அவள் நினைவு
நீ விட்டு சென்ற
மறுநாள்
தலைவாரும் நேரங்களில்
என் முடிகளை வருடி விட
சீப்பில் எப்போதுமிருக்கின்றன
உன் கூந்தல்
முடி
ஞாபகங்களாய்
======================
நீ இல்லாத
நாட்களின் தனிமையை
உணர்ந்து கொள்வது
நான் மட்டுமல்ல
எழுதுகோலும்
இன்றைய நாட்குறிப்பின்
வெற்றுக்காகிதங்களும்
பிரிவு
======================
என் நினைவாய்
உள்ளவற்றை உடைத்தாய்
மற்றவற்றை
எரித்தாய்
நான் இருக்கும் இதயத்திற்கும்
நினைக்கும் உன் மூளைக்கும்
மட்டும் என்ன
விதிவிலக்கு
========================
உறவின்
உயிரின் துறப்பு
கையில் மட்டும் துடிப்புள்ளது
ஓர்
மரண சாசன
உடன்படிக்கையில்
கையொப்பமிட்டு
பிரிவதற்கான
காத்திருப்போடு
விவாகரத்து
====================
திருமதியில்
இருந்து
செல்வியென்றாய்
பிரிந்த பின்னர்
செல்வியிலிருந்து
மீண்டும்
திருமதி ஆகின்றாய்
நம் குழந்தைக்கு பின்னே
என் பெயர் சேர்த்து
அழைத்து மகிழும்
நேரங்களில்
=========================
மணிவண்ணன் மா