நீர்மேல் குமிழிபோல் நில்லாத வாழ்க்கையிது - காட்சி, தருமதீபிகை 427

நேரிசை வெண்பா

இம்பர் உலகெலாம் எய்தி அரசாகி
உம்பர் புகழ உறைந்தாலும் - பம்பியெழு
நீர்மேல் குமிழிபோல் நில்லாத வாழ்க்கையிது
பார்மேல் உயிர்க்குப் பயன். 427

- காட்சி, தருமதீபிகை,
- கவிராஜ பண்டிதர் ஜெகவீர பாண்டியனார்

பொருளுரை:

உலகம் முழுவதையும் தலைமையாய் அடைந்து ஏக சக்கராதிபதியாய்த் தேவர் புகழ வாழ்ந்தாலும் நீர்மேல் குமிழி போல் அவ்வாழ்வு விரைவில் அழிந்து போதலால் உயிர்க்குறுதியை உரிமையாக உணர்ந்து கொள்க என்கிறார் கவிராஜ பண்டிதர். இப்பாடல், என்றும் நிலையானதை நினைக என்கின்றது.

உலக வாழ்வில் அரச பதவி மிகவும் உயர்ந்தது; அரிய பல புண்ணியப் பேற்றால் அமைவது; அத்தகைய பெரிய வாழ்வும் அழிவுபாடுடையதாதலின் அழிவில்லாத நிலையைக் கருதியுணர்வது ஆன்ம வுரிமையாய் மேன்மை மருவியது.

பொன்னுலக வாசிகள் மண்ணுலக வாசிகளை யாண்டும் எளிதாக எண்ணுவது இயல்பு; அவமதிப்பாய் அங்ஙனம் கருதிப் பழகிய அவரும் வியந்து மதித்துப் புகழ்ந்து போற்ற என்றது உயர்ந்த சீர்மை நீர்மைகளை உணர்ந்து கொள்ள நின்றது.

’வானம் புகழ’ என்றதனால் வையத்தில் அவனுடைய மதிப்பும் மாண்பும் வரம்பிடலரியன என்பது பெறப்பட்டது.

செல்வ வளங்கள் நிறைந்து சீர்மைகள் மிகுந்த அரசவாழ்வு பலவகை மாட்சிமைகளை அடைந்துள்ளமையால் நிலையாமையைத் தெளிவுறுத்த அது இங்கே காட்சிக்கு வந்தது.

கண்ணால் காண்பது, காதால் கேட்பது, மனதால் நினைப்பது என்னும் இவை காட்சி, கேள்வி, எண்ணம் என உணர்ச்சியை ஊட்டுகின்றன. உள்ளம் ஒளிபெற உணர்வு தெளிவுறுகின்றது. கல்வி கேள்விகள் நல்ல பயன்களை நல்கி வருதலால் அவை சீவ ஒளிகளாய் மேவியுள்ளன.

எனைத்தானும் நல்லவை கேட்க அனைத்தானும்
ஆன்ற பெருமை தரும். 416 கேள்வி

என்றதனால் கேள்வியின் பயனும் நயனும் நன்கு அறியலாகும்.

உள்ளத்தை உயர்த்தி, உணர்வை ஒளி செய்து, உயிர்க்குறுதி புரிவது எதுவோ அதுவே நல்ல கேள்வியாம்.

செங்குட்டுவன் என்னும் சேர மன்னன் மறு புல மன்னர் மேல் ஒரு முறை சீறி எழுந்து போர் செய்ய மூண்டான். உயிர்க்கு உறுதி நோக்காது எப்பொழுதும் உலக வாழ்க்கையிலேயே கலக நோக்கமாய்த் தலைமை காண விழைவது நலமாகாது என மாடலன் என்னும் மதிமான் அவனுக்கு நிலையாமையை நினைவுறுத்தினான். அவன் கூறிய உறுதி மொழிகள் அரிய பல உணர்வு நலங்களை உதவியருளின. அயலே வருகின்றன.

கடல்கடம்(பு) எறிந்த காவலன் ஆயினும், 135
விடர்சிலை பொறித்த விறலோன் ஆயினும்
நான்மறை யாளன் செய்யுள் கொண்டு,
மேல்நிலை உலகம் விடுத்தோன் ஆயினும்,
“போற்றி மன்உயிர் முறையின் கொள்க”என,
கூற்றுவரை நிறுத்த கொற்றவன் ஆயினும்,
வன்சொல் யவனர் வளநாடு ஆண்டு,
பொன்படு நெடுவரை புகுந்தோன் ஆயினும்,
மிகப்பெரும் தானையோடு இருஞ்செரு ஓட்டி,
அகப்பா எறிந்த அருந்திறல் ஆயினும்,
உருகெழு மரபின் அயிரை மண்ணி,
இருகடல் நீரும் ஆடினோன் ஆயினும்,
சதுக்கப் பூதரை வஞ்சியுள் தந்து,
மதுக்கொள் வேள்வி வேட்டோன் ஆயினும்,
மீக்கூற் றாளர் யாவரும் இன்மையின்,
யாக்கை நில்லா(து) என்பதை உணர்ந்தோய்!
மல்லல்மா ஞாலத்து வாழ்வோர் மருங்கின்
செல்வம் நில்லா(து) என்பதை வெல்போர்த்
தண்தமிழ் இகழ்ந்த ஆரிய மன்னரின்
கண்டனை அல்லையோ, காவல் வேந்தே?-
இளமை நில்லா(து) என்பதை எடுத்(து)ஈங்கு
உணர்வுடை மாக்கள் உரைக்கல் வேண்டா,
திருஞெமிர் அகலத்துச் செங்கோல் வேந்தே!
நரைமுதிர் யாக்கை நீயும் கண்டனை;
விண்ணோர் உருவின் எய்திய நல்உயிர்
மண்ணோர் உருவின் மறிக்கினும் மறிக்கும்;
மக்கள் யாக்கை பூண்ட மன்உயிர்,
மிக்கோய்! விலங்கின் எய்தினும் எய்தும்;
விலங்கின் யாக்கை விலங்கிய இன்உயிர்
கலங்கஞர் நரகரைக் காணினும் காணும்;
ஆடும் கூத்தர்போல், ஆர்உயிர் ஒருவழி,
கூடிய கோலத்(து) ஒருங்குநின்(று), இயலாது;
“செய்வினை வழித்தாய் உயிர்செலும்” என்பது
பொய்இல் காட்சியோர் பொருள்உரை ஆதலின், 168

அருமறை மருங்கின் அரசர்க்கு ஓங்கிய, 177
பெருநல் வேள்வி நீசெயல் வேண்டும்,
“நாளைச் செய்குவம் அறம்”எனின், இன்றே
கேள்வி நல்உயிர் நீங்கினும் நீங்கும்;
இதுஎன வரைந்து வாழுநாள் உணர்ந்தோர்
முதுநீர் உலகின் முழுவதும் இல்லை; 182 நடுகல் காதை, வஞ்சிக் காண்டம், சிலப்பதிகாரம் 28)

அரிய செயல்களைச் செய்து பெரிய கீர்த்திகள் வாய்ந்திருந்த மகுட மன்னர்கள் எல்லாரும் அழிந்து போயினர். இளமையும் செல்வமும் என்றும் கழிந்து தொலையும் இயல்பின, நாளை வீண் ஆக்காமல் தம்முயிர்க்கு நல்லதைச் செய்து கொள்பவரே உய்தி கண்டு உவகை யுறுகின்றனர் எனச் சேர வேந்தனுக்கு அந்த வேதியன் இங்ஙனம் போதித்திருக்கிறான். போதனையாய் வந்துள்ள இந்தப் பாடலில் பல சரிதங்கள் பொதிந்திருக்கின்றன.

நீர்மேல் குமிழிபோல் நில்லாத வாழ்க்கையிது
பார்மேல் உயிர்க்குப் பயன்.

வாழ்வின் நிலைமையை ஒர் உவமையால் குறித்துக் காட்டி உறுதிநலனை உரிமையுடன் அடைய இது உருகி வேண்டியது.

விரைவில் அழியும் விளிவு கருதி நில வாழ்க்கையை நீர்க்குமிழி என்றது. குமிழ் - உருண்டு திரண்ட வடிவம். குமிழ்ந்திருப்பது குமிழி என வந்தது. ஓர் உருவாய்த் தோன்றி சிறிது நின்று கடிது மறைதலின் நிலையற்ற வாழ்வுக்கு அது ஒப்பாயது.

நேரிசை வெண்பா

நீரில் குமிழி இளமை நிறைசெல்வம்
நீரில் சுருட்டும் நெடுந்திரைகள் - நீரில்
எழுத்தாகும் யாக்கை நமரங்காள் என்னே
வழுத்தாத(து) எம்பிரான் மன்று. 1 நீதிநெறி விளக்கம்

நீர்க்குமிழி போன்றவுடல் நிற்கையிலே சாசுவதம்
சேர்க்க அறியாமல் திகைப்பேனோ பைங்கிளியே! 1

நீர்க்குமிழி பூணமைத்து நின்றாலும் நில்லாமெய்
பார்க்குமிடத்(து) இதன்மேல் பற்றறுவ(து) எந்நாளோ? 2 - தாயுமானவர்

The earth hath bubbles as the water has, And these are of them. - Macbeth 1-3

நீர்க்குமிழி போல் இவை நிலத்தின் குமிழிகள்' என உலகில் உலாவி மறையும் உருவத் தோற்றங்களை மேல் நாட்டுக் கவிஞரும் இவ்வாறு கூறியிருக்கிறார்.

நேரிசை வெண்பா

படுமழை மொக்குளின் பல்காலும் தோன்றிக்
கெடுமிதோர் யாக்கையென் றெண்ணித் - தடுமாற்றம்
தீர்ப்பேம்யாம் என்றுணரும் திண்ணறி வாளரை
நேர்ப்பார்யார் நீணிலத்தின் மேல். 27 யாக்கை நிலையாமை, நாலடியார்

நிலையற்ற வாழ்வின் நிலைமையை உணர்ந்து நிலையான நிலையை அடைந்து கொள்பவரே தலையான அதிசய நிலையினர் என்னும் இது ஈண்டு அறிய உரியது. உண்மை கண்டு உறுதி காணுக என்கிறார் கவிராஜ பண்டிதர்.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (3-Sep-19, 10:19 pm)
பார்வை : 301

சிறந்த கட்டுரைகள்

மேலே