தத்தம் உயிர்போல் பிறவுயிரை ஓம்பினார் செயிர்தீர்ந்து உயர்வர் - கருணை, தருமதீபிகை 417

நேரிசை வெண்பா

புத்தர் அருள்நெறியைப் பூண்டிருந்தார்; இவ்வுலகம்
முத்தர் எனப்போற்ற முன்னின்றார்; - தத்தம்
உயிர்போல் பிறவுயிரை ஓம்பினார் அன்றே
செயிர்தீர்ந்(து) உயர்வர் சிறந்து, 417

- கருணை, தருமதீபிகை,
- கவிராஜ பண்டிதர் ஜெகவீர பாண்டியனார்

பொருளுரை:

அருள் ஒழுக்கத்தைக் கைக்கொண்டிருந்த புத்தரை எல்லாரும் முத்தர் என்று போற்ற அவர் முதன்மை பெற்று நின்றார்; தம்முடைய உயிர்போல் பிற உயிர்களையும் பேணி ஒழுகுவோரே பிறவிப் பிணி நீங்கிப் பெருமகிமை பெறுவர் என்கிறார் கவிராஜ பண்டிதர்.

இனிய குண நலங்கள் மனிதனைப் புனிதனாக்கித் தனிநிலையில் உயர்த்துகின்றன. அறிவு, அடக்கம், அமைதி முதலியனவும் மேன்மை தருமாயினும் கருணைபோல் அவை பெருமகிமையை விளைத்தருளாது. உள்ளம் உருகி உயிர்கட்கு இதம் புரியும் இயல்பினதாதலால் அருள் பேரின்ப வெள்ளமாய்ப் பெருகியுள்ளது.

மனம் மொழி மெய்களால் எவ்வழியும் எவ்வுயிர்க்கும் இதமே புரிந்தொழுகும் விழுமிய நிலை அருள்நெறி என வந்தது.

இந்தப் புனித நெறியில் தனி முதல் தலைவராய்ப் புத்தர் இனிது ஒழுகியுள்ளார். இவரது சரித நிலை அரிய பல மகிமைகளையுடையது; எவ்வகையிலும் கருணை ததும்பி யாண்டும் பெருந்தகைமை நிறைந்திருத்தலால் சீவ காருணிய மூர்த்தி என யாவரும் இவரை உவந்து போற்றி வருகின்றனர்

இவர் இன்றைக்கு இாண்டாயிரத்து ஐந்நூறு ஆண்டுகளுக்கு முன்னர் இருந்தவர். உத்தர கோசலத்தை ஆண்டு வந்த சுத்தோதனன் என்னும் அரசனுடைய அருமைத் திருமகன். பேரழகன். யசோதரை என்னும் சிறந்த அழகியை மணந்து உயர்ந்த போகங்களை நுகர்ந்து இவர் மகிழ்ந்து வந்தார். ஒருநாள் அரண்மனையிலிருந்து வெளி வரும்பொழுது வயது முதிர்ந்த ஒரு கிழவனை இவர் கண்டார். தளர்ந்து அயர்ந்த அவனது நிலைமையை நினைந்து நெஞ்சம் உருகினார். மறுநாள் ஒரு நோயாளியை நோக்கினார்; நொந்து இரங்கினார். சீவர்கள் இவ்வாறு துயரமடைந்துள்ளனரே! இதனை நீக்க வழி காண வேண்டும் என்று நெடிது நினைந்து அன்றே கடிது துறந்தார்.

யாரும் அறியாமல் வெளியேறுங்கால் அந்தப்புரத்தில் மலரணையில் இளங்குழந்தையோடு குழைந்து படுத்திருந்த தமது அருமை மனைவியைப் பார்த்து மனம் மறுகுகின்றார். பிரிய நாயகியைப் பிரிய மனமில்லாமல் உருகுகின்ற இவர் இறுதியில் உறுதியாய் வெளி வந்து கண்டகம் என்னும் குதிரையில் ஏறிக் காரிருளில் கானகம் புகுந்தார். சூரியன் உதயமாகவும் தமது கரிய அழகிய தலைமுடியை உடைவாளால் அறுத்தெறிந்து விட்டு அரிய தவசியாய்ப் பெரிய தவம் புரிந்து தெய்வத் திருவருள் எய்தி உலகம் உய்யும் வகையில் யாண்டும் அருள் உபதேசங்களைச் செய்தருளினார். எந்த உயிர்க்கும் யாதும் இடர் செய்யலாகாது என்று எங்கும் இவர் போதித்து வந்தமையால் ’கருணை நாயகன்’ என வையகம் இவரை வாழ்த்தி வந்தது. இவருடைய பொருள் மொழிகளைக் கேட்டுப் பல்லாயிரம் பேர் அருள் நிலையராயினார். பரமனே இந்த உருவம் மருவிக் கருணையைப் போதிக்க வந்துள்ளது என அனைவரும் உருகி நின்றனர்.

அருளாழி நயந்தோய்நீ அறவாழி பயந்தோய்நீ
மருளாழி துரந்தோய்நீ மறையாழி புரந்தோய்நீ
மாதவரின் மாதவன்நீ வானவருள் வானவன்நீ
போதனருட் போதனன்நீ புண்ணியருட் புண்ணியன்நீ
ஆதிநீ யமலனீ யயனுநீ யரியுநீ
சோதிநீ நாதன்நீ துறைவன்நீ யிறைவன்நீ
அருளுநீ பொருளுநீ அறவன்நீ யநகன்நீ
தெருளுநீ திருவுநீ செறிவுநீ செம்மல்நீ. - வீரசோழியம்

இன்னார்க்கும் இனியனாய் இறந்தார்க்கும் இன்தீம்பால்
குன்றாமல் பொழிந்திட்ட குன்றாய குணத்தினான் - நீலகேசி

உலக நோன்பிற் பலகதி உணர்ந்து
தனக்கென வாழாப் பிறர்க்குரி யாளன்
இன்பச் செவ்வி மன்பதை எய்த
அருளறம் பூண்ட ஒருபெரும் பூட்கையின்
அறக்கதிர் ஆழி திறப்பட உருட்டிக்
காமற் கடந்த வாமன்:

'அருளும் அன்பும் ஆருயிர் ஒம்பும்
ஒருபெரும் பூட்கையும் ஒழியா நோன்பிற்
பகவன்’

'தன்னுயிர்க்(கு) இரங்கான் பிறவுயிர் ஓம்பும்
மன்னுயிர் முதல்வன்" - மணிமேகலை

இன்னவாறு நூல்கள் புத்தரைப் போற்றியிருக்கின்றன.

பிறவுயிர்கள் வருந்தக் காணின் உள்ளம் சகியாமல் உருகி மறுகினமையால் ’பரதுக்க துக்கி’ என உலகம் இவரைப் பாராட்டி நின்றது. தயாதருமம் இவர் வாயிலாய் எங்கும் பரவி யுள்ளது.

’ஆசிய சோதி’ என இவரைக் குறித்து எட்வின் அர்நால்டு என்பவர் ஆங்கிலத்தில் ஒரு காவியம் செய்திருக்கிறார். இவருடைய அருள்நெறியை மேல்நாட்டார் மிகவும் வியந்து போற்றியுள்ளனர். போதனைகளைத் தரும சாதனங்களாய்க் கருதி மகிழ்கின்றனர்.

Hatred is never ended by hatred but by love. - Buddha

'பகை பகையால் தீராது, அன்பால் தீரும்' என இவர் சொல்லியுள்ளதை மேலோர் பலரும் மேற்கோளாகச் சொல்லி வருகின்றனர்.

Purify your hearts and cease to kill; that is true religion. - Buddhism

'உங்கள் இருதயங்களைத் தூய்மைப் படுத்துங்கள்; எந்த உயிரையும் கொல்லாதீர்கள்; இதுதான் உண்மை மதம்' என இவர் சொந்த மொழியில் போதித்துள்ள உறுதி நலங்களை மேல் நாட்டார் மொழிபெயர்த்துக் கருணை வழியை உவந்து நிற்கின்றனர் அருளாளன் அருளியது அவனி முழுதும் நிலவியுளது.

எவ்வழியும் பிறவுயிர்களுக்கு இதம் சுரந்திருத்தலால் அருள்நெறி எங்கும் பெருமை மிகப் பெற்றது. பர்மா, சீனம், ஜப்பான் முதலிய அயல் நாடுகளிலும் புத்த மதம் பரவி நிற்கின்றது.

நேரிசை வெண்பா

உள்ளம் கருணை கனியின் உயிரின்ப
வெள்ளம் பொழியும் விரிந்தென்று - வள்ளல்
அருள்ஞானி சொன்ன அருமறை என்றும்
பொருள்ஞானம் ஆகும் புவிக்கு.

என இவரது கருணை வழி கதி நிலையமாய் ஒளி மிகுந்து அரிய மகிமைகள் புரிந்து பெருமை நிறைந்து மிளிர்கின்றது.

’தம் உயிர்போல் பிற உயிரை ஓம்பினார்’ என்றது அருளொழுக்கத்தின் பொருள் உணர்த்தி நின்றது.

தாய், தந்தை, மனைவி, மக்களினும் தன் உடலை எவனும் மிகவும் அபிமானித்துப் பேணி வருகின்றான். அவ்வாறு பேணுதற்குக் காரணம் என்ன? உயிரின் நிலையமாயுள்ளமையால் உடம்பை இவ்வாறு விரும்பிப் போற்றுகின்றான்.

தன் உயிர்க்கு யாதும் இன்னல் நேராவகை உன்னியொழுகுவது போல் பிறவுயிர்களையும் பேணி வருவது விழுமிய மகிமையாய் எழுமையும் இன்பம் தருகின்றது.

எல்லா உயிரையும் தன்னுயிராக எண்ண நேர்ந்தபோது அந்த மனிதன் புண்ணிய மூர்த்தி ஆகின்றான்: ஆகவே அவன் பிறவி தீர்ந்து பேரின்ப நிலையைப் பெறுகின்றான்.

’செயிர் தீர்ந்து உயர்வர் சிறந்து’ உயிர்களிடம் கருணையுடையவர் துயரங்கள் யாவும் நீங்கி உயர் பதங்களை அடைந்து உத்தம முத்தராய் ஒளி சிறந்து திகழ்வராதலால் அவரது சிறப்பும் சீர்மையும் குறிப்பாக ஓர்ந்து கொள்ள இது இங்ஙனம் உணர்த்தியருளியது. செயிர் - குற்றம், துன்பம்.

பிறவிப் பிணிகளை நீக்கிப் பேரின்ப நலனையருளும் என்றது கருணைப் பண்பால் உளவாகும் கதி நலங்களைக் காண வந்தது.

நேரிசை வெண்பா

அல்லலெலாம் நீக்கி அருளும் அருள்நெறியே
எல்லையிலா இன்பநலம் ஈயுமெனத் - தொல்லைமறை
போதித்(து) இருக்கும் பொருள்மொழியைப் போற்றினார்
பேதித்து நின்றார் பிறப்பு.

எங்கும் அருள் புரிந்து ஒழுகுக; எல்லா இன்பங்களும் உன்பால் பொங்கி வந்து புகும் என்று இது போதித்துள்ளது.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (23-Aug-19, 8:36 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 124

மேலே