நிழலசைவே போன்றயிந் நீளுலக வாழ்வினின்று வீடு பெறுக - காட்சி, தருமதீபிகை 423

நேரிசை வெண்பா

நிழலசைவே போன்றயிந் நீளுலக வாழ்வை
விழுமிதென நம்பி விளியல் - குழுமிநின்(று)
ஆடுமொரு நாடகமே ஆகும்; இதினின்று
வீடு பெறுக விரைந்து. 423

- காட்சி, தருமதீபிகை,
- கவிராஜ பண்டிதர் ஜெகவீர பாண்டியனார்

பொருளுரை:

இந்த நெடிய உலக வாழ்க்கை நிழலின் அசைவு போல் விரைவில் மறைகின்றது; இதனை நிலை என்று கருதிப் புலையுறாதே; பலவகையான கூட்டங்கள் சேர்ந்த ஒரு மாயக் கூத்தாட்டமேயாம்; இந்தக் கேட்டை விட்டு நீங்கித் தூய பேரின்ப வீட்டை விரைந்து பெறுக என்கிறார் கவிராஜ பண்டிதர்.

இப்பாடல், வாழ்வின் நிலையை நினைந்து தெளிக என்கின்றது.

மனிதன் கண்டதைக் கொண்டு களிப்புறுகின்றான்; பெற்றது. எதுவாயினும் அதனைப் பெரிதாக எண்ணுவதும், அபிமானங்கள் புரிவதும், அகம் செருக்கி ஆரவாரங்கள் செய்வதும் இயல்பாயுள்ளன. மையல் மயக்கமும் மாய மோகங்களும் வையக வாழ்க்கையாய் வளர்ந்து வருகின்றன. பொய்யும், புலையும், புன்மையும் வளர்கின்றன; மெய்யும், நலமும், மேன்மையும் தளர்கின்றன. தீய வழி விலகி நல்ல விழி திறந்த போது எல்லையில்லாத இன்பஒளி எதிர் எழுகின்றது.

அல்லல் நிலைகள் எல்லாம் அறியாமையால் விளைகின்றன. அவலக் கவலைகளுக்கு மடமை இடமாய் நிற்றலால் அந்த அஞ்ஞான நிலை கொடிய மருள், நெடிய இருள் என்று கடிய நின்றது.

உண்மையை ஓர்ந்துணரின் உள்ளம் உருகி நன்மை காண நேர்கின்றான் உணராதவன் உறுதிநலம் யாதும் காணாமல் வறிதே இழிந்து போகின்றான். அங்ஙனம் ஒழிந்து போகாமல் உள்ளம் தெளிந்து உயர்ந்து வருகின்றவன் சிறந்த பயனை அடைந்து கொள்கின்றான்.

காணுகின்ற வாழ்க்கை நிலையைக் கருதியுணர்வது அரிய மனிதனுடைய தகைமையாய்ப் பெரிய மகிமையை அருள்கின்றது.

தன் நிலைமையைக் கருதி உணர உலக வாழ்வை நிழல் அசைவு என்றது, உலக வாழ்வு நிலையில்லாதது; விரைந்து மறைந்து போவது; வெளி மயக்கானது; களிப்பும் கவலையும் என்றும் இயல்பாகவுடையது என்னும் வகை தெளிய வந்தது.

சந்தக் கலி விருத்தம்
(கனி கனி கனி மா)

வாழ்வாவது மாயம்மிது மண்ணாவது திண்ணம்
பாழ்போவது பிறவிக்கடல் பசிநோய்செ(ய்)த பறிதான்
தாழாதறஞ் செய்ம்மின்தடங் கண்ணான்மல ரோனும்
கீழ்மேலுற நின்றான்திருக் கேதாரமெ னீரே. 1 - 078 திருக்கேதாரம், சுந்தரர் தேவாரம், ஏழாம் திருமுறை

வாழ்வின் நிலைமையைச் சுட்டிக் காட்டி உயிர்க்குறுதி செய்து கொள்ளும்படி சுந்தரமூர்த்தி நாயனார் இவ்வாறு போதித்திருக்கிறார் மாடு, மனை, செல்வம் எனக் கூடி நிற்பன எல்லாம் உன்னை விட்டு ஓடி ஒழியும்; இம் மாய வாழ்வை நம்பி மதி மருண்டு நில்லாதே. என்று நிலையானதை நினைவுறுத்தினார்.

மெய்யான ஆன்ம ஊதியத்தை அடையாமல் பொய்யானதில் மய்யல் மீதூர்ந்து மயங்கி நிற்பது வெய்ய துயரமாய் விரிந்து வருகின்றது.

’விழுமிது என நம்பி விளியல்’ எவ்வழியும் இழிவும் அழிவும் உடையதை விழுமிது என நம்பி உழல்வது வழுவாம் என்று இது தெளிவு தோன்ற உணர்த்தியது. விழுமம் - மேன்மை. விளிதல் - அழிதல்.

வாழ்வின் நடைமுறையிலும் இடையூறுகள் பல மிடைகின்றன; முடிவும் கடிது நிகழ்கின்றது; ஆகவே எவ்வகையிலும் பொய்மயக்கான புலையாட்டம் என வாழ்வு நிலை நாட்டநேர்ந்தது.

“Life’s but a walking shadow, a poor player
That struts and frets his hour upon the stage,
And then is heard no more: it is a tale
Told by an idiot, full of sound and fury,
Signifying nothing.” (Macbeth, 5.5)

'மனித வாழ்வு ஒரு அசைகின்ற நிழலே; நாடக மேடையில் இடையே கோமாளி வந்து பிலுக்கி நடந்து பிதற்றிப் போவது போலவும், மூடன் சொல்லிய பழங்கதை போலவும் வெறும் பாழானது; யாதொரு மேன்மையும் இல்லாதது' என மேக்பெத் என்னும் படைவீரன் தனது ஆயுள் முடிவில் வாழ்வைக் குறித்து இவ்வாறு பேசியிருக்கிறான்.

கண்டு வந்த அனுபவங்கள் கடைநாளில் கருதியுணர வர, உறுதி உண்மைகள் உரைக்க நேர்கின்றன. உலக ஆசைகளில் வெறியராய் ஓடியலைந்து கலகமும் களிப்பும் நீடி நிமிர்ந்து யாண்டும் ஒரு பயனும் காணாமல் வறிதே மாண்டு மறைந்து போவதே மானிட வாழ்வின் சூழ்வாய் நீண்டு நிறைந்துள்ளது.

தங்களுடைய வரவு செலவுகளைக் கருதியுணர்ந்து உறுதி நலங்களை நாடாமல் ஊனமாய் ஒழிந்து போவது ஞான சூனியமாதலால் அப்போக்கு ஈனம் என இகழ நேர்ந்தது. நிலையில்லாத வாழ்வில் நிலையான நன்மையை அடைந்து கொள்பவன் உயர்ந்து மகிழ்கின்றான்; அங்ஙனம் அடையாதவன் இழிந்து கழிகின்றான். அவ்வாறு கழிந்து படாமல் நல்ல கதிநலம் காண வேண்டும்.

’குழுமி நின்று ஆடும் ஒரு நாடகமே’ - பலரும் வந்து கூடிக் குலாவி ஆடிப் பிரிந்து அகன்று போதலால் மனித வாழ்வு இனிய ஒரு நாடகம் என வந்தது.

அல்லல்களும் அவலங்களும் நிறைந்திருந்தாலும் எல்லாரும் உல்லாச வினோதங்களாய் ஓடித் திரிகின்றார். உறுவதை உணராமல் உள்ளம் களித்து உலாவி வருதலால் இது ’மாயக்கூத்து’ என நேர்ந்தது.

உய்தி ஒன்றும் காணாமல் மையல் மயக்கங்களில் ஆழ்ந்து வெய்ய துயரங்களையே விளைத்து வருதலின் பலவகைப் பிறவிகளிலும் வீழ்ந்து சீவர்கள் படாதபாடு படுகின்றனர்.

கலி விருத்தம்
(விளம் விளம் மா கூவிளம்)
(விளம் வருமிடத்தில் மாங்காய்ச்சீர் வரலாம்)

1554
பனிமதி யின்கதிர் பருகும் ஆம்பல்போல்
முனிமதி முகத்தியர் முறுவல் நம்பினார்
துனிவளர் கதிகளுட் தோன்றி நாடகங்
கனியநின்(டு) ஆடுவர் கடையில் காலமே. 143

1555
நிழனிமிர் நெடுமதி நிகரில் தீங்கதிர்ப்
பழனவெண் தாமரை பனிக்கும் ஆறுபோற்
குழனிமிர் கிளவியார் கோலம் அஞ்சினார்
தொழநிமிர்ந்(து) அமரராய்த் துறக்கம் ஆள்வரே. 144 கேமசரியார் இலம்பகம், சீவக சிந்தாமணி

தேக போகங்களையே விழைந்து திரிபவர் ஆன்ம நலனை இழந்து விடுகின்றார்; அம் மோகம் ஒழிந்தவர் முத்தியின்பத்தை அடைகின்றார் என்னும் இது ஈண்டு உய்த்துணரத் தக்கது.

சிற்றின்ப நிலையில் இழிந்தபோது பேரின்ப நிலை ஒழிந்து போகின்றது. அதனைத் துறந்து எழுந்தவர் உயர்ந்த பதவியில் சிறந்து திகழ்கின்றார். காம விழைவால் பிறவிகள் விளையுமாதலால் அதனையுடையவர் பலவகை நிலைகளிலும் தோன்றி நிலைகுலைந்து அலைகின்றார். அல்லல் மிடைந்துள்ளமையின் அது அவல நாடகமென வந்தது.

’கடையில் காலம் நாடகம் ஆடுவார்’ எனச் சீவர்களுடைய வாழ்வைக் குறித்துக் காட்டியிருக்கும் காட்சியைக் கருதிக் காணுக. மங்கையர் மதி முகத்தைக் கண்ட போது ஆம்பல்போல் அலமந்து இழியாமல், தாமரை போல் அஞ்சி அகல்பவர் அமரர் தொழ நிமிர்ந்து துறக்கம் ஆள்வர் என்னும் குறிப்பு கூர்ந்து ஓர்ந்து கொள்ள வுரியது. உயிர்களுக்கு இனிய உறுதி நலங்களை உவகையுறும்படி மேலோர் சுவையாக உரைத்தருளுகின்றார்.

வாழ்வின் நிலைமையை உணர்ந்து தெளிந்து உயர்ந்த குறிக்கோளுடன் ஒருவன் ஒழுகிவரின் அவன் சிறந்த பேரின்ப நிலையை அடைந்து கொள்கின்றான்.

’உலக மையலில் உள்ளம் களித்து இழிந்து போகாதே’ என்றும், இதனை ஒரு நாடகமாகக் கருதி நின்று வீடகம் புகுக என்றும் கூறுகிறார் கவிராஜ பண்டிதர்.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (30-Aug-19, 4:21 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 41

மேலே