கடவுளருளைக் கைக்கொள்ள உயிர்கள் இடருறாது பேணிப் புரக்க - கருணை, தருமதீபிகை 414

நேரிசை வெண்பா

கடவுள் அருளைநீ கைக்கொள்ள வேண்டின்
உடலுள் மருவும் உயிர்கள் - இடருள்
படாவகை பேணிப் பரிந்து புரக்க
விடாதுனை வீடு விழைந்து. 414

- கருணை, தருமதீபிகை,
- கவிராஜ பண்டிதர் ஜெகவீர பாண்டியனார்

பொருளுரை:

கடவுளுடைய கருணையை நீ அடைய விரும்பின் உடலுயிர்கள் யாதும் இடருறாவகையில் பேணி இதம் புரிந்தருளுக; அங்ஙனம் அருளின் பேரின்ப வீடு உன்னை விழைந்து வந்து உவந்து தழுவி வரைந்து கொள்ளும் என்கிறார் கவிராஜ பண்டிதர்.

மனிதன் உலக நிலைகள் பலவும் காண்கின்றான். எவையும் நிலையில்லாதன என்று தெரிகின்றான். தனது உடம்பு அழிந்து போகுமுன் உயிர்க்குறுதி நலனை அடைந்து கொள்ள முயல்கின்றான். அம்முயற்சியின் அளவே உயர்ச்சி யுடையனாய் அவன் ஒளிசிறந்து திகழ்கின்றான். அவ்வாறு முயலாதவன் எவ்வாற்றானும் உய்தியின்றி வெவ்விய துயரங்களிலேயே வீழ்ந்து உழல நேர்கின்றான். காலம் கருதிக் கதிநிலை காணுதல் சாலவும் இனிதாகிறது.

அநித்திய வாழ்வை அடைந்துள்ளவன் அது கழியுமுன் நித்தியமான உண்மை நிலையைப் பெற்றுக் கொள்வானாயின் அவனே பிறவிப் பயனைப் பெற்ற பெருமகிமையாளன்; பேரின்ப நிலையினன்; தத்துவ ஞானி; நித்திய முத்தன்; நிரதிசயானந்தன் என இன்னவாறு யாண்டும் வியந்து துதிக்கப்படுகின்றான்.

ஈண்டு எடுத்து வந்த ஊன உடலை ஒருவியவுடன் அடுத்து ஆண்டவன் உரிமையை மருவினவனே அதிசய பாக்கியவானாய் என்றும் எவராலும் துதி செய்யப் பெறுகின்றான்.

இறைவனுடைய உறவுரிமையைச் சீவ கோடிகள் அடைய வேண்டுமாயின் அவனது இயல்பினை ஓரளவு மருவியாக வேண்டும். கருணை, சத்தியம், தருமம் என்பன அவனுடைய குண நீர்மைகளுள் தலை சிறந்துள்ளன. புனிதமான இந்த இனிய நீர்மைகளை அடைந்த அளவு மனிதன் தேவனாய் மருவி வருகின்றான். அருள் நிலையமான அந்தப் பரம்பொருளின் ஒளி தண்ணளி கண்ட இடத்தில் தாவி வந்து மேவி மிளிர்கின்றது.

சீவ கருணையுள் தேவ கருணை விளைந்து வருதலால் சீவகாருணியம் யாவினும் பெரிய புண்ணியமாய்ப் பெருமகிமை பெற்றுள்ளது. இரக்கமே துறக்கம் என்றதனால் அதன் ஏற்றம் புலனாம்.

உயிர்கள் இடருள் படாவகை பரிந்து புரக்க என்றது சீவ காருணியத்தின் பொருளைத் தெருள் செய்து காண வந்தது. இனிய தயையினாலேதான் மனித வாழ்வு புனிதம் அடைந்து வருகின்றது. மனம் இரங்க மகிமை பிறக்கின்றது.

தனது செயல் இயல்கள் எவ்வழியும் எவ்வுயிர்க்கும் யாதொரு இடரும் நேராதபடி பாதுகாத்து ஒழுகுவதோடு அமையாமல் நேர்ந்த துயரங்களை யாண்டும் நீக்கியருளுவதே தேர்ந்த சீவ காருணியமாய்ச் சிறந்து திகழ்கின்றது.

தன் உயிரைப் போல் பிறவுயிரையும் எண்ணியிரங்கி ஒழுகுபவனே உண்மையான உத்தம மனிதனாகின்றான்

தன்னைப் போல் பிறரை எண்ணுவது தகுதியான நடுவு நிலைமையாதலால் தகவு என அருளுக்கு ஒரு பெயரும் வந்தது.

தகவும் கருணையும் இரக்கமும் தயவும்
கிருபையும் அபயமும் கிளரருள் ஆகும். - பிங்கலந்தை

அருளின் பெயர்களும், அவை கருத்தோடு குறித்துள்ள பொருள்களும் கூர்ந்து ஓர்ந்து கொள்ளும்படி இங்ஙனம் சேர்ந்து வந்துள்ளன. பரியாய நாமங்கள் வெளியே ஓர் இனமாய்த் தோன்றினும் உள்ளே கூர்மையான வேறு நீர்மைகள் விரவி நிற்கின்றன.

இயல்பாகவே உயர் நிலையில் உயிர் உருகுவது கருணை, பிறருடைய துன்பம் கண்டு உள்ளம் இரங்குவது இரக்கம். இதயம் கனிந்து கரைவது தயை; அளி மிகுந்து விரைவது கிருபை; அவலம் அடைந்தவரை ஆதரித்து அருளுவது அபயம். கனிவான இந்த இனிய சீர்மைகள் மனிதனை எவ்வழியும் புனிதனாக்கித் தனி நிலையில் உயர்த்தித் திவ்விய மகிமைகளை விளைத்தருளுகின்றன.

சீவர்களிடம் ஒருவன் இரங்கி அருளுகின்ற பொழுது கடவுள் அவனை உவந்து நோக்கி விழைந்து நிற்கின்றார்.

சீவ தயாபரன், ஏழை பங்காளன், ஆதரவாளன் என்னும் பெயர்களைக் கடவுள் இயல்பாகவே எய்தியிருக்கிறார். எளிய பிராணிகளிடம் தான் செய்யவுரிய கருணையை மனிதன் செய்யவே பரமன் அவனுக்குத் தனி உரிமை ஆகின்றார்.

He that hath pity upon the poor lendeth unto the Lord; and that which he hath given will he pay him again. - Bible

'ஏழைகளிடம் இரங்கி அருள்பவன் இறைவனுக்குக் கடன் கொடுக்கிறான்; அக்கடனை அவனுக்கு அவர் திருப்பிக் கொடுத்தருளுவார்.” என்னும் இது இங்கே அறிய வுரியது. சீவர்களிடம் கருணை புரிந்து வருபவன் கடவுளைத் தனக்குக் கடனாளி ஆக்கிக் கொள்கின்றானெனின், அருள் நீர்மையின் மகிமையை ஓரளவு பொருள் தெரிந்து உணர்ந்து கொள்ளலாம்.

சீவ கருணை தேவ கருணையை விளைத்தருளுகின்றது. இனவுரிமையின் இயல்பும் அமைவும் நினைவு கூர்ந்து சிந்திக்கத்தக்கன.

உயிரினங்கள் யாவும் கடவுளின் உடைமைகளாய் அமைந்துள்ளமையால் அவைகளை உரிமையுடன் பேணி வருபவனிடம் அப்பரமனது அருள் காணியாய்க் கை வருகின்றது. கடவுளுடைய கிருபையை ஒருவன் அடையவேண்டின் வேறு யாதொரு பூசனையும் செய்ய வேண்டாம்; உயிர்களுக்கு இரங்கியருளினால் போதும்; பரமன் கருணை அவனிடம் விரைந்து வந்து பெருகி நிற்கின்றது.

சீவ தயை உடையவன் தேவ தயையை எளிதே அடைந்து கொள்ளுகின்றமையால் கருணை எவ்வளவு சிறந்த பாக்கியம் என்பதைச் செவ்வையாகத் தெளிந்து கொள்ளலாம்.

உள்ளமுருகி உயிர்களுக்கு இரங்குபவன் பரம்பொருளினுடைய பேரின்ப வெள்ளத்தை அனுபவிக்கின்றான். கருணை மாத்திரம் ஒருவனுக்கு அமையுமாயின் அவன் கடவுளின் பிள்ளையாய்ப் பெருமை மிகப் பெறுகின்றான் .

That mercy I to others show
That mercy show to me. - Pope

எனக்கு காட்டுகிற கருணையைப் பிறர்க்கு நான் காட்ட அருள்' என ஆங்கிலக் கவிஞர் இறைவனிடம் இவ்வண்ணம் விண்ணப்பஞ் செய்துள்ளார். பிறவுயிர்களிடம் தயை புரிந்து வருபவன் தன் உயிர்க்கு அமுதத்தை ஊட்டியவனாய் ஆனந்தத்தை வளர்த்து வருகிறான்

The merciful man doeth good to his own soul. - Solomon

’தயையுடையவன் தன் ஆன்மாவுக்கு நன்மை செய்கின்றான்’ என்னும் இது இங்கே எண்ணத் தக்கது.

’வீடு உனை விடாது’ கருணையாளனுக்கு உண்டாகும் உறுதி நலனை இது உணர்த்தியருளியது. வீடு - மோட்சம். பற்றுக்களையும் பாவங்களையும் விட்டவர் பெறுவதாதலின் பேரின்ப பதவி வீடு என வந்தது.

சீவ காருணியம் எவ்வழியும் புண்ணியமே பொலிந்து வருதலால் அந்தத் தண்ணளியாளனுக்கு விண்ணவர் பதங்களும், மேலான பேரின்ப வீடும் தனி உரிமைகள் ஆகின்றன.

உயிர்கட்(கு) இரங்கின் உயர்கதி அங்கே
இயல்புற நின்ற(து) எதிர்.

மனிதன் கருணை புரிந்த அளவே புனித இன்பனாய்க் கதி நிலையைக் காண்கின்றான் என்றது அருளுடைமையால் விளையும் ஆனந்தப் பேற்றை அறிந்து கொள்ள வந்தது.

உள்ளம் தயை புரிந்து வரின் பிறவித் தொல்லைகள் ஒழிகின்றன: எல்லையில்லாத இன்ப நலன்கள் வருகின்றன; இத்தகைய அருளை மருவி இருள் நீங்கி இன்பம் பெறுக என்கிறார் கவிராஜ பண்டிதர்.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (20-Aug-19, 3:41 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 69

மேலே