அப்பாவின் கடிதம்

வேலை நிமித்தம்
ஆறுமாதம் வெளியூருக்கு
மாற்றப்பட்டார் அப்பா
குடும்பம் ஒரு ஊரிலும்
அப்பா வேறொரு ஊரிலும்

அப்பா அந்த ஊர் போய்
சேர்ந்தவுடன்
எங்களுக்கு கடிதம் ஒன்று
அப்பாவிடமிருந்து வந்தது

கடிதம் என்னோட
பெயரில் இருந்தது
என் பெயருக்கு பின்னால்
அவர் அரும்பாடுபட்டு
படிக்க வைத்த பிஎஸ்சி
என்ற அந்த மூன்றெழுத்தை
மறக்காமல் போட்டிருந்தார்

அவரின் கையெழுத்து
சரஸ்வதியே
நேரில் தோன்றி எழுதினால்
இருப்பதை போலிருக்கும்...

சுரங்கத்தொழிலாளி
உழைப்புக்கு அஞ்சாதவர்
நேர்கொண்ட பார்வை
மற்றவருக்கு தீங்கு
நினைக்காத நல் உள்ளம்

கல்வித்தான் அழியாத செல்வம்
என்று எங்களுக்கு
அறிவுறுத்திக்கொண்டே இருப்பார்
கடிதத்திலும் அதையே
எங்கள் ஐவருக்கும் எழுதியிருந்தார்

நான் குளிர்சாதன வசதியுடன்
வேலைச்செய்ய
அவர் தினமும் எட்டுமணி நேரம்
தங்கச்சுரங்கத்தில் வியர்வை குளியல் செய்தார்

அன்று இந்த கடிதத்தை
படித்தப்போது எனக்குள் எந்த
தாக்கமும் இல்லை

இன்று எதேச்சையாக அதை
படிக்க நேர்ந்தப்போது
என் கண்கள் குளமாகின

மண்ணை வெட்டி தங்கமெடுத்த
எங்கள் தங்கத்தை
மண்ணுக்குள் புதைத்த
அந்த நொடிகள் என் கண்
முன் வந்துப்போகிறது...

இதைப்போல் எத்தனையோ
தங்கங்கள் இன்றும் மண்ணுக்குள்
உறங்கிக்கொண்டிருக்கிறது
சுரங்க வாழ்க்கை எனும்
நெருப்பில் வெந்து...

எழுதியவர் : செல்வமுத்து மன்னார்ராஜ் (29-Aug-19, 9:29 am)
Tanglish : appavin kaditham
பார்வை : 216

மேலே