தண்ணீர் வடித்த கண்ணீர்

மனிதா….!
பஞ்சபூதங்களில் ஒருவன் நான்..
பஞ்சமில்லா நீரை வாரித்தந்தவன்..
கருவிலே பனிக்குடத்தால்
உன்னைப் பாதுகாத்தவன்….
தெருவிலே தேடிவந்து
உன் தாகம் தீர்த்தவன்…
நீ வாழ நான் உனக்கு
தியாகம் செய்தேன்….
நான் வாழ நீ எனக்கு
துரோகம் செய்தாய்….
நான் செல்லும் இடங்களெல்லாம்
சேர்த்து வேலி போட்டாய்….
சேர்த்த இடத்தையெல்லாம்
விற்று விலை கேட்டாய்…
மரங்களையெல்லாம் வெட்டி
என்னை மௌனமாக்கினாய்….
மணல்களையெல்லாம் அள்ளி
என்னை மலடியாக்கினாய்…
நான் வடிந்த குளாய்கள்
துருப்பிடிக்க கண்ணீர் வடிக்கிறது….
பிம்பம் காட்டிய கிணறுகளெல்லாம்
செத்துப் போய் மூடிக் கிடக்கிறது…..
நான் விளையாண்ட வாய்க்காளெல்லாம்
விரிவோடி வாடிக் கிடக்கிறது….
குளம் ,குட்டை, ஆறுகளெல்லாம்
வற்றிப் போய் வாழ்வை இழக்கிறது….
இலவசமாய் கிடைத்தேன் என்னை
இழந்துவிட்டு நிற்கின்றாய்…
பணம் கொடுத்து வாங்கினாலும் என்னை
பற்றாக் குறையாய்ப் பெருகின்றாய்…
தண்ணீரை சேகரிக்க
ஒருபோதும் முயலவில்லை…
ஆள்துளையிட்டுத் தோண்டுகிறாய்
அங்கே நான் வரவுமில்லை….
மழைநீராய்க் கண்ணீர் வடித்தேன்
மண்ணில் சேர வழியின்றி திணர வைத்தாய்….
என் வீட்டு வழிகளெல்லாம்
நீ வாழும் இடமாக்கினாய்…
பொருமையின் உச்சமாய் வேறுவழியின்றி
ஊருக்குள் ஓடி வந்தேன்…
உன்மீது பிழை வைத்து
என் மீது பழி சொன்னாய்…
இப்பொழுதே என்னைக் காத்துக்கொள்
கதறி அழக் கூட கண்ணீரின்றி
வாடப் போகிறாய்….
நாவரண்ட தொண்டைக்கும்
உமிழ்நீரின்றி சாகப் போகிறாய்…
கானல் நீரைக் கூட
கண்ணில் கானா கதியற்று
நிற்கப் போகிறாய்…
இழந்து விடாதே என்னை
மனிதா இழந்து விடாதே….

வரிகள்,
மாங்கனி சந்தோஷ்

எழுதியவர் : மாங்கனி சந்தோஷ் (29-Aug-19, 11:53 am)
சேர்த்தது : Mangani santosh
பார்வை : 187

மேலே