சாந்தம் உடையான் மாந்தருள் வானமதியாய் விளங்குவான் - அமைதி, தருமதீபிகை 405

நேரிசை வெண்பா

சாந்தம் உடைமை தவமாகும் அஃதுடையான்
காந்த இயல்பு கனிந்துமே - மாந்தருள்
வான மதியாய் வயங்கி விளங்குவான்
ஞான மதியாய் நயந்து. 405

- அமைதி, தருமதீபிகை,
- கவிராஜ பண்டிதர் ஜெகவீர பாண்டியனார்

பொருளுரை:

இனிய சாந்தம் அரிய தவமாம்; அதனையுடையவன் அதிசய நிலையினனாய் உயர்ந்து சிறந்த வான சந்திரன் போல் ஞான ஒளி வீசி விளங்குவான் என்கிறார் கவிராஜ பண்டிதர்.

அறிவு, உணர்வு, ஞானம் என்னும் மொழிகள் உயிர் ஒளிகளாய் உயர்ந்த நிலைகளைக் குறித்து நிற்கின்றன. ஆன்மாவைத் தோய்ந்து மன அமைதியாய் மருவியிருப்பதே சிறந்த ஞானத்தின் தெளிந்த முடிபாம். அந்தத் தெளிவின் ஒளிதான் சாந்தம் என வாய்ந்துள்ளது. இனிய பண்பாடுகள் நிறைந்த இந்தப் புனித நிலையை அடைந்தவன் மனித சன்மத்தின் மாண் பயனை மருவினவன் ஆகின்றான்.

உள்ளம் கனிந்து உயிரை நோக்கி உள்ளமையால் சாந்தம் உயர்ந்த தவமாய்ச் சிறந்த மகிமையை அடைகின்றது.

’காந்த இயல்பு கனிந்து’ என்றது சாந்தம் உடையவர் மாந்தருலகை வசீகரித்து நிற்கும் மாட்சியுணர வந்தது. புலன்களின் புலையாடலை ஒடுக்கி மன அமைதியுடன் தன்னை நோக்கி வருகின்ற மனிதன் மீது பரமான்மாவின் நோக்கம் பதிந்து, அதிசய நிலைகளில் உயர்ந்து எவரும் துதி செய்யப் பெறுகின்றான்

உள்ளம் பரிபக்குவம் அடைந்தளவு உயிர் பரமனை நோக்கி மகிழ்ந்து கொள்கிறது. மேலான நிலைமையில் உயரவே கீழான உலக மையல் கழிந்து ஒழிந்து போகின்றது.

உயர்ந்ததைப் பற்றி மகிழ்ந்தது இழிந்ததை முற்றுமிகழ்ந்து விடுகின்றது. அவ்விடுதியே பின்பு வீட்டின்பம் ஆகின்றது.

கலிவிருத்தம்
(மா கூவிளம் கூவிளம் கூவிளம்)
முதற்சீர் குறிலீற்று மாவாக இருக்கும்.
விருத்தம் நேரசையில் தொடங்கினால் அடிக்கு 11 எழுத்து;
நிரையில் தொடங்கினால் 12. எழுத்தெண்ணிக்கை தானே வரும்!

2, 3 சீர்களில் மாச்சீர் வரின் அடுத்த சீர் நிரையில் தொடங்கும்.
விளத்தின் இடத்தில் மாங்காய் வருவதும் உண்டு. (முதலிரண்டு சீர்களுக்கிடையில் 'மாவைத் தொடர்ந்து நேர்' என்ற நேரொன்று ஆசிரியத்தளை அமையும்; மற்ற இடங்களில் வெண்டளை அமையும்)

வானைப் போல வளைந்துகொண்(டு) ஆனந்தத்
தேனைத் தந்தெனைச் சேர்ந்து கலந்தமெய்ஞ்
ஞானத் தெய்வத்தை நாடுவன்: நானெனும்
ஈனப் பாழ்கெட என்றும் இருப்பனே. 23

இரும்பைக் காந்தம் இழுக்கின்ற வாறெனைத்
திரும்பிப் பார்க்கவொட் டாமல் திருவடிக்
கரும்பைத் தந்துகண் ணீர்கம் பலைஎலாம்
அரும்பச் செய்என(து) அன்னையொப் பாமனே. 24 பொன்னை மாதரை, தாயுமானவர்

சாந்த குணசீலராய்த் தவ ஞானங்களில் மருவியிருந்த தாயுமானவர் இறைவனை நோக்கி இவ்வாறு உருகி உரையாடியுள்ளார். பக்தி வசனங்களில் சித்த நிலைகள் தெரிகின்றன.

பக்குவமான சீவர்களைக் தம்பால் ஈர்த்துக் கொள்ளும் இயல்பு கருதிப் பரமனைக் காந்தம் என்றது. கல்லையும் மண்ணையும் காந்தம் இழுக்காது. இரும்பைத்தான் கவர்ந்து கொள்ளும். மண், கல் என இழிந்து கிடக்கின்ற மாக்கள் இறைவன் அருளை அடையார். இதய பரிபாகம் அடைந்து ஓரளவு உயர்ந்த பொழுதுதான் அந்த உயர்ந்த பரம்பொருள் உரிமை சுரந்து உதவி புரிந்தருளுகின்றது. பருவம் வரும் வரையும் அது அருவமா யுள்ளது.

உண்ணுகின்ற பருவம் நோக்கிக் கனிகளை மனிதர் விரும்புகின்றனர்; எண்ணுகின்ற பக்குவம் கருதி மக்களை இறைவன் விழைந்து கொள்கின்றான்; விளைவு கண்டு விழைவு வருகின்றது.

பழங்கள் பக்குவம் அடைந்தவுடன் உள்ளே இனிய சுவையும் வெளியே நல்ல காட்சியும் நண்ணி நிற்கின்றன. பக்குவம் உற்ற மனிதனும் அவ்வாறே அகமும் புறமும் இனிமை சுரந்து திகழ்கின்றான். பண்பு படிந்த அளவு இன்பம் கனிந்து வழிகின்றது.

முதியவனாயினும் அமைதியாளனிடம் அதிசய எழில் ஒளி வீசியுளது. சித்த சாந்தி தெய்வத் தேசாய்ச் சிறந்து வருதலால் சாந்த சீலர் வையத்தே ஒரு வான சோதியாய் வயங்குகின்றனர்.

நேரிசை வெண்பா

அந்தி யிடைமிளிரும் ஆதவன்போல் ஆன்றவிந்த
சிந்தை யுடையார் தெளிவமைந்து - முந்திய
காந்தி கனிந்து கதிர்வீசி எம்மருங்கும்
சாந்தி மிளிர்வர் சமைந்து.

என்றது மாந்தரிடையே சாந்தரது நிலை ஓர்ந்து கொள்ள வந்தது. மாலைக் காலத்துச் சூரியன் போல் இனிய ஞான சோதி வீசி அமைதியாளர் அமர்ந்திருக்கின்றனர். முதுமையிலும் சாந்தரது காட்சி இங்ஙனம் வாய்ந்திருத்தலால் அவரது அனுபவ மாட்சிகள் அறிந்து கொள்ளலாம். ஆன்ம நிலையில் தோய்ந்தவர் அதிசய ஒளிகளாய் வெளி மிளிர்கின்றனர்.

சாந்த சீலர் ஈசன் அருளெய்தித் தேச மிகுந்துள்ளமை கருதி வானமதி என்றது.. தனியே அமர்ந்து தனது ஆன்ம நிலையை நினைந்த போது அங்கே புனித ஒளி பொங்கி இனிய இன்பம் விளைகின்றது. அந்த இன்பப் பேற்றை எய்தி மகிழுக என்கிறார் கவிராஜ பண்டிதர்.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (21-Aug-19, 6:12 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 49

மேலே