கருணை அளவே கதியென்று இறைவன் காட்டி மறைந்தான் - கருணை, தருமதீபிகை 415

நேரிசை வெண்பா

கருணை அளவே கதியென்(று) இறைவன்
வருணன் அறிய வழங்கி - அருணனி
காட்டி மறைந்தான் கதிமொழியை யாவருமே
கேட்டு மகிழ்ந்தார் கிளர்ந்து. 415

- கருணை, தருமதீபிகை,
- கவிராஜ பண்டிதர் ஜெகவீர பாண்டியனார்

பொருளுரை:

அருளின் அளவே கதி உளது என வருணனிடம் இறைவன் அருளிய தெருள் மொழியை அமரர் அனைவரும் அறிந்து உவகை அடைந்தார் என்கிறார் கவிராஜ பண்டிதர். இப்பாடல் கருணையின் தெய்வீக நிலையை உணர்த்துகின்றது.

தேவர்கள் ஒரு முறை மேரு மலையில் கூடினர். சீவர்கள் இயல்பையும் உலக வாழ்வையும் குறித்துப் பலவாறு பேசிக் கொண்டிருந்தனர். தங்களுடைய பொன்னுலக வாழ்வும் புண்ணியத்தால் அமைந்தன, அது கழியின் அந்நிலையும் ஒழியும் என அமரர் குருவாகிய வியாழன் கூறினான்.

மோட்சம், சுவர்க்கம், உலகம், நரகம் என்னும் நிலைகளில் ஆன்மாக்கள் நிலவி நிற்கின்றன. முத்தர், தேவர், மனிதர், நரகர் என அந்நிலையினர் முறையே மருவியுள்ளனர். முன்னவர் ஒருவரே நித்தியமான உத்தம நிலையினர்; பின்னவர் மூவரும் பிறவியில் உழலும் பிழைபாடுடையவர்; என்றும் அழியாத பேரின்ப வீட்டைப் பெறுவதே விழுமிய பேறு என நாரதர் பேசினார்.

பற்று முற்றும் அற்றவரே அந்த அரிய முத்தியை அடைய உரியவர்; மயலான பற்றற்ற போது இயல்பாகவே பற்றற்றுள்ள பரமனை உயிர் பற்றிக் கொள்கின்றது: பற்றவே நித்திய முத்தியை அது பெற்று மகிழ்கின்றது; ஆகவே நிராசை, தெய்வ பத்தி என்னும் இரண்டும் மோட்ச உலகை அடைதற்கு இரு சிறகுகளாக சீவப் பறவைக்கு மருவியிருக்கின்றன என்று பிருகு முனிவர் உரைத்தார்.

உலக ஆசைகள் அறுதலும், கடவுள் மேல் ஆசையுறுதலும் வீடு அடைதற்கு வழியாம் என முனிவர் கூறி முடிக்கவே வருணன் எழுத்தான். மோட்ச மார்க்கங்களான இந்த இரண்டிலும் வேறு ஒரு வழியால் நேரே பேரின்ப வீட்டை அடையலாம். அது சீவகாருணியமே ஆகும் கடவுளை நினைந்து அன்பு செய்வதைக் காட்டிலும் உயிர்களுக்கு இரங்கி அருளுவது உயர்ந்தது. இறைவன் எங்கும் நிறைந்திருக்கிறான்: அகில சராசரங்களும் அவனுடைய உருவங்களாயுள்ளன. தன்னை நேரே எண்ணுகின்றவனை விடத் தனது உரிமைகளைப் பேணியருள்கின்றவனை அவன் பெரிதும் உவந்து பார்க்கின்றான். ஒரு புழுவுக்கு இரங்கினும் அந்த இரக்கமுடையானை முழுமுதல் பரமன் விழி களிப்ப நோக்கி விழைந்து மகிழ்கின்றான், கருணையாளனைக் கருணைக் கடவுள் எவரினும் உரிமையாளனாய்த் தழுவி மகிழ்தலால் அவன் விழுமிய நிலையில் விளங்கி நிற்கின்றான். ஆகவே தன் உள்ளத்தில் கருணை தோன்றிய அளவே ஒருவனுக்குக் கதி உண்டாகின்றது என்று வருணன் இங்ஙனம் கூறுங்கால் அசரீரியாய் 'கருணை அளவே கதி' என ஆகாயத்திவிருத்து ஒரு ஒலி எழுந்தது. தேவர் யாவரும் அதிசயமுடையராய்த் துதிசெய்து வியந்தனர்.

அந்த அரிய நிகழ்ச்சியை இது குறிசெய்து வந்தது.

’கருணை அளவே கதி’ என்றது பண்டு வான ஒலியாய் வந்த ஞான மொழியை வரைந்து காட்டியது. தெய்வ வாக்கு உய்வை ஊட்டியுள்ளது.

சீவர்கள் பால் அருள் புரிந்து வருகின்ற அந்த உள்ளம் தெருள் மிகுந்து திவ்விய மகிமையை அடைகின்றது

இதயம் உருகி வருகின்ற அருள் ஒழுக்கம் புண்ணிய சீர்மையாய்ப் பொலிந்து வருதலால் எண்ணரிய இன்ப நலங்களை எளிதே எய்திக் கருணையாளன் இனித மகிழ்கின்றான்,

கடவுள் கருணைக் கடலாய் உள்ளமையால் கருணையுடையவர் அவனை எளிதில் அடைந்து இன்பம் பெறுகின்றனர்.

கலி விருத்தம்
(விளம் விளம் மா கூவிளம்)
(மாச் சீரின் இறுதியில் குறிலோ, குறில்+ஒற்றோ தான் வரும். நெடில், நெடில்+ஒற்று வராது)

அருளினில் விளைந்தெழும் அமுதை; யாண்டுமே
இருள்ஒழித்(து) இன்பருள் இறையை; எங்கணும்
தெருளொடு திகழ்தரு தேவைத்; தேர்ந்தருள்
உருவினார் மருவினார் உரிமை யாகவே.

என வருமிதனால் கருணையாளர் கடவுள் இனமாய் மருவி மிளிர்தலை அறியலாகும். அரிய பேரின்ப நிலை அருளால் உளவாகின்றது; அதனைப் பொருள் செய்து போற்றி ஒழுகுக என்கிறார் கவிராஜ பண்டிதர்.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (21-Aug-19, 6:40 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 139

சிறந்த கட்டுரைகள்

மேலே