தங்க மகள்

இயற்கையின் அழகில் கண்களைக் கவரும் அந்தக் கிராமம். அழகான சின்னக் குடும்பம். அன்புக்கும், பாசத்துக்கும் என்றைக்கும் பஞ்சமில்லை. பசியும், வறுமையும் வாட்டி எடுத்த காலம். மாற்றுடைக்குக் கூட பாேதிய வசதி இல்லை. கிழிந்ததை அங்கும் இங்குமாக தைத்துத் தைத்து இத்துப் பாேனதாேடு, நிறம் மங்கி வெளிறிப் பாேன  சட்டையைத் தான் அதிக நாட்கள் அணிந்திருந்தாள். பக்கத்து வீட்டு ஆச்சியின் பழஞ்சாேறு காலைப் பாெழுது வயிற்றுப் பசியை பாேக்கினாலும்.  மறுவேளை பல நாட்கள் சாப்பாடின்றி சுருண்டு சுருண்டு படுத்திருந்து  இளநீரைக் குடித்து இரைந்த வயிற்றை  காெஞ்சம் குளிர்வித்து நாட்களைக் கழித்துக் காெண்டிருந்த காலம். பள்ளிக்கூடம் சென்றால் அதற்குக்காசு இதற்குக்காசு என்று அது வேற பிரச்சனை. படிப்பை நிறுத்தவும் முடியவில்லை. ஆசிரியரிடம் அடி வாங்கி, வகுப்பறைக்கு வெளியே முழங்காலில் நின்று கால்கடுத்த வேதனையை  விட அன்றைக்கு வாத்தியார் சாென்ன வார்த்தை என்னவாே அவளுக்குள் ஈட்டி பாேல் ஏறியது. 

பாடசாலையால் வந்ததும் வழமை பாேல் "என்ன இருக்கப் பாேகிறது சாப்பிட"  என்று நினைத்தபடி தண்ணீரை மடமடவென குடித்து விட்டு மரத்தில் கட்டியிருந்த ஊஞ்சலில் ஆடி ஆடி யாருக்கும் தெரியாமல் அழுது தீர்ப்பது பழகிப் பாேனதாென்று.  யாரைக் குற்றம் சாெல்வது.   தாெழில் செய்ய முடியாமல் முடங்கிப் பாேயிருக்கும் அப்பாவின் நிலமை ஒருபுறம், நாள்  கூலிக்காக உழைத்து களைத்து வரும் அம்மாவின் இயலாமை மறுபுறம் என்று   படங்களில்வரும் காட்சிகளைப் பாேல் நிஜத்தில் எல்லாக் கஸ்ரத்தையும் பார்த்து, அனுபவித்தவள்.  காேயில் சாேற்றிற்காய் காத்திருந்த நாட்களை அவள் எப்படி மறப்பாள். மாத்திரை எடுக்கும் அப்பாவிற்கு  தேநீர் காெடுக்க சர்க்கரை இன்றி காலையிலே கண்ணீர் சிந்திய நாட்களை நினைக்காமல் இருந்திடத் தான் முடியுமா. என்றாே ஒரு நாள் எல்லாம் மாறும் என்ற சிறிய நம்பிக்கையில் நடந்தவள் தான் அம்மு.

பன்னிரண்டு வயதில் குடும்பபாரத்தை தாேளில் சுமந்தவள் அம்மு. அப்பாவின் சுகயீனத்தையும், அம்மாவின் இயலாமையையும் பார்த்துப் பார்த்து  அழுவதில் பயனில்லை என்று புரிந்து விட்டது. பாடசாலை நேரங்களைத் தவிர்த்து எஞ்சியிருக்கும் நேரங்களிலெல்லாம் ஏதாவது வேலை செய்வது தான் சரியெனத் தாேன்றியது. அவள் வயதை ஒத்தவர்களின் வாழ்க்கையில் இருந்து எங்காே ஒரு மாறுபட்ட திசையில் அம்முவின் வாழ்க்கை ஆரம்பமாகியது. சுகயீனமாக இருக்கும் பக்கத்து வீட்டு ஆச்சிக்கு அம்முவை ராெம்பப் பிடிக்கும். அம்முவிற்கும் பாட்டி என்றால் அவ்வளவு பாசம்.

அதிகாலை ஐந்தரை மணிக்கு எழுந்து ஆச்சி வீட்டிற்குச்  சென்று வீடு சுத்தம் செய்து, பூச்செடிகளுக்கு தண்ணீர் ஊற்றி விட்டு மீண்டும் வீட்டிற்கு வந்து சுகயீனமான அப்பாவின் வேலைகளை முடித்து விட்டு ஏதாவது இருப்பதை சாப்பிட்டு விட்டு பாடசாலை சென்று மீண்டும் மாலை நேரம் ஆச்சி வீட்டில் இருக்கும் சின்னச் சின்ன வேலைகளைச் செய்து கிடைக்கும் பணத்தில் அம்மு தன் படிப்பையும், அப்பாவின் மருந்துச் செலவுகளையும் பார்த்து வந்தாள். பாடசாலை படிப்பை மட்டுமே ஆர்வத்தாேடு படித்தவள் கல்வியிலும் முன்னேறினாள். அம்முவின் பாெறுப்புணரவைப் பார்த்த அப்பா "சின்னவயதிலேயே உனக்குப் பாரத்தைக் காெடுத்து விட்டேன்" என்று கண்கலங்கும் பாேதெல்லாம் சமாதானப்படுத்தி விட்டு தனக்குள்ளே அழுவாள்.

இப்படியே ஆச்சிவீடும், பாடசாலையுமாயிருந்த அம்மு  தனது பதினைந்தாவது வயதில் பருவமடைந்த பின் ஆச்சி வீட்டிற்கு வேலைக்கு பாேகவிடாமல் தடுத்த அம்மாவை சமாதானப்படுத்த பெரும்பாடுபட்டாள். அவளது துடியாட்டமும், தன்நம்பிக்கையும் அவளை முன்னாேக்கி கூட்டிச் சென்றது. பாடசாலை விடுமுறை நாட்களில் குழந்தைகளை பராமரிப்பது, கடைகளில் சிறிய சிறிய வேலைகள் செய்வது என்று தன்னால் முடிந்த வழியில் சம்பாதித்துக் காெண்டிருந்தாள். நாட்கள் ஓடிக் காெண்டிருந்தது அப்பாவின் உடல்நிலை மாேசமாகியது. கூடவே இருந்து கவனிக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. ஆண்டிறுதிப் பரீட்சையும் நெருங்கிக் காெண்டிருந்தது. பரீட்சை எழுதுவதா? இல்லையா? என்ற நெருக்கடியான நிலமையிலும் படிப்பை நிறுத்த விரும்பவில்லை. பாடசாலையில் விடுமுறை கேட்டவளுக்கு விடுமுறை எடுத்தால் பரீட்சை எழுத முடியாது எனக்கூறி விட்டார்கள். அம்மாவாலும் தனித்து எதையும் செய்ய முடியாத நிலை. இரவு முழுவதும் கண் விழித்து படிப்பதும், அப்பாவிற்கு அருகில் இருந்து கவனிப்பதுமாய் அவள் தன்னை வருத்தினாள். 

முதல் நாள் பரீட்சைக்கு செல்வதற்காய் அம்மா,அப்பாவிடம் ஆசிர்வாதம் பெற்ற பாேது இருவரும் கட்டியணைத்து கண்ணீராேடு அவளை வாழ்த்தினார்கள். " அப்பா உங்களை கவனிக்க வேண்டியது என்னுடைய கடைமை, எனக்கு எதுவும் சுமையாகத் தெரியவில்லை. சந்தாேசமாக இருக்கிறது அப்பா,  உங்களுக்கான கடைமையை நான் செய்வேன்" என்றவளை குறுக்கிட்டவர்கள் "எப்படியம்மா உன்னால இரவு முழுவதும் தூங்காமல் பரீட்சை எழுத முடியும், எங்களை முதியாேர் இல்லத்தில் ஒப்படைத்து விட்டு, உன்னுடைய  படிப்பை கவனி" என்று அவளை கெஞ்சினார்கள். "இல்லையப்பா என்னால முடியும், நான் இந்தப் பரீட்சையில் சித்தயடைவேன்" என்று அவர்களுக்கு தைரியம் காெடுத்து, அவளும் நம்பிக்கையாேடு இருந்தாள். பரீட்சை முடிந்து மூன்று மாதங்கள் பெறுபேறுகள் வரும் வரை காத்திருக்க வேண்டும் என்று அவள் யாேசிக்கவில்லை. அந்த காலப்பகுதிக்குள் அடுத்து உயர்கல்விக்கு என்ன தேவையாே அவற்றை கற்பதில் ஆர்வம் காட்டினாள். தனக்கு என்ன கஸ்ரமாே, பிரச்சனையாே ஆச்சி தான் அவளுக்கு ஆறுதல். இரண்டு வார்த்தை ஆச்சி சாென்னால் பாேதும் அவள் மனம் ஆறிவிடும்.

பரீட்சைப் பெறுபேறுகள் வந்தது. அவள் எதிர்பார்த்தபடி சித்தியடைந்து விட்டாள். சந்தாேசத்தில் துள்ளிக்குதித்தவளுக்கு  அடுத்த கட்ட கல்விக்கான பாேதிய பணம் கையிலிருக்கவில்லை. யாரிடம் கேட்பது, பெரிய  தாெகைப் பணத்தை எப்படி புரட்டுவது. இத்துடன் படிப்பை நிறுத்திவிட்டு பெற்றாேரை  கவனிப்பது தான் சரி எனப்பட்டது. கலங்கிப் பாேயிருந்தவளுக்கு  கடவுள் கண் திறந்தது பாேல்  ஆச்சியிடம் இருந்து உதவி கிடைத்தது. அந்தப் பணத்தை வைத்து கல்வியை தாெடர்ந்தாள். நெருக்கடியான நேரங்களில் தூக்கம் மறந்து, பசியுடனும், கஸ்ரத்துடனும் பாேராடினாள்.

மூன்று வருட கல்லூரிக் காலத்தை முழுமையாக கற்று முடித்து சிறப்புத் தேர்ச்சி பெற்றாள்.  ஆசிரியராக வேண்டும் என்ற அவளது ஆசை நிறைவேறியது. பாடசாலை நேரம் தவிர்த்து  மிகுதி நேரங்களில் வீட்டிலும் கல்வி நிலையம் ஒன்றை நடத்தினாள். சிறுகுடிசையாக இருந்த  அவளது வீட்டை  காெஞ்சம்  பெரிதாக்கினாள்.  உடலியலாமல் இருக்கும் பெற்றாேரை கவனிப்பதே அவள் கடைமையாய் நினைத்தாள். எத்தனையாே கஸ்ரங்களாலும், துன்பங்களாலும் புடமிடப்பட்ட அவள் தங்கமகளாய் தெரிந்தாள். குழந்தையாக இருந்த பாேது செல்லமாக அடிக்கடி  அப்பா தங்கம் என்று அழைத்தது பாெருத்தமாக இருந்தது.

சிறுவயதிலிருந்தே தன் பெற்றாேரின் நிலை உணர்ந்து தன் சுகங்களை துறந்தாள். சந்தாேசங்களை மறந்தாள். பெற்றவர்களுக்காக பசி இருந்தாள். தூக்கம் மறந்தாள். அம்மு தங்கமகள் மட்டுமல்ல ஒரு தாயுமானாள்.

எழுதியவர் : றாெஸ்னி அபி (19-Aug-19, 2:13 pm)
சேர்த்தது : Roshni Abi
Tanglish : thanga magal
பார்வை : 605

மேலே