உண்மை நெறிநின்று தண்மை யுறுசீலம் தாங்கினார் - நிலை, தருமதீபிகை 389

நேரிசை வெண்பா

உண்மை நெறிநின்(று) உறுதி கடைப்பிடித்துத்
தண்மை யுறுசீலம் தாங்கினார் - வண்மை
அனகனருள் பெற்றார்பின் அல்லலற்றார் என்றும்
கனகனருள் சேயே கரி. 389

- நிலை, தருமதீபிகை,
- கவிராஜ பண்டிதர் ஜெகவீர பாண்டியனார்

பொருளுரை:

சத்திய நெறியில் உறுதியுடன் நின்று உத்தம சீலராய் ஒழுகி வருபவர் இறைவன் அருளை இனிதெய்தி யாதொரு இடருமின்றி யாண்டும் இன்பம் மிகப் பெற்றார், இவ்வுண்மைக்கு பிரகலாதனே தகுந்த சாட்சி என்கிறார் கவிராஜ பண்டிதர்.

தன் வழி ஒழுகினவரை மெய்யான பேரின்ப நிலையில் உய்த்தருளும் மேன்மையுடையது எதுவோ அது உண்மை நெறி என வந்தது. மெய்வழி உய்வழியாய் ஒளி புரிகின்றது.

உயிர்க்கு உறுதியான தரும சீலங்களை உறுதி என்றது. கடைப்பிடித்தலாவது யாண்டும் யாதும் வழுவாமல் நீதி நெறிகளில் நிலைத்து நிற்றல். நிலை குலைவுகளின் புலைகளை நினைந்து இந்நிலையை இங்ஙனம் குறித்தது.

மடமைகளும் கொடுமைகளும் மையல் மயக்கங்களும் பெருகியுள்ள இவ் வையக வாழ்க்கையில் மெய்யான உய்தி நெறியை உணர்தலும், உறுதி குலையாமல் ஒழுகுதலும் பெரிதும் அரிதாதலால் அந்த அருமைப் பாட்டில் எவ்வழியும் தளராமல் உறுதி மண்டி நிற்பவர் தரும வீரராய்த் தழைத்து வருகின்றார்,

பொய் மயல்களில் இழிந்து புலையாடாமல் மெய் வழிகளில் ஒழுகி வருபவர் மேலான மகிமைகளை அடைகின்றனர்.

சத்தியமானதும், நித்தியமாய் நிலைத்துள்ளதும் எதுவோ அந்த உத்தம நிலையைப் பற்றி நிற்பவர் உறுதியாய் உய்தி பெறுதலால் பிறவி நோய் நீங்கிப் பேரின்பம் .நுகர்கின்றார்.

’அனகன் அருள் பெற்றார் அல்லலற்றார்’. உற்ற துன்பங்கள் எல்லாம் ஒழிந்து என்றும் அழியாத பேரின்ப நலனைப் பெறுகின்றவரது நீர்மை நிலையை இஃது உணர்த்தி நின்றது.

அனகன் – கடவுள், அகம் என்பது பாவம், தீமை, கொடுமைகளைக் குறித்து வருமாதலால் அவை யாதும் இல்லாதவன் அனகன் என நின்றான். அந்தப் புனித மூர்த்தியைப் புனித நிலைகளை அடைந்து படி ஏறிய மனிதன்தான் அடைய முடியும்.

பாவ அழுக்குகள் ஒழிந்த பொழுது மனிதன் புண்ணிய சீலனாய்ப் பொலிந்து விளங்குகின்றான். புண்ணியம் கடவுள் உருவமாதலால் புண்ணியாத்துமா பரமாத்துவாகின்றது.

If a man is at heart just, then in so far is he God. - Emerson

'தன் இருதயத்தில் தரும நீதி மருவிய அளவில் மனிதன் கடவுளாய்த் திகழ்கின்றான்' என்னும் இது இங்கே எண்ணத்தக்கது. இனிய நீர்மையால் அரிய சீர்மைகள் மருவுகின்றன.

உணர்வும் உள்ளமும் புனிதமாகவே சீவன் திவ்விய மகிமைகளை அடைந்து தேவ தேவன் ஆகின்றான்; ஆகவே உயிர் பரங்களின் இயலமைதிகளும் உறவுரிமைகளும் உணர வந்தன. சித்த சுத்தியும் பக்தியும் முத்தி நிலையில் உய்த்தருளுகின்றன.

’கனகன் அருள் சேயே கரி’ என்றது அனகன் அருள் பெற்றவர் அல்லலற்றவராய் எல்லையில்லாத இன்ப நலங்களை எய்தி மகிழ்வர் என்பதை இனிது விளக்க வந்தது. தெய்வம் சாரவே உய்வு சேருகின்றது.

கனகன் – இரணியன், அவன் புதல்வனான பிரகலாதனை சேய் என்றது. கரி – சாட்சி; புனித நிலையில் நிலைத்து நிற்பவன் இனிய பேறுகளை எய்தி மகிழ்வான் என்பதை மனிதவுலகம் இவன் பால் கண்டுள்ளமையால் இவனது சாட்சி ஆன்ற மாட்சியாய்க் காட்சிக்கு வந்தது.

பிரகலாதன் இளமைப் பருவத்திலேயே உத்தம குணங்களும் தத்துவ ஞானமும் பத்திமையும் உடையவன். இவனுடைய சித்த சுத்தியும் தீரமும் வித்தக நிலையில் விளங்கியிருந்தன.

வெய்ய நிலையில் இறுமாந்து வீறு மண்டி நின்ற இரணியன் தனது மைந்தனுடைய தெய்வ சிந்தனையை வெறுத்து இகழ்ந்து தன்னையே பரம் பொருளாகக் கருதி ஒழுகுமாறு இன்னல் பல இழைத்தான். அந்த இடையூறுகளால் யாதொரு தீதும் அடையாமல் இந்நீதிமான் நெறி வழுவாமல் நிலைத்து நின்றான். முடிவில் அவன் அழிந்து ஒழிந்தான். இவன் அழியாத வாழ்வை அடைந்து மகிழ்ந்தான்,

தரும குண சீலனான இவன் எதிரே திருமால் தோன்றி உனக்கு என்ன வரம் வேண்டும் என்று வேண்டிய பொழுது இவன் யாதொன்றையும் வேண்டாமல் அன்பையே வேண்டினான்.

வெண்டளை பயிலும் கலி விருத்தம்

முன்பு பெறப்பெற்ற பேறோ முடிவில்லை;
பின்பு பெறும்பேறும் உண்டோ? பெறுகுவெனேல்
என்பு பெறாத இழிபிறவி எய்திடினும்
அன்பு பெறுகை அரும்பே(று) எனக்கென்றான். – இரணியன் வதை 169

இதனால் இவனது உள்ளப் பண்பும் உணர்வு நிலையும் உணரலாகும். உண்மை நெறியில் உறுதியுடன் நிலைத்துள்ளவர் இடும்பைகள் யாதும் இலராய் ஈறிலின்பம் பெறுவர் என்பதை உலகம் அறிய இவன் உணர்த்தி நின்றான்.

மெய் வழியில் நிலைத்து ஒழுகுபவன் தெய்வ ஒளியாய்த் திளைத்து மிளிர்கின்றான்; நிலைமை குலையாமல் தலைமையில் உயர்க என்கிறார் கவிராஜ பண்டிதர்.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (15-Aug-19, 9:54 pm)
பார்வை : 61

மேலே