எம் ஆசான்களுக்காக

நினைவலைகள்
நீட்சி பெறுகிறது
யான் பெற்ற
கல்வி கொடுத்த
எம் ஆசிரியப்
பெருமக்களை நினைத்துப்
பார்த்து!

கடமையைக்
கண்ணாய் கொண்டு
கண்டிப்பு
பிரம்மாயுதம் தொடுத்து
எழுத்தறிவித்து எண்ணறிவித்து
யாம் எண்ணிய திசையறிந்து
கருத்தாய் கை பிடித்து
களர்நில வாய்க்காலில்
வளர்நில அறிவு பாய்ச்சி
வாழ்வைச் செதுக்கி வைத்த
சிற்பிகள் அவர்கள்!

எம் சிந்தனைகளை
செம்மையாக்கி
வாழ்வியல் எதார்த்தங்களை
வாழ்வியல் நெறிகளூடே
தேட வைத்து
வளமைத் திசைகளை
வாழ்க்கைப் பாதையின்
வழிக்குக் கொண்டு வந்த
திறன் தோய்ந்த
தியாகச் செம்மல்கள் அவர்கள்!

ஆண்டுக்கொரு முறை
வந்து போகும்
ஆசிரியர் தின நாளில்
இணைய தள
வாழ்த்துச் செய்தியனுப்பி
வழிகாட்டிய நல்லோரை
வாழ்த்துவதில் மட்டும்
எம் இதயம்
நிறைந்து விடுகிறது.
எப்போதும்!

ஆனாலும்

அவர்கள் காட்டிய
வழியில் என்னை நெறிப்படுத்தி
நாளும் பயணித்து
சிகரம் தொட்டு
குரு பெயர் சொல்லும்
சீடனாய் வாழ்வது
குருதட்சணையாய்
மாறியது கண்டு
மனம் குளிர்வார்கள் அவர்கள்
எப்போதும்!

நான் உயரம் தொட
ஏணிப்படிகளாய்
என் வாழ்வில் பயணித்த
என் விடியலுக்கான
விளக்கொளியாய் மாறி நின்ற
எம் இதயம் நிறைந்த
அத்தனை ஆசான்களுக்கும்
நனி நன்றிகள்
பாத காணிக்கையாய்!

இவ்வுலக வாழ்வில்
பெரும்பயன் செய்து
வாழ்வைக் கடந்து சென்ற
ஆசான்களுக்கும்
எம் இதய அஞ்சலிகள்.

வாழ்க நின் புகழ்!

எழுதியவர் : தமிழ் மைந்தன் - ரிச்சர்டு (5-Sep-19, 8:49 am)
பார்வை : 4688

சிறந்த கவிதைகள் (இந்த வாரம்)

மேலே