ஞாலம் எனுமரங்கில் பலகாட்சி காலம் எனும்படத்தில் காண்கின்றோம் - காட்சி, தருமதீபிகை 422

நேரிசை வெண்பா

ஞாலம் எனுமரங்கில் நாளும் பலகாட்சி
காலம் எனும்படத்தில் காண்கின்றோம் - கோலமுடன்
எண்ணிறந்த கோடி இறந்தொழிந்த நாமுமவ்
வண்ணம் ஒழிகின்றோம் வந்து. 422

- காட்சி, தருமதீபிகை,
- கவிராஜ பண்டிதர் ஜெகவீர பாண்டியனார்

பொருளுரை:

உலகம் என்னும் அரங்கில் காலம் ஆகிய படத்தில் அரிய பல காட்சிகளை நாளும் நாம் பார்த்து வருகிறோம்; அளவிறந்த கோடிகள் தோன்றி அழிந்து ஒழிந்து போயின. நாமும் அவ்வாறே மறைந்து போகப் போகின்றோம் என்கிறார் கவிராஜ பண்டிதர். இது, ஞாலத்தின் கோலத்தை உணர்த்துகின்றது.

ஞாலம் - உலகம், பூமி. விரிந்து பரந்து வளைந்திருப்பது என்னும் ஏதுவான் வந்தது; அரங்கு - நாடக சாலை.

உலக நிலையும், உயிர் வாழ்வும், கால வேகமும் அதிசயமுடையன. பல வகையான கதிகளில் சீவகோடிகள் ஓடி வருகின்றன. அந்த வரவு செலவுகள் அறிய அரியனவாய் விரவி விரைகின்றன. உலகக் காட்சிகளைப் பார்க்கின்றோம்; உண்மையை நோக்கி உறுதி யுணராமல் போகின்றோம். அப்போக்கு பொல்லாத பிறவித் துயரங்களையே ஆக்கி வருதலால் அது ஞானஒளி இழந்த ஈனமென இழிக்கப்பட்டது.

மனிதன் எதையும் காணுகின்றான்; கருதுகின்றான்; அக்காட்சியும் கருத்தும் தன் உயிர்க்கு உறுதி நலம் காணின் உயர்ந்த ஞானமாய் ஒளி புரிகின்றது. அங்ஙனம் காணாத பொழுது இழிந்து படுகின்றது. ஆன்ம நாட்டம் உடையது மேன்மையைக் காட்டுகின்றது; அல்லாதது இழிந்த மாட்டுப் பார்வையாய்க் கழிந்து தொலைகின்றது. விழியிருந்தும் குருடராய்ப் பழிபடுவது அழிவடைவாம்.

உணர்வு நலம் கனிந்த உயர்ந்த மனிதனாய்ப் பிறந்திருக்கின்றாய்; கலைகள் பலவும் கருதியுணர்கின்றாய், சென்ற காலத்தையும எதிர்காலத்தையும் சிந்தித்து நோக்குகின்றாய், நிகழ்கால நிலைகளையும் நேரே காண்கின்றாய், இங்ஙனம் எல்லாம் கண்டும் உனது உண்மை நிலையைக் காணாமல் வீணே உழலுவது அதிசயமான மாயா வினோதமாகின்றது. மாயம் தெளிக, மயக்கம் ஒழிக.

நான் யார்? ஏன் இங்கு வந்தேன்? முன்னம் எங்கு இருந்தேன்? ஈண்டு என்ன செய்ய உரியேன்? இந்த நிலை இனியதா? சொந்தமானதா? இடையே வந்ததா? எந்த நிலையை அடைந்தால் என்றும் குன்றாத இன்ப நலனை அடையலாம்?' என்னும் இந்தவாறான சிந்தனைகள் என்றாவது ஏதாவது உனக்கு வந்தது உண்டா? இத்தகைய விசாரணைகள் உற்ற பொழுது நித்தியமான உத்தம உண்மைகள் உதயம் ஆகின்றன.

தனக்கு உறுதி நலம் கண்டவன் நல்ல காட்சியாளனாய் மாட்சி மிகுந்து ஞான சீலங்களை மருவிப் பேரின்ப நிலையை அடைகின்றான்; உண்மை காண்பதே உய்தி காண்பதாம்.

அறுசீர் விருத்தம்
(விளம் மா தேமா அரையடிக்கு)

காட்சிநன் னிலையில் ஞானக்
..கதிர்மணிக் கதவு சேர்த்திப்
பூட்சிசால் ஒழுக்கம் என்னும்
..வயிரத்தாள் கொளுவிப் பொல்லா
மாட்சியில் கதிகள் எல்லாம்
..அடைத்தபின் வரம்பில் இன்பத்(து)
ஆட்சியில் உலகம் ஏறத்
..திறந்தனன் அலர்ந்த தாரான். 1

செப்பிய சீலம் என்னும்
..திருமணி மாலை சூழ்ந்தார்
கற்பத்துள் அமரர் ஆவர்;
..காட்சியின் அமிர்தம் உண்டார்
ஒப்பநீர் உலகம் எல்லாம்
..ஒருகுடை நிழற்றி இன்பம்
கைப்படுத்(து) அலங்கல் ஆழிக்
..காவலர் ஆவர் கோவே. 2 சீவக சிந்தாமணி

காட்சியைக் குறித்து வந்துள்ள இவை இங்கே கருதி உணரவுரியன. உலகத் தோற்றங்களைக் கண்ணால் காண்பதோடு ஒழிந்து போகாமல் உயிர்க்கு உண்மையான உறுதி நிலையைக் கண்டு கொள்வதே காட்சியாம்.

பலகாட்சி காலம் எனும் படத்தில் காண்கின்றோம். கால நீட்சியிலேதான் யாவும் கண்டு வருகின்றோமாதலால் அரிய பல காட்சிகளைக் காட்டும் படம் என உருவகமாய் ஈண்டு அது மருவி நின்றது. படம் - திரைச்சேலை. பலவகையான படிவங்களையும் பாடங்களையும் நேரே காட்டி வருதலால் அது படம் என வந்தது.

காலச் சுருள் எல்லையின்றி நீண்டு வருதலால் அளவிடலரிய காட்சிகள் அதில் இடையறாது தொடர்ந்து வெளி வருகின்றன.

ஞாலத்தை அரங்கு என்றது உலக வாழ்வு ஒரு கூத்தாட்டம் என்பதை உணர வந்தது. ஆசையாகிய பிசாசுகள் வசப்பட்டுப் பாச பந்தங்களில் பாய்ந்து நீசங்கள் தோய்ந்து யாதும் ஆய்ந்து பாராமல் எங்கும் நிலையாய் ஆடி வருதலால் மனித வாழ்க்கை மாயா வினோதமான பேயாட்டம் என்றே மதிக்கப்பட்டுள்ளது.

பலவகையான உருவத் தோற்றங்களை மருவி வந்து வினைக்கு ஈடாக உயிரினங்கள் நடித்து நிற்கின்றனவாதலால் இவ்வுலகம் நாடக சாலை என நேர்ந்தது.

சீவ கோடிகளை இவ்வாறு அதிசய நிலையில் விதிமுறையே ஆட்டி வருதலால் கடவுளுக்கும் கூத்தன் என்ற ஒரு பெயர் வந்தது.

The world’s a theatre, the earth a stage
Which God and nature do with actors fill. - Thomas Heywood

உலகம் ஆகிய நாடக சாலையுள் பூமி என்னும் மேடையில் சீவர்களாகிய நடிகர்களைக் கடவுளும் இயற்கையும் நிரப்பியருள்கின்றன” என்று தாமஸ் ஹீவுட் என்பவர் இவ்வாறு பாடியிருக்கிறார். உலக இயக்கமும் உயிர்களின் மயக்கமும் உணர வந்தன.

All the world’s a stage And all the men and women merely players. - Shakespeare

உலகம் எல்லாம் நாடக அரங்கு; ஆண் பெண் எல்லாரும் நடிகர்கள்' என ஷேக்ஸ்பீயர் இங்ஙனம் கூறியுள்ளார்.

பலரும் வந்து சிறிது கூடியிருந்து விரைவில் பிரிந்து மறைந்து போதலால் மனித வாழ்வு மாயக் கூத்து என வந்தது.

நாம உருவங்களாய் வெளியில் தோன்றுவன வெறும் வேடங்கள்; அந்த மாயக் காட்சிகளில் மயங்கி மருளாமல் ஆன்ம நோக்கம் புரிந்து வருபவர் பெரிய பாக்கியசாலிகள் ஆகின்றனர்.

இன்னிசை வெண்பா

நார்த்தொடுத்(து) ஈர்க்கிலென் நன்றாய்ந்(து) அடக்கிலென்
பார்த்துழிப் பெய்யிலென் பல்லோர் பழிக்கிலென்;
தோற்பையுள் நின்று தொழிலறச் செய்தூட்டும்
கூத்தன் புறப்பட்டக் கால். 26 யாக்கை நிலையாமை, நாலடியார்

உயிரை இதில் கூத்தன் என்று குறித்திருக்கிறார், சீவப் போர்வையான உடலைப் பார்வைக்குக் கொண்டு வந்து காட்டி உண்மை நிலையை உணர்த்தியுள்ளது உவகை நிலையாய் ஒளிர்கின்றது.

நந்த வனத்தில் ஓர்ஆண்டி-அவன்
நாலாறு மாதமாய்க் குயவனை வேண்டி
கொண்டு வந்தான் ஒரு தோண்டி- அதைக்
கூத்தாடிக் கூத்தாடிப் போட்டுடைத் தாண்டி.

மனித வாழ்வின் நிலைமையை எளிது தெளிவாக உல்லாச வினோதமாய்ச் சொல்லியுள்ள இதன் உள்ளக் கருத்தை உணர்ந்து கொள்ளவேண்டும். தோண்டி - மண்பானை; ஈண்டு அது உடம்பைக் குறித்து நின்றது. மண்பாண்டம் போன்ற தேகத்தைச் சில காலம் சுமந்து திரிந்து முடிவில் ஒருநாள் போட்டு விட்டு தேகி ஓடிப் போய் விடுகிறான்; இந்தப் பொய்க்கூத்தில் மெய்க்கூத்தனைக் கண்டுய்ய வேண்டும் என்று உணர்த்திய படியிது. உருவகங்களில் புனைந்து அரிய கருத்துக்களைச் சுவையுடன் விளக்குவது உவகை தருகின்றது.

கோலால் செய்த பாவைகளுள் புகுந்து பலவகை நிலைகளில் சீவ கோடிகள் ஆடுகின்றன. தலைவன் ஒருவன் மறைவில் நின்று ஆட்டி வைக்கின்றான்; யாவும் ஆடி வருகின்றன. அந்த அற்புதக் கூத்தன் அதிசய நிலையினனாதலால் விதி முறையே தொடர்ந்து நிகழ்கின்றன.

நீ ஒரு பெரிய கூத்தாடி, பாவ புண்ணியங்களாகிய பாசங்களில் பிணித்து சீவர்களை ஆட்டி வருகின்றாய், ஓயாத உனது மாயக் கூத்து யாதும் என்றும் தேயாத திருக்கூத்தாயுள்ளது; இந்தக் கூத்தாடித் தனத்தில் உனக்கு ஆசை அதிகமாதலால் பேய்களோடும் கூடி ஆடி மகிழ்கின்றாய், உன் ஆட்டமும் நாட்டமும் யாரும் அளவு காண முடியாதன; கொஞ்சம் நின்று என் பாட்டைக் கேட்டு, வீட்டுக்கு அனுப்பி விட்டு மேலே ஆட்டத்தைக் தொடங்கிக் கொள்' என்று பதஞ்சலி முனிவர் நடராசமூர்த்தியை நோக்கி வட மொழியில் அழகாக ஒரு கவி பாடியிருக்கிறார், உலக நிலையை யோகிகள் தெளிவாக உணர்ந்து கொள்ளுகின்றனர்.

கபடமா நாடகத்து ஐந்தொழில் நடத்தும் பிரான்' எனக் குமரகுருபரர் இறைவனை இவ்வாறு துதித்துள்ளார்.

உலக வாழ்வு நாடகம் என்றதனால் அது நிலை இல்லாதது; வெளி வேடம் ஆனது, களி மயக்குடையது; விரைவில் மறைவது என்னும் நிலைமைகள் யாவும் நேரே தெளிய வந்தன.

இருவினை வயத்தராய்ப் பிறந்தும் இறந்தும் பாரில் சுழன்று வருதலால் மேடையில் தோன்றி மறையும் நாடகம் என மானுட வாழ்வு பாட நேர்ந்தது. காட்சியும் கழிவும் காண நின்றன.

சீவர்கள் இவ்வாறு ஒயாது உழன்று வரும் காட்சியைக் கடவுள் என்றும் கண்டு கொண்டிருத்தலால் அவர் நாடகத் தலைவன் என நின்றார். நடிகர்களைத் தகுதியறிந்து நன்கு நடத்தி வருகின்றமையின் நட்டுவன் என்னும் பட்டமும் பெற்றார்.

அறுசீர் விருத்தம்
(விளம் மா தேமா அரையடிக்கு)

இயம்பிடும் இருளை நீக்கி
..எனைவெளிப் படுத்தல் வேண்டும்
கயம்படு துறையில் வீழ்ந்த
..கண்ணிலிக்(கு) உதவு வான்போல்
பயம்பட வெண்பொற் சோதி
..படருமன் றத்தின் ஊடு
கயம்படு மறைகள் பாட
..நாடகம் நவிற்று வோனே. 1

நாடகத் தொழில்வ ராத
..நட்டுவக் குறையோ? நாளும்
பாடகப் பதுமம் பூத்த
..பாத்திரக் குறையோ? சொல்லாய்!
சூடகத் தளிர்க்கை பாகா!
..சோமசுந் தரனே! கூடல்
ஆடகக் குன்றே! என்னை
..ஆட்டுவித் தனைநன் றாயே, 2 மதுரைப் பதிற்றுப் பத்தந்தாதி

தமது பிறவித் துயரை நீக்கி அருளும்படி இறைவனை நோக்கிப் பரஞ்சோதி முனிவர் இவ்வாறு வேண்டியிருக்கிறார். சீவனை நடிகை ஆகவும், பரமனை நட்டுவன் ஆகவும் இதில் சுட்டியிருத்தலை உய்த்து உணர வேண்டும். ஆட்டத்தை விட்டு நீக்கியருளாமல் என்னை ஓயாது ஆட்டி வருகின்றாயே! இது நட்டுவக் குறையா? அல்லது நடிப்பின் குறையா? என்று கேட்டிருக்கும் கேள்வியில் பத்தியும் ஞானமும் படிந்து வித்தக வினோதம் விளைந்து நிற்கின்றது. நிலைமையை நினைந்து தெளிவது நலம். உயர்ந்த உள்ளத்தின் பண்புகளை ஓர்ந்து உணர்கின்ற அளவு உவகை சுரந்து வருகின்றது.

அதன் உளவறித்து உறுதி தெளிய, எண்ணிறந்த கோடி இறந்து ஒழிந்த இவ்வுலகில் தோன்றி நின்று மாய்ந்து மறைந்து போன சீவ கோடிகள் அளவிடலரியன என்றது. போன போக்குகளை ஞான நோக்கால் நயந்து நோக்கி ஊனம் நீக்கி உய்தி பெறுக என உணர்த்திய படியிது.

ஈண்டு அரசராய் வந்து ஆண்டு நின்று மாண்டு மடிந்து போன மன்னர்களை எண்ணி நோக்கின் கடல் அலைகளினும், கரை மணல்களினும் பலர் என அலகிலா நிலையில் மலைவுறுதலால் மண் இறந்த மானுடங்கள் எண் இறந்த கோடி என இயல் அளந்து காண வந்தது. தோன்றி மறைந்து போன தோற்றங்களை ஊன்றி நோக்க வைத்தது, தனக்குறுதி நலங்களை விரைந்து ஓர்ந்து கொள்ள, உண்மை உணர்வு நன்மை அருள்கின்றது.

நாமும் வந்து அவ்வண்ணம் ஒழிகின்றோம். நமக்கு முன்னதாக இஞ்ஞாலத்தில் வந்து தோன்றி நின்று ஒழிந்து போனவர்களைப் போலவே நாமும் கழிந்து போகின்றோம். போகும் முன் ஆக வேண்டியதைச் சேகரித்து அடைந்து கொள்ள வேண்டும் என இது அறிவுறுத்தி நின்றது.

இல்லிக்குடத்தின் நீர்போல் நாளும் ஆயுள் ஒழுகிக் கொண்டேயிருக்கும் உண்மையை ஓர்ந்து ’காண ஒழிகின்றோம்’ என்றது. உயிர் வாழ்வு கழிந்து போகின்ற காட்சியைக் கருதி உணரின் எவரும் தமக்கு உறுதியை விரைந்து கொள்ளுவர். கொள்ளாதார் காட்சியிழந்த கழி மடங்களாய் மாட்சியழிந்து மடிந்து ஒழிவர்.

துன்ப வீழ்ச்சியுள் ஆழ்ந்து சுழலாமல் இன்ப மீட்சியில் ஏறி மகிழ்க என்றும், இழிவில் இறங்கின் அழி துயரங்களாம் என்றும்,. எய்தியுள்ள பிறவியின் அருமையையும், எய்த உரிய பயனையும் உணர்ந்து தெளிந்து விரைந்து உய்தி பெறுக என்றும் கூறுகிறார் கவிராஜ பண்டிதர்.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (29-Aug-19, 3:17 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 52

மேலே