பித்தரிவர் தம்மழிவை எண்ணித் தயங்கார் தருக்கியுளார் - வாழ்நாள், தருமதீபிகை 436

நேரிசை வெண்பா

செத்தொழிந்தார் சாவின்கட் சென்றுநின்றார் என்றுறவை
நத்திநின்று நாளும் நலிந்தழுவார் - பித்தரிவர்
தம்மழிவை எண்ணித் தயங்கார் தருக்கியுளார்
அம்மவோ என்னே அவம். 436

- வாழ்நாள், தருமதீபிகை,
- கவிராஜ பண்டிதர் ஜெகவீர பாண்டியனார்

பொருளுரை:

உறவினர் இறந்து போயினார்; உரியவர் சிலர் மடிந்து போக நேர்ந்தார் என்று பிறருடைய பிரிவுகளை நினைந்து அழுகின்றார்; தம்முடைய அழிவு நிலைமையை உணராமல் உளம் களித்து நிற்கின்றார், அந்தோ! அந்நிலை எவ்வளவு மடமை என்கிறார் கவிராஜ பண்டிதர். இப்பாடல், தன் இழப்பை எண்ணுக என்கின்றது.

மனித வாழ்வு ஒர் அதிசய வினோதமான விதி விளைவாயுள்ளது. மையலும் மயக்கமும் மாய மோகங்களும் தாய பாகங்களாய்த் தழுவி நிற்கின்றன. அல்லல்களும் அவலங்களும் நிறைந்திருந்தாலும் உல்லாசக் களிப்புகள் ஓங்கியுள்ளன. துன்பம் நேர்ந்தபோது மனிதன் உள்ளம் கலங்கி அழுகின்றான்; அது தீர்ந்தவுடன் எல்லாவற்றையும் மறந்து எக்களித்துத் திரிகின்றான். தனது நிலைமையைக் கருதியுணர்பவன் உறுதிநலனை உணர்கின்றான். கருதாதவன் வீணாய் விளிகின்றான்

அயல் அழிவுக்கு அழுகின்றவன் தன் அழிவை எண்ணாமல் இருப்பது இயல்பான தனி மயலாகின்றது.

பக்கம் சூழ்ந்திருந்த ஒக்கல்கள் இறந்தார் என வருந்தி அழுகின்றான்; தான் தினமும் இறந்து படுதலை நினைந்து பாராமல் நிற்கின்றான். சாக நிற்கின்றவன் செத்தவர்க்கு அழுவது கூலிக்கு அழுதபடியாய்க் கேலிக்கே இடமாய்க் கிளர்ந்துள்ளது.

செத்துக் கிடக்கும் பிணத்தருகே இனிச்சாம்பிணங்கள்
கத்தும் கணக்கென்ன காண்.

என இழவு வீட்டில் அழுவதைக் குறித்து இது வந்திருக்கின்றது. வாழ்ந்து வரும் மக்களைச் சாம்பிணங்கள் என்று சுட்டியுள்ளதில் அவவளவு சுவை சொட்டியுள்ளது!

கட்டளைக் கலித்துறை

காம்பிணங் கும்பணைத் தோளார்க்கும் பொன்னுக்குங் காசினிக்கும்
தாம்பிணங் கும்பல ஆசையும் விட்டுத் தனித்து(ச்)செத்துப்
போம்பிணந் தன்னைத் திரளாகக் கூடிப் புரண்டினிமேற்
சாம்பிணங் கத்துதை யோ!என்செய் வேன்தில்லைச் சங்கரனே! 1 திருத்தில்லை, பட்டினத்தார்

பெண் ஆசை, பொன் ஆசை, மண் ஆசை என்னும் பொல்லாத ஆசைப்பிணிகளிலிருந்து விடுதலை அடைந்து உயர்ந்து போகின்ற சீவர்களை இறந்து போனார்கள் என்று வருந்தி ஈண்டு இருந்து அழுகின்ற மக்களைக் குறித்துப் பட்டினத்தார் இப்படி அழுதிருக்கிறார். சாவும் வாழ்வும் ஓவாது உருளுகின்றன.

செத்துப்போம் பிணம் என அங்கே போனவர்களையும், இனிமேல் சாம்பிணம் என இங்கே உள்ளவர்களையும் குறித்து அடிகள் உரைத்திருப்பது சிரித்து நோக்கத் தக்கது.

அல்லலான ஆசைத் தீமைகள் வசப்பட்டு மோசமாய் வாழ்ந்து வருவது நீசமாதலால் அதைவிட நாசமாய்ப் போய்த் தொலைவது நல்லது என வந்தது. இருந்தால் பழிபாவங்கள் வளர்ந்து வருகின்றன; இறந்தால் அவை ஒழிந்து போகின்றன. இருப்பது நல்லதா? இறப்பது நல்லதா?

புகழும் புண்ணியமும் வளர்ந்து வர இருந்து வருவதே வாழ்வாம். அவ்வாறு அல்லாத இருப்பு பொல்லாத நெருப்பாம்.

மனம், மொழி, மெய்களைப் புனிதமாக்கி இனிய நீர்மையுடன் வாழ்கின்ற வாழ்வு தெய்வீக நிலையில் சிறந்து வருதலால் அவ்வாழ்நாள் உயர்ந்த மகிமையாய் ஒளி சிறந்து திகழ்கின்றது. எய்திய நாளை ஈனப்படுத்தாமல் உய்தி காண்பவன் உத்தமன் ஆகின்றான். காணாதவன் செத்தவனாகவே செனித்து வருகிறான்.

ஆயுள் குறைந்து தினமும் தாம் அழிந்துபடுவதை நினைந்து பாராமல் பிறர் இறந்து போனார் என்.று வருந்தியழுவது பெரிய ஒரு பேதைமையாகுமாதலால் இவர் பித்தர் என நின்றார். பித்தம் தெளிந்து சித்தம் கனிந்து உத்தம நிலையில் உயர்ந்தபோது அவர் முத்தர் ஆகின்றார்.

’தம் அழிவை எண்ணித் தயங்கார்; தருக்கியுளார்’. என்றது மனித இயல்பின் மையல் நிலையை விளக்கி நின்றது.

உற்ற உடல் ஒழியுமுன் அது பெற்ற பயனைப் பெறுவதே பெரும் பாக்கியமாம்; அங்ஙனம் பெறாமலிருப்பது பெருங்கேடாய் முடிதலால் பிறவிப்பயனை இழந்த பேதையாய் அவர் இழிந்து படுகின்றனர். ஞானப் பிறப்பை ஈனப்படுத்தலாகாது.

தமக்கு உரிமையான அருமைநாள் மருமமாய்க் கழிந்து கொண்டே வருகின்றது; அந்தக் கழிவைத் தமது அழிவாகக் கருதியுணர்பவர் இரவும் பகலும் ஆன்ம சிந்தனையுடன் மேன்மை அடைந்து கொள்ளுகின்றனர்.

நேரிசை வெண்பா

அரும்பெறல் யாக்கையைப் பெற்ற பயத்தால்
பெரும்பயனும் ஆற்றவே கொள்க ; - கரும்பூர்ந்த
சாறுபோல் சாலவும் பின்உதவி மற்றதன்
கோதுபோல் போகும் உடம்பு. 34

இன்னிசை வெண்பா

கரும்பாட்டிக் கட்டி சிறுகாலைக் கொண்டார்
துரும்பெழுந்து வேம்கால் துயராண் டுழவார்;
வருந்தி உடம்பின் பயன்கொண்டார் கூற்றம்
வருங்கால் பரிவ திலர். 35 நாலடியார்

கரும்பின் பயனான சாரத்தைக் கைக்கொண்டவர் அதன் சக்கை வேகும் போது வருந்த மாட்டார். உடம்பின் பயனான புண்ணியத்தை அடைந்து கொண்டவர் இறப்பதற்கு அஞ்சார் என ஓர் உவமைக் காட்சியை நயமாக விளக்கி மக்கள் பிறந்த பயனை விரைந்து பெறும்படி இது போதித்துள்ளது.

எமன் வருமுன் தனக்கு ஏமம் செய்து கொள்வனாயின் அந்த மனிதன் பெரிய மகானாய் அரிய மகிமை பெறுகிறான்.

வாழ்நாளின் நிலைமையை உணர்ந்தவன் மேலே உயிரினிது வாழவுரிய அரிய உறுதிநலனைக் கருதிக் கொள்கின்றான்.

அரணாய் அமைந்த ஆயுள் கணமும் கழிகின்றது: மரணம் கடுகி வருகின்றது. இந்நிலைமையை நேரே தெரியாது போயினும் இளமை கழிந்து மூப்பு அடர்வதையேனும் தமது அனுபவத்தில் கண்கூடாய்க் கண்டு கதி காணாமல் ஒழிவது மதி கேடாகின்றது.

அறுசீர் விருத்தம்
(விளம் மா தேமா அரையடிக்கு)
(விளம் வருமிடத்தில் மாங்காய்ச்சீர் வரலாம்)

பாளையாம் தன்மை செத்தும்
..பாலனாம் தன்மை செத்தும்
காளையாம் தன்மை செத்தும்
..காமுறும் இளமை செத்தும்
மீளுமிவ் இயல்பும் இன்னே
..மேல்வரு மூப்பும் ஆகி
நாளும்நாள் சாகின் றாமால்
..நமக்குநாம் அழாத(து) என்னோ! 9 குண்டலகேசி

பிறர் செத்துப் போனாரென்று அழுகின்றோம்; நாள்தோறும் நாம் செத்துக் கொண்டிருக்கிறோம்; நமக்கு நாம் அழாமலிருப்பது வியப்பாயுள்ளது எனக் குறித்திருக்கும் இதன் கருத்தைக் கூர்ந்து பார்க்க வேண்டும். பாளை - பிள்ளைப் பருவம்.

அயல் இழவுக்கு அழுகின்றாய்; உன் இழவை எண்ணியுணராமல் ஏமாந்து நிற்கின்றாயே; நிலைமையைக் கொஞ்சம் நினைந்து நோக்கி உய்தி காணுக என மேலோர் இங்ஙனம் உணர்த்தி வருகின்றார். மேல் ஆதலை அறிய சாதலைக் காட்டியது.

பெற்ற பொழுதைப் பழுதாக்கிப் பேதையாய் அழிந்து போகாதே, உற்ற பயனை விரைந்து கைக்கொண்டு உயர்ந்து கொள்ளுக. நாள் வீண் கழியின் நாசமே காண நேரும்.

தனது நிலைமையைக் கொஞ்சம் உணர்ந்தாலும் ஒருவன் அழுது விடுவான். பிள்ளை அழுதால் பெற்ற தாய் உள்ளம் உருகி அணைக்கின்றாள்; மனிதன் அழுதால் தெய்வம் கருணை புரிந்து கை தருகின்றது. ஞான அழுகையால் ஊனங்கள் ஒழிகின்றன.

கலிநிலைத்துறை
(மா மா மா மா காய்)

யானே பொய்என் நெஞ்சும் பொய்என் அன்பும்பொய்
ஆனால் வினையேன் அழுதால் உன்னைப் பெறலாமே
தேனே அமுதே கரும்பின் தெளிவே தித்திக்கும்
மானே அருளாய் அடியேன் உனைவந்(து) உறுமாறே. 90 – 05 திருச்சதகம், திருவாசகம்

இந்த அருமைப் பாசுரம் நாளும் நினைந்து சிந்திக்கவுரியது. மாணிக்கவாசகர் தினமும் உருகி அழுதிருக்கிறார் என்று தெரிகின்றது. அந்த அழுகை ஏன் வந்தது? எதை நோக்கி எழுந்தது? பிறவித் துன்பங்களை நீக்கிப் பேரின்பம் அருளுகின்ற புண்ணியக் கண்ணீராய் அது பெருகியிருக்கிறது. அருமைத் தந்தையைப் பிரிந்துள்ள பிரிவு தெரிந்தபோது உரிமை மைந்தன் உருகி அழுதிருக்கும் பரிவும் பண்பும் இங்கு மருமமாய் உணர வந்தன.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (2-Sep-19, 10:10 pm)
பார்வை : 78

மேலே