காலம் கழிதோறும் ஏதேதோ சிந்தித்து வருகின்றீர் - வாழ்நாள், தருமதீபிகை 433

நேரிசை வெண்பா

காலம் கழிதோறும் காலன் கடுகிநம்
மேலோடி வேகமுடன் மேவுகின்றான் - மூலம்
தெரியாமல் ஏதேதோ சிந்தித்(து) உவந்து
வருகின்றீர் என்செய்தீர் வந்து. 433

- வாழ்நாள், தருமதீபிகை,
- கவிராஜ பண்டிதர் ஜெகவீர பாண்டியனார்

பொருளுரை:

காலம் கழிந்து போகுந்தோறும் காலன் நம் மேல் விரைந்து ஓடி வருகின்றான். முடிவின் மூலம் தெரியாமல் நெடிய பல எண்ணி மடிகின்றீர்! அந்தோ! இவ்வுலகில் வந்தென் செய்தீர்? அதனைச் சிந்தனை செய்து தெளிக என்கிறார் கவிராஜ பண்டிதர்.

தமக்கு நேர்வதை உணராமல் மதிகேடராய் மனிதர் களித்து வாழ்வது அதிகேடாம் என இது உணர்த்துகின்றது.

மதிநலமுடையவன் மேதை என மிளிர்கின்றான். அஃதில்லாதவன் பேதை என இழிகின்றான். உலக நிலையிலும், கலை அறிவிலும் எவ்வளவு மேதையாயிருந்தாலும் ஆன்ம வுரிமையை இழந்து விடின் அவன் இழிந்த பேதையே ஆகின்றான்.

காட்சி, கருத்து என்னும் இருவகை நிலையிலிருந்து அறிவு பெருகி வருகிறது. கண்ணால் காண்பதும், காதால் கேட்பதும், கருதியுணர்வதும் அறிவின் பருவங்களாய் மருவி நிற்கின்றன.

மேலே வானம்; கீழே பூமி, இடையே பல வகையான சீவ கோடிகள் காணப்படுகின்றன. கண்ட இவற்றோடு அமையாமல் அண்ட கோடிகளையம், ஆதிமூலப் பொருளையும் உண்டென்று கருதி உறுதி செய்து கொள்கின்றான். யூக விவேகங்கள் மனிதனுக்கு இவ்வாறு இனிது அமைந்திருந்தும் உண்மை நோக்கி உய்தி காண்பதில் ஊனமுற்று நிற்கின்றான். வந்த பிறவியையும் வாழ்நாள் வரவையும் யாதும் எண்ணியுணராமல் வைய மய்யலில் உழந்து வருதலால் வெய்ய துயரங்கள் விளைந்து பெருகுகின்றன. உண்மை தெரிவது நன்மை தருகின்றது.

காலம் கழிதோறும் காலன் கடுகிநம்
மேலோடி வேகமுடன் மேவுகின்றான்.

என்றது நமது வாழ்வின் நிலைமையைக் கருதியுணர்ந்து உறுதி காண வந்தது. காலனென்னும் பெயர் காலத்தைக் கவனித்து நிற்பவன் என்னும் ஏதுவான் நேர்ந்தது. குறித்த காலத்துக்கு மேல் யாரையும் ஈண்டு ஒரு கணமும் அவன் வைத்திருக்க மாட்டான். உயிர்க்கு இனிய உய்தி நிலையை விரைவில் உறுதல் கருதி நாளின் கழிவை நமன் வரவாய்க் கருதுக என்றது.

காலம் கழிந்து போக ஆயுள் குறைந்து வருகிறது; அவ்வரவு சாவாய் முடிகின்றது: ஆகவே அம்முடிவினை உணர்ந்து உறுதி நலனைக் கடிதில் கைக்கொள்ளுவது கடமை ஆயது.

நாள் கழிவதை இனிது என்று ஏமாந்து நில்லாதே; அதனை உனது உயிரின் அழிவாக நினைந்து உய்க என நினைவுறுத்தியது.

நாளென ஒன்றுபோல் காட்டி உயிரீரும்
வாள(து) உணர்வார்ப் பெறின், 334 நிலையாமை

’உன் உயிரை ஈர்கின்ற வாள் என்று நாளை நினைக’ என வள்ளுவர் இதில் உணர்த்தியிருக்கிறார்.

ஈர்தல் -,அறுத்தல். ஞாயிறு, திங்கள் முதலிய ஏழு நாள்களும் ஈர்வாளின் கூரிய பற்கள். அவை ஓய்வில்லாமல் மென்று தின்று கொண்டேயிருக்கின்றன. வாரம் சென்று மீள்வது நீ பொன்றி மாள்வதாம். நாளின் கழிவை உயிரின் அழிவாக ஓர்ந்துணர்பவர் அரியராதலால் ’உணர்வார்ப் பெறின்’ என்றார், உணரின் பொழுதைப் பழுதாக்காமல் விழுமிய பயனை விரைந்து கொள்வன் எனபதாம்.

ஒரு மரத்தை அடியில் ஒருவன் வெட்டும் போது அதன் மேல் உள்ள பறவைகள் தம் குடியிருப்புக்குக் கேடு வந்ததென்று முன்னறிவுடன் அயலே நல்ல இடம் தேடி ஓடி விடுகின்றன. காலத்தச்சன் நாளென்னும் ஈர்வாளால் ஓயாமல் அறுத்துக் கொண்டேயிருக்கின்றான்; தன் அழிவு நிலையை யாதும் உணராமல் மனிதன் மனம் களித்துள்ளது பெரிய மதி மயக்கமேயாம்.

அறுசீர் விருத்தம்
(விளம் மா தேமா அரையடிக்கு)

எறிந்திடு மரத்தின் வாழும்
..இருஞ்சிறைப் பறவை அப்பால்
பறந்திட நினையா தாகின்
..பயக்குமோர் நன்மை உண்டோ?
குறைந்துநாள் என்னும் கூர்வாள்
..அரிதரக் குன்றும் ஆக்கை
உறைந்துயர் நெறியின் எட்டா
..உயிர்க்குநன்(கு) உறுங்கொல் அம்மா! 1

மானிட யாக்கை என்னும்
..மருவரும் பஃறி பெற்றும்
ஊனமில் குரவன் சொல்லாம்
..ஓடமுய்ப்ப வனோடு எம்சீர்
ஆனதோர் அனுகூ லத்தால்
..அணுகவும் பிறவி வேலை
தான்ஒழி தரஎண் ணாதான்
..தன்னையே கொல்வன் அன்றே. 11 – 11 பாகவதம்

உத்தவன் என்னும் மன்னனை நோக்கிக் கண்ணன் இன்னவாறு கூறியிருக்கிறான்,

பஃறி - தோணி, பிறவிக் கடலைக் கடத்தற்கு இனிய துணையான மனித தேகத்தைப் பெற்றும் உய்தி காணாமல் ஒழிவது வெய்ய பழியாம் என உள்ளம் வெதும்பியுள்ளமை உரையில் வெளியாயது. தன் உயிர்க்கு உறுதி புரியாத ஊனம் கருதித் ’தன்னையே கொல்வன்’ என்றது.

காலம் கழிந்து போவது காலன் விரைந்து வருவதாம் என்றது வாழ்நாளின் நிலைமையை நினைந்து கொள்ள வந்தது. மனிதன் நாளும் இறப்பிலேயே நடந்து கொண்டிருக்கின்றான். முடிவு நேருமுன் முடிவான பயனை அவன் அடைத்து கொள்ள வேண்டும்.

The Spirit walkes of every day deceased. Time flies, death urges. (Young)

"ஆவி நாளும் சாவிலேயே நடக்கின்றது; காலம் பறந்து போகின்றது; மரணம் விரைந்து வருகின்றது” என எட்வர்டு யங் என்பவர் இங்ஙனம் எழுதியிருக்கிறார்.

மெய்யறிவாளர் எவரும் காலத்தின் அருமையைக் கருதியுணர்ந்து அதனைப் பருவம் தவறாமல் உறுதி செய்து கொள்ளுகின்றனர். கால பலனைப் பெறாதவர் கடையாய் இழிந்து கழிகின்றார்,

’மூலம் தெரியாமல் உவந்து வருகின்றீர்’ காலம் கழிவதையும், மேல் விளைவதையும் யாதும் கருதியுணராமல் மாய மோகங்களில் ஆழ்ந்து மக்கள் களித்து நிற்கும் நிலையை இது பழித்து வந்தது.

சூரியன் உதிக்கின்றான்; மறைகின்றான்; இரவு வருகின்றது; விரைவில் போகின்றது, இவ்வாறு பகல் இரவாய்த் தோன்றி வருவதில் தன் வாழ்நாள் மாய்ந்து படுவதை ஊன்றியுணராமையால் உள்ளம் உவந்து துள்ளித் திரிகின்றார்; சிறிது உணரின் பெரிதும் மறுகி உறுதி நலனை நாடி உய்தி பெறுவர்.

யாதொரு பயனும் இல்லாமல் பாழான எண்ணங்களை வீணாக எண்ணி விளிந்து படுதலை ஏதேதோ சிந்தித்து என்றது. உயிர் நிலையமான நாள் பழுதே கழிந்தொழிவதை நினைந்து கவலாமல் உவந்து வருவது முழுமூடமான இழி மடமையாம்.

நேரே எதிர்ந்து வருகிற இழவுகளை அறிந்து கொள்ளாமையால் மனம் களித்து மதிகள் மருண்டு வாழ நேர்ந்தனர்.

அறுசீர் விருத்தம்
காய் 4 / மா தேமா

தினங்கள்செலச் செலவேதோ பெற்றதுபோன் மகிழுநெஞ்சே
--தினங்க ளோடுங்
கனங்கொளுமுன் னாயுள்நாள் கழிவதுண ராயுயிர்தீர்
..காயஞ் சேரும்
வனங்கடுகி வாவென்ன விளித்துன்பால் தினநெருங்கும்
..வன்மை யுன்னி
முனங்கொளறி யாமையைநீ யினங்கொள்ளா தறஞ்செய்ய
..முயலு வாயே. 4 அறஞ்செயல், நீதிநூல்

இன்றருணோ தயங்கண்டோ முயர்ககன முகட்டின்மிசை
..யிந்தப் பானு
சென்றடைய நாங்காண்ப தையமதைக் காண்கினுமேற்
..றிசையி ருக்கும்
குன்றடையு மளவுநா முயிர்வாழ்வ தரிததன்முன்
..குறுகுங் கூற்றம்
என்றச்சத் துடன்மனமே மறவாம லறவழியின்
..ஏகு வாயே. 5 அறஞ்செயல், நீதிநூல், மாயூரம் வேதநாயகம் பிள்ளை பாடல்

கழிந்து போகின்ற நாள்களிள் நிலைகளை உளம் தெரிய விளக்கி உறுதிநலனை ஓர்ந்து கொள்ளும்படி. இவை உணர்த்தியுள்ளன. பொருள் உண்மைகளை நன்கு உணர்ந்து கொள்ள வேண்டும்.

என் செய்தீர் வந்து? முன் செய்த புண்ணிய பலத்தினால் இந்த அரிய பிறவியை அடைந்து வந்திருக்கிறீர்; அங்ஙனம் வந்துள்ள நீர் இங்கே செய்து கொண்ட உய்தி நலன் என்ன? அதனை உணர்ந்து சிந்தித்து விரைந்து பயன் பெறுக என இது வேண்டி நின்றது.

காலம் சீவிய நீர்மையது; அதனை வீண் கழிக்கலாகாது.

கலிவிருத்தம்
(மா கூவிளம் கூவிளம் கூவிளம்)

வாழ்த்த வாயும் நினைக்க மடநெஞ்சும்
தாழ்த்தச் சென்னியுந் தந்த தலைவனைச்
சூழ்த்த மாமலர் தூவித் துதியாதே
வீழ்த்த வாவினை யேன்நெடுங் காலமே. 7

- 090 பொது, ஐந்தாம் திருமுறை, திருநாவுக்கரசர் தேவாரம்

அறுசீர் விருத்தம்
(விளம் மா தேமா அரையடிக்கு)

ஒருவில்லால் ஓங்கு முந்நீர்
..அடைத்துல கங்கள் உய்யச்
செருவிலே அரக்கர் கோனைச்
..செற்றநம் சேவ கன்னார்
மருவிய பெரிய கோயில்
..மதிள்திரு அரங்க மென்னா
கருவிலே திருவி லாதீர்!
..காலத்தைக் கழிக்கின் றீரே. - திருமாலை

தெய்வ சிந்தனையில் காலம் கழியவிடின் அது உய்தி தருவதாம் என அப்பரும், தொண்டரடிப் பொடியாழ்வாரும் இவ்வாறு குறித்திருக்கின்றனர். மனிதனாய் வந்து வாழ்ந்தவன் புனிதனை எண்ணிப் புண்ணியவானாய் உயர்ந்து போக வேண்டும் என மேலோர் உணர்த்தியுள்ளனர்.

எவ்வகையிலும் வாழ்நாளைச் செவ்விய நீர்மையில் பயன்படுத்தித் திவ்விய நிலைமையை அடைந்து கொள்ளுக என்கிறார் கவிராஜ பண்டிதர்.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (30-Aug-19, 4:32 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 92

சிறந்த கட்டுரைகள்

மேலே