கணப்பொழுதேனும் கனவில் வந்திடு

அசுர தாகத்தில்
நீர் குடிக்கத் தவிக்கும் வேராய் என் காத்திருப்பு....
மலர்களை பிரசவிக்க எத்தனிக்கும் கிளைகளாய் என் பூரிப்பு.....

ஆர்ப்பரித்து உள்ளடங்கும் அலைகளின் தூவலாய் அங்கலாய்ப்பு
ஆமை ஓட்டுக்குள் அடங்கிய உடலாய் மனத்தவிப்பு

உன் ஒற்றை விரல் உரசல் போதும்
அத்தனை உயிர் செல்லும் உந்தம் பெற்றிடும்
உன் தோள் சாய்ந்த ஒரு நொடி போதும்
ஆகாய கங்கையில் என் அங்கங்கள் சிலிர்த்திடும்....

கனவில் கணப்பொழுதேனும் வந்திடு ....
உன் பிரியங்கள் வழியும் குவளையில்
அடியில் தங்கிய கசடையேனும் தந்திடு....
கடைசி உயிர்த்துளி வரை எனையது தேற்றிடும்!

எழுதியவர் : வை.அமுதா (13-Aug-19, 9:09 pm)
பார்வை : 57

மேலே