சொல்லும் செயலும் துகளிலவானால் நல்லவெலாம் நின்பால் நிறையும் - நியமம், தருமதீபிகை 399

நேரிசை வெண்பா

சொல்லும் செயலும் துகளிலவாய்த் தொல்லுயிர்பால்
ஒல்லும் வகையில் உதவினால் - நல்லவெலாம்
நின்பால் நயந்து நிறையுமே; நீயன்றி
இன்பார் பெறுவார் இவண். 399

- நியமம், தருமதீபிகை,
- கவிராஜ பண்டிதர் ஜெகவீர பாண்டியனார்

பொருளுரை:

சொல்லும் செயலும் பழுதில்லாதபடி இயன்றவரையும் எல்லா உயிர்க்கும் .நீ இதம் புரிந்து வரின் அரிய இன்ப நலங்கள் யாவும் உன்னிடம் வந்து குவியும்; உன்னையன்றி வேறு யார் இங்கே இன்பம் பெறுவார் என்கிறார் கவிராஜ பண்டிதர்.

மனித வாழ்வு எவ்வழியும் இனிமை சுரந்து வரின் அது புனித நிலையமாய்ப் பொலிந்து விளங்கும்; அதனால் திவ்விய மகிமைகள் உளவாம்; அவ்வழியில் வாழ்வதே வாழ்வாம் என இது அறிவுறுத்துகின்றது.

துகள் என்னும் சொல் குற்றத்தைக் குறித்து வரும். தன்னைப் பற்றினவனை இழிந்தவன் ஆக்கி எவரும் தூசி போல் இகழ்ந்து நோக்கும்படி செய்து விடுதலால் குற்றம் ‘துகள்’ என வந்தது.

பேச்சிலும் நடத்தையிலும் பிழைபாடுகள் நுழையாமல் எவ்வழியும் புனிதனாய் ஒழுக வேண்டும் என்பதால் சொல்லும் செயலும் ‘துகள் இலவாய்’ எனப்பட்டது.

பொய், கோள், புறங்கூறல் முதலியன சொல்லின் குற்றங்கள்; பிராணிகளை வருத்துதல், பிறர் பொருள்களைக் கவர்தல், யாசகம் வாங்குதல், அயல் மனைவியைத் தீண்டுதல், அழிகேடுகள் ஆற்றுதல் முதலியன செயலின் குற்றங்கள். இந்த மாசுகள் படின் அம் மனித வாழ்வு நீசம் அடையும்.

நேரிசை வெண்பா

தீய மொழிசெயல்கள் தீவினைகள் ஆயுயிரை
மாய வருத்தி மரபழிக்கும் - ஆயபிழை
சேராமல் காக்கும் திருவுடையான் எஞ்ஞான்றும்
பேராத இன்பம் பெறும்.

தன்னுடைய சொல்லையும் செயலையும் பழுது படுத்தினவன் தன் உயிரைப் பாழ்படுத்தினவன் ஆகின்றான்; அவற்றைப் புனிதமாகப் பேணி வருபவன் பெரிய மகிமைகளை அடைகின்றான்.

தான் பேசுகின்ற பேச்சுகளும், செய்கின்ற செயல்களும் மாசு மறுக்கள் மருவாமல் யோசனையுடன் ஓம்பி வர வேண்டும்; அவ்வாறு வரின் அவ்வாழ்வு தேசு மிகவுடையதாய் அவன் ஈசன் அருளை எய்துகின்றான். புனிதம் புக மனிதன் உயர்கின்றான்.

தன்பால் நிகழ்வன பிற உயிர்களுக்கு யாதும் இடரின்றி எவ்வகையும் இத நலங்களாய் இயைந்து வரின் அவை இன்ப நிலையங்களாய்ப் பெருகி இருமையும் அருளுகின்றன.

நிலத்தைப் பண்படுத்தி உழுது உரம் பரப்பிப் பருவம் அறிந்து பயிர் செயின் விளைவு அதிகமாம்; மனிதன் மனத்தைப் பண்படுத்தி அன்புநலம் தோய்ந்து ஆருயிர்க்கு இதம் புரிந்து வரின் அரிய இன்பநலங்கள் பெரிதாய் விளைந்து வரும்.

தன்னுடைய எண்ணமும் செயல்களும் எவ்வழியும் இனியனவாகவே நிலவி வர ஒருவன் ஒழுகிவரின் அவன் புனிதன் ஆகின்றான்; ஆகவே புண்ணிய போகங்கள் யாவும் அவனுக்குத் தனியுரிமைகளாய் இனிமை புரித்தருளுகின்றன.

’தன் கையே தனக்குதவி’ என்பது பழமொழி. பல உண்மைகளை இஃது உணர்த்தியுள்ளது. மனித வாழ்க்கையின் மருமங்களைச் சிறிய வாக்கியங்கள் தெளிவாக்கி ஒளி மணிகள் போல் உலக மொழிகளில் சிதறிக் கிடக்கின்றன.

தான் செய்கின்ற இனிய கருமங்களே புனித தருமங்களாய் மனிதனுக்குப் போகங்களை அருள்கின்றன. தன்னை உயர்த்தி உய்தி நலம் அருளுவது தான் செய்த வினையேயாதலால் அதுவே அவனுக்கு இனிய உறுதித் துணையாம்:

நேரிசை வெண்பா

செய்வினை யல்லால் சிறந்தார் பிறரில்லை
பொய்வினை மற்றைப் பொருளெல்லாம் - மெய்வினவில்
தாயார் மனைவியார் தந்தையார் மக்களார்
நீயார் நினைவாழி நெஞ்சு. 152 - அறநெறிச்சாரம்

நெஞ்சை நோக்கி அறிவு கூறியுள்ள இது நாளும் நினைவு கூரவுரியது. பிறர் எவரும் உனக்கு உதவி செய்ய முடியாது; உயர்வான உறுதி நலங்கள் உன்னிடமே இயல்பாக அமைந்திருக்கின்றன. நல்ல கருமங்களைச் செய்துவரின் எல்லா இன்ப நலங்களும் உளவாகின்றன. செய்வினை உய்வினை அருளுகின்றது என்கிறார் கவிராஜ பண்டிதர்.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (15-Aug-19, 10:04 pm)
பார்வை : 55

மேலே