ஆயுள் அளவை அறியாது நேய நினைவில் நிமிர்கின்றார் - வாழ்நாள், தருமதீபிகை 437

நேரிசை வெண்பா

ஆயுள் அளவை அறியார்; அளவிலா
நேய நினைவில் நிமிர்கின்றார்; - தீயுள்
விரைந்தோடி வீழ்கின்ற விட்டில்போல் நோயுள்
இரைந்தோடி வீழ்கின்றார் ஏன்று. 437

- வாழ்நாள், தருமதீபிகை,
- கவிராஜ பண்டிதர் ஜெகவீர பாண்டியனார்

பொருளுரை:

தமது ஆயுளின் அளவினைக் கருதி நோக்காமல் அளவிடலரிய அவல நினைவுகளில் அவாவி ஓடி விளக்கில் வீழ்ந்து விட்டில் மடிவது போல் மக்கள் வீணே மாண்டு படுகின்றனர் என்கிறார் கவிராஜ பண்டிதர். இது மானிடங்களின் ஊன நிலையை உணர்த்துகின்றது.

சிறிய வாழ்நாளையும் பெரிய பல அல்லல்களையும் மனிதன் உரிமையாகப் பெற்றிருக்கிறான். அவனுடைய நிலை எவ்வழியும் பரிதாபமானது; ஆயினும் அவன் யாதொரு கவலையும் இல்லாமல் உல்லாசமாய்க் களித்துக் திரிவது இயற்கை வினோதமாயுள்ளது. சிந்தனைகள் வெளிமுகமாய் ஓடிக் களி புரிகின்றன; உள்முகமாய் இருளடைந்து இளிவுறுகின்றன.

தனக்கு அமைந்துள்ள ஆயுளையும், தனது நிலைமையையும் எண்ணியுணராமையால் மனக்களிப்புடன் மையல் மீதூர்ந்து திரிகின்றான்; அழிவு நிலை தலையிலிருந்தும் விழிதிறந்து பாராமல் மனிதன் களிமிகுந்து நிற்பதைக் குறித்து மேலோர் பரிவு கூர்ந்து பரிந்திருக்கின்றனர். உறுதி கூறியும் உள்ளனர்.

ஆயிரத்தெண்ணுாறு ஆண்டுகட்கு முன்னர் ஒரு புலவர் கூறியுள்ளது ஈண்டு அறிய வுரியது. ஒரு ஆட்டுக்கிடா; அதனைப் பலி இடுவதற்காகக் காளி கோவில் முன் கொண்டு போய் உடையவன் நிறுத்தியிருக்கிறான். அதன் கழுத்திலும் கொம்பிலும் மருவும், மாலையும் மருவியுள்ளன. பூசாரி கூரிய வாளைக் கையில் ஏந்தி நிற்கின்றான். அந்நிலையில் அது தன் கழுத்தில் தொங்குகின்ற தளிரைத் தின்று மகிழ்கின்றது; மென்று கொண்டிருக்கும் போதே வெட்டு வேகமாய் விழுந்தது: தலை துண்டாயது; முண்டம் தரையில் கிடந்து துடித்தது. அந்த ஆட்டு நிலையிலேயே மனிதன் மாட்டுப் புத்தியாய் மருண்டுள்ளான் என்று கவிஞர் பாடியிருக்கிறார். பாட்டு அயலே வருகின்றது.

இன்னிசை வெண்பா

வெறியயர் வெங்களத்து வேல்மகன் பாணி
முறியார் நறுங்கண்ணி முன்னர்த் தயங்க
மறிகுள(கு) உண்டன்ன மன்னா மகிழ்ச்சி
அறிவுடை யாளர்கண் இல். 16 இளமை நிலையாமை, நாலடியார்

’மறி அன்ன மகிழ்ச்சி’ என்பது மனிதனது இழி நிலையை வெளிப்படுத்தி இகழ்ச்சிக் குறிப்பில் வந்தது.
மறி - ஆடு. குளகு – இரை; தன் தலைமேல் உள்ள அபாய நிலையை அறிந்து கொள்ளாமையால் மகிழ்ந்து துள்ளுகின்றான்; அறிந்தால் விரைந்து உறுதிநலனை அடைந்து கொள்ளுவான்.

’நேய நினைவில் நிமிர்கின்றார்’ என்றது ஆசை வசமாய் மனிதர் மோசம் போவதை நினைந்து வந்தது. உரிய ஆயுள் சிறிய அளவினது; கொடிய பல துயரங்களையுடையது. தினமும் கழிவது கடிது. இந்த நிலையிலுள்ள மாந்தர் முடிவு நேருமுன் தம் உயிர்க்கு ஓர் உறுதியும் காணாதிருப்பது பெரிதும் பரிதாபமாய்ப் பிழை மிகப்படுகின்றது.

அறுசீர் விருத்தம்
(விளம் மா தேமா அரையடிக்கு)

அம்புவி மாந்தர்க் கெல்லாம்
..ஆயுளோ சிறிது; அதற்குள்
வெம்பிணி இளமை மூப்பு
..விழிதுயில் சோம்பு காதல்
கம்பலை இவற்றை நீக்கிக்
..கற்பதெங் ஙனம்,கற் றாலும்
தம்புலம் சிறிது; ஞான
..சாகரம் பெரிதென் றுன்னி. - மெய்ஞ்ஞான விளக்கம்

மனிதனது வாழ்வும் அவலக் கவலைகளும் இவ்வாறு பெருகி எவ்வழியும் சிறுமை படர்ந்துள்ளமையால் அவன் உரிமையை உணர்வது உய்தி காண்பது மிகவும அருமை ஆகின்றது.

வாழ நேர்ந்துள்ள ஆயுள் நாள் அற்பமானது; அல்லல் பல நிறைந்தது. இன்ன நேரம்தான் சாவு நேரும் என்று யாரும் முன்னறிந்து சொல்ல முடியாதது; ஒல்லையில் ஒழிந்து படுகின்ற புல்லிய நிலையிலிருந்து கொண்டு மனிதன் எல்லையில்லாத எண்ணங்களை எண்ணி இழிந்து அலைகின்றான்.

பிறந்து வந்துள்ளதையும், இறந்து மறைவதையும் உணர்ந்து நோக்கி உயிர்க்குறுதி காணாமல் உழல்வது ஞான சூனியமான ஒர் ஈனமாய் முடிதலால் அம்முடிவு கொடிய கேடு ஆகின்றது. நாளும் இறந்து அழிந்து கொண்டேயிருந்தும் அந்த அழிவு நிலையை யாதும் உணராமல் சுகமாய் வாழ்ந்து வருவதாக நினைந்து களித்து நிமிர்ந்து திரிவது நெடிய மதிமயக்கமேயாம்.

அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
(விளம் மா தேமா அரையடிக்கு)

பிறந்துநாம் பெற்ற வாழ்நாள்
..இத்துணை என்ப(து) ஒன்றும்
அறிந்திலம்; வாழ்தும் என்னும்
..அவாவினுள் அழுந்து கின்றாம்;
கறந்துகூற்(று) உண்ணும் ஞான்று
..கண்புதைத்(து) இரங்கின் அல்லால்
இறந்தநாள் யாவர் மீட்பார்
..இற்றெனப் பெயர்க்க லாமோ? 2616 விசயமா தேவியார் துறவு, முத்தி இலம்பகம், சீவகசிந்தாமணி

மனித வாழ்வின் பரிதாப நிலையை இது உணர்த்தியுள்ளது. கூற்றுவன் வந்து நம்மை உண்ணும் போது, அந்தோ! உயிர்க்கு யாதொரு புண்ணியமும் செய்து கொள்ளாமல் வாழ்நாளை வீண் கழித்து வறிதே இருந்து விட்டோமே’ என்று பரிந்து அழுது பதைப்பதையன்றிக் கழிந்து போன நாளை மீட்ட முடியாதே! என்று இதில் காட்டியுள்ள கருத்தைக் கருதிக் காணுக. போனது மீளாது; போகுமுன் ஆனதை அடைந்து கொள்வது ஞானமாகும்.

நேரிசை வெண்பா

சென்றநா ளெல்லாம் சிறுவிரல்வைத் தெண்ணலாம்
நின்றநாள் யார்க்கும் உணர்வரிது - என்றொருவன்
நன்மை புரியாது நாளுலப்ப விட்டிருக்கும்
புன்மை பெரிது புறம். 18

கோட்டுநா ளிட்டுக் குறையுணர்ந்து வாராதால்
மீட்டொரு நாளிடையுந் தாராதால் - வீட்டுதற்கே
வஞ்சஞ்செய் கூற்றம் வருதலால் நன்றாற்றி
அஞ்சா தமைந்திருக்கற் பாற்று. 19 அறநெறிச்சாரம்

வாழ்நாளின் நிலைமையை விளக்கி மறுமைக்கு உரிமையை விரைவில் கருதிக் கொள்ளும்படி இவை உணர்த்தியுள்ளன. கோட்டுநாள் - ஆயுளாக விதித்த காலம்; ஆயுள் உள்ளே கரைந்து கொண்டே இருக்கின்றது; கூற்றுவன் மேலே விரைந்து கொண்டே நிற்கின்றான்; மக்கள் பாராமுகமாய் மகிழ்ந்து கொண்டே திரிகின்றார். மதிகேடான இந்த மகிழ்ச்சி கதி கேடாகின்றது. கேடு விளைவதைக் கருதாமல் முடமாய் ஓடி உழல்வது முடிவில்லாத துயரமாம். துயர நிலையை உயர் நிலையாய்க் கருதி உயிர்நிலை அழிகின்றார்.

’தீயுள் வீழ்கின்ற விட்டில் போல்’ நோயுள் வீழ்கின்றார் என்றது மக்கள் மாய்ந்து படுகின்ற மாயம் தெரிய வந்தது.

காட்சிக் களிப்பு, நாக்குச் சுவை, பரிச இன்பம் முதலிய பொறியின் போகங்களில் வெறிகொண்டு திரிந்து யாண்டும் மாந்தர் மாண்டு ஒழிகின்றார். இங்கே வந்த பிறவிப்பயனை யாதும் சிந்தியாமல் அவமே அழிந்து போவது அவலமாகின்றது. தீய ஆசைகளை நோய் என்றது. மாய்வு தருவது மாய மோகமாயுள்ளது.

விளக்கின் ஒளியை விழைந்து வீழ்ந்து விட்டில் மடிவது போல், உலக மினுக்குகளில் ஆசை மீதூர்த்து விழுந்து நாசம் அடைதலால் விட்டில் பூச்சி மனிதப் பூச்சிகளுக்கு உவமையாய் வந்தது. இந்த மாய மோகங்கள் பல சன்ம வாசனைகளாய் வளர்ந்து அடர்ந்திருத்தலால் அவற்றிலிருந்து நீங்க முடியாமல் நிலை குலைந்து மாள்கின்றார்.

உடல், மனம், புவனம், போகம் என்னும் இந்நான்கும் வினைப்பயனை அனுபவிக்க நேர்ந்த சீவனுக்குச் சாதனங்களாய் அமைந்துள்ளன. இந்தக் கருவிகளையே ’தான்’ என்று மயங்கி அது மறுகி மாய்கின்றது. அம் மயக்கம் நீங்கின் பிறவி தீர நேர்கின்றது.

மண்ணாசைப் பட்டேனை மண்ணுண்டு போட்டதடா!
பொன்னாசை பெண்ணாசை போகேனே என்குதே. 5

கண்ணுக்குக் கண்ணெதிரே கட்டையில் வேகக்கண்டும்
எண்ணும் திரமாய் இருப்போமென்(று) எண்ணுதே. 15 முதல்வன் முறையீடு, கண்ணிகள், பட்டினத்தார்

பட்டினத்தார் இப்படிப் புலம்பியிருக்கிறார். மய்யல் தீர்ந்துய்வது எவ்வளவு அருமை என்பதை இதனால் எளிது அறியலாகும். தேக அபிமானங்கள் மண்டி வீணே சாகாதே; அதனினும் வேறாயுள்ள ஆன்மாவே நீ; அதனைப் புனிதமாய்ப் பேணி மனிதனாய் வந்த பயனை விரைந்து மருவிக் கொள்ளுக என்கிறார் கவிராஜ பண்டிதர்.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (3-Sep-19, 10:22 pm)
பார்வை : 123

மேலே