திருஞானசம்பந்தர் தேவாரம் - இரண்டாம் திருமுறை - 085 பொது - பாடல் 2

பாடல் 2 - எழுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்

என்பொடு கொம்பொடாமை யிவைமார் பிலங்க
..எருதேறி யேழை யுடனே
பொன்பொதி மத்தமாலை புனல்சூடி வந்தென்
..உளமே புகுந்த அதனால்
ஒன்பதொ டொன்றொடேழு பதினெட்டொ டாறும்
..உடனாய நாள்க ளவைதாம்
அன்பொடு நல்லநல்ல வவைநல்ல நல்ல
..அடியா ரவர்க்கு மிகவே. 2

பொழிப்புரை:

என்பு, பன்றிக்கொம்பு, ஆமையோடு ஆகியன மார்பில் இலங்க, பொன் போன்ற மகரந்தம் பொருந்திய ஊமத்தை மலர்மாலை, கங்கை ஆகியனவற்றை முடிமேல் சூடி உமை யம்மையாரோடு எருதேறி வந்து என் உளம் புகுந்து எழுந்தருளி இருத்தலால், அசுவினி முதலாக உள்ள நாள்களில் ஆகாதனவாகிய ஒன்பது, பத்து, பதினாறு, பதினெட்டு, ஆறு ஆகிய எண்ணிக்கையில் வருவனவும் பிறவுமான நட்சத்திரங்கள் அன்போடு மிக நல்லனவே செய்யும்; அடியவர்கட்கும் மிக நல்லனவே செய்யும் என்கிறார் திருஞானசம்பந்தர்.

குறிப்புரை:

கொம்பு – பன்றிக்கொம்பு, ஆமை – முற்றலாமையோடு, ஏழை - உமாதேவியார்.

ஒன்பது – அசுவினியிலிருந்து எண்ணினால் ஒன்பதாவது நட்சத்திரம் ஆயில்யம், ஒன்பதோடு ஒன்று பத்து - மகம். ஒன்பதொடு ஏழு பதினாறு – விசாகம், பதினெட்டு - கேட்டை, ஆறு - திருவாதிரை, உடனாய நாள்களும், மற்ற நட்சத்திரங்களாகிய பரணி, கார்த்திகை, பூரம், சித்திரை, சுவாதி, பூராடம், பூரட்டாதி நாள்களும் ஆகாத திதிகள், கிழமைகளாகக் கருதப்படுகின்றன.

இவ் வுண்மையை, `ஆதிரை பரணி ஆரல் ஆயில்யமுப் பூரம் கேட்டை தீதுறு விசாகம் சோதி சித்திரை மகம்ஈ ராறும் மாதனம் கொண்டார் தாரார் வழிநடைப் பட்டார் மீளார் பாய்தனில் படுத்தார் தேறார் பாம்பின்வாய்த் தேரைதானே` என்னுஞ் சோதிடநூற் பாட்டில் சொல்லப்படுகிறது.

ஆயினும் சிவபெருமானுக்குரிய திருவாதிரையை முதலாக்கொண்டு, அதற்கு ஒன்பது சித்திரை, அத னொடு ஒன்று சுவாதி, அதிலிருந்து முன் ஏழு ஆயில்யம், அதற்குப் பதினெட்டு பூரட்டாதி, அதற்கு முன் ஆறு பூராடம் என்றும் உடனாய நாள்கள்: பரணி, கார்த்திகை, மகம், பூரம், விசாகம், கேட்டை என்றும் உரைப்பாருமுளர்.

’ஆதிரை பரணி ஆரல் ஆயில்யமுப் பூரம்’ என்ற பாடலை என்னால் கண்டு பிடிக்க முடியவில்லை, தெரிந்தவர்கள் சொல்லலாம்.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (16-Aug-19, 8:49 am)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 377

மேலே