ஞான மணமான நல்லமைதி எய்தினார் வான அமுதமாய் வாழ்கின்றார் - அமைதி, தருமதீபிகை 410

நேரிசை வெண்பா

ஞான மணமான நல்லமைதி எய்தினார்
வான அமுதமாய் வாழ்கின்றார்; - ஈனம்
படிந்து கொடிதாய்ப் பறந்து திரிவார்
மடிந்தார் துயரில் மருண்டு. 410

- அமைதி, தருமதீபிகை,
- கவிராஜ பண்டிதர் ஜெகவீர பாண்டியனார்

பொருளுரை:

ஞானத்தின் குணமான சாந்தத்தை அடைந்தவர் வானத்தின் அமுதமாய் இனிது வாழ்கின்றார்; ஈன நிலையில் பறந்து திரிபவர் இழி துயரில் மருண்டு அழிந்து படுகின்றார் என்கிறார் கவிராஜ பண்டிதர்.

நித்திய அநித்தியங்களை ஆராய்ந்து அறிந்து உண்மையைத் தெளிவாக உணர்ந்து கொள்வது ஞானம். இந்த மெய்யுணர்வு வெய்ய நிலைகளை நீக்கி உய்தி புரிகின்றது. பூவுக்கு வாசமும், தேனுக்கு இனிமையும் போல் சாந்தம் ஞான நீர்மையாய் வாய்ந்திருத்தலால் அது ஞானமணம் என வந்தது.

உண்மையுணர்வின் பயன் உள்ளத்தின் அமைதியேயாம். தனது ஆன்ம நிலையையும், உலக இயல்பையும், இறைவனையும் முறையே தெளிந்து கொள்ளுகின்றமையால் ஞான தீரர் யாண்டும் நிலை குலையாமல் சாந்த சீலராய் விளங்கி நிற்கின்றார்,

’வான அமுதமாய் வாழ்கின்றார்’ என்றது உலக வாழ்வில் சாந்தியாளரது நிலைமை தெரிய வந்தது.

உள்ளத்தில் அமைதி அமைந்த பொழுது அந்த மனிதருடைய வாழ்வு தெள்ளிய அமுதமாய் இனிமை சுரந்து திகழ்கின்றது. அகம் இனிமையாய் அமைதியுறவே சகம் முழுவதும் சுகவாழ்வாய்த் தோய்ந்து வருகிறது.

சித்த சாந்தம் எவ்வழியும் உயிரோடு உறவு கொண்டுள்ளது; அவ்வுறவு கடவுளுடைய உரிமையை மருவி வருவதால் அதிசய மகிமையும் ஆனந்த விளைவும் அங்கே பொங்கி எழுகின்றன. சீவ பாவனையை எய்தியுள்ள அளவும் வாழ்வு தேவ அமுதம் ஆகின்றது. அந்தப் பாவனையை இழந்து விடின் அது பாழான பாவ வாழ்வாய்ப் பழிபட்டு அழிகின்றது.

பறந்து திரிந்து பாடுபடுவதெல்லாம் இன்பத்தை நாடியே; அந்த இன்பம் பொறி நுகர்வான தேக போகத்தின் அளவாய் நின்று விடின் அது இளிவாய் ஈனமுறுகின்றது. ஊன உடலைப் பேணுவதோடு நில்லாமல் உயிரையும் புனிதமாகப் பேணிவரின் அது ஞான சீலமாய் நலம் பல தருகின்றது.

ஆன்மா என்றும் அறிவானந்தமானது; அதனை மறந்து உலகச் சுழவில் பறந்துழல்வது படுகேடாய் முடிகின்றது. அங்ஙனம் அலைந்து படாமல் அறிவோடு அமைதியாய் அமர்ந்த பொழுது அமுத போகம் விளைந்து வருகின்றது.

மனமடங்கி ஆன்மாவை நோக்கினவரே முனிவரென உயர்ந்து அரிய மேன்மைகளை அடைந்து மகிழ்கின்றனர். வாக்கு மனங்களுக்கு எட்டாத ஆனந்த நிலையை அக நோக்குடையார் எளிதே அடைந்து கொள்கின்றனர்.

கட்டளைக் கலித்துறை

போக்கும் வரவும் இரவும் பகலும் புறம்புமுள்ளும்
வாக்கும் வடிவும் முடிவுமில் லாதொன்று வந்துவந்து
தாக்கும் மனோலயம் தானே தருமெனைத் தன்வசத்தே
ஆக்கும் அறுமுக வா!சொல்லொ ணா(து)இந்த ஆனந்தமே. 73 கந்தர் அலங்காரம்

தனது மனம் இலயமாய் அமைதியுற்ற பொழுது பெற்ற பேரானந்த நிலையை அருணகிரிநாதர் இவ்வாறு உரைத்திருக்கிறார். அமைதியான மனம் ஆன்மாவைத் தோய்ந்து, தூய பேரின்பம் நேரே பாய்கின்றது;

பொறி புலன்களின் வெறிகளை அடக்கி உலக அலமரல்களை அறவே வெறுத்து மலை முழைகளிலும் காடுகளிலும் முனிவர்கள் தனியே போய் இருப்பது எதற்கு? போகப் பொருட்கள் யாதும் இல்லாத தனியிடத்தில் யோகியர் எதனை அனுபவித்து இனிமையாய் இருக்கின்றனர்? உயர்ந்த அரச செல்வங்களையும் உதறித் தள்ளி விட்டுப் புத்தர் முதலிய பெரியோர்கள் அடவியில் ஒதுங்கி எதனை நாடித் தனியே இருந்தார்கள்? அந்த நிலைகளைச் சிந்தனை செய்து நோக்கின் சித்த சாந்தியின் தத்துவத்தையும், அதனால் விளைகின்ற நலன்களையும் உய்த்துணர்ந்து கொள்ளலாம்.

புல்லிய மக்களுடைய புலை நிலைகள் யாதும் இல்லாமல் கடவுளின் இயற்கை அமைப்பான புனித நிலையில் தனிமையாய் உள்ளமையால் ஏகாந்தம் இனிமையாயது.

How sweet, how passing sweet, is solitude!
O solitude! where are the charms
That sages have seen in thy face? - Cowper

'தனிமை எவ்வளவு இனிமை' எவ்வளவு இனிய பொழுது போக்கு! ஓ ஏகாந்தமே! உன் பால் முனிவர்கள் அனுபவித்த இனிமைகள் எங்கே?' என கௌப்பெர் என்னும் ஆங்கிலக் கவிஞர் தனிமையை நோக்கி இவ்வாறு பாடியிருக்கிறார்.

He makes a solitude, and calls it-peace. - Byron

'அவன் தனிமையில் அமர்ந்து சாந்தியை அனுபவிக்கிறான்' என பைரன் என்பவர் இங்ஙனம் கூறியுள்ளார்.

ஏகாந்த நிலையையும் சாந்த சீலத்தையும் மேல்நாட்டு அறிஞர்கள் எவ்வாறு கருதியுள்ளனர் என்பது இவற்றால் அறியலாகும்.

Blessed are the meek: for they shall inherit the earth. - Bible

'சாந்தமுள்ளவர் பாககியசாலிகள்; உலகம் அவரது உரிமையாயுளது.” என ஏசுநாதர் இவ்வண்ணம் அருளியிருக்கிறார். தெய்வத் திருவாய் உயிர்க்குய்தி தருதல் கருதி சாந்தத்தைப் பாக்கியம் என்று அந்தத் தீர்க்கதரிசி குறித்தார்.

மன அமைதி ஆத்தும சத்தியைப் பெறுதலால் அதனையுடையவர் மகாத்துமாக்களாய் உயர்கின்றனர். மோட்ச இராச்சியம் அவர்களுக்குத் தனியுரிமை ஆகின்றது.

Silent men are kings, for they rule over a great country where none can follow them. - Still

மன அமைதியாளர் தனி அரசர்கள்; தம்மை யாரும் அணுக முடியாத பெரிய ஒரு இன்பவுலகத்தை அவர் இனிது ஆண்டு வருகின்றனர்' என்னும் இது ஈண்டு அறிய வுரியது.

அலைகள் யாதுமில்லாமல் அமைதியாயுள்ள நீர் நிலைகளில் உருவங்கள் தெளிவாகத் தெரிதல் போல் சலனமின்றிச் சாந்தமான உள்ளத்தில் நிலையான தெய்வக்காட்சி நிலவி நிற்கின்றது.

அதனால் அரிய இன்பங்களும், அதிசய மகிமைகளும் உளவாகின்றன. வாக்குகளை அடக்கிக் கரணங்களை ஒடுக்கி ஞானிகள் மோனமுற்றிருப்பதெல்லாம் பேரின்ப நலனைப் பெறுவதற்கேயாம்.

நேரிசை வெண்பா

வாயின் அடங்குதல் துப்புரவாம்; மாசற்ற
செய்கை யடங்குதல் திப்பியமாம் . பொய்யின்றி
நெஞ்சம் அடங்குதல் வீடாகும்; இம்மூன்றும்
வஞ்சத்தின் தீர்ந்த பொருள்.. 43 திரிகடுகம்

இதனை நெஞ்சத்தில் வைத்துச் சிந்திக்க வேண்டும். மௌனத்தில் மகிமையும் இன்பமும் விளைதலால் மகான்கள் அதனை விரதமாக மருவி வருகின்றனர்.

Silence is the perfectest herald of joy. - Shakespeare

'அமைதி பரிபூரணமான இன்ப நிலையம்' என்னும் இது இங்கே அறிய வுரியது.

உலக நாட்டமாகவே யாண்டும் ஓடியலைந்து உழன்று திரிந்து முடிவில் ஒரு பயனும் காணாமல் வீணே மறுகி மருண்டு ஒழிந்து போகாதே, ஆனவரையும் மோனமாக உன்னை நாடி யுணர்த்து ஞான மணமுடன் வாழ்க்கையை நடத்து என்கிறார் கவிராஜ பண்டிதர்.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (27-Aug-19, 3:49 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 88

மேலே