மின்எனவே தோன்றி மிகமாயும் இவ்வுடம்பு காத்தோம்பு கின்றார் - காட்சி, தருமதீபிகை 428

நேரிசை வெண்பா

மின்எனவே தோன்றி மிகமாயும் இவ்வுடம்பைப்
பொன்னும் மணியும் புனைந்துமே - தன்னதெனக்
காத்தோம்பு கின்றார் கருதார் உயிர்நலனை
மூத்தோங்கி வீவார் முறை. 428

- காட்சி, தருமதீபிகை,
- கவிராஜ பண்டிதர் ஜெகவீர பாண்டியனார்

பொருளுரை:

மின்னலைப் போல் தோன்றி விரைந்து மாய்கின்ற உடல்களைப் பொன்னும் மணியும் புனைந்து போற்றுகின்றார்; உயிர்க்கு உரிய நலன்களை யாதும் உணராமல் யாவரும் அவமே மூத்து அழிவதே எங்கும் இயல்பாயுள்ளது என்கிறார் கவிராஜ பண்டிதர்.

உடம்பு உயிர் நிலையமாயிருத்தலால் அதன்மேல் இயல்பாகவே சீவர்களுக்கு அபிமானங்கள் பெருகியுள்ளன. அரிய முத்தித் திருவை அடைதற்கு உரிய கருவியாய் அமைந்துள்ளமையால் மானிட தேகம் மிகவும் மேன்மையாக மதிக்கப்பட்டுள்ளது.

இந்த இனிய துணையைக் கொண்டு பெற வேண்டிய பேற்றைப் பெறாமல் பிழைபாடு செய்வது பேதைமையாய் முடிகின்றது. 'கருவியைப் பொருள் என்றெண்ணிக் களிப்பவர் கயவர்' என்றபடி இழிவுறாமல் விழிப்புற வேண்டும்.

பெறுதற்கரிய அருமையும், விரைவில் அழியும் சிறுமையும் ஒருங்கே மருவியுள்ளமையால் மனித தேகம் பெற்றவர் அதனால் உற்ற பயனை உடனே அடையாவழி ஊனம் அடைய நேர்கின்றார். உரிய உயிர்க்கு இனியது புரிவது பெரிய மகிமை ஆகிறது.

ஆன்ம நாட்டமுடையவர் ஞான சீலராய் மேன்மை அடைகின்றனர்; .அங்ஙனம் அல்லாதவர் ஊன உடலையே ஓம்பி ஈனம் உறுகின்றனர்;. கருதி முயன்ற அளவு கதி விளைகின்றது.

சீவனுக்கு உறுதிநலம் நாடாத போது அந்த வாழ்வு பாவ வழிகளில் படிந்து பாழாய் ஒழிதலால் கீழாய் இழிகின்றது.

தருமநலம் கருதாமல் பொறி வெறியராய் இங்கே புலையாடித் திரிபவர் மறுமையில் வறியராய் அங்கே மறுகி உழலுகின்றார், அறம் படியாதவர் மறம் படிந்து மடிகின்றார்.

அறுசீர் விருத்தம்
(விளம் மா தேமா அரையடிக்கு)
(விளம் வருமிடங்களில் மாங்காய்ச்சீர் வரலாம்)

மறம்சுவர் மதிளெ டுத்து
..மறுமைக்கே வெறுமை பூண்டு
புறஞ்சுவர் ஓட்டை மாடம்
..புரளும்போ(து) அறிய மாட்டீர்!
அறஞ்சுவர் ஆகி நின்ற
..அரங்கனார்க்(கு) ஆட்செய் யாதே
புறஞ்சுவர் கோலம் செய்து
..புள்கவ்வக் கிடக்கின் றீரே. - திருமாலை

ஆன்ம நலனை மறந்து தேக மோகிகளாய் நின்றவர் சாக நேர்ந்த போது முடிவில் அடையும் பரிதாப நிலையை இப் பாசுரம் உணர்த்தியுள்ளது. உடம்பை ’புறம் சுவர் ஓட்டை மாடம்’ என்றது. உயிர்க்குறுதி தேடாமல் உடலோம்பி வந்தவர் தாம் கொழுக்க வளர்த்த சரீரத்தைக் கழுகும் காகமும் கவ்வித் தின்ன, பாவச் சுவர்கள் சூழ்ந்த நரகச் சிறைக்குள் வீழ்ந்து நைந்து துடிப்பர் என்பதாம்.

என்றும் நிலையான இனிய உயிர்க்கு இதம் புரிந்து கொள்ளாமல் பொன்றி ஒழியும் உடலையே போற்றிப் புனைந்து பொறி வெறியில் களித்து நிற்பவர் ஆன்ம வுரிமையை இழந்து மேன்மை யாவும் ஒழிந்து அவமே இழிந்து அழிந்து கழிகின்றார்.

The man who sows to gratify his physical cravings will reap destruction from them. - Kirby Page

'தன் தேக இச்சைகளை ஆவலாய் நிரப்பி வருகிற மனிதன் அழிவான பலனையே காண்கின்றான்' என அமெரிக்க ஆசிரியர் இவ்வாறு கூறியிருக்கிறார் ஆவதை அறியாமையால் அவலம் அடைகின்றார், நல்லதை விதைக்காதவர் அல்லல் விளைவையே பெறுகின்றார். '

’உடம்பை ஓம்புகின்றார்; உயிர் நலனைக் கருதார்’ என்றது உலகர் நிலையை நோக்கிப் பரிந்து வந்தது.

உயர்ந்த மணி அணிகள் பூண்டு, சிறந்த ஆடைகள் புனைந்து, குளிர்ந்த சந்தனங்கள் பூசி, நறிய உணவுகள் உண்டு, பொறி வெறிகள் மீறி மய்யல்களில் மயங்கி இருபாலாரும் ஒருபாலும் காணாமல் உருகி முயங்கி மருவி மகிழ்ந்து யாண்டும் மனம் களித்துத் திரிகின்றார். ஈண்டு வந்த பயனை யாதும் சிந்தனை செய்யாமல் செருக்கித் திரிவதே உலக வாழ்வின் பெருக்காயுள்ளது.

தரும சிந்தனை, சத்திய வாக்கு, கருணைப் பண்பு, சாந்த சீலம், சித்த சுத்தி, தெய்வ பத்தி, எவ்வுயிர்க்கும் இதம் புரிந்து ஒழுகல் முதலிய இனிய சீர்மைகள் தோய்ந்த புனித மனிதரைக் காண்பது பெரிதும் அரிதாகின்றது. நல்ல தன்மைகள் நாசம் அடைந்து பொல்லாத புன்மைகளே எங்கணும் பொங்கி நிற்கின்றன.

தெய்வ சம்பந்தமான புனித இயல்புகள் உயர்கதி தருதலால் அந்த அருமைப் பண்புகளையுடையவர் உயிரை ஓம்புகின்றவராய் உன்னத நிலையில் ஒளிர்கின்றார்.

தேக போகங்களையே அவாவி உழல்பவர் சீவ ஒளியை இழந்து விடுதலால் அவர் செத்த சவங்களோடு ஒத்து எண்ணப்படுகின்றார்.

ஒத்த(து) அறிவான் உயிர்வாழ்வான்; மற்றையான்
செத்தாருள் வைக்கப் படும். 214 ஒப்புரவறிதல்

இந்த அருமைத் திருமொழி இங்கே உரிமையுடன் உணரத் தக்கது. உயிர் வாழ்வார் இவர்; செக்தவர் இவர் என வள்ளுவர் இதில் தெளிவாக நமக்குக் காட்டியிருக்கிறார். காட்டியுள்ள இனத்தையும், கருதியிருக்கும் மனத்தையும் நாம் கூர்ந்து காண்கிறோம்.

சிறந்த மனிதனாய்ப் பிறந்து வந்தவன் அறிந்து செய்ய வேண்டிய கடமைகளை ’ஒத்தது அறிவான்’ என்றது. தனது நிலைமைக்கு ஒத்ததை உணர்ந்து பிறவுயிர்கட்கு இதம் புரிந்துவரின் அது தன் உயிர்க்குச் சீவ ஊற்றாம். ஒத்ததை அறியாதவன் இத்தகைய ஆன்ம நலனை இழந்து போதலால் அவன் செத்த சவம் என எண்ண நேர்ந்தான்.

செத்தபிணம் இடுகாடு சுடுகா(டு) என்று
செப்புவர்கள் அறியாதார் சிலர்தன் நெஞ்சத்(து)
ஒத்ததுதாம் உணரா(து) உண்டுடுத்து வாழும்
உயிரோடும் பிணம்பயில் காடொழிய விட்டே. - அஞ்ஞவதைப் பரணி

மேலே குறித்த பொய்யாமொழியைத் தழுவி அதன் பொருளை விரித்து இது வந்துள்ளது. ஒத்ததை உணர்ந்து உயிர்க்குறுதி செய்யாமல் உடலையே ஓம்பி வாழ்பவர் நடைப்பிணங்களேயாவர்; அவர் வாழும் இடம் சுடுகாடேயாம் எனக் கடுமையாகப் பழித்திருக்கிறார். பிறவிப்பயனை இழந்து ஒழிகின்ற பிழைபாடு கருதி இவ்வாறு இகழ்ந்து மொழிந்தது.

தன் ஊனையே வளர்ப்பவன் ஊனமாய் இழிந்து ஈனம் உறுகின்றான்; உயிர்க்குறுதி செய்பவன் ஞான சீலனாய் உயர்ந்து மேன்மை மிகுந்து மேலான இன்ப நிலையை மேவுகின்றான்.

கலி விருத்தம்
(விளம் விளம் மா கூவிளம்)

பிறர்க்கிதம் புரிவது பெருகித் தன்னுயிர்க்(கு)
அறத்துணை அமுதமாய் அமையும் ஆதலால்
மறத்திறன் ஒருவிநல் மாண்பு செய்பவன்
நிறப்பெருந் தேவனாய் நிலவி நிற்பனே.

நல்ல கருமங்கள் உயிர்க்கு நலம் தருகின்றது; அவற்றைப் பழகிக் கொள்ளாமல் பாழாயுழல்வது பரிபவம் ஆகின்றது.

தெய்வத்திற்கு ஆலயம் போல் உயிர்க்கு உடல். உள்ளே இருக்கின்ற மூர்த்திக்குப் பூசை முதலியன யாதும் செய்யாமல் மாசு படிய விட்டு வெளியே கோயிலைப் புதுக்கிப் பூசி வெள்ளையடித்து ஆடம்பரமாய் அலங்கரித்து வைத்தால் அது எவ்வளவு எள்ளத்தக்கதோ அவ்வளவு எள்ளற் பாடாம் உயிர்க்குறுதி நலனை நாடாமல் உடம்பை விழைந்து ஓம்பி வருதல்.

கலிவிருத்தம்
(மா கூவிளம் கூவிளம் கூவிளம்)
*முதற்சீர் குறிலீற்று மாவாக இருக்கும்.
விருத்தம் நிரையில் தொடங்கினால் 12. எழுத்தெண்ணிக்கை தானே வரும்!
* 2,3 சீர்களில் மாச்சீர் வரின் அடுத்த சீர் நிரையில் தொடங்கும்.
விளத்தின் இடத்தில் மாங்காய் வருவதும் உண்டு. (முதலிரண்டு சீர்களுக்கிடையில் 'மாவைத் தொடர்ந்து நேர்' என்ற நேரொன்று ஆசிரியத்தளை அமையும்; மற்ற இடங்களில் வெண்டளை அமையும்)

1957
நடலை வாழ்வுகொண்(டு) என்செய்திர் நாணிலீர்!
சுடலை சேர்வது சொற்பிர மாணமே
கடலின் நஞ்சமு(து) உண்டவர் கைவிட்டால்
உடலி னார்கிடந் தூர்முனி பண்டமே. 4 – 5.90 பொது – தனித்திருக்குறுந்தொகை, ஐந்தாம் திருமுறை, தேவாரம்

காக்கை கவரிலென்? கண்டார் பழிக்கிலென்?
பாற்றுளிப் பெய்யிலென்? பல்லோர் பழிக்கிலென்?
தோற்பையுள் நின்று தொழிலறச் செய்துாட்டும்
கூத்தன் புறப்பட்டுப் போனயிக் கூட்டையே. 25 முதல் தந்திரம் - 5. யாக்கை நிலையாமை, திருமூலர் திருமந்திரம், பத்தாம் திருமுறை

அறுசீர் விருத்தம்
(விளம் மா தேமா அரையடிக்கு)
(விளம் வருமிடத்தில் மாங்காய்ச்சீர் வரலாம்)

என்பினை நரம்பிற் பின்னி
..உதிரம்தோய்ந்(து) இறைச்சி மெத்திப்
புன்புறம் தோலின் மூடி
..அழுக்கொடு புழுக்கள் சோரும்
ஒன்பது வாயிற் றாய
..ஊன்பயில் குரம்பை தன்மேல்
அன்பறா மாந்தர் கண்டாய்
..அறிவினால் சிறிய நீரார். - மேருமந்தர புராணம்

அறுசீர் விருத்தம்
(விளம் மா தேமா அரையடிக்கு)

புழுமலக் குடருள் மூழ்கிப்
..புலால்கமழ் வாயில் தேய்த்து
விழுமவை குழவி என்றும்
..விளங்கிய காளை என்றும்
பழுநிய பிறவும் ஆகிப்
..பலபெயர் தரித்த பொல்லாக்
குழுவினை இன்ப மாகக்
..கொள்வரோ குருடு தீர்ந்தார். - நாரத சரிதை

தரவு கொச்சகக் கலிப்பா

பொல்லாத புலையுடலைப் புழுப்பொதிந்த போர்வைதனை
நில்லாத நீரெழுத்தை நிகரிலிதன் திருவாக்கைக்
கல்லாதார் பொருளெனவே காண்பதனைக் கலந்தறிந்து
நல்லார்கள் பொருளாக ஒருகணமும் நாடாரே. - சிவதருமோத்தரம்

தேகியை மறந்து தேக போகிகளாய் மோகித்துள்ளவர் இவ்வாறு இகழப்பட்டுள்ளனர். தன் இன்னுயிர்க்கு நன்மை காணாதவர் ஈனம் உடையராய் இழிந்து படுகின்றார்.

உயிர் உரிமை தெரிந்த போது உடல் சுமையாய்த் தோன்றுகின்றது. உண்மை தோன்றவே புன்மையை வெறுக்கின்றார்.

கட்டளைக் கலித்துறை

விடக்கே! பருந்தின் விருந்தே! கமண்டல வீணனிட்ட
முடக்கே! புழுவந்(து) உறையிட மே!நலம் முற்றுமிலாச்
சடக்கே! கருவி தளர்ந்துவிட் டால்பெற்ற தாயுந்தொடாத்
தொடக்கே! உனைச்சுமந் தேன்நின்னின் ஏது சுகமெனக்கே? – 36 பட்டினத்தார்

தம் உடம்பை நோக்கிப் பட்டினத்தார் இப்படிப் பேசியிருக்கிறார். உரையில் உள்ள உண்மைகளும் உருக்கங்களும் உறுதி நலங்களும் ஊன்றி உணரவுரியன. மெய்யுணர்வுடைய ஞானிகள் பொய்யைப் புறம்தள்ளி உய்தி நிலை காண்கின்றார்.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (5-Sep-19, 8:05 am)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 85

சிறந்த கட்டுரைகள்

மேலே