் தக்கன உருவகங்கள் உணர்வின் சுவைகளாய் உள்ளன.

எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
(காய் காய் காய் மா அரையடிக்கு)

மன்னவன்தன் மகன்வேடர் இடத்தே தங்கி
..வளர்ந்தவனை அறியாது மயங்கி நிற்பப்
பின்னவனும் என்மகன்நீ என்றவரிற் பிரித்துப்
..பெருமையொடுந் தானாக்கிப் பேணு மாபோல்,
துன்னியஐம் புலவேடர் சுழலில் பட்டுத்
..துணைவனையும் அறியாது துயருறும்தொல் லுயிரை
மன்னுமருட் குருவாகி வந்தவரின் நீக்கி
..மலமகற்றித் தானாக்கி மலரடிக்கீழ் வைப்பன். 1 - 024 சாதனவியல் - எட்டாஞ் சூத்திரம் சிவஞான சித்தியார், திருநெறி இரண்டு

உயிருக்கும் கடவுளுக்கும் உள்ள உரிமை இதனால் உணரலாகும். தன் பிள்ளை என்று தெய்வம் உவந்து அணைத்துக் கொள்ளும்படி உள்ளம் புனிதனாய் மனிதன் உயர்ந்திருக்க வேண்டும்.

இடையே அடைந்த புலைகளை நீக்கிக் தரும சீலனாய் மருவியுள்ளவன் இழந்த உரிமையை அடைந்து சிறந்து திகழ்கின்றான்.

இழந்து போன தனது பதவியைப் புண்ணிய பரிபாகமுடையவன் அடைகின்றான் என்னும் இதனால் பரம பதத்தை அடைய உரியவனது நிலைமை தெரிய வந்தது. மாசு களைந்து தேசு மிகவே ஈசனை எய்துகின்றான்.

அயர்ந்து மடிந்து உள் இனையல் எவனே? என்றது உனது நிலைமையை மறந்து போனமையால் மதி மயங்கி வருந்துகிறாய், உண்மையை நினைந்து பார்; அந்த ஞான நோக்கில் நலம் பல காண்பாய் என்று காட்டியவாறாம்.

நீ தெய்வத் திருமகன்; உரிய மெய்மையை உணர்ந்து தெளிந்து சீலமுடையனாய் ஒழுகி வைய மையல் ஒழிந்து உய்தி பெறுக என்கிறார் கவிராஜ பண்டிதர்

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (13-Aug-19, 5:50 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 23

மேலே