உள்ளம் புனிதமாய் நலம்புரியின் உள்ளிநின்ற யாவும் எளிதாய் அடையும் - நியமம், தருமதீபிகை 397

நேரிசை வெண்பா

உள்ளம் புனிதமாய் ஓர்ந்து நலம்புரியின்
தெள்ளமிர்தம் உண்ட திறம்போல - உள்ளிநின்ற
யாவும் எளிதாய் அடையும் அளவிலின்பம்
மேவும் விரைந்து விளைந்து. 397

- நியமம், தருமதீபிகை,
- கவிராஜ பண்டிதர் ஜெகவீர பாண்டியனார்

பொருளுரை:

மனம் புனிதமாய் ஒருவன் நல்ல கருமங்களைச் செய்துவரின் அமுதம் பருகியது போல் அவனுடைய குடிவாழ்வு ஆனந்தம் பெருகி வரும் என்கிறார் கவிராஜ பண்டிதர்.

மனிதன் பிறக்கின்றான்; வளர்ந்து வாழ்கின்றான்; முடிவில் இறந்து மறைந்து போகின்றான். இறந்து போவதே பிறந்த பிறவியின் முடிந்த முடிபாய்த் தெளிந்து நிற்கின்றது. இந்த நிலையில் மனித வாழ்க்கை யாண்டும் இயங்கி வருதலை நாளும் நயந்து நோக்கி வியந்து வருகின்றோம்.

சிறிய வாழ்நாளையுடையதும் விரைவில் கழிந்து போவதும் ஆகிய நிலைமையில் மானிட வாழ்வு மருவியுள்ளது.

மிகவும் குறுகிய இந்தச் சிறு காலத்துள் பிறவியின் பயனைப் பெற்றுக் கொள்கின்றவன் பெரிய பாக்கியவான் ஆகின்றான்.

அறம், பொருள், இன்பம், வீடு என்னும் இந்த நான்கும் மனிதன் அடையத்தக்க செல்வங்களாக மதிக்கப்பட்டுள்ளன. புருடனால் மருவவுரிய பொருள்களாதலின் இவை புருடார்த்தம் எனப்பட்டது. .

சித்த சுத்தியோடு செய்கின்ற நல்ல கருமங்களிலிருந்து தருமம் விளைகின்றது; அது இம்மையில் பொருள் இன்பங்களைப் பயந்து மறுமையில் பேரின்பத்தையும் அருளுகின்றது.

எல்லாப் பேறுகளுக்கும் உள்ளப் புனிதம் மூல காரணமாயுள்ளது. மனம் முதலிய மூன்று கரணங்களும் புனிதமாய் இயங்கின் அங்கே தனி மகிமைகள் ஓங்குகின்றன. தன் கரணங்கள் செம்மை அடைந்த பொழுது அம் மனிதனால் உலகம் நன்மை அடைகின்றது; அவனும் உய்தி பெறுகின்றான்.

நேரிசை வெண்பா

மனத்தினும் வாயினும் மெய்யினும் செய்கை
அனைத்தினும் ஆன்றவிந்தா ராகி – நினைத்திருந்(து)
ஒன்றும் பரியலராய் ஓம்புவார் இல்லெனில்
சென்று படுமாம் உயிர். 359 பழமொழி நானூறு

திரிகரணங்களும் பரிபாகமடையின் அவர் பெரியவராய் உயர்கின்றார், அங்ஙனம் அடையவில்லையானால் உயிர் கடையாய் இழியும் என இஃது உணர்த்தியுள்ளது.

மனம் பண்புற மனிதன் பெருமாண்புடையனாய் உயர்ந்து உலகம் நலமுற ஒளி புரிகின்றான்.

உயர்ந்த மனிதப் பிறவியை அடைந்த பயன் எவ்வுயிர்க்கும் அன்பாய் இதம் புரிவதேயாம் என்னும் உண்மையை உணர்ந்து நன்மை செய்தலை ஓர்ந்து நலம் புரியின் என்றது.

இனிய கரும நலங்கள் தருமமாய் வருதலால் அவை மனிதனைப் புனிதனாக்கிப் புண்ணிய போகங்களை அருளுகின்றன.

யாண்டும் எவர்க்கும் என்றும் ஒருவன் இதமே செய்துவரின் அவன் பெரிய தெய்வத் திருவுடையனாய் அரிய பதவியை அடைகின்றான், தன்னுடைய செயல் இயல்கள் உயர்நலம் உடையனவாயின் அந்த மனிதன் துயர நிலைகள் யாவும் கடந்து உயர்ந்த நிலையை உறுதியாக அடைந்து கொள்கின்றான். உயர்வும் உய்தியும் தன்னிடமே மன்னி உள்ளன.

’தெள் அமிர்தம் உண்ட திறம்’ என்றது நல்ல எண்ணங்களை எண்ணி நலமான செயல்களைச் செய்து வருபவன் இனிய அமுதம் உண்டவன் போல் என்றும் நிலையான இன்பம் எய்தி நிற்றலை உணர்த்தி நின்றது. உண்ணுவதும் எண்ணுவதும் உடலுயிர்களை ஓம்பி வருதலால் அவற்றைப் புனிதமாகப் போற்றி வாழுக என்றும், நல்லதையே நினைந்து, நன்மையே செய்து வர எல்லா நலங்களும் உனக்குத் தனி உரிமைகளாய் இனிமை சுரந்தருளும் என்றும் கூறுகிறார் கவிராஜ பண்டிதர்.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (13-Aug-19, 5:56 pm)
பார்வை : 78

மேலே