இத்தரையை நிலையாக எண்ணி பொன்றுகின்றார் பொரிந்து - காட்சி, தருமதீபிகை 426

நேரிசை வெண்பா

செத்துநிதம் பாடையிலே செல்வாரைக் கண்டுமே
ஒத்துணர்ந்து சற்றேனும் ஓராமல் - இத்தரையை
என்றும் நிலையாக எண்ணி இடையிழிந்து
பொன்றுகின்றார் அந்தோ பொரிந்து. 426

- காட்சி, தருமதீபிகை,
- கவிராஜ பண்டிதர் ஜெகவீர பாண்டியனார்

பொருளுரை:

செத்துப் போவாரை நாளும் கண்டும் நலம் ஒன்றும் காணாமல் இவ்வுலகை நிலையென்று எண்ணி.அனைவரும் புலையாய்ப் பொன்றி ஒழிகின்றார் என்கிறார் கவிராஜ பண்டிதர்.

பொரிதல் - நிலை குலைந்து சிதைதல், பொன்றுதல் - அழிதல்.

வாழ்வு அநித்தியமானது; விரைவில் அழிவது என நூல்கள் உணர்த்தி வருகின்றன. அந்தச் சுருதி மொழிகளை உணராது போயினும் அழிவு நிலைகளை நேரே கண் எதிரே கண்டிருந்தும் யாதொரு உறுதி நலமும் பேணாமல் வீணே அலைவது விளிவான அவ நிலையாம் என இது தெளிவாக உணர்த்துகின்றது.

பாடை - செத்த பிணத்தை எடுத்துச் செல்லும் தடுக்கு. உயிர் நீங்கியவுடன் உடல் சவம் எனப்பட்டுப் புறங்காட்டுக்கு ஒதுக்கப்படுகின்றது. மன்னர் மன்னவராய் மாண்புற்றிருந்தவரும் மூச்சு நின்றதும் பிணம் என்று இழிந்து படுதலால் வாழ்வின் முடிவினை அது படியறியக் காட்டியருள்கின்றது.

நிலைமை தெரியாமல் நெஞ்சம் களித்துத் திரிவார்க்கு இந்த அழிவுக் காட்சியை விழி காண விளக்கின் ஓரளவு தெளிவடைந்து பேரின்ப நிலையை நாடுவர் என்று கருதி அநித்திய நிலைகளைப் பல வகையிலும் மேலோர் அறிவுறுத்தி வருகின்றனர்.

நேரிசை வெண்பா

மேலும் இருக்க விரும்பினையே வெள்விடையோன்
சீலம் அறிந்திலையே சிந்தையே கால்கைக்குக்
கொட்டையிட்டு மெத்தையிட்டுக் குத்திமொத்தப் பட்டஉடல்
கட்டையிட்டுச் சுட்டுவிடக் கண்டு. 1

இன்னம் பிறக்க இசைவையோ நெஞ்சமே?
மன்னரிவர் என்றிருந்து வாழ்ந்தாரை - முன்னம்
எரிந்தகட்டை மீதில் இணைக்கோ வணத்தை
உரிந்துருட்டிப் போட்டது கண்டு. 2 பட்டினத்தார்

தம் உள்ளத்தை நோக்கிப் பட்டினத்தடிகள் இப்படிப் பாடியிருக்கிறார். அந்த ஞானத் துறவியின் வாக்குகள் ஞாலத்தில் எல்லார் உள்ளங்களிலும் எதிரொலி செய்கின்றன.

மனித வாழ்வின் இறுதி நிலையை நினைந்து கொள்வது உறுதி நலனைக் கருதி ஒழுக உதவி புரிகின்றது. அவ்வாறு நினையாது போவது நெடிய மடமை ஆகின்றது

நச்சுப் பொய்கையில் தருமனை நோக்கி எச்சதேவன் பல கேள்விகள் கேட்டு வருங்கால், 'இவ்வுலகில் மிகவும் அதிசயமானது எது’ என்று வினவினான். இறந்து பாடையில் போவாரைக் கண் எதிரே கண்டிருந்தும், நாமும் இப்படித்தானே போவோம்' என்று மனிதர் எண்ணாமல் இருப்பதே பெரிய அதிசயம் என அவர் பதில் உரைத்தார்.

செத்து ஒழியும் நிலையைக் கருதி நின்று உறுதி நாடாமல் உள்ளதை ’ஒத்துணர்ந்து ஓராமல்’ என்றது.

பொருள்களை மிகுதியாகச் சம்பாதிக்கும் வழிகளையும், சுகபோகங்களை அனுபவிக்கின்ற முறைகளையும், துறைகளையும் உரையாமல், ’நீ செத்துத் தொலைவாய்! பாடையிலே போவாய்' என இப்படி இழவுக் காட்சிகளை எடுத்துக் காட்டுவது அச்சத்தை ஊட்டி அயர்ச்சியை நீட்டி நாட்டில் முன்னேற்றத்தைத் தடைப்படுத்தும், மக்கள் உள்ளம் தளர்ந்து ஊக்கம் குன்றி வாழ்க்கையில் நோக்கம் மாறுவர் என்று சிலர் சொல்ல நேர்வர்.

பொருள் ஈட்டங்களிலும், பொறி நுகர்ச்சிகளிலும் எல்லாரும் யாண்டும் வெறி கொண்டு திரிகின்றனர்; அவர்க்கு யாரும் யாதும் போதிக்க வேண்டியதேயில்லை. மையல் மீதூர்ந்த அந்த வெய்ய வழிகளிலிருந்து சிறிது திரும்பி நோக்கி மெய்யாக உய்யும் வழியை நாடவே நிலையாமையை நூல்கள் நினைவுறுத்தி வருகின்றன நினைப்பில் ஆக்கமும், மறப்பில் கேடும் மருவியுள்ளன.

இறப்பெனும் மெய்ம்மையை இம்மை யாவர்க்கும்
மறப்பெனும் அதனின்மேல் கேடு மற்றுண்டோ? 20 மந்திரப் படலம், அயோத்தியா காண்டம், இராமாயணம்

இறந்து போவோம் என்பதை மறந்து நிற்பதை விட மனிதனுக்கு வேறு கேடில்லை என இது உரைத்துள்ளது. கருத்து என்ன? இறப்பின் நினைவு பிறப்பினை நீக்குதற்குப் பெருந்துணை புரிகின்றது. ஆகவே அது இங்ஙனம் பேச வந்தது.

இணைக்குறள் ஆசிரியப்பா

இருங்கடல் உடுத்தவிப் பெருங்கண் மாநிலம்
உடையிலை நடுவண திடைபிறர்க் கின்றித்
தாமே யாண்ட ஏமங் காவலர்
இடுதிரை மணலினும் பலரே; சுடுபிணக்
5. காடுபதி யாகப் போகித் தத்தம்
நாடு பிறர்கொளச் சென்றுமாய்ந் தனரே
அதனால், நீயுங் கேண்மதி யத்தை வீயா(து)
உடம்பொடு நின்ற வுயிரு மில்லை
மடங்கல் உண்மை மாயமோ அன்றே;
10. கள்ளில் ஏய்ந்த முள்ளியம் புறங்காட்டு
வெள்ளில் போகிய வியலுள ஆங்கண்
உப்பிலாஅ அவிப்பு ழுக்கல்
கைக்கொண்டு பிறக்கு நோக்கா(து)
இழிபி றப்பினோன் ஈயப்பெற்று
15. நிலங்கலன் ஆக விலங்குபலி மிசையும்
இன்னா வைகல் வாரா முன்னே
செய்ந்நீ முன்னிய வினேயே
முந்நீர் வரைப்பகம் முழுதுடன் துறந்தே. 363 புறநானூறு

கடல் சூழ்ந்த இவ்வுலகம் முழுவதையும் தமக்கே தனியுரிமையாகக் கொண்டு ஆண்ட அரசர்கள் பலர் மாண்டு சுடுகாடு அடைந்தனர்; உயிரோடு இருந்தவர் ஒருவரும் இலர்; கள்ளிகள் அடர்ந்த இடுகாட்டில் பாடைகள் அயலே கவிழ்ந்து கிடக்கக் கட்டையில் வைத்து வாய்க்கரிசி இட்டுச் சுட்டு எரித்துச் சுடு சாம்பலாக்கும் காலம் வரும் முன்னே உன் உயிர்க்கு நல்ல உறுதி நலனைச் செய்து கொள்ளுக என ஓர் அரசனை நோக்கி சிறுவெண் தேரையார் என்னும் பெரியார் இவ்வாறு கூறியிருக்கிறார்.

மடங்கல் - யமன். வெள்ளில் - பாடை. இன்னா வைகல் - அழிவு நாள். இன்னா வைகல் எய்து முன் இனிய நலனை எய்துக.

சாவு நேரு முன்னே ஆவதை அறிந்து சீவர்கள் உய்ய வேண்டும் என்று போதமுடையார் போதித்து வருகின்றனர்.

சீவகன் என்னும் மன்னன் ஏமாங்கத நாட்டை ஆண்டவன். சிறந்த மதிமான். பல கலைகளிலும் வல்லவன்; நல்ல அழகன் . இவனுக்கு நாற்பத்தைந்து வயது கடந்து கொண்டிருந்த போது ஒரு நாள் மாலையில் இனிய பூஞ்சோலையில் தனியே உலாவிக் கொண்டிருந்தான். அவ்வழியே ஒரு பிணத்தைப் பாடையில் வைத்துச் சிலர் எடுத்துப் போயினர். சுடுகாட்டை அடைந்து அதனை அவர் தகனம் செய்து மீண்டதை எல்லாம் இவன் கூர்ந்து பார்த்தான். நிலையாமையை நினைந்தான். உலக வாழ்க்கையை வெறுத்தான்; தவ நிலையைக் கருதினான். அரண்மனைக்கு வந்தான், அந்தப்புரம் புகுந்தான்; தனது அருமை மனைவியரிடம் உறுதி நலன்களை உரைத்து உய்தி நாடினான். தேவியரிடம் அன்று இவன் கூறியன அடியில் வருகின்றன.

அறுசீர் விருத்தம்
(விளம் மா தேமா அரையடிக்கு)
(விளம் வருமிடங்களில் மாங்காய்ச்சீர் வரலாம்)

உப்பிலிப் புழுக்கல் காட்டுள்
..புலைமகன் உகுப்ப ஏகக்
கைப்பலி உண்டி யானும்
..வெள்ளில்மேல் கவிழ நீரும்
மைப்பொலி கண்ணின் நீரால்
..மனைஅகம் மெழுகி வாழ
இப்பொருள் வேண்டு கின்றீர்
..இதனைநீர் கேண்மின் என்றான். 2984

கொல்சின யானை பார்க்கும்
..கூர்உகிர்த் தறுகண் ஆளி
இல்எலி பார்த்து நோக்கி
..இறப்பின்கீழ் இருத்தல் உண்டே
பல்வினை வெள்ளம் நீந்திப்
..பகாஇன்பம் பருகின் அல்லால்
நல்வினை விளையுள் என்னும்
..நஞ்சினுள் குளித்தல் உண்டே. 2985

ஆற்றிய மக்கள் என்னும்
..அருந்தவம் இலார்கள் ஆகின்
போற்றிய மணியும் பொன்னும்
..பின்செலா பொன்அ னீரே
வேற்றுவர் என்று நில்லா
..விழுப்பொருள் பரவை ஞாலம்
நோற்பவர்க்(கு) உரிய ஆகும்
..நோன்மின் நீரும் என்றான். 2986 துறவு வலி உறுத்தல், முத்தி இலம்பகம், சீவக சிந்தாமணி

இந்தப் பாசுரங்களில் பதிந்துள்ள கருத்துக்களைக் கருதியுணர வேண்டும் ஒரு முடிமன்னனுடைய எண்ணங்கள் படியறிய வந்துள்ளன. 'நான் சுடுகாட்டில் பாடையில் கவிழ்ந்து விழ, நீங்கள் அரண்மனையிலிருந்து அழ அமைந்த வாழ்வு இது. இதனை நம்பி மோசம் போகலாகாது. ஆளி மதயானையைத் தின்னக் கருதுமேயன்றி எலியை விரும்பாது; மேலோர் பேரின்ப நிலையில் ஏறுவதன்றிச் சிற்றின்பத்தில் இழிந்து படார். எனது நல்வினையால் நேர்ந்த அரச போகங்களை நச்சி நிற்பது நஞ்சு குடிப்பது போல்வதாம்: பொறி வெறிகளை மறந்து அரிய தவநிலையை மருவி என்றும் அழியாத அதிசய ஆனந்தத்தை அடைய விழைந்தேன்; தடையாதும் கூறாமல் நீவிரும் தவசீலம் பேணி உயர்கதியைக் காணுங்கள்' எனத் தன் மனைவியர்பால் மன்னன் உரைத்திருக்கும் இந்த இனிய உணர்வு நலங்கள் உள்ளம் கொண்டு எல்லாரும் உரிமையுடன் சிந்திக்கத்தக்கன.

ஞானக்காட்சி தோன்றியவுடன் ஊனக்காட்சிகள் யாவும் ஈனங்களாய் இழிந்து கானல் நீராய்க் கழிந்து ஒழிந்து போகின்றன.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (2-Sep-19, 10:03 pm)
பார்வை : 56

மேலே