போனநாள் மீளாதே கூற்றுவனேர் ஆனபோது என்னாம் அறி - வாழ்நாள், தருமதீபிகை 432

நேரிசை வெண்பா

உள்ளநாள் நாளும் ஒழிந்தோட ஓர்பயனும்
கொள்ளாது நின்று குதிக்கின்றாய் - வெள்ளமெனப்
போனநாள் மீளாதே பொள்ளென்று கூற்றுவனேர்
ஆனபோ(து) என்னாம் அறி. 432

- வாழ்நாள், தருமதீபிகை,
- கவிராஜ பண்டிதர் ஜெகவீர பாண்டியனார்

பொருளுரை:

உனக்கு ஆயுளாக அமைந்த நாள் தினமும் கழிந்து போதலை உணராமல் உள்ளம் களித்து நிற்கின்றாய்; வெள்ளம் போல் போனநாள் மீண்டு வராதே, கூற்றுவன் எதிரே நீ மாண்டு போவாயே! அதனை ஓர்ந்து உறுதிநலம் தேர்ந்து கொள்க என்கிறார் கவிராஜ பண்டிதர். இப்பாடல், தினம் கழிவதை மனம் தெளிக என்கின்றது.

மனிதனுடைய வாழ்நாள் மிகவும் சிறுமையுடையது; ஒரு நிலையும் இல்லாதது; பல துயர்கள் மருவியது. இவ்வளவு காலம் இந்த உடலோடு இருப்போமென்று யாரும் வரைந்து கூற முடியாதது. நாளும் விரைந்து செல்லும் இயல்பினது. இவ்வாறு கழிந்தொழிந்து போகின்ற நிலையினை மனிதன் சிறிதுணர்ந்தாலும் உள்ளம் பெரிதும் கலங்குவான். தினமும் இறந்து படுதலை உணர்ந்து பாராமையால் பிறந்த பயனை அடைந்து கொள்ளாமல் பேதையாய் ஒழிகின்றான்.

பிறந்தவர் இறத்தல் பிழையா(து) எனஅறிந்தால்,
உறுந்துயர் ஒழிந்தினிய உண்ண நினைவாரோ?
மறந்து விடயத்து மயலுற்றி டுதல்வான்மீ(து)
இறந்தவரை யுச்சிவிழு வோனிடை கொள்இன்பம். - குறுந்திரட்டு

இறந்து படுதலை மறந்துள்ளது மிகுந்த பரிதாபம் என்று பரிந்து கூறியுள்ள இது ஈண்டு அறிந்து கொள்ள வுரியது.

ஆகாயத்தை அளாவி நிற்கின்ற உயர்ந்த மலையுச்சியிலிருந்து கீழே உருண்டு விழுகின்ற ஒருவன் இடையே அனுபவிக்கின்ற கால அளவையே மனிதன் ஞாலத்தில் காண்கின்றான் என்றமையால் வாழ்வின் நிலையை ஓர்ந்துணர்ந்து கொள்ளலாம்.

தனது வாழ்நாள் நிலைமையை ஒருவன் உண்மையாக உணர்வானாயின் .அவன் உணவுண்ண விரும்புவானா? நாளைக் காலை உனக்குத் தூக்கு என ஒருவனுக்கு மரண தண்டனை விதித்தால் அந்த அழிவு நிலையை நினைந்து அவன் மனம் என்ன பாடுபடும்? உணவு செல்லுமா? உறக்கம் வருமா? ஒவ்வொரு நிமிடமும் எவ்வளவு துயரம்! உடம்பை விட்டு உயிர் பிரிந்து போதலை நினைந்த போது உள்ளம் துடிதுடிப்பதை உரைகளால் உரைக்க முடியாது. அவ்வளவு பரிதாப நிலையில் மனித வாழ்வு மருவியுள்ளது. நினைந்து பாராமையால் நெஞ்சம் கவலாது நிமிர்த்து திரிகின்றார்,

கால பாசத்தை மனிதனது கழுத்தில் பூட்டித் தன் கையில் பிடித்துக் கொண்டு எமன் இமையாது நிற்கின்றான். அமயம் வந்தவுடன் விரைந்து இழுத்துக் கொள்கினறான். அந்த அழிவு நேருமுன் இங்கே வந்த பயனை அடைந்து கொள்பவன் அழியாத இன்பநலனைக் காண்கின்றான். அவ்வாறு கொள்ளாதவன் துன்ப நிலைகளில் வீழ்ந்து ஓயாது சுழன்று மாள்கின்றான்.

தரவு கொச்சகக் கலிப்பா

மிதவையின்நோக் கமைத்துழலும் மீன்கொலைஞன் போல்கவரும்
பதமிதெனப் பார்த்துழலும் பாழ்ங்கூற்றுண் மையினாலெவ்
விதமுமுடம் பொழியுமதன் மேல்புரிவ தொன்றுமிலை,
இதமகித மேஉயிர்க்குத் துணையாக எய்திடுமே. - திருப்பெருந்துறை

உடம்பு எவ்வழியும் ஒழிந்து போகும்; உயிர்க்கு உறுதிநாடி உய்க என இது உணர்த்தியுள்ளது. உவமையை நுனித்து நோக்குக. பிறவிக் கடலில் கிடந்துழலும் மனித மீன்களைப் பிடித்துவரும் கொலைத்தொழில் கருதிக் காலனைத் தூண்டில்காரனோடு ஒப்புரைத்தது. புலையான கொலை வாயிலேயே மானிட வாழ்வு நிலையாயுள்ளது. நிலைமையை உணர்வது ஞானம்; உணராதிழிவது ஈனம்.

மீனும் மனிதனும் சில வகையில் நிலை ஒத்துள்ளனர். அந்நிலைமைகளை நினைந்தபோது வியந்து கொள்கின்றோம். அது நீரில் வசிக்கின்றது, இவன் நிலத்தில் வாழ்கின்றான்; அது தூண்டில் இரையை விழுங்கி மாள்கின்றது; இவன் கண்ட சுவைகளை எல்லாம் விழைந்து கதி அழிகின்றான். சினன மீன்களை அது தின்று விடுகின்றது; தன் இனமென்றும் பாராமல் ஏழை எளியவர்களை இரக்கமின்றி இவன் அழிவு செய்கிறான். ’பெரிய மீனுக்குச் சின்ன மீன் இரை' என்னும் பழமொழி வலிய செல்வர் மெலியரை நலிவு செய்யும் கொடுமை கருதி வந்தது. மனிதசாதி மீன் இனத்தை ஒத்தளது என ஈனமான இழிவு நிலையை மேல்நாட்டுக் கவிஞரும் விநயமாய்க் கூறியுள்ளனர்.

I marvel how the fishes live in the sea.

"கடலில் வாழ்கின்ற மீன்களைக் குறித்து நான் ஆச்சரியம் அடைகின்றேன்' என்று. ஒரு வலைஞன் தன் தந்தையிடம் இவ்வாறு கூறினான். அதற்கு அவன் பதில் கூறியது அயலே வருகின்றது.

Why, as men do a-land; the great ones eat up the little ones. - Pericles, 2-1

‘சிறியரைப் பெரியர் விழுங்கி மனிதர் பூமியில் வாழுதல் போல் கடலில் மீன்கள் வாழுகின்றன’ என அவன் இங்ஙனம் கூறியிருக்கிறான் சுய நலமும் கொடுமையும் குரோதமும் பேராசையும் பெருகியுள்ளமையால் மானிட வாழ்வு ஈனங்களாய் இழிந்து நிற்கின்றன. இளிவு தெரியாமல் களி மிகுத்து விளிவுறுகின்றனர்.

சிறிய வாழ்நாளையுடைய மனிதன் அதனை இனிய வழிகளில் பயன்படுத்தி இன்பநலம் காணாமல் கொடிய செயல்களைப் புரிந்து கொடுந்துன்பங்களை விளைத்துக் கொள்வது நெடிய மடமையாம்.

அரிய காலம் உள்ள பொழுதே உரிய நலனைப் பெற்றுக் கொள்ள வேண்டும். இல்லையேல் பெருங்கேடு காண நேரும்.

‘வெள்ளம் எனப் போன நாள் மீளாதே’ நாளின் கழிவை விழிகாண இது காட்டியது. காலம் விரைந்து கழிந்து கொண்டேயிருக்கிறது. ஆற்றில் ஓடுகிற நீரோட்டம் போல் இடையறாது காலம் வேகமாய்ப் போய்க் கொண்டுள்ளமையால் அதன் பயனை அடையாவழி வாழ்வு பாழாய் மனிதன் வீழ்வுறுகின்றான்.

கழிந்து போன நீர் மீளாது; இழந்து போன காலமும் எய்தாது. உயிர்க்குறுதியான இனிய நலன்களைச் செய்து கொள்ளவுரிய அரிய பொழுதை வறிதே இழந்து நிற்பதினும் பெரிய இழப்பு வேறு யாதுமில்லை.

Every wasted day constitutes an irretrievable loss. (Kirby)

’வீணாகக் கழியும் நாள் மீளமுடியாத ஒரு கேடாம்' என்னும் இது ஈண்டு எண்ணத் தக்கது. இழந்த பொருளை முயன்று பெறலாம்; கழிந்த பொழுதை மீட்டும் காணமுடியாது. பொருள் நட்டம் முதலிய எந்தக் கேட்டினும், காலத்தைப் பழுது ஆக்குவது சாலவும் தீதாம். நாள் வீண் ஆயின், ஆள் வீணே.

தனக்கு உயிராதாரமாய் வாய்த்துள்ள காலத்தை யாதும் வீண் ஆக்காமல் எவன் பயன்படுத்தி வருகின்றானோ அவனே சிறந்த மதிமான்; உயர்ந்த பாக்கியவான்.

பகலிரவு எனக் காலம் கழிந்து கொண்டேயிருத்தலால் அதனை அறிவோடு பயனாக்கிக் கொள்கின்றவன் பெரும்பேறு பெற்றவனாய் வியனிலையில் விளங்கி நிற்கின்றான்.

One secret in education is to know how wisely to lose time. - Herbert Spencer

'காலத்தை நல்ல பயனாகக் கழிக்கத் தெரிவதே கல்வியின் உயர்ந்த நிலையாம்' என ஹெர்பெர்ட் ஸ்பென்ஸர் என்பவர் இவ்வாறு கூறியிருக்கிறார். நாளை உணர்ச்சியோடு கழிப்பவன் உயர்ச்சியடைந்து ஒளி மிகப் பெறுகின்றான்.

காலம் ஓயாது சலித்துக் கொண்டேயிருக்கின்றது. காலச்சக்கரம் என்னும் உருவகத்தால் அதன் கதிவேகம் அறியலாகும். விரைந்து செல்லும் இயல்பினதாதலால் அதனை நிறுத்த இயலாது. கழிந்து போகின்ற பொழுதை நல்ல சிந்தனைகளால் பயன்படுத்திக் கொள்ளுகின்றவன் தன் வாழ்நாளைப் புனிதமாக்கிப் புண்ணிய நிலையில் உயர்த்திக் கொள்கின்றான்.

வீழ்நாள் படாமை நன்றாற்றின் அஃதொருவன்
வாழ்நாள் வழியடைக்கும் கல். 38 அறன் வலியுறுத்தல்

நாளை வீணாக்காமல் நல்லது செய்கின்றவன் பிறவி தீர்ந்து பேரின்பம் காண்கின்றான் என வள்ளுவர் இங்ஙனம் அருளியிருக்கிறார். வீழாத நாள் மேலான கதியை அருளுகின்றது.

தனக்குக் கிடைத்த ஆயுள் காலத்தை யாதும் பாழாக்காமல் புனிதமாகப் பயன்படுத்திக் கொண்டவன் புண்ணிய மூர்த்தியாய் உயர்ந்து போகின்றானாதலால் அவன் மீண்டும் ஒரு ஊன உடலை எடுத்து மானுட வாழ்வில் மருவான். மறுபடியும் உடலோடு கூடி வாழும் நாளைச் செய்து கொள்ளாமையே வாழ்நாளின் தலையாய பயனாம். பிறவா நெறியைப் பெறுவதே பிறவிப் பேறாம். வாழ்நாள் வழி கொடிய துயரங்களை உடையதாதலின் அதனை அடை என்றார்.

நேரிசை வெண்பா

ஒருபால் திருத்த ஒருபால் கிழியும்
பெருவாழ்க்கை முத்தாடை கொண்ட - திருவாளா!
வீணாள் படாமைநீ துன்னம்பொய் யேயாக
வாணாள் படுவ(து) அறி. 34 அறநெறிச்சாரம்

அல்லல் பல மிடைந்த வாழ்நாளை நல்லது செய்து கழி; பொல்லாத வழியில் பொழுதைப் போக்காதே; போக்கின் இழுதையாய் இழிந்து அழி துயரில் ஆழ்ந்து அலமந்து படுவாய்.

கூற்றுவன் நேரானபோது என்னாம்? உயிர்க்கு உறுதிநலன் ஒன்றும் கருதாமல் காலத்தை வீணே கழித்து நின்றவன் முடிவில் காணும் பரிதாப நிலையை எண்ணியுணரும்படி இது எதிர்காட்டி நின்றது. தனக்கு வாய்த்த வாழ்நாளை நலமாகக் கழித்தவன் தருமவானாய் மருவி வருதலால் எமதருமன் அவனை உவந்து போற்றி உயர்ந்த பதவியில் உய்க்கின்றான்; அல்லாதவனைக் கடுத்து நோக்கி அதோ கதியில் தள்ளி விடுகின்றான். இங்கே காலத்தை வீணாய்க் கழித்தவர்.அங்கே காலன் எதிரே கலங்கி விழித்துக் கதி இழந்து நிற்கின்றார்,

பொழுகைப் பழுதாக்காதே; அதனைப் புகழ் புண்ணியங்களாக மாற்றி இகபரங்கள் ஆற்றி உயர்கதி உறுக என்கிறார் கவிராஜ பண்டிதர்.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (29-Aug-19, 3:20 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 92

சிறந்த கட்டுரைகள்

மேலே